குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்கு, துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியின் உணர்வுகளை, எமக்குள் பெறச் செய்ததை போன்று,
உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை,
யாம் பதிவு செய்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை
நீங்கள், உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களிடத்தில் அறியாது சேர்ந்த
தீயவினைகள் நீங்கும், புதிதாக தீயவினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து,
உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.
ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின், அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால் தான், வளரும். நான் வித்தை ஊன்றிவிட்டேன், என்று சும்மா இருந்தால் வளருமா? அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்துவிட்டோம் என்றால், அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். உயிரின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப, மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.
அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி, மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி, ஒளியின் உடலைத் தாம் பெற்றார்.
அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை,
நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும், பெறக்கூடிய தகுதி பெற்றால்,
அகஸ்தியரை போன்று, நாமும்
நமது உடலில் உள்ள அணுக்களை
சிறுக சிறுக மாற்றியமைக்க முடியும்.
நம்மிடம் உள்ள முந்தைய தீயவினைகளை தணித்து, புது தீயவினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.
இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்ட பின், நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின், நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது, நமக்கு வெறுப்போ, அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத் தான் வரும்” என்பதனை, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணரவேண்டும். தெரிந்து, தெளிந்து, வாழ்ந்திடும் வாழ்க்கையாக, உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.
எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம். நமக்கு கோபம் எப்படி வருகின்றது? வெறுப்பு எப்படி வருகின்றது? என்பதை அறிய வேண்டும். நம்மை வெறுப்படையச் செய்வது எது? வெறுப்பான பின்னால், குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது? வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை, நாம் அனுபவப்பூர்வமாக கொண்டு வர வேண்டும்.
ஏனென்றால், இத்தனை நிலைகளையும் யாம் கஷ்டப்பட்டு தான் தெரிந்து கொண்டோம்.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குதான், உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லி, பதிய வைக்கின்றோம். தீமைகளை நீக்க வேண்டும் என்ற சக்தியை, நீங்கள் பெறுவதற்காக தான், யாம் உபாயங்களை கூறுகின்றோம். யாம் அப்படி செய்து விடுவோம், இப்படி செய்து விடுவோம் என்று சொல்லவில்லை.
மான், ஆடு போன்ற விலங்கினங்கள் புல் போன்ற தாவர இனங்களை, சாப்பிட்டு பழக்கப்பட்டவைதான். அவைகளை புலி கொன்று சாப்பிடுகின்றது. சாந்தமான விலங்கினங்கள் புலியினால் கொல்லப்படும் பொழுது, அவைகளுடைய உயிரான்மா வெளியேறி, புலியின் ஈர்ப்பில் சிக்கி, புலியின் வீரியத் தன்மைக்கு மாறிவிடுகின்றது.
ஒரு புலி இறந்துவிட்டால், சிறிது நாளில் அதனுடைய உடல் அழுகி, அதனுடைய உடலிலிருந்து, தீய நாற்றம் வெளிப்படும். இப்படி, புலியின் உடலிலிருந்து வெளிப்படும், வீரிய உணர்வின் தன்மையை
வெப்பம், காந்தம் விஷம், என்ற இயக்க அணு
தனக்குள் கவர்ந்து, அதன் சத்தை,
தனது இயக்கமாகக் கொண்டு, வெளி வருகின்றது
என்பதை உணர்த்தினார் குருதேவர்.
இறந்த புலியின் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கண்டு, மற்ற செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் சத்துகள் அஞ்சி ஓடும். ஓடும் பாதையில், விஷ செடிகள் உமிழ்த்தும் உணர்வுகளால் வழிமறிக்கப்படும் பொழுது, அங்கே சுழல் காற்று போல் அடிக்கின்றது. சுற்றினவுடனே, புலியின் உடலிலிருந்து சத்தை எடுத்துக் கொண்ட இயக்க அணுக்களும் அதில் சிக்குகின்றன. புலியின் உணர்வின் அணுக்களும், சாந்தமான செடியின் சத்தும், விஷச் செடியின் சத்தும் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி சுழல்கின்றன.
மோதலில் மேலே ஆவியாக போகின்றன. அதே சமயத்தில், மோதிய உணர்வுகளின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, இணைந்து, பூமியில் படர்கின்றன. இப்படி பூமியில் விழுந்த பின், புலியின் உடலில் எத்தகைய உணர்வின் சக்தி பெற்றதோ, எந்த நட்சத்திரத்தின் நிலைகள் இதில் குறைவாக இருக்கின்றதோ, அதற்கு எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள், நமது புவியில் மின்னலாக மாறும் பொழுது, மின்னலின் ஒளிக்கற்றைகள் புவியில் படிந்த உணர்வின் அணுக்களில் மோதி துடிப்பாகின்றது. இவ்வாறு துடிப்பான பின், அங்கே எப்படி ஒரு செடியாக உருவாகின்றது என்றும், அந்த செடியில் கலந்த உணர்வுகள், தன் சத்தை எப்படி கவர்கின்றது என்றும் குருநாதர் காண்பித்தார்.
இதன் நிலைகளை காண்பதற்காக, யாம் இரண்டு மூன்று மாதமாக அங்கேயே தங்கியிருந்தோம். புவியில் விழுந்த உணர்வின் அணுக்கள், மின்னலின் ஒளிக்கறைகளை எப்படி ஈர்க்கின்றது என்றும், ஒரு விதையை நிலத்தில் ஊன்றியவுடனே, அதன் உணர்வுகள் எப்படி இருக்கின்றது, என்றும் குருநாதர் உணர்த்தினார். இதை தான் வேதங்கள் கூறுகின்றது.
