Pages

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2002



உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் டிசம்பர் 2002 (15.12.2011)

.ஒரு சமயம், யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர், காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம், எமக்கு தைரியம் அதிகம் இருந்தது. அதனால், காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை, அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களை தூக்கி சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம், இது போன்ற பணிக்கு பயந்து யாரும் வரவில்லை.

அது சமயம், எமது தந்தையை பெற்ற அம்மாவிற்கு, அதாவது எம்முடைய பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள்.

பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது. அவரை, ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும், எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது. காலராவில் இறந்த 30 பிணங்களை தூக்கிப் போட்டோம். அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டதே, என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே, எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்த சம்பவத்தை எமக்கு நினைவுபடுத்தி, “நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களை தூக்கிக் கொண்டு போய் போட்டாய். உனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், உன்னுடைய பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டதே என்று எண்ணியவுடனே, உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது. மனிதரிடத்தில், உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா?” என்று கேட்டார்.


ஆனால், காலராவால் தாக்கப்பட்ட பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான், எமக்கும் காலரா நோய் வந்தது, என்று குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.


மதுரை சுப்பிரமணியபுரத்தில், ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது, அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதுமே, யாம் அந்த வாய்க்காலுக்கு சென்று விட்டோம்.


வாய்க்காலில், கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால், வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. பிறகு, ஒருவாறாக சமாளித்து, ஹோட்டலுக்கு சென்று “தயிர் சாதம் கொடுங்கள்” என்று சொல்லி தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணி, தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.


ஆனால், தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்துவிட்டது, பிறகு, மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசி கொண்டிருந்தோம்.


ஒரு சந்தர்ப்பத்தில், எமக்கு தைரியம் சிறிது குறைந்து. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும், பார்க்கலாம்” என்று இருந்தோம். பசித்தால், இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால், தயிர் குளிர்ச்சி, தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம். அதனால், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டோம். ஆனால், சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.


எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. சரி நாம் இந்த தண்ணீரிலேயே உள்ளே சென்றுவிடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது, என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.


காலரா வியாதி பரவியதால், ஊரை விட்டே நிறைய பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு, தாம் தப்ப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.


வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது, அந்த பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார். அவர் எம்மைப் பார்த்து, “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்"... என்று கேட்டார்.


“காலராவில் இறந்தவர்களை தூக்கிப் போட்டு வந்தேன், இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது” என்று அவரிடம் கூறினோம்.


“அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி, எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து, அவருடைய கரும்பு காட்டிற்கு அழைத்து சென்றார். கரும்பை பிழிந்து ஜூஸ் எடுத்து கொடுத்து, “நன்றாக மூக்கு பிடிக்க சாப்பிடு” என்று கூறினார்.


அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின், எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம், பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு. இன்னும் கரும்புச் சாறு கொடுக்க சொல்லி, குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.


எமது உடல்நிலை குணமானவுடனே, சும்மா இருக்க்வில்லை. ஊர் முழுவதும் சுற்றி, மக்களிடம் யாசகம் கேட்டு பெற்று, காசு சேர்த்து, கரும்பு சற்றை வாங்கி, காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம். ஏனென்றால், யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால், பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு, “நீ குடி, நீ குடி” என்று எல்லோருக்கும் கரும்பு சாறு வாங்கிக் கொடுத்தோம். அதன் பின், காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.


இது ஒரு சந்தர்ப்பம். அப்பொழுது தான் சொன்னார் குருநாதர்,“டேய்… உன்னை காப்பாற்றுவதற்கு… அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன், நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய்,ஆனால், நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்” என்று கூறினார்.


எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின், ஆசனம் செய்வது, பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம், எம்மால் முடியாமல் போய்விட்டது. யாம் சாதரணமாக, மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை, உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம். ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு, காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்கு போவோம்.


