உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்
(பிப்ரவரி 2000)
அகஸ்தியர் அணுவின் இயக்கத்தை அறிந்தார். உணர்வின் இயக்கத்தை அறிந்தார். தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்றார். தம் மனைவிக்குப் போதித்தார். கணவனும், மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக உருவாக்கினார். உணர்வின் தன்மையை உரு கருவாக்கும் உணர்வினைப் பெற்றனர்.
27 நட்சத்திரங்களின் உணர்வின் அணுக்கள், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது, ஒளிக்கற்றைகள் மாறி, ஒளி பிம்பங்கள் தெரிவதைப் போன்று, இதன் உணர்வின் அணுக்களின் தன்மையை தமக்குள் ஏற்றார். பகைமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது, அதைச் சுருக்கி, ஒளியாக மாற்றும் திறன் பெற்றார்.
இப்படி, அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். இதனின் உண்மைகளை அறிந்து, அதன் வழி நாம் வாழவேண்டும்.
புவியிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மைகளை, சூரியனின் காந்த புலனறிவுகள் கவர்ந்து, எலெக்ட்ரான்களாக மாற்றுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பதான், மற்றொன்றை உருவாக்குகின்றது.
ஒரு உயிரினம் தனக்கு எதிர்நிலை வரப்படும் பொழுது, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி ஏங்குகின்றது. இது சமயம், தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தன்னுள் இணைந்த பின், உணர்வின் தன்மை ஒன்றாகி, உணர்வின் உணர்ச்சிகள் மாறுகின்றது.
உணர்ச்சிக்கொப்ப ரூபங்கள் மாறுகின்றது என்பதை “எலெக்ட்ரிக்”, “எலெக்ட்ரான்” என்ற நிலையில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்படி, விஞ்ஞான அறிவு கொண்டு, கண்டுணர்ந்த எலும்புக் கூட்டை எடுத்து, எலெக்ட்ரான் என்ற உணர்வின் அதிர்வுகளை, ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர். இதன் தொடர் கொண்டு, இந்த உணர்வின் தன்மைகளை அறிந்து, இந்த உயிரினம் எதனை உணவாக உட்கொண்டது? எதனால் எதிர்நிலை ஆனது? இதனின் ரூபம் என்ன? இதனுடைய குணங்கள் என்ன? என்று விஞ்ஞானிகள் அறிந்து, அதனின் உருவத்தையே காட்டுகின்றார்கள்.
ஒரு திருடனைப் பிடிக்க வேண்டுமென்று, ஒரு கைரேகையை வைத்து மற்ற கைரேகைகளுடன், அன்று ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் இன்று, எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு, ஒரு கைரேகையின் உணர்வைப் பதிவாக்கிவிட்டால், ஒரு கம்ப்யூட்டரின் உணர்வின் இயக்கத்தின் தன்மை கொண்டு, குற்றவாளியின் உருவத்தையும், அவனின் குணத்தையும், அவனின் செயலையும், அவன் எங்கே இருக்கின்றான் என்பதையும் விரித்துக் காண்பிக்கின்றது. தான் தெரியாமல் தவறைச் செய்தாலும், இந்த உணர்வின் தன்மை கொண்டு அறிகின்றனர்.
இதை போன்று, யார் தவறு செய்தாலும், அந்த உணர்வின் தன்மை அவருக்குள் பதிவாகும் என்பதை, மறந்துவிட வேண்டாம்.
அதே போன்று, பதிவான உணர்வுகள் வெளிப்படும் பொழுது, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது என்பதையும், நாம் அறிந்து கொள்ள வேண்டும் இதைத்தான், விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகளில் அறிந்துள்ளனர்.
ஆனால் மெய்ஞானிகள், நமது உயிர், ஆதிமூலம் என்ற நிலைகளில் உருப்பெற்று, சேர்த்துக் கொண்ட வினைக்கொப்ப மனிதனாக எப்படி உருவானது, என்ற உணர்வின் தன்மையை அறிந்து, அறிந்த உணர்வு கொண்டு நஞ்சினை வென்றனர். உணர்வினை ஒளியாக்கினர்.
ஒளியான அவர்கள், தன் இன மக்களும் பெறவேண்டும் என்று உண்மையின் உணர்வினை ரூபமாக்கினர். துவைதம் என்று கற்சிலையாக (ஆலயத்தில்) வடித்தனர். குணங்களின் தன்மையினைச் சித்தரித்தனர். நாம் பெறவேண்டிய மார்க்கம் எது? என்பதை உணர்த்தி, தீமைகளிலிருந்து விடுபடும் நிலையை, மெய்ஞானிகள் உருவாக்கினார்கள்.