அதாவது, புலியின் உடல் “ரிக்”,
அதிலிருந்து வரக்கூடிய மணம், “சாம” இசை.
கொடூரமான உணர்வுகள் வரும் பொழுது, சாந்தமான செடியின் தன்மை இதைக் கண்டு, அஞ்சி ஒடுகின்றது. ஓடும் பாதையில், ஒரு விஷ செடியின் மணத்தில் மோதியவுடனே, அங்கே மூன்றும் சுழல்கின்றன. சுழற்சியின் மோதலில், மூன்றும் ஒன்றாக சேர்கின்றன. இந்த மோதலின் இணைப்பில், புலியினுடைய வீரியத் தன்மையும், விஷ செடியின் வீரியத் தன்மையும், சாந்தமான செடியின் வீரியத்தன்மையும் மறைந்து விடுகின்றன, “அதர்வண”.
அதன் மூன்று குணங்களும் மாறிப் போகின்றது. இந்த மூன்றும் ஒன்றாக சேர்த்து, புதுவிதமான வித்தாக கருவாகின்றது, “யஜூர்”. வித்தான நிலையில், மின்னலின் ஒளிக்கற்றைகள் தாக்கப்படும் பொழுது, உணர்ச்சியால் இயக்க அணுவாக மாறி, புதுப்புது செடிகொடிகள் உருவாகின்றது, என்பதனை உணர்த்தினார் குருநாதர்.
இரண்டு, மூன்று மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து, சிறு சிறு செடிகளாக வரும் வரை, பார்த்திருந்தோம். பிறகு, குருநாதர் நாம் வேறு இடத்திற்கு போய் வரலாம் என்று கூப்பிட்டுப் போனார். வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு, திருப்பி, ஆறு மாதம் கழித்து வந்து பார்த்தால், இது கொடியாக வளர்ந்திருக்கின்றது.
அந்த கொடிக்கருகில் எம்மை உட்கார சொல்லி, ஒரு கத்தியை கையில் கொடுத்து விட்டார் குருநாதர். அந்த கத்தியை கையில் வைத்துக் கொண்டு, அந்த கொடிக்கருகில் அமர்ந்தவுடனே, அந்த கொடியின் ஒரு கிளை எம்மை நோக்கி நகர்ந்து வந்தது. நகர்ந்து வந்து எமது உடலில் பட்டவுடனே, “கரண்ட் ஷாக்” அடித்தமாதிரி இருந்தது.
உடனே, “அந்த கொடியைக், கத்தியை வைத்து வெட்டு” என்று குருநாதர் கூறினார். குருநாதர் சொல்லியபடி, அந்த கொடியை வெட்டினோம். வெட்ட, வெட்ட மீண்டும் நெருங்கி வந்தது. மீண்டும் நெருங்க முடியாத அளவிற்கு வெட்டியவுடனே, விட்டு விட்டது. ஆக, அந்த கொடி இரத்தத்தை, இரத்தம் கொண்ட உயிரினத்தை எப்படி உணர்கின்றது, என்பதை குருநாதர் அங்கே தெளிவாக விளக்கினார்.
இதே போன்று, சில இடங்களில் சில உணர்வுகள், சுழற்சியில் மற்ற செடிகளின் உணர்வுகளுடன் இணைந்து, புதுவித செடியாகின்றது. அதில் இரத்தம் உள்ள குருவியோ, அல்லது மற்ற உயிரனங்களோ உட்கார்ந்தால் அப்படியே “டப்” என்று மூடிக்கொள்கின்றது. மூடிக் கொண்டவுடன், அந்த உயிரினத்தின், இரத்தம் முழுவதையும் உறிஞ்சுகின்றது. சிக்கிய உயிரினம் இறந்தபின், அதனுடைய உடலை விட்டுவிடுகின்றது.
இது போன்றுதான், இயற்கையின் உணர்வுகளுக்கொப்ப ஒவ்வொன்றும் எப்படி இயங்குகின்றன, எப்படி இயக்குகின்றன, எப்படி விளைகின்றன, என்பதை குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாக உணர்த்தினார். குருநாதர் உணர்த்திய அருள் வழியில், யாம் இயற்கையின் இயக்க பேருண்மைகளையும், அருளுணர்வுகளையும் உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
குருநாதர் உணர்த்திய அருள் வழியில், தங்களிடம் அருளுணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, தங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகளை வென்று, புதிதாக தீய வினைகள் எதுவும் தங்களிடத்தில் வராது காத்து, இந்த வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று, தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெற்று, இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் செப்டம்பர் 2002 (10.12.2011)
இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள். ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்? அதைக் கொல்லவேண்டும் என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள். கறிக்கடைக்கு சென்று கறி வாங்க செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதை பார்த்தால், கறி வாங்க சென்றவர்களுக்கு எச்சில் ஊறிக் கொண்டே இருக்கும்.
ஆடு அறுக்கப்பட்டு, ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால், ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது என்பதை நேரடியாக, அனுபவப் பூர்வமாக காண்பித்தார் குருநாதர்.
கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில், ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து, இரசித்துக் கொண்டிருப்பார்கள். அறுக்கப்படும் ஆடோ, கத்திக் கொண்டிருக்கும். ஆடு அறுக்கின்றவரைப் பார்த்தவுடனே, அவனை ஏங்கி, "இந்த மாதிரி கொல்கின்றானே" என்ற உணர்வோடு வேதனைப்படுகின்றது.
