Pages

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1992-1994





உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்
(ஜூன் 1992)
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையில், ஒவ்வொரு உடலையும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மை நாம் எடுத்துக் கொண்டு, மனிதனுக்குள் வளர்ச்சியின் தன்மை அடைந்ததை குறிப்பிடுவதற்குத்தான், அர்ச்சுனன் சகலகலாவல்லவன், சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன், வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.


கண்ணன், கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.


கண்ணனின் நிலைகளுக்கு வரப்படும் பொழுது, தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். சகோதரப் பாசமான உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால், சகோதரர்களைப் பார்த்ததும் கொல்ல மனம் வரவில்லை. அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள், ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.


அதன் விளக்கம் ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அத்தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.


வேறு ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால், அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் மாறி, நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.


ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும், அந்த இரக்க உணர்வால் நீ இதை செயலாக்கவில்லை என்றால், அது உன்னை அழித்துவிடும். நீ கற்று உணர்ந்த வல்லமை எங்கே செல்கின்றது? என்று கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்ததாக, "கீதையின் தத்துவத்தைச்" சொல்கின்றனர்.

கண்ணன் சொன்னதின் நிலைகள், தீய வினைகள் அனைத்தும், பாசத்தால் வரக்கூடியது தான்.


எதிரியுடன் இருந்து நின்று, அவர்கள் போர் செய்யும் பொழுது, தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும் என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும், கீதையிலே எழுதுகின்றனர்.


ஒருவன் செய்யும் தவறான உணர்வை, உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி, அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.


அவன் அறியாத இருள்களிலிருந்து, மீள வேண்டும். தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.


இதை உணர்த்தவே, அங்கு அம்பாக எய்யச் சொன்னது. அதாவது, இந்த எண்ணத்தைக் கொண்டு, இவ்வுணர்வுகளின் நிலைகளை (மகரிஷிகளின் அருள்உணர்வுகளை) அவர்களுக்கு பாயச் செய்வது.


அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், நமது நல்ல குணங்களை, இங்கு அழித்துவிடுகின்றது.
எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளை
தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும், என்று
“உணர்வின் இயக்க நிலைகளை”
அன்று ஞானியர்கள், கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.


எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு, இராமாயணத்தில் “வாலியைக்” காட்டுகின்றனர். வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார் “நேரிடையாகப்” போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.


உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, அவர்களை நேரிடையாகப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால், அந்த உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து, வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.


நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
"பாதி நல்ல குணம்" வலு இழக்கப்படுகின்றது.
வாலி என்ற நஞ்சான செயல்களை,
நாம் பார்க்கப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும்.


மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து, நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.


மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும். பிறகு,
மகரிஷிகளின் அருள் சக்தி
வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும்,
அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும், என்று
நாம் மறைமுகமாக,
நம் எண்ண வலுவின் தன்மை கொண்டு
அலைகளைப் பரப்பவேண்டும்.


இதைத்தான் சீதாராமன், வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி, அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கணையை, மறைந்திருந்து ஏவினான், வாலியின் செயலைத் தடுத்தான், என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.



(ஆகஸ்ட் 1992)


கார்த்திகை நட்சத்திரம், சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து, ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால், நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும். ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது.


நம் பிரபஞ்சத்தில், முன்னிலையில் இருப்பது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகளே, மனிதனின் ஆறாவது அறிவான, அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைக்கு காரணம்.


அறிந்திடும் உணர்வுகள் ஒளியின் சரீரமாக, உணர்வின் அலைகள் மற்ற அணுக்களுடன் கலக்கப்படும் பொழுது, அணுவின் இயக்கத் தொடரை அறிந்திடும் செயல் ஒளியின் நாதங்களாக எழுப்பச் செய்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு, மற்றவர்களுக்கு, நுகர்ந்திடும் உணர்வின் ஒளி அலைகளைப் பெற்றது, கார்த்திகை நட்சத்திரம்.


அதனின் செயலாக்கத்தை, அது உமிழாது தனக்குள் அடக்கிக் கொண்டால், நம் பிரபஞ்சமான சூரியனுக்குள், உணர்வின் தன்மை ஒளியாகி, எதிர் நிலையின் தன்மை நாம் கண்டுணரும் நிலைகள் மறைக்கப்படும் நிலைகள் வருமேயானால், மனிதனின் சிந்தனைகள் குறைவுற்று, மிருக உணர்வுகளின் தன்மைகள் அதிகமாகி, பூமி சீர்கெடும் நிலை உருவாகி வருகின்றது.


இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள அன்று கண்ணன் (கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும் என்று, நம் உணர்வுக்குள் அதை கூர்மையாகச் செலுத்தி, “நரசிம்ம அவதாரமாக”, தீய நிலைகள் நமது உடலுக்குள் வராதபடி, அதைப் பிளந்து, அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை நமக்குள் சேர்த்து, நாம் சுவாசிக்கும் நிலைகள், ஆற்றல்மிக்க நிலையாகப் பெறச் செய்வதே நமது தியானம்.
மகாபாரதக் காவியத்தில் கண்ணன் சொல்லுகின்றான், சிவனான இந்த உடலுக்கு, அந்த ரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற, தவத்தின் பலனால் தான், உனக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க முடியும், என்று விண்ணை நோக்கி ஏகும் முறையை அர்ச்சுனனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தான்.


சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல, ஞானிகளின் உணர்வின் ஆற்றல்மிக்க எண்ணத்தின் தன்மை, ஒரு வித்தாக உங்களுக்குள் வலுப் பெறும் சத்தாக, ஊழ்வினையாகப் பதிவாகின்றது.


இதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணும்பொழுது, நாம் எவ்வாறு ஒரு நூலால் இழுக்க முடியாத ஒரு பொருளை, பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கயிறாக்கி இழுக்கின்றோமோ, அது போன்று எல்லாருடைய எண்ணங்களும் ஒருமித்த நிலைகள் கொண்டு,
மகரிஷிகள் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை,
நீங்கள் இட்ட முச்சலைகள் ஒரு சொல்லாக,
ஒரு உணர்வின் சத்தாக, அது ஊன்றி
மனித உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்யும் நிலையே,
கூட்டு தியானம்.

(ஜனவரி 1993)
சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போன்று, ஒரு செடி பல விதைகளை அளித்து, அது போன்று பல நூறு செடிகள் உருவாவதற்கு காரணமாவது போன்று, மகரிஷிகள் அருள் சக்தியை உங்கள் உணர்வில் சத்தாக விளைய வைத்து, உலகம் முழுவதும் படர்ந்து வரும் நஞ்சின் தன்மையில் இருந்து, நம்மையும், மக்களையும், இந்த பூமியின் தன்மையும் வாழவைக்கச் செய்திடும் நிலையாக, மனிதனின் தன்மைகளை நிலைக்கச் செய்திடும் செயலாக, அவ்வுணர்வின் தன்மை வளரச் செய்வதற்கும், மற்றும் மகா ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சென்றபின், இந்த உடலில் ஒளிசரீரம் பெறும் தன்மைக்காக நாம் இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, எல்லோரையும் ஒருங்கிணைத்து, தீமைகள் எவ்வழியில் எவ்வுருவில் வந்தாலும் அதைத் தடை செய்யும் ஆற்றலை, நீங்கள் பெறுவதற்குத்\தான், இந்த உபதேசத்தின் வாயிலாக, எமது செயல்கள் நடைபெறுகின்றது.


உலகத்தை அழித்துக் கொண்டிருக்கும் விஷத்தன்மை படர்ந்து, மனிதனுடைய எண்ணத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. அதை மீட்க வேண்டும் என்ற நிலையில், எமது குருநாதர் காட்டிய அருள் வழியில், நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை உலகம் முழுவதற்கும் பரவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில், அருள் ஞானிகளின் உணர்வுகள் நான்கு திசைகளிலும் பரவி, இப்பொழுது அதுவும் வளர்ச்சியாகி வருகின்றது.


நாம் மட்டுமல்ல. அந்த மகரிஷிகள், தியானம் என்ற நிலையில், உலகில் ஒவ்வொரு பாகத்திலும் இதைச் செயல்படுத்தி வருகின்றனர்.



இன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் வன்முறைகளும் கொள்ளைகளும் மலிந்து, உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, இன்று அங்குள்ள மக்கள் உணவுக்காக மிருகங்கள் போல் அலைந்து திரிந்து, உணவு கிடைக்காமல் பட்டினியால், ஏராளமானோர் மடிகின்றனர். இன்று இவ்வுலகில் விஞ்ஞான அறிவும் பொது அறிவும் நிறைந்த காலத்தில், ஏன் அங்கு மட்டும் பஞ்சம்?


காரணம் அமெரிக்கா, தான் கண்டுபிடித்த கருவிகளை பரீட்சாத்திரமான ரீதியில் சோதிக்க, இது போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுத்து, தாவர இனங்கள் வளர இயலாத நிலையையும், மனித சிந்தனைகளைச் சீர்கெடச் செய்தும், தங்களுடைய வக்கிரமான ஆதிக்க எண்ணங்களாகச் செயல் படுத்துகின்றனர்.


சோமாலியா நாட்டில் படர்ந்தது போன்று, விஷத்தன்மைகள், அதனின் காற்று மண்டலங்களாக சில புயல்கள் அங்கே திசை மாறி, அதனின் ரூபமாக அது கவர்ந்து, சுழன்று மழை நீருடன், இன்று உலகம் முழுவதற்கும் படரும் நிலை வந்துவிட்டது.


ஆக தீமையின் நிலையில் புயலின் நிலைகள் வரப்படும் பொழுது, எந்த நாட்டில் இந்த விஷத்தின் தன்மைகள் அவர்கள் செய்தனரோ, இவை அனைத்தும் மேகங்களில் கலந்து, இம்மேகங்கள் கலைந்து சென்று, எங்கெல்லாம் மழை நீராக வடிகின்றதோ, அந்த நாட்டில் இத்தகைய விஷத் தன்மைகள் வளர்ந்துவிடுகின்றது.


இந்த விஷத்தின் தன்மைகள் மனித உடலுக்குள், உணர்வின் தன்மைகள் ஊடுருவி, இம்மனிதன் இறந்தாலும் அம்மனிதருக்குள் சேர்ந்த உணர்வுகள், உடலிலே விளைந்த நிலைகள், ஆகியவை இன்னொரு மனித சரீரத்துக்குள் புகுந்து, உணர்வின் சக்தியாக, அந்த விஷத் தன்மைகளைக் கவரும் நிலையாக அணுக்களாக மாற்றிவிடுகின்றது.


இதைப் போன்று, மனிதனின் உணர்வின் தன்மைகள் அனைத்தும் நஞ்சாக மாறும் நிலையில், மனிதன் சிந்திக்கும் நிலையே அற்றுப் போய்விடுகின்றது. இந்நிலை இருப்பதினால், இந்த நிலையில் இருந்து நம்மைக் காப்பாற்ற, மகாஞானிகளின் அருள் சக்திகளை, நம்மிடம் பெருக்குவதுதான் ஒரே வழி.