விநாயகர் ஆலயத்தில், அரச மரத்தை வைத்தனர். ஏனெனில், நாம் தீமைகளை அகற்றி, அருளுணர்வைப் பெறவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக, அ ரச மரத்தை வைத்தனர்.
இப்பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்திலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து, தம்முள் ஒளியாக மாற்றி, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளது.
அரசமரத்தின் இலைகளைப் பார்த்தோம் என்றால், இலைகளின் நுனிப்பகுதி கூர்மையாக, நீண்டு, ஒரு ஏரியலை (arial) போன்று இருக்கும்.
அரசமரம், தன் இலை ஏரியலைப் போன்று இருப்பதால், காற்றிலிருக்கும் நீர சத்தையும், அதற்குள் இருக்கும் இயக்க உணர்வுகளையும், சனிக்கோளில் இருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகள், ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் பொழுது, பிரிந்து வரும் உணர்வின் சத்துகளைக் கவருவது போன்று, தனக்குள் எடுத்து, தன்னுள் அனைத்து பாகங்களிலும் பரவச் செய்து, தரையில் இருக்கும் தன் இனத்தோடு சேர்த்து, நீர் நிலைகள் இருக்கும் பக்கம், தன் உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலை பெற்றது அரசமரம்.
ஒரு வலுவான கட்டிடத்தில், ஒரு அரச மரத்தின் வித்து விழுந்துவிட்டால், அந்த வித்து, காற்றிலிருந்து தன் சத்தை எடுத்து விழுதுகளைப் பரப்பி, கட்டிடத்தையே வீழ்த்தி, தான் வளரும் தன்மை வாய்ந்தது.
நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, துருவ நட்சத்திரத்தைத்தான் அரசமரமாகக் காண்பித்தனர் ஞானிகள்.
நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் அறியாது சேர்ந்த வேதனை என்ற உணர்வைக் சுருக்கி, அடக்கி, ஒளியின் உணர்ச்சிகளை, தெளிந்த அறிவை நம்மிடத்தில் பெறச் செய்கின்றது. விஷத்தை ஒடுக்கி, உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுகின்றது.
நம்மிடத்தில், ஒவ்வொரு நிலைகளிலும் நட்சத்திரப் பொறிகள்தான், உணர்வின் அறிவாக இயக்குகின்றது. 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை மாற்றி, மாற்றிக் கவர்ந்து, தம்முள் உணர்வினை ஒளியாக மாற்றி, விண் சென்றார் துருவ மகரிஷி, என்ற நிலையைத் தெளிவுபடுத்துவதற்காகக் காவியங்களைப் படைத்து, அருவ நிலைகளை உருவ நிலையாக வடித்து, நம்மிடத்தில் உண்மையின் உணர்வுகளைப் பதியச் செய்தனர் ஞானிகள்.
பிறிதொருவர் வேதனைப்படுவதை, நாம் உற்றுக் கவனிக்கும் பொழுது, அவ்வேதனையின் உணர்வுகள், நமக்குள் “ஜீவஅணுக்களாக”
விளைகின்றது. இதன் தொடர்வரிசையில்,
எதனின் உணர்வை நமக்குள் வலுவாக்கினோமோ,
இதே நிலை கொண்ட மற்றொருவர்,
இதே வேதனை கொண்டு இறந்தார் என்றால்,
அவர் மீது, நாம் பற்று கொண்டிருப்போம் என்றால்,
அவருடைய உயிரான்மா நமது உடலுக்குள் வந்துவிடுகின்றது.
இதுதான் “ஜீவான்மா” என்பது.
இதைப் போன்று, தேள்களை, பாம்புகளை, எறும்புகளை அடித்துக் கொல்கின்றோம். இவைகளின் உயிரான்மாக்கள் எல்லாம், நம்முள் வந்துவிடுகின்றன. நமது உடலின் உணர்வை நுகர்கின்றன. மனிதனாக உருப்பெற்றுக் கருவாகின்றன.
ஆக, ஜீவான்மாக்கள் மனித இரத்த நாளங்களில் குடிபுகுந்து, இரத்த நாளங்களிலே சுழன்று கொண்டே வரும். ஆனால், வளர்ச்சியில்லாத உணர்வின் தன்மை, நமக்குள் கருவுறும் கருவுக்குள் இணைந்துவிடும். இந்த உணர்வின் தன்மை கொண்டு, அது மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது.