இது போன்று இருந்த யாம், காலரா நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது. “பாட்டியை எண்ணினாய், என்ன ஆனது உனக்கு?” என்று கேட்டார் குருநாதர்.குருநாதர் சொன்ன பின் தான், உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம். பிறகு தான் எமக்கு தெரிந்தது. குருநாதர் சொல்லவில்லை என்றால், எமக்கு ஒன்றும் தெரியாது.


"இறந்தவர்களை, தைரியமாக தூக்கிக் கொண்டுபோய் போட்டாய். ஆனால்,உன்னுடைய பாட்டிக்கு காலரா நோய் தாக்கிவிட்டதே, என்று ஏங்கினாய், உடனே, இதன் உணர்வு, உன்னிடத்தில் என்ன வேலை செய்தது என்று தெரிந்து கொண்டாயல்லவா” என்று கேட்டார் குருநாதர். இது போன்ற உணர்வுகள், ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாக காட்டினார், குருநாதர்.


குருநாதர் காண்பித்த அருள் வழியில், தங்களுள் மெய்ஞானம் பெற்று, மெய்வழியில் வாழ்ந்து, மெய்பொருள் காணும் திறனை தங்களுக்குள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, உங்களுடைய வாழ்க்கையில் உணர்வின் இயக்கங்களை அறியும் ஆற்றல் பெற்று, அருள் ஞானம் பெற்று, சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் மிக்க அருள் சக்தி பெற்று, இந்த பிறவியில்பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.



உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் டிசம்பர் 2002 (14.12.2011)



யாராவது நம்மை பற்றி குறை கூறுவதை நமது காதால் கேட்க நேர்ந்தால், நமது மனம் மங்கிவிடுகின்றது. நமது மனம் மங்கிவிட்டால், நாம் தெளிவான நிலைகள் பெறுவது கடினம். ஆகவே, நமது மனம் மங்காது இருக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?




“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்… ஈஸ்வரா... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கி நம்முள் வந்த நஞ்சான உணர்வுகளை துடைத்துப் பழகுதல் வேண்டும்.




“நம்மைப் பற்றி குறை கூறியவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். அவர் அறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபட வேண்டும்” என்று நாம் எண்ணி ஏங்கினால், அவருடைய குறையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. இதனால், நம்மிடத்திலுள்ள நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாகின்றது.




மாறாக, “இப்படி நம்மை குறை கூறுகின்றாரே” என்ற உணர்வுகளை நம்முள் வளர்த்தால், நாளடைவில் நம்முடைய நல்ல உணர்வு, நம்மை குறை கூறிய உணர்வுக்கு தக்கவாறு மாற்றிவிடும். குறை உள்ளவராகவும், குற்றங்கள் செய்பவராகவும், அடிக்கடி சலிப்பு அடைபவராகவும், சங்கடப்படுபவராகவும் நம்மை மாற்றிவிடும்.




ஆகையினால், “பிறர் நம்மை குறை கூறிய, குற்றங்கள் சொல்லிய உணர்வுகள்”, நமக்குள் வந்து செயலாவதை தடைப்படுத்துதல் வேண்டும். இதற்கு தான், ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.




ஆத்ம சுத்தி என்பது இதுதான். அதாவது, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்… ஈஸ்வரா... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கும் பொழுது, பிறர் நம்மை குறை கூறிய உணர்வுகள், நம்முள் செயலாவதை தடைப்படுத்துகின்றோம்.




பிறர் குறை உணர்வுகளை, நமது கண் கவர்கின்றது. அதன் வழிதான் (கண்கள் வழி), நாம் கவர்ந்த உணர்வுகள் நமது நரம்பு மண்டலங்களுக்கு செல்கின்றது. நமது உடலிலுள்ள உறுப்புகளிலெல்லாம் இணைக்கின்றது. அப்போது அந்த உணர்வுகள் இழுக்கப்பட்டு நம் முன்னால் வரும்பொழுது, நம்முள் குறை உணர்வுகளே வலுப் பெறுகின்றது. அப்போது, நுகர்ந்த குறை உணர்வின் இயக்கத்திற்கு நம்முடைய நிலை சென்றுவிடுகின்றது. அதாவது, நுகர்ந்த குறை உணர்வுதான் நமது உடலை இயக்க ஆரம்பிக்கின்றது.