கடைக்காரரோ, ஆட்டை வேதனைப்படுத்தி கொன்று, தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுது, இதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின், இந்த ஆன்மா, அடுத்தவரின் உடலில் எப்படி செல்கின்றது என்பதனை காண்பித்தார் குருநாதர்.
அதே சமயத்தில், ஆட்டுக் கறி வாங்கப் போன இடத்தில், ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு,இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தைத் 'தான் தான்' முதலில் வாங்க வேண்டும் என்று காத்திருப்பார்கள்.
ஆட்டை அறுக்கும் பொழுது,
ஆட்டினிடத்தில் உருவான வேதனையை
நாம் இரசித்து பார்க்கும் பொழுது,
நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு,
நம்முள் உமிழ்நீராக மாறி, நமது சிறுகுடலில் கலக்கின்றது.
நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் உமிழ்நீராக மாறினாலும்,
அந்த உமிழ்நீருடன், இயக்க அணுக்கள் கலந்து,
இரத்தமாக மாறும் பொழுது,
இயக்க அணு, "ஜீவ அணுவாக" மாறுகின்றது.
ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ, அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது. அந்த உறுப்புகளில், எந்த வேதனை வருகின்றது என்பதை சுட்டிக் காண்பித்தார் குருநாதர்
நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளை சேர்த்து, சேர்த்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம் என்பதை பார்த்தோம். இப்போது மனிதரான பின், இரக்கமற்ற நிலைகளில் ஆட்டை கொல்லும் பொழுது, அப்படிக் கொன்று, ஆட்டின் உயிரான்மா வெளிவரும் பொழுது,கொன்றவரின் உடலிலோ, அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ, ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது. ஏனென்றால், ஆட்டினுடைய எண்ணங்கள், இன்னார் தான் நம்மை கொல்ல சொல்லி தூண்டினர் என்றும், இவர் தான் நம்மை கொன்றார் என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்து, அவருடைய உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது.
ஆனால், ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே,அவரிடத்தில் இரக்கமற்று கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவு, பண்பு என்பது, துளியும் இல்லை. ஆனால், இத்தகைய நிலை வரும் பொழுது, இந்த மனித உடலில், முதுமைக் காலத்தில், மிருக உணர்வின் தன்மையே மிஞ்சும். மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும். பின், மனித உடலை விட்டு பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, இன்று மனிதராக இருக்கின்றார், நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படி சேர்கின்றார் என்பதனையும் இது காண்பிக்கின்றது.
அனுபவப்பூர்வமாக இதை தெரிந்து, நீ வேடிக்கை பார்க்கின்றாய். நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது. உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து, சிறு குடலில் கலந்த பின், அந்த சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது. பின், பெருங்குடலுக்கு போகும் பொழுது,வேதனையுணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது. நாம் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டாலும், ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது. பின், ஆகாரம் இரத்தமாக மாறி, கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுது, இரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது. உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும், அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின், அது நல்ல அணுக்களின் தசைகளை, உறுப்புகளை எப்படி குறைக்கின்றது, என்பதை காண்பித்தார் குருநாதர்.
உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால், வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும். அப்போது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள், தசைகளை கரைத்து சீழாக மாற்றுகின்றது என்பதனையும், நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து, மறுபடியும் நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது, என்பதனையும் குருநாதர் அங்கே அனுபபூர்வமாக அறிய செய்தார்.
ஏனென்றால், எத்தனயோ கோடி உடல்களை கடந்து மனிதராக பிறந்த பின், இரக்கமற்ற செயல்கள் செய்து, மற்றவர்களை துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம். இதை போன்று, தெய்வங்களின் பெயரை சொல்லி, ஒன்றுமறியாத ஜீவன்களை பலியிட்டு,எனக்கு சுகம் வேண்டும் என்று வேண்டி, பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.
ஆகவே, இது போன்ற பிழைகளை செய்து, தம்முள் தீமைகளையும், விஷத்தையும் வளர்க்கும் நிலையை தவிர்த்து, நம்முள் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால், நம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும். தீமைகள் வராது காக்க முடியும்.
ஆகவே, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில், தம்முள் அருள் உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற்று, உயிரை போன்றே உயிரில் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும், ஒளியாக உருவாக்கும் நிலை பெற்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால், இந்த வாழ்க்கையில் உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம்,செல்வாக்கு, சொல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெருகி, இந்த பிறவியில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக,பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
நமது மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் சிறிதளவு உணவு உட்கொண்டாலும், உடல் செழிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். ஆனால்,நமது மனம் வேதனையாலும், அழுத்தத்தாலும் நிறைந்திருக்கும் பொழுது, நாம் எவ்வளவு உணவு உட்கொண்டாலும், உடல் செழிப்பதில்லை. உடல், இளைத்தே காணப்படும். இதன் வழியில், நாம் உணர்வின் இயக்கத்தை அறியலாம். ஆனால், நாம் அருள் ஞானிகளின் அருளுணர்வுகளை நம்முள் நிறைத்தால், நம்மிடத்தில் அறியாது சேர்த்த, தீமைகள், பாவங்கள் அகலும்.
இமய மலையில் தவம் இருந்தால், ஈஸ்வரனை காணலாம் என்பார்கள். இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள உயிரான ஈஸ்வரனை எண்ணி, தியானம் செய்ய வேண்டும் என்பதற்கே, இவ்வாறு உணர்த்தினார்கள மெய்ஞானிகள்.
