Pages


(நவம்பர் 1996)

நாம், மிக மிக நல்லவர்களாக இருப்போம். பலருக்குப் பக்குவம் சொல்லக் கூடியவர்களாக இருப்போம். ஆனால், நல்ல அறிவுரையுடன் கூடிய யோசனைகளைக் கூறுபவர்கள் அனைவருமே, பிறருடைய குறைகளை, வேதனைகளை, துன்பங்களைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது.




உங்களிடத்தில் பலர் வந்து, “என்னைப் பிறர் ஏமாற்றிவிட்டார்கள், நான் மோசம் போனேன்” என்று கூறுவதைக் கேட்டுக் கொண்டேயிருங்கள். அப்பொழுது, இதனின் உணர்வுகளெல்லாம் உங்களில் விளைந்து, உங்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை எல்லாம், காணாமல் போகச் செய்துவிடும்.




இதெல்லாம், உங்களில் விளைந்தவுடனே நீங்களும் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவரைப் பார்த்து பித்தலாட்டம் பண்ணுகிறார் என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள். இவ்வாறு, நீங்கள் நல்லதே செய்து வந்தாலும், பிறர்படும் வேதனையின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்பொழுது, அது உங்களிடத்தில் நோயாகவும், கவலையாகவும், சோர்வடைந்த நிலையாகவும், உங்களிடத்தில் விளையும்.




பலரின் குறைகளைக் கேட்டு, உங்களுடைய உணர்வு வேகமாக இருக்கும். இதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால், மகன் ஏதாவது காரியத்திற்காக வெளியே சென்றால், உடனே அவனை “அறிவு கெட்டதனமாகப் போகிறான்” என்று திட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.




ஏதாவது ஒரு வேலையாக, மனைவியைக் கூப்பிடுவோம். கூப்பிடும் பொழுதே, “வா இங்கே” என்று வேகம் காட்டுவோம். “இதோ வருகிறேன்” என்று அவரும் குரல் கொடுப்பார். அதனின் உணர்வு என்ன செய்யும்? பாத்திரம் ஒன்று, கை நழுவி விழுந்துவிடும். உடனே நாம் மனைவியைக் “கொஞ்சமாவது அடக்கம் இருக்கிறதா பார்” என்று சத்தம் போடுவோம், வெறுப்பின் உணர்வுகள் நம்மிடத்தில் அதிகரித்துவிடும்.




அப்பொழுது, இந்த உணர்வின் தன்மை வேதனையாகும் பொழுது, மனைவி பொறுமையாகத் தான் இருப்பார். ஆனால், “ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுகிறார், என்னிடம் எரிந்து விழுகிறார்” என்று மனைவி வேதனையாகும் பொழுது, அவருக்குக் கை, கால் குடைச்சல் வருகின்றது.




இதே உணர்வின் தன்மையுடன் சமையல் செய்தால், என்ன ஆகும்? சாப்பாடு நன்றாக இருக்காது, ஆக, சாப்பாடு பரிமாறும் பொழுதும் வம்பு.




கணவன், மனைவி இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள் என்றால், நீ, நான், என்று சண்டை வருகின்றது. அப்பொழுது, அடுத்தவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் புகுந்தபின், யாராவது உதவி செய்கிறார்கள் என்றால், அவர்களுடைய எண்ணம் இங்கே வரும்.




என் வீட்டுக்காரர் “இப்படித்தான்” என்று வேதனைப்படும்பொழுது, அவர்களைச் சார்ந்தவர்கள் “அந்த மனுஷன் அப்படித்தான், நீ வாம்மா கண்ணு” என்று அனுசரித்தால் போதும். இவர்கள் செத்தால், உயிரான்மா அவர் உடலில் புகுந்துகொள்ளும்.




அப்பொழுது, வேதனையின் உணர்வுகளை மேலும் வளர்த்துக் கொண்டபின், “நான் உதவி செய்தேன், ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே” என்ற நிலையில், வீட்டில் கலவரம் உருவாகும். ஆக, இங்கே எண்ணங்கள் எமனாகி விடுகின்றன. பகைமை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது, அது, இணை சேர்த்து வாழும் தன்மையைப் பிரித்துவிடுகின்றது.




