Pages

(ஏப்ரல் 1997)

பிறரிடம் குறை காணும் உணர்வுகளானது, அதே குறைகளை, நம்மிடத்திலும் உருவாக்கி விடும். இந்த வகையில், நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை. நாமேதான் நமக்கு எதிரி.

எல்லோரும் நல் நிலை பெறவேண்டும் என்னும் உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது, நம்மிடத்திலும், நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும் நல் உணர்வுகள் விளைந்து, நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும், உயர்ந்த நிலை பெறச் செய்யும்.

நாம் யாரிடமெல்லாம் பழகினோமோ, அவர்கள் நம்மிடம் பகைமையாகப் பேசியிருந்தாலும் சரி, அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது, நாம் நமது நினைவிற்கு கொண்டுவந்து, அவர்களது குடும்பங்கள் நலம் பெறவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த, இருள் நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி, ஏங்கித் தியானிக்க வேண்டும்.


பின், அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும், ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெறவேண்டும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, அவர்கள் வாழ்ந்திடவேண்டும் நளாயினி போன்று, ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும், என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே, நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

காலையில், இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது, அனைவரது உடல்களிலும் பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது அவை தடைபெற்று விடும். இந்தப் பரமாத்மாவில், (காற்று மண்டலத்தில்) மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.




ஒரு புழு, ஒரு விஷச்செடியைத் தனது உணவாக உட்கொண்டால், அதனின் உணர்வின் எண்ணங்கள், புழுவினுள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால், அதை உணவாக உட்கொள்ளும் அந்த குணத்தின் தன்மை கொண்டு, அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும். ஆனால், அதே புழுவின் உயிர், இந்த குருவியின் தன்மைக்கு வந்திருக்கும். இதைப் போன்று, பல கலவைகள் கலந்தே, நாம் வந்துள்ளோம்.




ஒன்றைக் கொல்கிறது, ஒன்றை வளர்க்கின்றது. ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும், விஷத்தை விஷத்தாலே, தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.




விஷச் செடியில் புழுக்கள் உருவாகின்றது, அதைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று, குருவியின் ரூபத்தை அடைகின்றது. ஆனால், அந்த உணர்வின் தன்மை, விஷத்த்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.




ஆக, இன்று பிறிதொருவரிடம் தொடர்பு இல்லை, என்று, ஒருவரும் இருக்க முடியாது. யாரும், பிரிந்து தனியாக இல்லை. ஒருவன் உங்களைச் சபித்து, அதை உங்களிடம் பதிவாக்கி விட்டான் என்றால், அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.




நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால், நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது. இதைப் போன்று,

நாம் ஒருவரோடு ஒருவர் பேசினாலும்,

அவர்களின் உணர்வுகளும், நமக்குள் உண்டு.

இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி,

உங்களை இணைத்துக் கொண்டிருக்கும்.

“பாவிப்பயல், இப்படிச் செய்துவிட்டான்” என்று

உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.




நண்பர்களாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும், இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான் இருக்கிறீர்கள். ஆக, நன்மையின் நிலை வரும் பொழுது, இரண்டு பேருக்குமே நன்மையாகி விடுகின்றது.




இரண்டு பேரும், தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும் கூட, இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை. உங்கள் நண்பரின் நிலைகளில், எதை அதிகமாக உங்களில் பதிவாக்கியிருக்கின்றீர்களோ, அதன் உணர்வுகளின் தன்மை, உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.




ஆக, நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ, பேசினோமோ, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது எண்ணி, “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், மெய்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும்” என்று எண்ணி, இந்த உணர்வுகளை, நமக்குள் வளர்க்க வேண்டும்.




மேலும், “அவர்கள் குடும்பத்தில் கணவனும், மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திடவேண்டும், நளாயினி போன்று ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும்”, என்று நாம் எண்ணுதல் வேண்டும்.




“அவர்களுடைய குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும், அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்கவேண்டும்”, என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து, இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

“அவர்கள் வளர்ச்சி பெறவேண்டும்” என்ற உணர்வுகள்

நமக்குள் விளையும் பொழுது, நமக்குள் அந்த நிலைகள்

தானாகவே வளரும் தன்மை பெற்று,

வளர்ச்சி அடைகின்றது.




நாம் சந்தித்தவர்களின் உணர்வுகளும், நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில், “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும்”, என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும்பொழுது, நம்மிடத்தில் உள்ள தீமை என்ற உணர்வுகள் மறைந்துவிடுகின்றன. அதே சமயத்தில், அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளை பெறுகின்றார்கள்.




யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய, அருள் வாக்கினை நீங்கள் நினைவு படுத்தும் பொழுது, இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும்.




அது உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்பொருளை அறிந்திடும் நிலையைப் பெறச் செய்யும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில் பெருகி, தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது, உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும், நல்மணமும் பெருகி வளர்வதற்கு, எமது அருள் ஆசிகள்.










(மே 1997)

உணர்வின் மணமே, மனிதரின் மனம் ஆகும்.

நற்குணங்களின் உணர்வே

மனிதருள் நறுமணத்தைச் சேர்க்கும்.