உயிரே கடவுள் மெய்ஞான மாத இதழ் 09.12.2011
ஆகஸ்ட் 2002
உடலின் இயக்க உணர்வுக்கொப்ப, உயிரினம் ஒன்று தன் வழியில் வாழ்ந்து, அது தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையின் வலுவானது, “இது நல்லது, இது கெட்டது” என்று உணர்வதற்கு உதவுகின்றது. அதனால், இந்த கண் எதன் உணர்வு கொண்டதோ, அதன் பிறகுதான் வளர்ச்சி அடைகின்றது.
ஆமையின் உயிரான்மா, நரியின் உடலுக்குள் போகும் பொழுது, நரியின் வியூகத்தை தகர்த்து. “நீ அதனுள் சென்று நீ அதுவாகு” என்று ஆமையின் உயிரில் சேர்ந்த உணர்வு, நரியின் ஈர்ப்பிற்குள் அழைத்து செல்கின்றது என்று நமக்கெல்லாம் புரியும்படி சொல்கின்றார்கள். நாம் புரிந்து கொண்டோமா? என்றால் இல்லை.
வியூகம் என்றால் நரியின் வியூகம். நீ அதனுடைய சுவாசத்திற்குள் சென்று, கவர்ந்த உணர்வை வளரச்செய், என்று, இந்த சட்டையை (ஆமையின் உடலை) கழற்றிவிட்டு, புதிதாக உருவாக்குகின்றது.
உடல் தான் மாறுகின்றது,
உணர்வுகள் வளர்கின்றன, வளர்கின்ற உனக்கு இறப்பில்லை.
எத்தனையோ உடல்களுக்கு பின், மனிதராக பிறக்கின்றோம். ஒரு பாம்பு கடித்துவிட்டால், உடலில் விஷம் ஏறுகின்றது. விஷம் தோய்ந்த பின், மனித நினைவு இழந்து விடுகின்றது. இறக்கும் தருவாயில், “பாம்பு என்னை தீண்டிவிட்டதே” என்று எண்ணினால், உடலை விட்டு பிரியும் உயிரான்மா என்ன செய்யும். பாம்பின் ஈர்ப்பிற்குதான் செல்லும். மனிதரின் உயிரான்மா பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று, பாம்பின் வியூகத்தை தகர்த்து, பாம்பின் உடலுக்குள் சென்றுவிடும். அதன் பிறகு, தன் விஷத்தை பாய்ச்சி, தன் உடலை வளர்க்கும் தன்மை வரும். பாம்பு தன் விஷத்தை பாய்ச்சித் தான் தன் உணவை எடுக்கின்றது.
இப்படி, பரிணாம வளர்ச்சியில் ஆமையாக இருந்தது, நரியின் ஈர்ப்பிற்குள் சென்று, நரிக்கு குட்டியாக பிறக்கின்றது. குட்டியாக பிறக்கும் பொழுது, தருமன்.
தருமன் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கும். எத்தனை வந்தாலும் உள்ளுக்குள் சேர்த்துக் கொள்கின்றார். திட்டுவது, போவது, வருவது என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கின்றார். இத்தகைய உணர்வுகள் வந்த பிற்பாடு என்ன செய்கின்றது? தன்னை பாதுகாக்கத் தான் செயல்படுகின்றது.
காவியத்தில் தருமர் என்ன செய்கின்றார்? சூதாடுகின்றார், சூதாட்டத்தில் தோற்றுப் போகின்றார். அதாவது, நமக்கு, “ஒன்றை பெறவேண்டும்” என்ற ஆசை வருகின்றது. ஆசையைக் கூட்டினால், அதில் சிக்குகின்றோம். சூதாட்டத்தில் சொத்தெல்லாம் இழந்த பின், வேதனை வருகின்றது. அதே சமயத்தில் ஒவ்வொன்றும் தன் பிழைப்பிற்காக வேண்டி போகின்றது. எதிரிகள் வராது, அதன் வலுவை சேர்க்கின்றது. இப்படி, ஒவ்வொரு உடலிலும், சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நரியானாலும், புலியானாலும் ஏமாற்றித் தான், மற்றொரு உயிரினத்தை அடிக்கின்றது. வீட்டில் உள்ள பூனை என்ன செய்கின்றது? எலியை துரத்துகின்றது. எலி, ஒரு பொந்துக்குள் போய் ஒளிந்து கொள்கின்றது. பிறகு, பூனை போய்விட்டதா? இல்லையா? என்று பார்க்கின்றது. ஆனால், பூனை, எலி வரும் வரையிலும், அமைதியாக காத்திருந்து, எலி வெளியே வந்ததும் “லபக்” கென்று பிடித்து செல்கின்றது. இது போன்று, ஒவ்வொரு நிலையிலும் சூது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
உதாரணமாக, கருடன் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில், உள்ளிருந்து மேலே நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால், கருடன், மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து, அந்த மீனை “லபக்”கென்று கவ்விக் கொண்டு செல்கின்றது. மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது. மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே, சடாரென்று பாய்ந்து, மீனைப் பிடித்து செல்கின்றது. ஆனால், நாமோ கடலுக்குள் போனாலும், மீனை பிடிக்க முடிவதில்லை. ஆக, கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
இது போன்றுதான், நமது உணர்வின் இயக்கங்கள். எதன் வலிமையை சேர்த்ததோ, அதன் வலுவை பெருக்க உதவி செய்கின்றது. இதெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, மான், புலியை பார்க்கின்றது. புலியோ மானை துரத்துகின்றது. மான், “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின் வலுவான உணர்வை நுகர்கின்றது. புலியின் தாக்குதலில் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும், மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள் சென்று, புலியின் உணர்வை கவர்ந்து, வளர்ந்து, புலியின் ரூபமாக, புலிக்கு குட்டியாக பிறக்க நேருகின்றது. இது சந்தர்ப்பம்.