இப்படி, எத்தனையோ நிலைகள் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்குகின்றன. அதை நாம் மாற்றுதல் வேண்டுமல்லவா? இதை எல்லாம் நீக்குவதற்கு, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், என்று இந்த எண்ணத்தை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.




எமனிடமிருந்து, சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் எனும் நிலையாக, எப்பொழுது ஒன்றிய நிலைகள் வந்தாலும் இன்னொரு பிறப்புக்குப் போகாதபடி, பிறர் செய்த ஏவல், நோய்கள் தனக்குள் வராதபடி தடுக்க இது உதவும்.




வசிஷ்டரும், அருந்ததியும் போன்று வாழவேண்டும். அவர்கள் வாழ்ந்த உணர்வின் தன்மை, என்றும் நிலை கொள்ள வேண்டும் என்பதற்குத்தான், இதை உபதேசிப்பது. இரண்டு மனமும் ஒன்றாகி, திருமணமானபின் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் இவை.




கணவன், தன் மனைவியை உயர்த்தி நினைப்பதும், மனைவி, தன் கணவனை உயர்த்தி நினைப்பதும், போன்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.




கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து, இதே உணர்வுடன் செயல்படவேண்டும். அப்பொழுது அருள் ஞானியின் உணர்வுகள், உங்களில் ஒளியாகின்றது. தீமைகளை அகற்றும் நிலை உருவாகின்றது.




தீமைகளை நீக்கி, இருவரின் மனத்தையும் ஒன்றாக்கி, இந்த உணர்வின் வலுகொண்டு, நீங்கள் தீமையில்லாத நிலையாக, ஒளியாகப் பெறும் பொழுது, “கல்கி”.




பின், உங்களுடைய உணர்வு எதிலே பாய்ந்தாலும், அங்கே இருக்கும் தீமைகளை மாய்க்கும் நிலை வருகின்றது. இந்த உணர்வின் தன்மை, எவரின் மீது பாய்கின்றதோ, அவர் இருளை நீக்கி, மெய்ப்பொருளைக் காணும் நிலைகள் பெறுகின்றார்.




கணவன், மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மைகளும் ஒன்றிணைந்து, கல்கியினைப் பெறும் நிலையாக, தங்களது உணர்வின் தன்மையை வளர்ப்பவர் அனைவருக்கும், அவர்கள் உணர்வின் வழிப்படி, பேரின்பப் பெரு வாழ்வு பெறுவதற்கு, எமது அருளாசிகள்.




ஊசி முனை தவம் வேண்டாம்.

காடு, மலை தேடி போக வேண்டாம்.

அன்னை, தந்தை அருள் இருந்தால் போதும்.

குருவின் அனுக்கிரகம் எளிதில் கிட்டும்.




ஒரு செடிக்கு நீர் ஊற்றினால், அந்தச் செடி நீரின் துணை கொண்டு, காற்றில் உள்ள தன் சக்தியினைக் கவர்ந்து, தன்னை வளர்த்துக் கொள்ளுகின்றது. நமது உயிரான்மாவும், ஒரு செடி போன்றதே.




செடிக்கு நீர் போன்று, நமக்கு குருவின் அருள்.

குருவின் அருள் துணை கொண்டு,

காற்றில் பரவிப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வை

நாம் கவர்ந்து, நம்மில் நாம் மெய்யுணர்வை வளர்ப்போம்.




தீபத்தின் ஒளியால் இருள் அகன்று, இருளில் இருக்கும் பொருள் தெரிவதைப் போன்று, சப்தரிஷிகளின் அருளுணர்வை, நாம் பெறுகின்ற பொழுது, உயிரில் கலந்திருக்கும் இருள் அகன்று, மெய்ப் பொருளைக் காணும் திறன், நாம் அனைவரும் பெறுகின்றோம்.












(டிசம்பர் 1996)

உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தன் மகன்மீது, பாசமாகப் பிரியமாக இருக்கிறார், என்று வைத்துக் கொள்வோம். அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும், அவன் மீது பாசம் வைத்திருந்ததால், அவன் எந்தத் தவறு செய்து இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.




அதே சமயத்தில், அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும், தவறு என்ற வகையில் மகன், தந்தையை வெறுக்கும் பொழுது, தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.