மெய்ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை, யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம். ஆனால், உபதேசத்தைக் கேட்கும் பலர், என்றைக்குத்தான் நாம் இதைப் புரிந்து கொள்ளப் போகின்றோமோ, என்று இதையும் விட்டு விடுகின்றார்கள்.

இருப்பினும், இதைத் திரும்பத் திரும்ப, யாம் உங்களுக்கு நினைவுபடுத்தித் தான் ஆகவேண்டும்.

நம்மை, நமது உணர்வுகள்

எவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளது? என்பதை

ஒவ்வொரு கோணங்களிலும்,

உங்களை உணரச் செய்து கொண்டுள்ளோம்.




நாம் அன்பு, பண்பு, பாசம் கொண்டு பிறருக்கு உதவி செய்தாலும், இந்த உயர்ந்த உணர்வுகள் கொண்டு அவர்படும் துயரத்தை உணர்ந்து, நுகர்ந்து அறியப்படும் பொழுது, அது உயிரினில் மோதி, உடல் முழுவதும் படர்கின்றது. குளவி புழுவைக் கொட்டியது போன்று அவர்படும் வேதனையின் உணர்வை நுகர்ந்து அறியும் பொழுது, அவைகள், இந்த உடலை உருவாக்கிய, அணுக்களை எல்லாம் தாக்குகின்றன.




பின், அந்த வேதனையின் உணர்வின் தன்மை நமது நினைவுக்கு வருகின்றது. அதனின் அணுவின் தன்மை, நமக்குள் உருப்பெறுகின்றது. நமது உடல், நம்மை அறியாமல் நலியத் தொடங்குகின்றது.




இந்த விஷத் தன்மைகள் நம்மைச் சார்ந்தோரிடமும் பரவுகின்றது. இதையெல்லாம் நீக்குவது யார்? நீக்கும் வழிமுறை என்ன? என்பதை நமது வேதங்கள், நமக்குத் தெளிவாக கூறுகின்றன. அதனை நாம் அறிதல் வேண்டும்.




வேதனையின் உணர்வை வளர்த்தவர்கள் ஞானிகளையோ, பெரியோர்களையோ காணும் பொழுது, அவர்களிடம் தங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லி விக்கி, விக்கி அழுவார்கள். குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை எல்லாம் கூறி, “எனக்கு இப்படி இருக்கின்றதே, இதிலிருந்து எனக்கு விமோசனம் கிடையாதா? என்று சொல்லி அழுவார்கள்.




ஆனால், அந்த ஞானியின், பெரியோரின் நல்ல உணர்வுகளை நமக்குள் இணைக்க வேண்டும் என்ற எண்ணமே எழாது.




பெரியோர்களை தரிசனம் செய்து பாத நமஸ்காரம் செய்தால், எல்லாம் நல்மாக இருக்கும், அழுது புலம்பினால், அவர்களுடைய ஆசி கிடைக்கும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால், இவர்கள் எடுத்துக் கொண்ட துயரத்தின் தன்மையானது நல்லதை நுகரவிடாது, துயரத்தைத்தான் அதிகமாக கூட்டும், நல்லதை வளர்க்கவே விடாது. பாத நமஸ்காரம் செய்வதனாலும் பலனில்லை.




ஆக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நான் பெறவேண்டும், என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும். ஞானிகள் கண்டுணர்ந்த, மெய்பொருள் உணர்வுகள், என்னிலே விளைய வேண்டும்.




என் செயல் அனைத்தும், புனிதம் பெறவெண்டும், என் பார்வை, அனைவரையும் நலமாக வைக்கும் நிலைகள் பெறவேண்டும்” என்ற எண்ணம் கொண்டு ஏங்கி, ஞானிகளை உற்றுப் பார்த்து, அந்த உணர்வினைப் பதிவாக்கி, அவர் உடலிலிருந்து வரும் உணர்வை எவர் நுகர்கின்றனரோ, அவரே நல்நிலை பெறுவர்.




ஆனால், யார் அப்படி செய்கின்றார்கள்? ஆனாலும், ஞானிகளைப் பார்த்ததின் உணர்வை நுகரப்படும்பொழுது, அவர்கள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகள், அணுக்களாக நமக்குள் விளைகின்றது.




அவருடைய உடலில் விளைந்த மெய் உணர்வின் அலைகள், நம்மிடத்தில் படர்கின்றது. அவர் பார்த்துணர்ந்து அறிந்த உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.




அவ்வாறு அணுக்களாக நமக்குள் மாறிவிட்டால், அது தன் இரையை எடுக்கின்றது. அப்பொழுது, அவருடைய உடலில் விளைந்த ஞானத்தின் உணர்வுகள் வெளிப்படும்பொழுது, நாம் நுகர்ந்தறிவதனால் அது, நமக்குள் விளைகின்றது.




அந்த ஞானத்தைப் பேணிக் காக்கும் அணுக்கள், நமக்குள் வளர்கின்றது. அந்த ஞானத்தின் உணர்வு, நமக்குள் அணுக்களாகப் பெருகுகின்றது.