இப்படி, “தீமையிலிருந்து தப்ப வேண்டும்” என்ற உணர்வுகளை எடுத்து, எடுத்து, பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக உருவாக்கியது, நமது உயிர். கண்களால் பார்த்துத் தான், உணர்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. ஆகையால், கண்ணன் பிரம்மத்தை சேர்ந்தவன் என்று கூறுகின்றனர். நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறவேண்டுமென்று,கண்ணின் நினைவை புருவ மத்திக்கு செலுத்தி, எண்ணிப் பாருங்கள்.அந்த பேரருள் உணர்வை, உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.
ஆகவே, ஞானிகள் காண்பித்த அருள் வழியில், தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெருக்கி, தீமைகள் தம்முள் வராது காத்து, பேரின்ப உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், என்றும் பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் ஆகஸ்ட் 2002 (08.12.2011)
வேதனைப்படும் ஒருவரை நாம் பரிவோடு பார்க்கும் பொழுது, அதனின் உணர்வுகள் மாறி, நமக்குள் வந்து, அதே வேதனையை உருவாக்கி, தாயாக, நோயாக, நம்முள் விளைந்துவிடுகின்றது. இதை நமக்கு உணர்த்துவதற்கே, “மாரியம்மாள்” என்று காரணப்பெயர் வைத்தனர் ஞானிகள்.
மாரியம்மன் கோவிலுக்கு முன்னால்,
“அக்னி குண்டம்” வைத்திருப்பார்கள். அதற்கு காரணம்,
நமது உயிர் ஒரு நெருப்பு, அந்த நெருப்பில்,
நம்மிடத்தில் அறியாது சேர்ந்த தீமைகளை போட்டு
சுட்டுப் பொசுக்க வேண்டும் என்பதே
ஞானிகள் உரைத்த உண்மையாகும்.
நம்மிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள், பாவ வினைகள், சாப வினைகள் போன்ற தோஷங்களுக்கே, “பிரதோஷம்” என்று பெயரிட்டனர் ஞானிகள். நம்மிடத்தில் அறியாது சேர்ந்த பிற தோஷங்களை, அருள் ஞானிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு, அகற்றிடல் வேண்டும்.
ஒவ்வொரு உயிரினமும் தனது கண்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் உற்று பார்த்து, நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனதன் வழிகளில் தன்னை வளர்த்துக் கொள்கின்றன. இதனை, நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்வதற்காக, ஆமையை உதாரணமாகக் காண்பித்து, நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.
ஆமை என்ன செய்கின்றது? தனது தலையை, ஓட்டிற்கு வெளியே நீட்டி தனது இரையை, புல்லை பார்த்தவுடனே மேய்கின்றது. அடுத்தாற் போன்று, இந்த ஆமையை ஒரு நரி பார்க்கின்றது. நரியானது, இந்த ஆமையை சாப்பிடும் உணர்வுடன் நெருங்கும் பொழுது, ஆமை தனது தலையை, லபக்கென்று தனது ஓட்டிற்குள் இழுத்துக் கொள்கின்றது. நாம், உயிரின பரிணாம வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்வதற்காக உருவங்களைப் போட்டு, எவ்வளவு தெளிவாக கொடுக்கின்றனர் ஞானிகள்.
ஆமை, நரியின் கண்களை உற்றுப் பார்க்கின்றது. நரியின் வலுவைக் கண்டவுடனே, ஆமை தன் தலையை ஓட்டினுள் இழுத்துக் கொள்கின்றது. மீண்டும் தலையை வெளியே நீட்டி, நரி போய்விட்டதா? இல்லையா? என்று கூர்மையாக பார்க்கின்றது. இப்பொழுது, ஆமை தன் இரையை எடுக்க முடியவில்லை. ஏனென்றால், எதிரே நரி இருக்கின்றது.
ஆமை நரியைப் பார்த்த பின், ஆமையின் கண், நரியின் வலுவை உணர்த்துகின்றது. ஆகவே, ஆமை நரியிடம் இருந்து தப்பிக்க, தன் தலையை ஓட்டினுள் இழுத்துக் கொள்கின்றது. மறுபடியும் தலையை வெளியே நீட்டி, நரி போய்விட்டதா இல்லையா என்று பார்க்கின்றது.
சூரியனிலிருந்து வரக்கூடிய, வெப்பம், காந்தம், விஷம், நரியிடம் இருந்து வெளிப்படும் வலுவான உணர்வை சேர்த்து கொண்டால், பரப்பிரம்மம். அதனின் உணர்வின் மணமாக வரும் பொழுது, ஞானம் சரஸ்வதி, புலனறிவு ஐந்து. சரஸ்வதி எனும் பொழுது, நரி ஆமையை கொன்று தின்ன வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துகின்றது.
நரி வலுவானது. நரியிடம் இருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை, ஆமை உற்றுப் பார்த்த பின், நரியின் உணர்வுகளை, ஆமை நுகர்கின்றது. நரியின் உணர்வுகள் ஆமையின் உயிரில் மோதுகின்றது. ஆமைக்கு உயிர் குரு. ஆக, ஆமையின் குருஷேத்திரத்தில், நரியின் உணர்வுகள் மோதுகின்றது. மோதலில், ஆமையினிடத்தில் போர் நடைபெறுகின்றது.