“இவன் அயோக்கியன், நம்மையே குற்றம் சாட்டுகின்றானே, இவன் மோசமானவன், அப்பனையே எதிர்க்கிறான் பார்” என்று தந்தை, மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார். அவன் நல்லதையே செய்தாலும், அவனுடைய தந்தை அவனைக் குற்றவாளி என்றுதான், எண்ணுவார்.




ஆனால், முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் “மகனே, நீ நல்லவன்டா” என்று அவனை ஆதரிப்பார். ஏனெனில், இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.




மற்றவர்கள், முதல் மகன் செய்த தவறுகளை, குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும், அவர் ஏற்றுக் கொள்ளாமல், “இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான், நல்லவன்” என்று சொல்வார்.




ஆனால், இரண்டாவது மகனைப் பார்த்து, “அயோக்கியன், இவன் தவறு செய்வான்” என்றுதான் கூறுவார். முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால், அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும், “தப்பு இல்லை” என்று தான் அவருக்குச் சொல்லவரும்.




இது இயற்கையின் செயலாக்கங்கள். நாம் எதை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வை நம்முடன் இணைக்கப்படும் பொழுது, அதே உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.




தம் பையனைக் கண் கொண்டு பார்த்து, அவன் தப்புச் செய்திருந்தாலும் கூட, அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது, அந்த உணர்வு கொண்டு, அவருக்குள் படமாக்கி, அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது, இதைத்தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்று உரைக்கப்பட்டது.




தந்தை செய்த தவறுகளையெல்லாம், முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை, அவருக்குள் வளரப்படும்பொழுது, அது அவரிடத்தில் கடும் நோயாக விளைகின்றது.




ஆனால் அந்த சமயத்தில், தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ, தந்தையால் நல்லபிள்ளை என்று பாராட்டு பெற்றவன், கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து. “நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய், நான் என்ன செய்யட்டும்” என்று சொல்வான்.




நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ, அவனைப் பார்த்து, “அடேய்.., பாவி” என்று தந்தை தம் மகனைப் பார்த்து சொல்லும் நிலை பின் நாட்களில் வரும். இதை நாம் பார்க்கலாம்.

சில குடும்பங்களில், உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது. எந்த உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து, தன்னிடத்தில் இணைக்கின்றதோ, அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும், வேறொன்றையும் இயக்காது.




எதனை நாம் எண்ணுகின்றோமோ, அது நமக்குள் கணங்களுக்கு அதிபதியாகின்றது. நமக்கு மெய்ஞானிகள் கொடுத்துள்ள தத்துவங்கள் சாதாராணமானதல்ல. நாம் வணங்கச் செல்லும் ஆலயங்களும் சாதாராணமானதல்ல.

நமக்குள் இயக்கும் உணர்வுகளை, உருவமாக்கிய நிலைகள், துவைதம். அந்தக் காவிய படைப்புகளை, எண்ணத்தால் எண்ணும் பொழுது, அத்வைதம். அதனை உணர்ந்து, உயிரால் இயக்கப்படும் பொழுது, விசிஷ்டாத்வைதம். நம் உணர்வின் தன்மையினை உருவாக்கி, நம் உடலாக்கும் பொழுது துவைதம்.




இன்று துவைதவாதிகளும், அத்வைதவாதிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். துவைதவாதி தாம் படித்ததைப் பேசுவார். உடலுக்குள், உணர்ச்சியின் தன்மை இயக்குகின்றது. இதுதான் உண்மை. இந்த உடலுக்குள், உணர்ச்சியின் தன்மை எதிலிருந்து வருகின்றது?




நாம் புறத்திலிருந்து நுகர்ந்து, பின் உடலுக்குள் இயக்குகின்றது. ஆனால், இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். உடலில் இருந்துதான், இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்பார்கள். உடல் எப்படி வந்தது என்பார்கள். இதுதான் இவர்களது வாதம்.




தெய்வச் சிலைகளை வைத்து, அதற்கு யாக வேள்விகளைச் செய்தால், ஆண்டவனை அடைய முடியும், துயரங்களைப் போக்க முடியும் என்பது துவைதவாதிகளின் கொள்கைகள்.