ஆக, பிறிதொருவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று, அவர் வழியில் நாம் செயல்படும் நிலை உருவாகின்றது. ஏனென்றால், அது வாலி, வலிமையானது. நம்முடைய நல்ல குணங்களை இயக்கவிடாது, தடைப்படுத்துகின்றது. ஆக, இத்தகைய தீமைகளிலிருந்து விடுபடுவது எங்ஙனம்?




ஒருவரின் குறை உணர்வின் செயலை, நாம் நமது கண்ணால் தான் பார்க்கின்றோம். நமது கண் கருவிழியில் மோதியபின் தான், அதன் உணர்ச்சிகளை உடலினுள் அனுப்புகின்றது. ஆகவே, நமது கண் கருமணியில் குறை உணர்வின் அழுக்கின் தன்மை இருக்கும். அது சமயத்தில், நாம் நமது உயிரான ஈஸ்வரனை “ஈஸ்வரா..” என்று எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும் என்று கருமணியில் நாம் நினைக்கும் பொழுது,

நம்மை குறை கூறிய உணர்வுகள்,

கண்ணின் கருமணியில் இல்லாதபடி துடைக்கப்படுகின்றது,

சுத்தப்படுத்தப்படுகின்றது.




“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா”, என்ற வலுவை சேர்த்து விட்டால்,

நாம் கண்ணால் பார்த்த குறையின் உணர்வுகள்,

நமது உடல் உறுப்புகளை இயக்குவதை நிறுத்தி,

குறையின் உணர்வுகளை,

நம்முள் இழுக்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

நமது ஆன்மாவை சுத்தப்படுத்துகின்றோம்.




பின், நம்மை குறை கூறிய நபரை எண்ணி, அவர் தன்னையறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபடவேண்டும். அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள், அவரிடத்திலே தோன்ற வேண்டும். அவர் பண்பும், பரிவும் பெறக்கூடிய அருள் உணர்வு பெறவெண்டும் என்று நாம் எண்ணினால், இதன் உணர்வுகள் நம்முள் நல் உணர்வுகளை இயக்கும் சக்தி பெறுகின்றது.




பொதுவாக, மற்றவர்களை பற்றி குறை சொல்லும் உணர்வுகள் அநேக பேரிடம் உண்டு. உங்களிடமே காசை வாங்கிக் கொண்டு, “சும்மா கொடுக்கின்றானா” என்று கூட சொல்வார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு தர்மம் செய்தீர்கள் என்றால், “சும்மாவா கொடுக்கின்றார்கள், நம்மை ஏமாற்றுவதற்கு கொடுக்கின்றார்கள்” என்று கூறுவார்கள். இதை, நாம் கேட்க நேரும் பொழுது, அவர்கள் மீது வெறுப்பும், நம்முடைய நல்ல குணங்களின் மீது நமக்கு வெறுப்பும் வந்துவிடுகின்றது. இது போன்ற நிலைகள், நம்முள் வராதபடி நமது நல் உணர்வுகளை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.




புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், ஒவ்வொரு உடலிலும், தாம் கொடுமைகளிலிருந்து தப்பவேண்டும் என்ற உணர்வின் வலிமையை சேர்த்து சேர்த்து, பரிணாம வளர்ச்சியில், இன்று தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் “ஆறாவது அறிவு கொண்ட மனிதராக” நம்மை உருவாக்கியுள்ளது நமது உயிர். இந்த மனித வாழ்க்கை காலத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை சேர்த்து சேர்த்து, அருள் உணர்வுகளை நம்முள் வலிமை பெற செய்து,நமது உயிரில் ஒன்றும் உணர்வுகளை என்றும் நிலையான, அழியாத பேரின்ப உணர்வுகளாக உருவாக்குதல் வேண்டும். இது தான் “ஏகாதசி விரதம்” என்பது.