நமது இரத்தத்தில் கலந்து சுழன்று வரப்படும் பொழுது, டிரான்ஸாக்சன் (transaction) அதாவது, நமது உயிரின் தன்மை, உணர்வின் ஒலிகளை உடல் முழுவதும் பரவச் செய்து, அதன் வழி கொண்டு, நம்மை இயக்குகின்றது.
உயிரில், இதன் நுண் உணர்வுகள் சென்றபின், உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்த ஆன்மா, எத்தனை வேதனைப்பட்டதோ, அதே உணர்வினை உயிர்வழி நுகரச் செய்கின்றது,
கண் என்ன செய்கின்றதென்றால், அதே உருவத்தைக் காட்டுகின்றது. “ஐயோ, பிசாசு வருகின்றது, எதிரி வருகின்றான்”, போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பிறிதொரு ஆன்மா புகுந்து கொண்ட உடலில், இவையெல்லாம் தெரியும், ஆனால், நமக்குத் தெரியாது.
மைக்கில் வரும் அலைகளை,
டிரான்ஸிஸ்டர் (transistor) கவர்ந்து, விரிவாக்கி,
ஒலிக்கற்றைகளை ஸ்பீக்கர் (speaker) மூலமாக
எப்படி வெளிப்படுத்துகின்றதோ,
இதைப் போன்று அந்த ஆன்மாவின் நிலைகளை,
நம்முள், ஒளி அதிர்வுகளை, கண்வழி பாய்ச்சுவதும்,
உணர்வின் ரூபங்களைக் காட்டுவதும்,
சொல் வழியாக ஒலிக்கற்றைகளையும்
வெளிப்படுத்துகின்றது.
நாம் தவறு செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா, நம்முள் வந்து இயக்குகின்றது. அதைவிட்டு (உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால், இரத்த நாளங்களில் எந்த பாகத்தில் செல்கின்றதோ, அந்த பாகத்தில் வலியும், குடைச்சலும் ஏற்பட்டு, “ஐயோ, கை வலிக்கின்றதே, கால் குடைச்சலாக இருக்கின்றதே” என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும்.
இது போன்ற பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி, பெண்களுக்கே உள்ளது. ஏனெனில், பெண்களிடம் அன்பும், பரிவும், பாசமும் அதிகமாக இருப்பதனால், பெண்களிடம் கவரும் ஆற்றலும், அதிகமாக உள்ளது.
உதாரணமாக, குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்துவிட்டால், “ஐயோ... பாவமே..., குடும்பத்தில் இத்தனை பேரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணினால், இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.
இப்படி, பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்துவிட்டால், தான் மனித உடலில் வாழ்ந்த காலத்தில், என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ, அவைகளையெல்லாம் இங்கே விளைவித்து, இவர்களுடைய உடலில் கைவலி, கால்வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது. இப்படி, பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால், பிற ஆன்மாக்களை கவர்ந்து, அதன்வழி செல்லப்படும் பொழுது, குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன.
இதைபோன்று, நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன. இப்படி, நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு, ஜோசியமும், வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா?
வாஸ்து சாஸ்திரம் பார்த்து, வீட்டின் நிலையையும், வாசல்படியையும் மாற்றி வைத்துவிட்டால், அனைத்தும் சரியாகி விடுமா? உங்களைக் காக்குமா? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
மனிதர்களுக்கு ஜாதகமில்லை. எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள், ”மனிதர்கள்".
இன்று வாழும் வாழ்க்கையில், எவ்வளவோ மாற்றங்களை செய்துள்ளனர். விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்.
விமானம் பறப்பதற்கு, ஜாதகமா பார்க்கின்றனர்? விஞ்ஞான அறிவு கொண்டு, மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால், விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு, மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால், மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால், நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.
நாம் உடல் அழுக்கைப் போக்க, சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று, நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் இணைக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் செலுத்தும் பொழுது, நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து, ஆன்மாவில் பட்ட அழுக்கை நீக்குகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்.
எனது வாழ்க்கையில், நான் யார், யாரையெல்லாம் பார்த்தேனோ, அவர்களுடைய குடும்பம் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெறவேண்டும். அவர்களின் குடும்பத்தில், அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற, இந்த உணர்வின் எண்ணங்களை, நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும்.
அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.
இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு, ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது. இப்படி, தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்திவிட்டால், அவைகளைச் சூரியனின் காந்தபுலனறிவுகள் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும். ஆகவே,
துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
பற்றுடன் பற்றுங்கள்.
உடலின் பற்றைப் பற்றற்றதாக்குங்கள்.
அருள் ஞானத்தை, பற்றுடன் பற்றுங்கள்.
பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்.
மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள்.
இதன் வழி, அருள்ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும், எமது குரு அருளும், எமது அருளும், என்றும் உறுதுணையாக இருக்கும்.
(மார்ச் 2000)
குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில், நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால், நமது காருக்கு குறுக்கே ஒருவர் திடீரென்று வந்துவிட்டால், சடாரென்று காரை நிறுத்தி, குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு, அவரைத் திட்டுகின்றோம். இப்படி, காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து, வெறுப்பதுடன் மட்டுமல்லாமல், ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.
இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி, மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி, இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது. காரின் குறுக்கே வந்தவருக்கு, ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால், பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால், பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில், “ஓம் நமசிவாயா” என்று உடலாக மாறிவிடுகின்றது.
நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும், அதிர்ச்சியின் உணர்வுகளும், இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள், நல்ல அணுக்களில் ஊடுருவி, நமது உடலையே நடுங்கச் செய்கின்றது.
அது சமயம், நாம் எதைச் செய்வது என்ற சிந்தனை இல்லாதபடி. பிரமை பிடித்தது போன்று ஆகி விடுகின்றோம்.
ஆனால், ஒருவர் தான் அறியாது, திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால், அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்சனைகள், வியாபாரத்தில் கடன் கொடுக்கல், வாங்கல், தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை, அதனால் சஞ்சலமும், சோர்வும் ஏற்பட்டு, கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது, என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.
அதே சமயத்தில், நம்முடைய வருமானம் இவ்வளவுதான். ஆனால், குழந்தைகளுக்கு பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்கவேண்டும், நாளை என்ன செய்வது? என்ற நிலையில் குடும்பத்தை காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று, அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது, எதிரே வரும் வாகனத்தையோ, எதிரே வரும் மனிதரையோ, அல்லது எதிரே இருக்கும் பள்ளத்தையோ, பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
இப்படி, திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும், காரின் டிரைவர் ஒலியை எழுப்பி, சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால், காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது. அது சமயம், காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது, நமது உயிரான ஈசன், இதனின் உணர்வின் உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து, அதன் வழியில் நம்மை இயக்குகின்றது. இதனின் உணர்வின் தன்மை, நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.
நன்கு வசதியுள்ள, வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள், இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது, இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து, இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து, இதையே எண்ணி, இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால். அவருடைய உடலில் பலவிதமான நோய்களும், உடலில் நடுக்க வாதமும், சிந்திக்கும் தன்மையை இழப்பதும், இனம் புரியாத கோபம் வருவதும், இனம் புரியாத பயம் உருவாவதும், போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.
இதே போன்று, வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில், இன்னொரு பக்கம் இருந்து ஆடோ, மாடோ, நாயோ, ஏதோ ஒன்று குறுக்கே வரும். இதன் மீது மோதாமலிருக்க, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறுபக்கம் திருப்பும் பொழுது, வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.
ஒரு நாயோ, பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால், அதைக் காப்பாற்ற எண்ணி, சிந்தனையை அதன் மேல் செலுத்தி, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால், எதிரே வந்த வாகனமும், இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.
இத்தகைய விபத்தில், சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும், அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து, அவரிடத்தில் மன நோயாக மாறிவிடுகின்றது.
இதனால், சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும், தம் குழந்தைகள், தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும், பலவீனமான நிலையில் பயமும், தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால், அதிர்ச்சியும், பயமும் வருகின்றது. இதன் தொடர் கொண்டு, பலவித நோய்களும் வருகின்றது.
பண வசதி படைத்திருப்பதினால், மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால், மன நோயினால் உணர்வின் தன்மை, உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும், பயிற்சியும் செய்கின்றனர்.
வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும், இது போன்று, எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள், உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு சந்தர்ப்பத்தால், நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது?
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால், மனிதனாகப் பிறந்து, தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று, தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து, ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து, நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும், தங்கத்தில் கலந்துள்ள செம்பும், பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது, நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.