ஆகையால், நாம் பெரியோரிடத்தில் ஆசி பெறும் பொழுது, இந்த முறைப்படிச் செயல்படுத்த வேண்டும்.




வீட்டில் சொத்து, சுகம் நிறைய இருக்கும். தொழிலுக்கு என்று கணவன் கேட்கும் பொழுது, மனைவி வீட்டில் இருக்கும் நகைகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து விடுவார்கள். தொழில் நசிந்து, வீட்டில் இருக்கும் நகைககள் எல்லாம், கையை விட்டுப் போயிருக்கும்.




இந்த நிலையில், பக்திகொண்டு கோயிலுக்குச் சென்றால், அங்கே, தெய்வச் சிலைக்கு அணியப்பட்டிருக்கும் நகைகளைப் பார்க்கும் பொழுது அழுகைதான் வரும்.




“நான் இவ்வளவு நகை வைத்திருந்தேனே, எல்லாம் போய்விட்டதே, நீயும் சோதிக்கின்றாயே”, என்று அழுவார்கள். தெய்வச் சிலைக்கு அணியப்பட்டுள்ள வைரங்கள் ஜொலித்தாலும், இந்த துன்பத்தின் நிலைகள் வரும்பொழுது, அது நிற்காது. “கழட்டிக் கொடுத்தேன், போய்விட்டது’ என்ற நிலைகள்தான், வரும்.




உடல் உழைப்பும், திறமையும் கொண்டுதான் நம்மிடத்தில் செல்வம் வருகின்றது. அந்த செல்வத்தின் தன்மை நமக்குள் வளர்ந்தாலும், சிறிதளவு குறைகள் இருந்தாலும் வீட்டில் கௌரவக் குறைச்சல் வந்துவிடும்.




“எனக்கு இப்படிச் செய்தார்கள், எனக்கு அப்படிச் செய்தார்கள்” என்று சொல்லிக் குறைப்படும் பொழுது, செல்வத்தைக் காக்கும் தன்மையே, போய்விடுகின்றது.




அந்த வேதனையின் உணர்வு உடலில் வளரும் பொழுது, நோயின் பெருக்கமும் அதிகமாகின்றது. நோயின் பெருக்கம் அதிகமாகும் பொழுது, “இது என்ன” என்று அலட்சியப்படுத்தும் தன்மை வருகின்றது.




மக்கள் அனைவருக்குள்ளும், உயர்ந்த பண்புகளை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில், தெய்வச் சிலைகளுக்கு வைரக் கிரீடங்களை அணிவிக்கின்றார்கள். வைர ஒட்டியாணம் மாற்றுகின்றார்கள். “பள பள” வென்று மின்னும் நகைகளை அணிவிக்கின்றார்கள்.




இவைகளை எல்லாம் பார்க்கும் நாம் எப்படி இருக்கவேண்டும்?

சங்கடம், சலிப்பு, வெறுப்பு இவைகளை நீக்கி,

சிலைக்கு அணிவிக்கப்பட்ட வைரம்

எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று,

“என்னுடைய சொல்லின் நிலைகள் ஜொலிக்க வேண்டும்,

என் சொல்லைக் கேட்போர் வாழ்வில்,

அந்த ஜொலிப்பு ஏற்படவேண்டும்,




என் பார்வையின் நிலைகள், அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் குடும்பத்தில் மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும்” என்று எண்ணி, இதை நுகர்ந்தால் அதனின் உணர்வின் அணுக்கள், நம்முள் விளையும்.




வைரமோ விஷம் கொண்டது. மின்னிடும் இயல்பு கொண்டது. அதைத் தட்டி சாப்பிட்டால் நம்மைக் கொல்கின்றது. ஆக,

மின்னும் அணுவின் நிலையை,

கண்ணுற்றுப் பார்த்து,

அந்த உணர்வின் நிலையை நாம் நுகர்ந்து,

அந்த உணர்வைப் பெறவேண்டும், என ஏங்கி எண்ணும் பொழுது, இந்த உணர்வின் தன்மை,

மின் அணுவாக மாறி,

உடலில் விளைந்த விஷத்தை ஒடுக்கி,

உணர்வின், “ஒளியின் அறிவாக

வளரச் செய்வதற்குத்தான், வைரக் கிரீடம்”.




ஏராளமான நகைகளுடன் “வெங்கடாசலபதியின்” படம் போட்டு இருப்பார்கள். அவனை வணங்கும் பொழுது, அவனுக்குக் காசு கொடுத்தால் நிறையப் பணம் கொடுப்பான், என்ற எண்ணம்தான் வருகின்றது.

வெங்கடாசலபதி எனும் பொழுது,

நம்மை ஆட்சி புரிபவன் நமது உயிர்,

நமக்கு அதிபதி. அதில் நாம் எத்தகைய உணர்வை இணைக்க வேண்டும்? எந்த உணர்வாக, நமக்குள் இயக்கப்பட வைக்க வேண்டும்? என்பதைத்தான் காவியமாகப் படைத்துள்ளார்கள்.