காலையில் நாம் துருவ தியானத்தில் அமர்ந்து, யாருடைய பகைமையும் நம்முள் வராதபடி தடுத்து, பத்தாவது நிலை பெறக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து, நமக்குள் நல் உணர்வின்ப் அணுக்களை வளர்த்துக் கொள்வது தான், ஏகாதசி விரதம் என்பது. இதனால், தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாதபடி, தீமையான அணுக்கள் நமக்குள் வளராதபடி தடைபடுத்துகின்றோம். இதை நம்முடைய பழக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். எமது அருளாசிகள்.



உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்
நவம்பர் 2002 (13.12.2011)





அன்பர் ஒருவர், தம் உடலில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, இன்னல்களிலிருந்து தாம் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன் எம்மை சந்திக்க வந்தார். அதாவது, அவருக்கு வாய் பேச வரவில்லை, கை கால்களும் சரியாக இயங்கவில்லை. இதற்காக வேண்டி, பல நாட்கள் பல வைத்தியர்களிடம், போய் வைத்தியம் பார்த்திருந்தார்கள். வைத்தியங்கள் அவருக்கு உதவில்லை.


இந்த சூழ்நிலையில், அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் என்று எம்மைத் தேடி வந்தார். எப்படியும் தான் குணமாக வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில், நோக்கத்தில் வந்தார். அப்போது, அவர் குணமாக வேண்டும், அருள் ஞானம் பெறவேண்டும் என்று அதற்குண்டான அருள் உணர்வுகளை அவரின்பால், யாம் பாய்ச்சினோம்.


இந்நிலையில், யாம் பாய்ச்சிய அருள் உணர்வின் பால் அவருக்கு பற்றானது. அப்போது, அவருக்குள் அருள் உணர்வுகளை தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும், என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, அவர் தம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம், அவருக்குள் உற்சாகம் வருகின்றது. அவர் தாம் பூரண குணம் அடைந்த பின், அதே ஆர்வ உணர்வில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி, ஏங்கி, தியானிக்கத் தொடங்கினார்.

இப்படி, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி, ஏங்கி தியானிக்கின்ற பொழுதெல்லாம், புவியில், காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள், அவருடைய சுவாசத்தில் கலந்து அவருக்குள் இணைவதால், அவருக்கு ஆனந்த வாழ்க்கையும், சிந்திக்கும் ஆற்றலும், தீமைகளை அகற்றும் தன்மையும் வருகின்றது.

இதை தொடர்ந்து அவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை அனைத்து மக்களும் பெறவேண்டும் என்ற ஆசை வருகின்றது. தனக்கு என்று நினைக்கவில்லை. எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில், சுயநலம் இல்லாதபடி பொது நலத்திற்கு வருகின்றார்.

அனைத்து மக்களும் அருள் ஞானம் பெறவேண்டும், அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற ஆசையின் காரணத்தினால் தான், அவர் பேருண்மையின் உணர்வுகளை உணர முடிந்தது. அதன் வழியே, அவர் எண்ணிய காரியங்களும், அதாவது, இதை இப்படி செய்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணி செயல்படுத்தினால், அந்த காரியம் அவர் எண்ணியது போன்றே சிறப்பாக அமைந்தது. அவர் எடுத்துக் கொண்ட, வலுவான உணர்வின் தன்மை கொண்டுதான், இதன் நிலையானது.

இதுதான் வசிஷ்டர் பிரம்மகுரு. குரு கொடுத்த உணர்வுகளை, தாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் அருள் உணர்வுகளை அவர் தமக்குள் எடுக்கப்படும் பொழுது, அவருக்குள் பிரம்மமாகின்றது. பிரம்ம குருவின் மனைவி அருந்ததி. எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும், மெய்ப்பொருளை காணும் சக்தி பெறவெண்டும் என்ற உணர்வுடன், யாம் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருடைய உடலுக்குள் சென்று, அவருக்குள் நலமாகும் பொழுது, அவர் எண்ணி ஏங்கிய உணர்வெல்லாம், உயர்ந்த சக்திகளை பெறக்கூடிய ஆற்றல் பெறுகின்றது.