அதாவது, ஆமையை காத்து வந்த உணர்வுக்குள், எதிர் அலைகளின் மோதலால் கலக்கம் ஏற்படுகின்றது. ஏனென்றால், ஆமைக்கு நல்ல ஆகாரம் (நல்ல உணர்வுகள்) போகவில்லையல்லவா. எதிர் நிலையான உணர்வுகள் வரும் பொழுது, ஆமையினிடத்தில் “இதிலிருந்து தப்ப வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டுகின்றது.
“தப்ப வேண்டும் என்ற உணர்வுகள்” வரும் பொழுது, ஆமை தன் தலையை உள்ளே இழுத்துக் கொள்கின்றது. அதன் பிறகு, நரி போய்விட்டதா? என்று தான் நினைக்கும். நுகர்ந்த உணர்வுகள் ஆமையின் இரத்தத்தில் கலக்கின்றது, “அர்ச்சுனன்”, ஏனென்றால்,
நுகர்ந்த உணர்வுகள், ஆமையின் உடலில்,
வெப்பம், காந்தம், விஷம், என்ற நிலைகளில்
இயக்க அணுவாக மாறிவிடுகின்றது.
உணர்வின் சத்து, ஜீவ அணுவாக மாறுகின்றது.
பரப்பிரம்மமாகின்றது,
நுகர்ந்த சத்தின் மணத்தின் தன்மை கொண்டு, அங்கே இயக்குகின்றது.
அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்குகின்றான். நரியின் வலிமையான உணர்வுகள், சாந்தமான ஆமைக்குள் ஊடுருவி, நரியின் வலிமையை ஆமையினிடத்தில் கொண்டு சேர்த்து, அங்கே நரியின் வலுவை உணர்த்துகின்றது.
அதே சமயத்தில், நரியின் உணர்வுகள் ஆமையின் அணுக்களுக்குள் போனவுடனே நாம் வலி வந்தால், ஐயோ.. அம்மா… என்று துடிக்கின்றோம் அல்லவா. நரம்பெல்லாம் வீங்குகின்றதல்லவா. இதை போன்ற உணர்வுகள், ஆமையினிடத்தில் உருவாகும் பொழுது,நகுலன்.
ஆக, நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுத்தன்மை மாறுகின்றது. அந்த அணுக்களில் உள்ள காந்தம் சகாதேவன். இழுத்து, அதனுடன் இணைய வைக்கின்றது, சகாதேவன்.
ஆக, சாந்தமான ஆமையின் உணர்வுக்குள், நரியின் வலுவான உணர்வுகளை, இழுத்து இணைய வைத்த பின், நரியின் வலுவான உணர்வுகள் பீமன். ஆமையினிடத்திலுள்ள குணங்களை எல்லாம் அடித்து நொறுக்கி, தன் வசத்திற்கு கொண்டு வந்துவிடுகின்றது.
அதே சமயத்தில், நரி, ஆமையை கொல்ல முடியவில்லை. மேலே ஓடு தான் இருக்கின்றது. நரிக்கு, இந்த ஆமை இரையாக கிடைக்கவில்லை என்றாலும், மற்ற உயிரினங்களை வேட்டையாடி, தனது உணவாக எடுத்துக் கொள்கின்றது.
ஆமை, உணவாக எடுப்பது இலை, தழைகளை. ஆனால், ஆமைக்கு இப்போது இரை இல்லை. ஆகவே, இந்த ஆமையின் உணர்வுகள் வளர்ச்சியடைகின்றது.
ஆமை தன் தலையை நீட்டினால், நரி தன்னை கொன்றுவிடும் எனும் உணர்வால், இரை எடுக்க முடியவில்லை. ஆமைக்கு இரை இல்லை எனும் பொழுது, ஆமையின் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எந்த "கண்"நரியை காண்பித்ததோ, அந்த வலுவான இடத்திற்கு (நரியின் உடலுக்குள்) ஆமையின் உடலை விட்டு பிரியும் உயிர் செல்கின்றது.
கண்ணன், அர்ச்சுனனுக்கு சாரதியாக செல்கின்றான். ஏனென்றால், நரியின் உணர்வு வலுவானது. இதுதான் அர்ச்சுனன். குறி வைத்துத் தாக்கக்கூடியவன். குறி தவறவே தவறாது. ஏனென்றால், நரியின் உணர்வுகள் ஆமைக்குள் ஊடுருவி பதிந்துள்ளது.
ஆமையினிடத்தில், உணர்ச்சிகள் வலிமையான நிலைகளில் உணர்வுகள் நகுலனாக மாறுகின்றது.
காந்தம் சகாதேவன். அதனுடன் இணைத்து விடுகின்றது.
இணைத்துக் கொண்டபின், பீமனாக மாறிவிடுகின்றது. ஆமைக்குள் நரியின் உணர்வுகள், ஆமையின் குணங்களை அடித்து நொறுக்கி, தன் வசத்திற்கு கொண்டு வருகின்றது.
கண்ணன், அர்ச்சுனனுக்கு சாரதியாக செல்கின்றான். மகாபாரத யுத்தத்தை நடத்துவது யார்? கண்ணன். ஒரு உடலுக்குள் எதிர் நிலையான உணர்வுகள் வந்தால், குருஷேத்திரப் போர். ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு உடலிலும், எத்தனை விதமான கலக்கம், எத்தனை போர்கள் நடந்து கொண்டிருக்கின்றது? உங்களால் மறுக்க முடியுமா? அர்ச்சுனன், கண் எனும் சாரதியால் எதைப் பார்த்ததோ, அந்த உணர்வின் அலைகள் உடலில் இருக்கின்றது. ஒன்றை கூர்மையாக பார்த்தவுடனே, அதன் வலிமையை கொண்டு வருகின்றது.