ஆக, அன்று ஞானிகள் பொருள் செல்வத்தை விரும்பவில்லை. ஒளியின் சுடராக, நமக்குள் அருள்ஞானத்தை வளர்த்தோம் என்றால், நம் சொல் இனிமை பெறும். இருளைப் போக்கிடும் அருள்ஞான உணர்வுகள் நம்மில் பெருகிடும், என்ற இந்த உண்மையின் உணர்வைப் பெறும் நிலையாக, துவைத நிலை கொண்டு சிலை வைத்தார்கள்.




“திருவேங்கடம்”, இந்த உடலை ஆட்சி புரிபவன்

“உயிர்”, என்ற நிலைகளுக்கு காரணப் பெயர் சூட்டி,

சிலையாக உருவாக்கி,

உணர்வின் காவியமாகத் தீட்டி,

கருத்தினைப் பதிவு செய்து,

சிலையை உற்று பார்க்கச் செய்து,

அதனின் கருத்தை, உணர்வை நுகரச் செய்து,

நுகர்ந்த உணர்வை உயிருடன் இணையச் செய்து,

இந்த உணர்வின் அலைகளை, நமது உடல் முழுவதும் படரச் செய்தனர்.




சிலைக்கு அணிவிக்கப்பட்ட, வைரங்களின் ஜொலிப்பினை கண்ணால் பதிவாக்கப்பட்டு, நினைவின் ஆற்றல், உயிருடன் ஒன்றப்படும் பொழுது, இந்த உணர்வின் ஒளிக்கதிர்கள் நமது உடலில் ஊடுருவி, நமது ஒவ்வொரு அணுவிலும் "பளிச்சிடும்" உணர்வுகள் விளைகின்றது.




எப்படி விஷத்தின் தன்மைகள் மோதி, ஒளியின் சுடராக மாறுகின்றதோ, இதைப் போன்று அதன் உணர்வின் தன்மை, நம்முள் வேதனையின் உணர்வின் தன்மையை ஒடுக்கி, நமது உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.




ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு, நீங்கள் உங்களை நலியச் செய்யும், மயங்கச் செய்யும், வேதனையான உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடம் தராது, மகிழ்ச்சியைப் பெருக்கி, அஞ்ஞானத்தைப் போக்கி, பேரின்பப் பெருவாழ்வை பெறச் செய்யும் அருள்ஞானிகளின் உணர்வை, உங்களுக்குள் இணைத்து, உயிரான்மா அழியா ஒளிச் சரீரத்தினைப் பெறும் நிலையாக உங்களில் உணர்வுகளை வளர்த்து, குடும்பத்தில் ஒற்றுமையுடனும், தொழில் வளத்துடனும், செல்வச் செழிப்புடனும், மலரைப் போன்ற மணத்துடனும், மகிழ்ந்த உணர்வுகளுடனும், என்றும் பேரின்பப் பெருவாழ்வுடனும் நீங்கள் வாழ்ந்து வளர்வதற்கு, எமது அருள் ஆசிகள்.




ஆதியில், பேரண்டத்தில் பரவியிருந்த ஆற்றல்கள் “சக்தி”.

ஆற்றல்களின் இயக்கத்தொடர் கொண்டு, உருவான பொருள் “பரமசிவம்”.




சிவமான பொருளில் விளைந்து, வெளிப்படும் உணர்வுகள் மற்றொன்றுடன் மோதி, புதுப் பொருளாக, புது ஆற்றலாக உருவாகின்றது. இப்படி,

சக்தியின் துணை கொண்டு, சிவமும்

சிவத்தின் துணை கொண்டு, சக்தியும்

பேரண்டத்தில் வளர்ச்சி நிலை கொண்டு புதுப்புது நிலைகளாக வெளிப்படுகின்றன. சக்தியும், சிவமும் ஒன்றுக்கொன்று துணை கொண்டு, வளர்ச்சி பெறுவதால் ஞானிகள்,

“சக்தியில்லையேல் சிவமில்லை,

சிவமில்லையேல் சக்தியில்லை”

என்று காவியங்களில் உரைத்துள்ளார்கள்.







(ஜூன் 1997)

பேரண்டத்தில், இருப்பதற்கு இல்லாமை கிடையாது இருப்பவைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கலந்து, இணைந்து, புதுப் புது நிலைகளக உருமாற்றம் பெற்றுக் கொண்டேயிருக்கும்.

அனைத்திற்கும் மூலமாக இருப்பது,

விஷம், வெப்பம், காந்தம், மணம், உணர்வு.




மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உபதேசித்து உணர்த்திய அருள்வழி கொண்டு, “அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களில் நுகரச் செய்வதற்கும், இந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கும்” யாம் உங்களுக்கு உபதேசித்து வருகிறோம்.




ஏனென்றால், யாம் உபதேசிக்கும் உணர்வுகள், உங்களுடைய செவிப்புலன்களில் உந்தப்படும் பொழுது,

கண்ணின் உணர்வலைகள்,

ஈர்க்கும் சக்தி பெறுகின்றது,

பதிவாக்குகின்றது,

உணர்வினை நுகரச் செய்கின்றது,

உயிருடன் உராயச் செய்கின்றது,

உணர்வின் அலைகள், உடலில் படர்கின்றது.