இது போன்று, ஆத்ம சுத்தி என்றால், தியானம் செய்யும் பொழுது மட்டுமல்ல ஆத்ம சுத்தி. நாம் ஒரு வியாபாரம் செய்து வருகின்றோம். அப்படி நாம் வியாபாரம் செய்து வரும் காலத்தில், “எங்களிடம் பொருள் வாங்கி செல்வோர்களின் குடும்பத்தினர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்” என்று எண்ண வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கவேண்டும். பின், நாம் வியாபாரம் செய்யும் பொருள்களை நமது கண்ணால் பார்த்து, “இந்தப் பொருள்களை பயன்படுத்துவோரின் குடும்பத்தினர் அனைவரும், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்து, தெய்வீக அன்பும், தெய்வீக பண்பும், தெய்வீக அருளும், பெறக்கூடிய அருள் குடும்பமாக வளரவேண்டும்” என்று எண்ணவேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால், இதன் உணர்வுகள் நமது உயிரில் மோதி, நமக்குள் உமிழ்நீராக மாறுகின்றது. இந்த உணர்வின் உமிழ்நீர் நமது சிறு குடல் பெருங்குடலுக்கு சென்று இரத்தமாக மாறுகின்றது. நாம் எடுத்துக் கொண்ட நல் உணர்வுகளால் நமக்கு நன்மையாகின்றது. ஒவ்வொரு பொருளிலும் காந்த புலன் உண்டு. நமது நல் உணர்வின் ஏக்கப் பார்வையின் தன்மை கொண்டு, நாம் அங்கே தெய்வமாக மாறுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம். இப்பொழுது, நாம் அங்கே தெய்வமாகின்றோம்.

நம்முடைய கடைக்கு, தங்களுக்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு எத்த்னையோ பேர் வருகின்றனர். வருகின்ற வாடிக்கையாளர்களின் குடும்பங்களில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும், எத்தனையோ பிரச்னைகளுடன் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும், உணர்வுகள் எத்தனையோ மாற்றமான நிலைகளில் இருக்கும். அப்போது, அவர்களுடைய கவலைகளுடன் சரக்கு வாங்குவதற்காக நம்முடைய கடைக்கு வருகின்றனர்.

வந்தவரகள், தம்முள் எடுத்துக் கொண்ட கஷ்ட உணர்வுகள் கொண்டு, “நம்மிடம் இந்த சரக்கு வேண்டும்” என்று கேட்பார்கள். உதாரணமாக நம்முடைய கடையில் சரக்கு கேட்பவர்கள் சந்தோஷமாக கேட்பதையும் பார்க்கலாம், சோர்வாக கேட்பதையும் பார்க்கலாம். வீட்டில் கஷ்டமாக இருக்கும் பொழுது, இங்கே வந்து சோர்வாக கேட்பார்கள். இது போன்ற நேரங்களில், நாம் மற்றவர்களுடைய உணர்வுகளை நுகர நேருகின்றது. மற்றவர்களுடைய கவலையான வேதனையான உணர்வுகள் நம்முள் வந்து விடுகின்றன. இப்படி, பிறருடைய வேதனை உணர்வுகள் நம்முள் நம்மை அறியாது வந்து சேரும் நிலையில், அந்த தீய உணர்வுகளை, உடனுக்குடன் நம்மிடமிருந்தது நீக்கும் சக்தி பெறவேண்டும்.

அதற்கு முன்னால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, எனது இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று அருள் உணர்வின் வலுவை, நம்முள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகள் நம்முள் வலுவான நிலையில் இருக்கும் பொழுது, மற்றவர்களுடைய வேதனை உணர்வுகள் நம்முள் வராதபடி தடுத்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.




விஞ்ஞானிகள் ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரம் தவறான, குற்ற உணர்வுகளுடன் வரும் மனிதர்களைக் கண்டு எச்சரிக்கை செய்கின்றது. இது போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, நமக்குள் சேர்த்து வலுவாக்கும் பொழுது, மற்றவர்களின் வேதனையுணர்வுகளை நம் அருகில் வரவிடாது தடுத்து, தீய உணர்வுகளை தள்ளிவிடுகின்றது.