யாக வேள்விகளை ஆண்டவனுக்கு படைத்தபின், அந்த அக்கினிக் குண்டத்தில், ஆண்டவன் இறங்கி வருவான் என்றும், தாய் பராசக்தி எழுந்து வருவாள் என்றும். கட்டுக் கதைகளைக் கட்டுவார்கள். யாரையும் குறை கூறுவதற்காக இங்கு இதை யாம் இதை சொல்லவில்லை.




அன்று ஆண்ட அரசர்கள், தன் அரசாட்சிக்குத் தக்கவாறு, மக்கள் அரசனை நம்பியிருக்கும்படியாகவும், அரசனின் கீழ் குடிமக்கள் அமைவதற்கும் உகந்தவாறு, ஞானிகள் அன்று உரைத்த உண்மைகளை மறைத்து, திரிபுபடுத்தி, உனக்குத் தொழில் செழிப்பாக வேண்டுமா, இந்த அபிஷேகத்தைச் செய், ஆண்டவன் உனக்கு செய்வான் என்ற ஆசையினைத் தூண்டி, ஞானிகள் கண்பித்த அருள் வழிகளை மாற்றியமைத்து விட்டார்கள். அதன் வழியில் மதங்களை உருவாக்கி, மதத்தினுள், இனங்களையும் உருவாக்கினார்கள். இன்று இனங்களுக்குள் போர் முறை மாறாத நிலைகளே, வந்து கொண்டிருக்கின்றன.




துருவ மகரிஷி தீமைகளை வென்றவர். இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவரும், சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவனும், மனைவியும் இணைந்தே தீமைகளை அகற்றி, அருள்ஞானத்தின் வழியில் வளர்ந்து கொண்டுள்ளார்கள்.




ஒரு நோயாளியையோ, தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும், அது வாலியாக, வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து, நல்ல குணங்களை அடக்குவதை, அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால், தடுக்க முடியும்.




அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால், அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும். இதைத்தான் இராமாயணத்தில், இராமன் வாலியை, சுக்ரீவன் துணைகொண்டு அடக்கினான், என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.




அதாவது, அருள்ஞானியின் உணர்வுகளை, மனிதனில் தீமைகளை வென்ற, அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்கு வேண்டித்தான், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து, இந்த வலிமைமிக்க விஷத்தை, வாலியை அடக்குதல் வேண்டும்.




சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை, நாம் எண்ணத்தால் நுகர்ந்தால், சுக்ரீவன்.




அவன் உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி, நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது. இதைத்தான், சுக்ரீவன் துணைகொண்டு, வாலியை இராமன் அடக்கினான் என்பார்கள்.




இதில் வாலி அண்ணன், சுக்ரீவன் தம்பி.

(ஆதியில்) விஷத்தின் இயக்கத்தால்,

தொடர்ந்து வந்தவன்தான் அண்ணன், வாலி.

மனிதனாக ஆனபின், உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை,

ஆக, பின்னால் பிறந்ததுதான் ஒளி, சுக்ரீவன்.

இவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றார்கள்.




இதனால், வாலி, சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்து, சகோதரர்கள் என்றும், ஆகவே, சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது, இது இணைந்து, நமக்குள் நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது, என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.




மெய்ஞானிகள், தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும், காரணப் பெயர்களைச் சூட்டி, தம் இன மக்கள் அனைவரும், விண்ணின் ஆற்றலை தம்முள் பெற்று, உணர்வினை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காகத் தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை வெளிப்படுத்தினர்.




நாமும், மெய்ஞானிகள் வெளிப்படுத்திய, உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து, நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி, மெய்ப் பொருளை பெறும் நிலையாக, நமது உணர்வினை வளர்ப்போம் என மெய்ஞானிகள் காண்பித்த வழியினை கடைப்பிடிப்போர் அனைவரும், என்றும் பேரானந்த பெருநிலையைப் பெறுவதற்கு எமது அருள் ஆசிகள்.




உண்மையான யாகம் என்பது, தீயை வளர்த்து, அதில் விலையுயர்ந்த பொருள்களைப் போட்டு எரித்து, மந்திரங்களை ஓதுவது அல்ல.

உயிரான நெருப்புக்குள்,

மகாஞானிகளின் உணர்வைச் செலுத்தி,

நம்முள் உள்ள நஞ்சினை ஒடுக்குவதே,

உண்மையான யாகம்.