இதில் நமது கண்கள் புறக் கண்களாகவும், நமது உயிரின் உணர்வுகள் அகக் கண்ணாகவும் இருந்து, நாம் நுகர்ந்த உணர்வுகளை நமக்கு உணர்த்துகின்றது, அதன் அறிவாக இயக்குகின்றது. நுகர்ந்த அணுவை, உயிர் அதே அணுவாக மாற்றுகின்றது. அதனின் மலமாக, நமது உடலாக மாற்றுகின்றது.

(ஆகஸ்ட் 1997)

ஆதிமூலம் என்ற உயிர், தான் பெற்ற பல கோடிச் சரீரங்களில், தன்னைக் காத்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து, ஜீவ அணுவுக்குள் ஜீவ அணுவாக மாற்றி, தீமையின் உணர்வுகளை வென்று, இன்று தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு, நாயகனாக மனித உடலை உருவாக்கியது, இது விநாயகா.




ஆகவே, விநாயகருக்கு ஆதிமூலம் என்று பெயர். அதே சமயத்தில், “ஓம்” என்ற பிரணவத்திற்கே உரியவன் விநாயகன். நாம் எந்த குணத்தை சுவாசிக்கின்றோமோ, அது வினையாகின்றது, பின், அதுவே வினைக்கு நாயகனாக உருப்பெருகின்றது.




உதாரணமாக, சாந்த உணர்வு கொண்ட மான், தான் எந்தப் புல்லின் தன்மையை தனக்குள் நுகர்ந்ததோ, அந்த மணத்தின் ஞானமாக அதன் அணுக்கள் பிரம்மமாகின்றது. அதன் சக்தியாகி, பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.




அதன் மணத்தின் தன்மை கொண்டு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. தான் சுவாசித்த உணர்வுகள் எதுவோ, அதன்வழி அந்த உடலை இயக்குகின்றது, இயங்குகின்றது, காக்கின்றது, உருவாக்குகின்றது.




ஒரு புலி, இந்த மானை நுகரப்படும்பொழுது, மானின் சாந்த உணர்வுகள் புலிக்குள் அடங்கிவிடுகின்றது, உதாரணமாக, ஒரு மிளகாயை அரைத்துச் சப்பென்றிருக்கும் ஒரு பொருளுடன் கலந்தால், அந்த காரத்தின் நிலைக்கு, சப்பென்றிருக்கும் பொருள் தன்னை மாற்றிக் கொள்கின்றது.




இது போன்று, புலி, மானின் சாந்த உணர்வுகளை நுகரப்படும்பொழுது, மானின் சாந்த உணர்வுகள், புலியின் உணர்வுக்குள் ஒடுங்கி விடுகின்றது. அதன் வழி கொண்டு, மானின் உணர்வுகள் புலியினுள் அடக்கமாகின்றது.




மானோ, புல்லைப் பார்த்து அதனின் மணத்தை நுகர்கின்றது. நுகர்ந்துகொண்ட உணர்வின் மணம், மானுக்கு வாகனமாக அமைந்து, புல் இருக்கும் பக்கம் மானின் உடலை நகர்த்திச் செல்கின்றது.

புலியோ, கடினமான உணர்வுகள் கொண்டது.

புலி, மானை நுகர்ந்தபின்,

மானின் சாந்த உணர்வுகள், புலிக்குள் ஒடுங்குகின்றது.

மான், புலியை நுகரப்படும் பொழுது,

புலியினுடைய கடுமையான உணர்வுகள்,

மானின் சாந்த உணர்வுக்குள் சேர்ந்து கொண்டபின்,

புலியின் கடுமையான உணர்வுகள்

மானின் சாந்த உணர்வுகளை, அடக்கும் சக்தியாக மாறுகின்றது.







ஏனென்றால், சாந்த உணர்வின் தன்மை, அணுவாக “ஓ” என்று இயக்கினாலும்,

“ஒமுக்குள் ஓம்”.

புலியின் உணர்வுகளானது கடுமையாக்கப்படும் பொழுது,

சாந்த உணர்வுக்குள் நின்று,

அதன் அணுவின் தன்மை இதையும் இயக்கி,

இதை அடக்கும் போர் முறை கொண்டு,

இந்த அணுத்தன்மை, அதற்குள் துடிக்கும் வேகத்தைக் கூட்டுகின்றது.




ஒரு கடினமான பொருள் மற்றொன்றை வேகமாகத் தாக்கும் பொழுது, வெப்பம் உருவாகின்றது. அதுவே, ஒரு உயிரினத்தில் என்றால் வலியும், வேதனையும் அதிகரிக்கின்றது.




இதைப் போன்று, வேகத்தின் உணர்வுகள் ஒன்றைத் தாக்கப்படும் பொழுது, அது அந்த உணர்வுக்குள் ஊடுருவி, அந்த அணுவின் தன்மையை அடைந்து, அதனை அடக்கும் தன்மை பெறுகின்றது.

ஆக, அந்த அணுவுக்குள் “ஓமுக்குள் ஓம்” ஆக மாறி,

அதை அடக்கி, அதனுள் இது அடங்கி

அதனின் செயலாக்கத்தை குறைக்கின்றது.