ஆகவே, இந்த வாழ்க்கையில் நாம், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை கூர்மையாக உற்று நோக்கி, அதனின் உணர்ச்சியாக, அதை நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக, நம் விலா எலும்புகளுக்குள் பதிவாக்கி, அந்த அருள் உணர்வுகளை நமது உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் இணையச் செய்து, தொடர்ந்து வலுவாக்கினோம் என்றால், நமது உயிர், அந்த துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்ட எல்லைக்கு, நம்மை அழைத்துச் செல்லும். எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் ஜூலை 2002 (07.12.2011)
குருநாதர் செய்வினைகளைப் பற்றியும், தோஷங்களைப் பற்றியும் கூறி வந்தார். அது சமயம், குருநாதர் ஒரு பிச்சைக்காரரை காண்பித்தார். அந்த பிச்சைக்காரர் காலை நொண்டிக் கொண்டு, குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார். அவர் ஒரு பத்து அடி நடப்பதற்கு, 15 நிமிடமாவது எடுத்துக் கொண்டார். உணவு பெறுவதற்காக, ஒரு டப்பாவை கையில் வைத்துக் கொண்டு, அல்லாடிக் கொண்டு வந்தார். அவர், காலையிலிருந்து மாலை வரை அலைவார். கடைகளில் கொடுத்த உணவை, அள்ளி சாப்பிடுவதற்கு சிரமப்படுவார். யாம், அவரை அடிக்கடி சாலைகளில் பார்த்திருக்கின்றோம்.
பிச்சைக்காரர் நடந்து வருவதை சிறிது தூரத்திலிருந்து, குருநாதரும் யாமும் கவனித்துக் கொண்டிருந்தோம். குருநாதர் அவரை காண்பித்து, “திருடன் வருகின்றான் பார், திருடன் வருகின்றான் பார்” என்று கூறினார். “எங்கே சாமி வருகின்றார்?” என்று யாம் கேட்டோம். “இதோ வருகின்றான் பார்” என்று பிச்சைக்காரரை சுட்டிக் காண்பித்தார் குருநாதர்.
குருநாதர் சொல்லி, பிச்சைக்காரர் எங்கள் பக்கத்தில் வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது. இவ்வாறு அந்த பிச்சைக்காரர் எங்கள் அருகில் வந்ததும், அவர் கையில் இருந்த கம்பை பிடுங்கிக் கொண்டு, பிச்சைக்காரரை அங்கே உட்கார வைத்துவிட்டார் குருநாதர்.
குருநாதர் அவரின் கையிலிருந்த தடியை எடுத்துக் கொண்ட பின், எம்மைப் பார்த்து, “காபி வாங்கி வா, மெதுவடை போன்ற சில திண்பண்டங்களை வாங்கி வா” என்று கூறினார். எல்லாவற்றையும் வாங்கி வரச் சொல்லி, பிச்சைக்காரரை சாப்பிட சொன்னார் குருநாதர்.
பிச்சைக்காரர் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடனே, “அந்த கம்பை எடு” என்று கூறி, அந்த கம்பை வாங்கி, எமது கையில் கொடுத்தார் குருநாதர்.
“இந்த கம்பால், அவனின் மண்டையை பார்த்து, ஓங்கி அடி, அவனுடைய மண்டையை இரண்டாகப் பிளக்க வேண்டும்” என்று கூறினார். “திருடன் இவன், இவனுடைய மண்டையை இரண்டாக உடை” என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.
குருதேவரும், யாமும் பேசுவதைக் கேட்டு, பிச்சைக்காரர் அலறத் தொடங்கினார். இத்தனையும் வாங்கிக் கொடுத்து சாப்பிட்டவுடன், அடி என்றால் எப்படி இருக்கும்.
யாமும் குருநாதரிடம் இருந்து, கம்பை வாங்கிக் கொண்டு, மெதுவாக பிச்சைக்காரர் தலைக்கு நேராக கொண்டு போனோம். இலேசாக, வலி தெரியாதவாறு பிச்சைக்காரரின் தலையில் அடித்து விட்டு, “அடித்துவிட்டோம் சாமி” என்று யாம் கூறினோம்.
“மண்டை உடையவில்லையே” என்று கூறினார் குருநாதர்.
அந்தக் கம்பை வாங்கி, எமது முதுகில் “ஓங்கி அடித்தார்” குருநாதர். “மண்டையில் அடித்தால், இப்படி திடுமென்று சத்தம் வரவேண்டும், மண்டை உடைய வேண்டும்” என்று கூறினார். “இப்பொழுது அவன் மண்டையில் அடி” என்று கூறினார்.
“சாமி, நான் பிள்ளைக்குட்டிக்காரன், பிச்சைக்காரர் செத்துப் போனால், என்னை சிறையில் போட்டுவிடுவார்கள்” என்று கூறினோம். “எம்முடைய பிள்ளைகளெல்லாம் ரோட்டிற்கு வந்துவிடும்” என்று கூறினோம்.
எம்மை சும்மாவா விட்டார் குருநாதர். “அதெல்லாம் முடியாது, நான் சொன்னதை செய்கின்றேன் என்று கூறினாயல்லவா, நான் முதுகில் அடித்தேன், அதே போன்று, அவனின் மண்டையில் நீ அடி” என்று கூறினார்.