“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்” என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்தவேண்டும்.
நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு, யார் தவறு செய்தாரோ, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெறவேண்டும், என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது, இவை அனைத்தும், நமக்குள் கலவையாகி, நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
இதனின் உணர்வுகளை, நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து, மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
“ஒருவர் நல்லவராக வேண்டும்” என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது, இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது. அதே சமயம், நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள், நமது உடலில் சேரப்படும் பொழுது, நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள், அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.
இது போன்று, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நமக்குள் வலு சேர்க்க, நமக்குள் மனத் தூய்மையும், சிந்தித்து செயல்படும் தன்மையும், பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.
இவ்வுண்மைகள் அனைத்தும், அருள்ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள். இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து, நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும், பிறவியில்லாப் பெருநிலை பெரும் நிலையாகவும், தாம் அருள்ஞான நெறி துணைகொண்டு, தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள், சாபவினைகள், பாவவினைகள், பூர்வ ஜென்மவினைகளை அகற்றி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

(ஏப்ரல் 2000)
தயவு செய்து, பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ, வேதனைகளையோ பார்த்துச் சந்தோஷப்படாதீர்கள். பிறரின் துன்பத்தைப் பார்த்து, “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால், அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து, நோயாக உருவாகிவிடும்.
விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளைச் செய்து, மனித உணர்வின் செயல்களை அறிகின்றனர். விஞ்ஞானி, ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார். பெண்ணை ஆணாக மாற்றுகின்றார். அதே சமயத்தில், மனித உடலில் வருகின்ற நோய்களைப் போக்குவதற்கு, பாம்பு, தேள், மாடு போன்றவைகளில் பல இரசாயனங்களைக் கலந்து, அதில் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.
நமது நுரையீரல் கெட்டுப் போய்விட்டது, இருதயம் கெட்டுப் போய்விட்டது என்றால், இப்பொழுது அஞ்ச வேண்டியதில்லை. பல நவீனக் கருவிகளின் துணை கொண்டு, செயற்கை உறுப்புகளை நமது உடலில் பொருத்தி, பழுதுபட்ட உடல் பாகங்கள், மேலும் சிறிது நாளைக்கு வேலை செய்யும்படியாக அமைத்து விடுகின்றார்கள்.
எத்தகைய விஞ்ஞான நிலைகள் இருந்தாலும்,
இந்த உடலில் எத்தனை நாள் வாழப் போகின்றோம்?
மேலும் சிறிது காலம் வாழுவதற்கே, இதைச் செய்கின்றனர்.
இப்படி மாற்று உறுப்புகளை பொருத்திக் கொண்டவர்கள்,
மற்றவர்கள் மாதிரி, சந்தோஷமாக இருக்க முடியாது.
ஏனென்றால், மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டபின், முன் போன்று நமது பணிகளைச் செய்ய முடியாது. டாக்டர்கள் சில விதிகளைக் கொடுத்து, இப்படித்தான் செயல்படவேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்படித்தான், நமக்கு மருந்துகளையும், மற்ற நிலைகளையும் கொடுத்துச் சமப்படுத்துகின்றனர்.
இப்படிச் சமப்படுத்தி வாழும் நாம், மற்றொருவர் கடுமையான காய்ச்சலில் இருக்கும் பொழுது அவரை உற்றுப் பார்த்து, அவருடைய வேதனையைக் கேட்டறிந்தால், உடனடியாக நமக்குள் பல நிலைகள் வரும். ஆகவே, நாம் எல்லாவற்றிற்கும் அஞ்சி வாழ்ந்து, நம்முடைய நிலைகளில் சோர்வடைந்து, நிம்மதி என்பதை இழந்திருப்போம்.
சர்க்கரைச் சத்து வியாதிக்கு, இனிப்பைச் சாப்பிடக்கூடாது, மற்றும் அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால், நாம் விரும்பியதைச் சாப்பிட முடியாமல், நம்முடலில் வேதனை வளர்ந்து கொண்டே வரும்.
ஆகவே, எவ்வளவு நிலையானாலும் மனிதர் துரித நிலையில் மடியும் தன்மைதான் வருகின்றதே தவிர, மனிதர் நீடித்த நாள் வாழும் சக்தி உள்ளதா? இந்த மனித உடலில் நாம் முழுமையாக இருக்க முடிகின்றதா? இல்லை. குறுகிய காலம் வாழ்வதற்காக, பல உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டேதான் வாழுகின்றோம்.