ஆக, சாந்த குணமும், சாந்த குணங்களும் அது வளர்க்கும் தன்மை இழந்து, காரத்தின் உணர்வுகள் அதனுள்

“ஓமுக்குள் ஓம்,

ஓமுக்குள் ஓம்,

ஓமுக்குள் ஓம்”

என்ற நிலைகளில் வளரப்படும் பொழுது, இதனின் சாந்த உணர்வுகள், சிறிது சிறிதாக ஒடுங்கிவிடுகின்றது.




மானின் சாந்த உணர்வுக்குள், புலியின் உணர்வுகளானது இயக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் வேகங்கள் கணங்களுக்கு அதிபதியாகின்றது.

மான் எதை வலுக் கொண்டதாகச் சுவாசித்ததோ, அதற்கு அடிமையாகி, எந்த புலியின் உடலில் வேகமான நிலைகள் அமைந்ததோ, இந்த மானின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா, புலியின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்று, அதன் உணர்வைக் கருவாக்கி முட்டையாகி விடுகின்றது. பின் புலிக்குட்டியாகின்றது. மான் இவ்வாறு புலியாக மாறுகின்றது.




இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காக, ஞானிகள் தத்துவ நிலைகளில் இதனைத் தெளிவாக்கி உள்ளனர். ஞானிகள் சொன்னதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சாமி என்னவோ சொல்கின்றார், நமக்குப் புரியவில்லை என்று சொன்னால், நமக்குப் புரியாமலே போய்விடும்.




இதை, நாம் புரியும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால், இந்த உணர்வுகள் மீண்டும் உங்கள் நினைவிற்கு வரப்படும் பொழுது, அதனின் உண்மையை, அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.




ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு, நாம் மனிதனாகப் பிறந்த வழியைத் தெரிந்து கொண்டால், இந்த மனித வாழ்க்கையில்

எதைச் சேர்க்கவெண்டும்?

எதை வளர்க்க வேண்டும்?

எதை சுவாசிக்க வேண்டும்?

எதை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்?

என்ற உணர்வுகளை உங்களில் பெற முடியும்.




இந்த மனித வாழ்க்கையில், ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நமக்குள் பெற்று, மகிழ்ந்து வாழ்ந்து, முழுமை பெற்று, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ந்து வாழச் செய்து, மகரிஷிகள் சென்றடைந்த அந்த சப்தரிஷி மண்டலத்தை, நாம் அனைவரும் அடையலாம். மனிதனாகப் பிறந்ததின் பலனை ஒவ்வொருவரும் அடைய முடியும்.








(ஆகஸ்ட் 1997)

நஞ்சான தீமைகளை, ஒடுக்கக் கற்றுக் கொண்டவர் அகஸ்தியர். அவர் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, இன்றும் ஒளியின் சிகரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.




அதனின்று வெளிப்படும் உணர்வின் ஒளியலைகள், சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பூமியில் படர்வதை, நாம் நம்முள் கவர்ந்து, அந்த உணர்வின் சத்தை, நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்றால், அருள் மகரிஷியான துருவ மகரிஷியைப் பின்பற்றி, மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களைப் போன்று, நாமும், இந்த அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தை ஒடுக்கி, உணர்வின் சக்தியாக மாற்றிடும் சக்தியினைப் பெறுகின்றோம்.




ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் நாம் சாந்த குணம் கொண்டு, துன்பப்படுவோரை நுகர்ந்தறியப்படும் பொழுது, அது நமது நல்ல அணுக்களில் ஊடுருவி, “ஓ” என்று இயங்கத் தொடங்கிவிடும். இது தான் “ஓமுக்குள் ஓம்”, அது, இதை அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.




இப்படி, பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக “ஓமுக்குள் ஓம்” என்ற நிலைகள் கொண்டு, எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றிய நமது உயிர், கடைசியில் மனித உருவை உருவாக்கியது.




நமது உயிரான்மாவை, ஒளிச் சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற இந்த மனித சரீரத்தை அலட்சியப்படுத்தாமல், நாம் நமது உயிரை மறந்து விடாமல், இந்த மனிதப் பிறவியை, நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக எண்ணி,

இந்த மனிதச் சரீரத்தை உருவாக்கிக் கொடுத்த,

நம் அன்னை, தந்தையை முதல் கடவுளாக வணங்கி,

அவர்களது ஆசியின் துணைகொண்டு

மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து,

நம்முள் தீமைகள் வராது தடுத்து,

நம்முள் சேர்க்கும் உணர்வுகளை,

ஒளி பெறும் உணர்வுகளாகச் சேர்க்க வேண்டும்.



(அக்டோபர் 1997)

மாமகரிஷி அகஸ்தியர், நமது பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்து நிலைகளையும் தமக்குள் அதிபதியாக்கி, தமது வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்று, தம்முள் வரும் அனைத்து உணர்வின் தன்மைகளையும் அடக்கி, தம்முள் ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெற்றவர்.




துருவத்தின் ஆற்றலைத் தம்முள் கண்டுணர்ந்த அகஸ்தியர், அதனைத் தம் இன மக்கள், அனைவரும் பெறவேண்டும் என்று, பேருண்மையின் தத்துவங்களை வெளிப்படுத்தினார்.




இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு உயிரணு, தான் நுகர்ந்த உணர்வுகளை எப்படி அணுக்களாக உருவாக்குகின்றது? அந்த அணுக்களுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது? என்பதை அறிந்து உணர்ந்தவர் அகஸ்தியர்.




அகஸ்தியர் இந்தப் பிரபஞ்சத்தையும், பூமியையும் ஒப்பிட்டு, அந்த உணர்வின் தன்மையை தம்முள் வளர்த்தார்.

மெய்யுணர்வை உணர்ந்த அகஸ்தியர்,

அதைத் தாம் நுகரப்படும்பொழுது,

அது அவருக்குள் அணுவாக உருவாகின்றது.

அவருக்குள் உருவான அணுக்கள்,

அறிந்திடும் உணர்வை, உணவாக எடுக்கும் சக்தி பெறுகின்றது.




அந்த உணர்வின் தன்மை, அவருக்குள் வளர்ச்சி அடைந்த பின்,

அவர் துருவத்திலிருந்து வரும் ஆற்றலை அறிந்து,

அதனை தமக்குள் வலு பெறச் செய்தார்.

அவர் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும், அவருடைய இரத்தத்தில் கருமுட்டைகளாக வளர்ந்து, அவருடைய உடல் முழுவதும் பரவியது. பின், அவைகள் அவருக்குள் உயர்ந்த அணுக்களாக உருவாகியது.




நாம் நுகர்ந்த அணுக்களை, நமது உயிர் நமது உடலுக்கு எப்படி அறிவிக்கின்றதோ, இதைப் போன்று,

அகஸ்தியருக்குள் இருக்கும் அணுக்கள்,

தனக்குள் வரும், நஞ்சினைப் பிரித்துவிடும் உணர்வினை, வலுகூட்டி, தனக்குள் நுகர்ந்த உணர்வினை, ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.




இன்று நீங்கள் மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கலாம். அது, தான் நுகர்ந்த மூச்சலைகள் மோதியபின், வெளிச்சம் தருகின்றது. அது எப்பொழுதும் மின்னிக் கொண்டேயிருக்கும். இதைப் போன்று,

அருள் ஒளியின் உணர்வை அணுக்கள், தனக்குள் சேர்க்கப்படும் பொழுது, மின் அணுவாகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் அலையை, ஆன்மாவாக மாற்றும் பொழுது, தீமை என்ற நிலைகளைப் பிளந்து தள்ளுகின்றது. இதன் வழிகொண்டு, தனக்குள் தீமை இல்லாத நிலைகளை, உருவாக்குகின்றது.




உதாரணமாக, சீராகத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும், தங்களிடத்தில் பார்க்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்த நீங்கள், இரவிலே திடீரென்று விழித்தீர்கள் என்றால், உங்கள் உடலில் இருந்து, வெளிச்சம் வருவதைக் காணமுடியும்.




ஏனென்றால், நீங்கள் தியானித்த உணர்வுகள், உங்களில் மின்னிக் கொண்டேயிருக்கும். திடீரென்று விழித்தவுடன், அந்த உண்மையின் உணர்வை, நீங்கள் அறிய முடியும். அகஸ்தியர் இதைப் போன்றுதான், தமக்குள் ஒவ்வொரு அணுவையும், ஒளியாக மாற்றியவர்.




இதன் வழி கொண்டு, அகஸ்தியர் தமக்குள் பெற்ற சக்தியால், இந்த பிரபஞ்சத்தையும், இந்த பிரபஞ்சம் அது, தான் எடுத்து விளைந்த உணர்வின் தன்மையை,

நமது பூமி எடுத்து வாழ்வதையும்,

இந்த பூமியில் வாழும் தாவர இனங்களையும்,

கல்லையும், மண்ணையும் மற்றும் உயிரணுக்கள்

எப்படித் தோன்றியது என்பதையும்,

தாவர இனத்தின் மணங்கள் எவ்வாறு இருக்கின்றதோ,

அதற்கேற்ப குணமும், அதற்கேற்ப செயலாக்கங்களும்

ஒவ்வொரு உயிரினங்களிலும் எப்படி இருக்கின்றது

என்பதையும், அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.




இவ்வாறு, அகஸ்தியர் தாம் பேருண்மையின் தன்மைகளை அறிந்து, அதனின் ஆற்றலை வளர்த்து வரும் சமயம், தமது பதினாறாவது வயதில் திருமணமாகி, (பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், அக்கால வழக்கப்படி) தன் மனைவிக்கு, தான் கண்ட பேருண்மைகள் அனைத்தையும், போதித்தார்.




அவ்வாறு போதித்த உணர்வு, அது உயர்ந்து பெருகுகிறது என்ற நிலையை ஊட்டி, தன் மனைவி உயர வேண்டும், அந்த அருள் ஒளியால், எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும், இரு மனமும் ஒன்றி, எங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை உருவாக்க வேண்டும், என்று அகஸ்தியர் எண்ணினார்.