“நம்மிடம் பொருள்கள் வாங்குபவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்து பொருள்களை கொடுங்கள். அப்பொழுது அருள் உணர்வுகள் உங்களில் வலு பெற்று, உங்களிடம் பொருள் வாங்குபவர்களும் நனமை அடைகின்றார்கள். வியாபாரமும் நன்றாக நடைபெறுகின்றது. நீங்கள் எண்ணும் உணர்வு, உங்களுக்கு நன்மை தருகின்றது.




நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும், தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வுகளை சேர்த்து சேர்த்து இன்று தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் ஆறாவது அறிவு கொண்ட மனிதராக நம்மை நமது உயிர் உருவாக்கியுள்ளது. நஞ்சு என்று தெரிந்தால், நஞ்சை நீக்கும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. இந்த ஆற்றலை, நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.




ஆகவே, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில், தம்முள் அருள் உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற்று,உயிரை போன்றே உயிரில் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக உருவாக்கும் நிலை பெற்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால், இந்த வாழ்க்கையில் உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம்,செல்வாக்கு, சொல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெருகி, இந்த பிறவியில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக,பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.



உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் நவம்பர் 2002 (12.12.2011)





ஒரு ஏழைத் தொழிலாளி வெறும் சோற்றுக் கஞ்சியும், வெங்காயமும் சாப்பிட்டு விட்டு, காலை முதல் மாலை வரை கடப்பாரை, மண்வெட்டி சகிதமாக கடுமையாக உழைக்கின்றார். இதே, ஒருவர் பாதாமும், பிஸ்தாவும் சாப்பிட்டு உடலை வளர்த்து, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடப்பாரையை கொடுத்து, வேலை செய் என்று கூறினால், அவரால், ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது. வேர்த்து விறுவிறுத்து போய்விடுவார்.




ஆக, ஏழை தொழிலாளிக்கு, அன்று வேலை பார்த்தால் தான் சம்பளம். சாப்பாடு எனும் பொழுது, வேலை பார்த்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம். பணக்காரருக்கு, அப்படி கஷ்டப்பட வேண்டும் என்று அவசியமே இல்லை. அதனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் கடின வேலை செய்ய முடிவதில்லை. ஆக,

“உடலுக்கு வலு கொடுப்பது, நமது எண்ணங்களே”

என்று நாம் உணர வேண்டும்.




நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்கு போகும் பொழுது, கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்கு, சில மாதிரிகள் மட்டுமே எடுத்து செல்கின்றோம். கடைகளுக்கு சென்று, நாம் எடுத்து சென்ற, "மாதிரி துணிகளை" (சாம்பிள்) காண்பித்தவுடனே, கடைக்காரர்களும் மாதிரி துணிகளை பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு மாதிரிகளை போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.




நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களை சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்கு கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளை தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம். சரக்கை அனுப்பி வைத்துவிட்டு, ஓரிரு நாள்கள் கழித்து பண வசூலுக்காக அவருடைய கடைக்கு செல்கின்றோம். அவருடைய கடைக்கு செல்ல வேண்டுமென்றால், (டவுன்) பஸ்ஸில் பயணம் செய்து தான் போக வேண்டும். ஆனால், பஸ் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே செல்கின்றோம்.




அப்போது சந்தர்ப்பம், ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், எண்ணெய் தீர்ந்துவிட்டது. வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து, ‘சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக, வேகமாக கடைக்கு செல்கின்றான்.

சிறுவன் கடைக்கு சென்று, “எண்ணெய் கொடுங்கள், எண்ணெய் கொடுங்கள்” என்று அவசரப்படுத்துகின்றான். ஆனால், கடைக்காரரோ இவனைப் பார்த்து, “பொறு, பொறு” என்று அடுத்தவர்களுக்கே சரக்கு கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்கு செவி சாய்க்க முடியாமல் போய்விடுகின்றது. சிறுவனுக்கோ, நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம், சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது, வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே, எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள், தாமதமானால் வீட்டில் என்னை திட்டுவார்கள்” என்று கூறுகின்றான். இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச, அவசர உணர்வுகள் அங்கே எதிர்நிலையாகின்றது.

எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக், அதாவது, கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்கு, சீக்கிரம் சரக்கை தந்து அனுப்ப மறுக்கின்றது. இப்படி தாமதமாகும் பொழுது, “நேரமாயிற்றே, நேரமாயிற்றே” என்ற இந்த பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்கு பின், சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி சிறுவன் வேகமாக வரும் பொழுது, அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதே” என்று செலுத்துகின்றான். இதனால், சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறி விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால், அவனுடைய எண்ணம் நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதே” என்று இருக்கின்றது. இதனால், அவனுக்கு சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை. எப்படியும், எண்ணெயை கொண்டு போய் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று இருக்கின்றான். இதன் அவசரத்தால், போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து, பாட்டில் நொறுங்கி, எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன், எண்ணெய் வீணான வருத்தத்தில், உடைந்த பாட்டிலை சாலை ஓரமாக தள்ளிவிடாதபடி, சாலையில் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுகின்றான். அதே சமயம் நாம், அதே சாலை வழியில், (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து செல்கின்றோம். போகும் வழியில், நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம். ஆகவே, நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால், சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலை கவனிக்காமல், உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் ”பாவி பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலை போட்டு உடைத்துள்ளார்களே” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது. உடைந்த பாட்டில் நம் கால் மோதிய போதும், நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால், “இந்நேரம், உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலை பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாக தள்ளிவிடுவோமா? என்றால், செய்ய மாட்டோம். இதே பாட்டில், அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, உடைந்த பாட்டிலை ஓரமாக தள்ளிவிடுவோம் என்று, உடைந்த பாட்டிலை ஓரமாக தள்ளி விட்டிருந்தால், நம்மிடம், சிறிது நல்ல மனம் இருக்கின்றது என்று இருக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம். “ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது” என்று மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை, எடுத்துக் கொண்டு போகின்றோம்.


இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்கு சென்றபின், “சரக்கு அனுப்பியிருந்தோம், சரக்கை பார்த்தீர்களா?” என்று கடைக்காரரிடம் கேட்போம். நம்மை கடை முதலாளி பார்க்கின்றார். ஆது சமயம், சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான வெறுப்பின் மணம், நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில், இதன் மணத்தை, முதலாளி நுகர நேருகின்றது. நுகர்ந்த பின், நாம் அனுப்பியிருந்த சரக்கு கட்டுகளை பிரித்து பார்க்கின்றார்.


கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து, சரக்கை பார்க்கும் பொழுது, வித்தியாசமாகத் தெரிகின்றது. உடனே கடை முதலாளி, “அன்று, மாதிரி ஜவுளி (சாம்பிள்) காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால், இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே” என்று கூறுவார்.

ஏனென்றால், நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப, அங்கே வெறுப்பு உணர்ச்சியையே, காண்பிக்கின்றது. ஆனால், அன்று காண்பிக்கப்பட்ட மாதிரி பொருளும், இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான். ஆனால், நுகர்ந்த உணர்வுகள், இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

நாம், “நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாக பாருங்கள்” என்று கூறுவோம். உடனே கடை முதலாளி, எனக்கு கண் இல்லையா, நன்றாக பார்த்துவிட்டு தான் சொல்கின்றேன்” என்று கூறுகின்றார். நாமும், இரண்டு தரம் “நல்ல சரக்குதான்” என்று கூறுவோம். அதற்கு கடை முதலாளி, “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது” என்று கூறுவார்.

ஏனென்றால், நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன? சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை துடைப்பதற்கு சக்தி வேண்டுமே, அதற்குத் தான் தியானத்தை கடைப்பிடிக்கச் சொல்வது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, அறியாது வரும் தீமைகளை, உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று, மெய்பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்,

நமது வாழ்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப,

நல் ஞானங்கள் உதயமாகி,

நம்மை வழி நடத்திச் செல்லும்.

இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் எப்படி இயக்குகின்றதென்றும்,

உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும் எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும் உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்

நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை, குருவின் வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும். அதை நீங்கள் அனைவரும் பெறுவதற்கு, எமது அருளாசிகள்.