இதே போன்று, ஆஸ்த்மா உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிட்டால், உடனே அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிடும். குளிர்ந்த பானத்தைச் சாப்பிட்டாலும், இதே போன்று வந்துவிடும். ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்கு சென்றால், அந்த ஊரின் தண்ணீரைச் சாப்பிட்டால், எதிர் நிலையான கிருமிகள் உண்டாகி, ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விடுகின்றது. ஆகவே, மனிதருக்குள் இத்தகைய வினைகள் வந்துகொண்டே இருக்கின்றது.
ஆனால், குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதென்றால், அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் பேசும் பேச்சின் உணர்வுகளை, அவர்களது குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப்பெண், உற்றுக் கேட்டு நுகர்கிறதென்றால், அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் வளரும் சிசுவினிடத்தில், ஆஸ்துமாவை உருவாக்கும் அணுக்கிருமிகள் உருவாகி விடுகின்றன. குழந்தை தவறு செய்ததா? இல்லை.
இதே போன்று, ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து உள்ளவரை ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாகக் கவனித்து, அவருடைய சொல்லைக் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலிருக்கும், குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து வந்துவிடும். இதனைப் பரம்பரை நோய் என்று சொல்லுகின்றார்கள்.
இன்று உலகில் எடுத்துக் கொண்டால், நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், ஆஸ்துமாவில் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், சர்க்கரை வியாதியால் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், இரத்தக் கொதிப்பால் வாடுகின்றனர். இப்படி, குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருந்தும், உணர்வின் வழி மற்றவருக்கும் பரவுகின்றது.
இதைத்தான், இராமாயணத்தில் ஒரு அசுரன் இறந்தால், பல அசுரர்கள் எழுகின்றனர் என்று கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் நிலையாக நமது குருநாதர், ஒரு மனித உடலுக்குள் வேதனை என்ற நிலை உருவாகி, அந்த அசுர உணர்வுகளால், அந்த மனிதர் மடிந்தார் என்றால், அந்த உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நுகர்ந்தவர்கள் எவர் எவரோ, அவரவர் உடல்களைக் கொல்கின்றது என்பதை எமக்கு உணர்த்தினார்.
மனித உடலில் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகளுக்கொப்ப, தேள், பாம்பு, கொசு போன்ற நிலைகள் மனித உடலில் இருந்து பிறக்கும் தன்மை வருகின்றது. மனிதரை, முழுமுதல் கடவுள் என்று விநாயகரை வைத்து, ஞானிகளால் காண்பிக்கப்படுகின்றது. மனித உடலில் இருந்து வெளிப்படக் கூடிய உணர்வுகள் எதுவோ, அதற்குத்தக்க ஒவ்வொரு உடலிலும் சேர்க்கப்படும் பொழுது, இந்த நிலை ஏற்படும்.
சலிப்பும், சஞ்சலமும் ஒருவரிடம் அதிகமானால், அவர்களுடைய தலையில் பேன்கள் உருவாகும். பேன்கள் தலையில் அதிகமாக உள்ளவர்கள், பத்து நாளைக்குத் தொடர்ந்து சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்கள் தலையிலுள்ள பேன்கள் தன்னால் மறைந்து போகும். ஆக இது போன்று, சலிப்பு, சஞ்சலம், வேதனை உணர்வுகளால் உருவாகும், தீமைகளில் இருந்து மீள்வது எப்படி?
மனிதராகப் பிறந்து, நஞ்சை வென்றவர் அகஸ்தியர். அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல, அகண்ட அண்டத்திலிருந்து, எங்கிருந்து நஞ்சு வந்தாலும், ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது, துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து, நமது உடலில் உருவாக்கி விட்டால், இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை, நாம் பெறுகின்றோம்.
மனித உணர்வுகளின் இயக்க உண்மைகளை அறிந்து,
மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியில் செயல்பட்டு,
தம்மிடத்தில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி,
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்பொருள் காணும் நிலையாக
வாழ்ந்து வரும், அன்பர்கள் அனைவரும்,
இருளினை வென்று, பேரருள் பெற்று, பேரொளி பெற்று,
உங்கள் பேச்சால், மூச்சால், பார்வையால்
மற்றவர்களின் தீமைகளை,
நோய்களை நீக்கும் அருளாற்றல் பெற்று,
இந்த வாழ்க்கையில் பெருவீடு, பெருநிலை பெறும் நிலையாக பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.