இப்படி இருவரும் சேர்ந்து, தாங்கள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு, துருவத்தில் இருந்து கவர்ந்த உணர்வை, தங்களிடத்தில் ஒளியின் தன்மையாக மாற்றினார்கள். “துருவ மகரிஷி” என்ற, உருவாக்கும் ஆற்றல் கொண்ட, ரிஷி என்ற நிலை அவர்களிடத்தில் உருவானது.




அருள் ஒளியின் உணர்வைத் தான் பெறவேண்டும் என்றும், அது தன் மனைவியும் பெற்று வளர்ந்து, தன் மனைவி உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்றும், இரு உணர்வும் ஒன்றிய பின், உணர்வின் அணுக்களை, ஒளியின் சரீரமாக மாற்றிடும் திறன் பெற்றனர்.




இவ்வாறு, எதனைக் கூர்மையாக உற்றுப் பார்த்து, வளர்த்துக் கொண்டனரோ, அதன் நிலை கொண்டு, இந்த உடலை விட்டு அகன்ற பின், “துருவ நட்சத்திரமாக” ஆனார்கள்.




அகஸ்தியர், அவரது மனைவி இருவரும் தங்களுக்குள் சிருஷ்டித்து, துருவ நட்சத்திரமான நாள்தான், “விநாயக சதுர்த்தி”. அவர்கள் இந்த மனித வாழ்கையில் வரும் தீய வினைகளை நீக்கி, அருள் ஒளியை தங்களிடத்தில் வளர்த்துக் கொண்ட நன்னாள்தான், விநாயக சதுர்த்தி.




அதிகாலை 4.00 மணிக்கு, சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தாங்கி, பிரபஞ்சத்தின் மேல் பரப்புகின்றது.

அவ்வாறு பூமியில் பரவும் நேரங்களில், நாம் துருவ மகரிஷிகளை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அனைவரும் பெறவேண்டும்” என்று எண்ணி, அந்த உணர்வுகளை நம்முள், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த அருள் சக்திகளை, நம் உடலை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிற்கும், உணவாக கொடுத்துப் பழக வேண்டும்.




இவ்வாறு, நாம் தொடர்ந்து செய்து வந்தால், அகஸ்தியரும், அவருடைய மனைவியும், எப்படி, “என்றும் பதினாறு” என்று, இன்றும் மகிழ்ந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்களோ, அந்த நிலையை நாமும் அடைய முடியும். அந்த நிலையை அடைய, எண்ணி ஏங்கி தியானிக்கும் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.









(அக்டோபர் 1997)

கண்வழி உற்றுப் பார்க்கும் உணர்வுகள், நமக்குள் பதிவாகிவிட்டால் ஊழ்வினை என்ற வித்தாகின்றது, வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது.




வேதனைப்படும் ஒரு மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வேதனையின் உணர்வை, கண்ணின் கருவிழியுடன் இணைந்த காந்தப் புலனறிவு நுகரச் செய்கின்றது. வேதனைப்படுகிறான் என்ற உண்மையை அறிகின்றது. ஆனாலும், நமது உயிர், நாம் நுகர்ந்த உணர்வை ஜீவ அணுவாக மாற்றுகின்றது.




நாம் எந்த குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ, உணர்கின்றோமோ, உணர்த்துகின்றோமோ இந்த உணர்வுகள் நமக்குள் அணுக்கருவாக உருவானபின், நமது இரத்த நாளங்களில் செலுத்தப்படுகின்றது. எந்த குணத்தின் தன்மை நமக்குள் கருவானதோ, அது, நமக்குள் சுழன்று கொண்டே இருக்கும்.




நமக்குள் கருவாகும் அந்த முட்டை, நம் உடலுக்குள் சுழன்று வரப்படும் பொழுது, எந்த பாகத்தில் இதற்கேற்ற நிலை உள்ளதோ, அங்கே அந்த அணுவின் தன்மை வளர்ச்சியாகி, அந்தத் தசையுடன் ஒட்டுகின்றது.

நுரையீரலோ, தசையோ அல்லது ஏதோ ஒரு பாகத்தில் ஒட்டிக் கொண்டபின், நத்தை தன் ஓட்டுக்குள் இருந்து, தான் சுவாசித்து வாழ்வது போன்று, இதைப் பாதுகாப்பாக வைத்து, அந்த அணு, தன் உணர்ச்சிகளை உந்துகின்றது. இந்த உணர்வின் ஒலியலைகள், நமது இரத்தங்களில் “ஒலி அதிர்வுகளாகச்” செல்லும்.




நாம், எங்கேயெல்லாம் செலுத்துகின்றோமோ

அதன் உணர்ச்சிகளை ஊட்டி,

நினைவுபடுத்தி இயக்கும், சிறுமூளை பாகங்களில் தாக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த உணர்ச்சிகள் தெரிகின்றது.




சிறுமூளை பாகமோ,

நம் கண்ணுக்கும், செவிக்கும் ஆணையிடுகின்றது.

வாயிற்கும் அந்த சுவையின் உணர்வை உணர்த்துகின்றது..

உடல் அனைத்திற்கும் அந்த உணர்வுகள் தெரிவிக்கின்றது.

கண்ணோடு இணைந்த காந்த புலனறிவு, யார் வேதனைப் பட்டாரோ

அவருடைய உணர்வுகளைக் கவர்ந்து

தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.