யாம், இரண்டு மூன்று தடவை மெதுவாக, மெதுவாக பிச்சைக்காரரின் தலையில், கம்பை வைத்து எடுத்தோம். இதனால், குருநாதர் எம்மை திரும்ப, திரும்ப அடித்தார். “சரி சாமி, பிச்சைக்காரர் அடி தாங்கமாட்டார், இப்பொழுது, இவரை அடித்து கொன்றே விடுகின்றேன்” என்று கூறிவிட்டு கம்பை ஓங்கிக் கொண்டு போய், அந்த பக்கம் தரையில் அடித்தோம்.
பிச்சைக்காரர், “ஐயய்யோ…அம்மா…” என்று கூறிக்கொண்டு எழுந்து ஓடினார். யாம் அவரை துரத்திக் கொண்டு ஓடிய அவசரத்தில், எமது வேஷ்டி கூட கழன்று விட்டது. எமது வேஷ்டியை, ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம்.
எமது வீட்டு சந்திற்கு முன், ஒரு இரும்பு கடை இருக்கின்றது. அந்த கடையிலிருந்த ஒருவர், “என்ன நைனா ஓடுகின்றீர்கள்?, அவன் நடக்க முடியாமல் இருந்தான், அவனும் ஓடுகின்றான், என்ன சமாச்சாரம்?’ என்று கேட்டார். அதற்கு யாம், “குருநாதர் அவனை திருடன் என்று கூறினார்” என்று சொன்னோம்.
யாம், அவரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, குருநாதரிடம் இழுத்துக் கொண்டு வந்தோம். “அவர் என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று சொல்லிக் கொண்டு வந்தார். குருநாதரிடமும், “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்று கூறினார். குருநாதர், அவரின் கையில் 100 ரூபாயை கொடுத்தார்.
“இவனுடைய சொத்தைப் பறிப்பதற்காக வேண்டி, இவனின் உடலில் இன்னொரு ஆவியை ஏவல் செய்து, இவனை பைத்தியக்காரனாக ஆக்கிவிட்டார்கள். இப்படி பைத்தியக்காரர்களாக சுற்றுகிறவர்களுக்கெல்லாம், பைத்தியக்காரன் ஒருவன் மலையில் இருக்கின்றான். இது போன்று முக்கியமான கோவில் குளங்களுக்கெல்லாம் செய்வினை செய்யப்பட்டவர்கள், தோஷங்களானவர்கள், இப்படித்தான் வருவார்கள்”.
“ஏனென்றால், இவன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கு, பிறிதொருவர் செய்த ஆவி நிலைகள் இவனுக்குள் வந்தாலும், இவனைப் போன்றவர்களை நல்ல இடத்திற்கே அழைத்து வரும், இருந்தாலும், இவன் பிச்சை எடுத்துதான் வாழமுடியும். நல்லதை எடுக்க முடியவில்லை. இவனால் பார்க்க முடியவில்லை, இப்படி அவஸ்தைப்படுகின்றான். ஆகையால், இவன் உடலில் இருந்த ஆவியைத் தான், உன்னைக் கொல்ல சொன்னது” என்று கூறினார் குருநாதர்.
எனவே, அத்தனை நாடகங்கள் செய்து, ஆவி நிலை விலகியது.பிச்சைக்காரருடைய கை கால் எல்லாம் ஜம்மென்று ஆனது. அவரின் கையில் 100 ரூபாயை கொடுத்து, “உனது சொத்தெல்லாம் வந்து விடும், போடா” என்று கூறினார் குருநாதர்.
அந்த ஆள், விருதுநகர் பக்கம் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய சொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு, அவரை வெளியில் துரத்திவிட்டார்கள். அவருக்கு குழந்தைகளோ, வேறு வாரிசுகளோ கிடையாது. அவருடைய சொத்தை அனுபவிப்பதற்காக, அவரை பைத்தியக்காரராக ஆக்கியுள்ளார்கள். இப்படியும் இருக்கிறது உலகம். இதை எல்லாம் அனுபவபூர்வமாக காண்பித்தார் குருநாதர்.
இது போன்று, நமது மனித வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும், நமக்குள் தீமை புகாது தடுக்கும் சக்தி வரவேண்டும். இது தான்,
கடவுளின் அவதாரத்தில் நரசிம்மா,
மடி மீது இரண்யனை வைத்து
வாசல்படி மீது அமர்ந்து
நர நாராயணன், இரண்யனை பிளந்தான்.
அதாவது, நமக்குள் தீமை செய்யும் உணர்வினை,
நமது உடலை விட்டே அகற்ற வேண்டும்.
சூரியன் பாதரசத்தால் மோதி, விஷத்தை பிரிக்கின்றது. சூரியனில் இருந்து வெளிப்படும் கலர்கள் ஆறு. ஏழாவது ஒளியாகின்றது. இதே, மனிதருக்கு அறிவு ஆறு. விஷத்தை நீக்கிய உணர்வை எடுத்து, நம் உடலுக்குள் வலுவாக்கி, விஷத்தை பிளந்து தள்ளினால், இருள் நீங்குகின்றது. ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாகின்றது. அதுதான், "ஈரேழு லோகத்தையும் வென்றவன், விண் சென்றான்" என்று காவியத்தில் தெளிவாக கொடுத்துள்ளனர், நமது ஞானிகள்.
இதன் வழி கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும், தீமைகளை வென்றிடும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தமக்குள் பெற்று, ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக, ஒளியின் சரீரமாக பெற்று வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.