இப்படி, நமது வாழ்க்கையில் எந்த நேரமானாலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டு வந்தோமானால், இதுவெல்லாம் தனுசுகோடி.
முதலில், எல்லாம் சேர்த்து, கோடிக் கரையில் இருக்கின்றோம். இராமேஸ்வரத்தில், இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்து, லிங்கமாக்கி, பூஜிக்கத் தொடங்கிவிடுகின்றான்.
நாம் என்ன செய்யவேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும், தீமைகளை நீக்க வேண்டும். நமது உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வு சிவதனுசு. அதே சமயத்தில்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்,
உயிருடன் ஒன்றியது, அது விஷ்ணு தனுசு.
இந்த உடலுக்குள், அதை எடுத்துப் பாய்ச்ச வேண்டும். அந்த விஷ்ணுதனுசு, இதற்குள் ஊடுருவி, உடலில் விளைந்த உணர்வுகளை அடக்குகின்றது.
இதே மாதிரி, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் பொழுது, தனுசுகோடி ஆகின்றது. வாழ்க்கையில் கடைசி நிமிடத்தில் இருக்கும் பொழுது, அருள் ஒளி பெறவேண்டும் என்று முழுமையாக்கி வந்தோமானால், இந்த உடல் என்ற கோடிக்கரையில் இருந்து, தனுசுகோடி என்ற துருவ நட்சத்திரத்திற்கு அழைத்து செல்கின்றது.
இல்லையென்றால், இந்த உடலில் “பாவி எனக்கு இப்படி செய்தானே” என்று எண்ணுவீர்கள் என்றால், இந்த உணர்வின் தன்மை கோடியாகின்றது. இந்த கோடிக்கரையிலிருந்து இன்னொரு உடலுக்குத் தான் தாவுகின்றோம். இதிலிருந்து தப்பவேண்டும்.
அதற்குத் தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நீங்கள் எப்பொழுதும் எடுக்க வேண்டும். எந்த நிமிடமானாலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்து, தீமையை நீக்கினோம் என்றால், அதைப் பற்றுடன் பற்றும்.
இந்த உடலைவிட்டுப் போனோம் என்றால், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், ஆறாவது அறிவு கொண்டு, ஏழாவது நிலை பெற்றவர்கள் உண்டு. அங்கு போய்ச் சேரவேண்டும். துருவ நட்சத்திரம் பிற மண்டலங்களின் விஷத்தை நீக்குகின்றது. ஒளியாக மாற்றுகின்றது.
இந்த மனித உடலில், அதை எடுத்துப் பழகுகின்றோம். அங்கே சென்றால் அதை எடுத்து உணர்வை ஒளியாக மாற்றும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி
மனிதனை மாற்றியமைக்கக் கூடிய சக்தி.

அந்த பேரருள் என்ற உணர்வை, எடுத்தோம் என்றால், ஒளியை நமக்குள் வளர்க்கும், மற்றதை நீக்கும். துருவ நட்சத்திரத்துடன் இணைக்கும்.
அகஸ்தியன் சென்ற பாதையில், அவன் திருமணமானபின், தான் பெற்ற சக்தியை, மனைவிக்குப் பாய்ச்சுவதும், அகஸ்தியனுடைய மனைவி, தான் கணவனால் கண்ட உண்மைகள் கொண்டு, கணவன் மேலும் உயரவேண்டும் என்று எண்ணுகின்றது. இப்படி உணர்வு ஒளியாகி, துருவத்தில் எல்லை கொண்டு, உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதை நாம் கவர்ந்தோம் என்றால், கணவனும் மனைவியும் எடுத்து, கணவன் பெறவேண்டும், மனைவி பெறவேண்டும் என்று இருவரும் வளர்த்தால், அந்த அருள் ஒளி என்ற கருவை, நமக்குள் உருவாக்கலாம்.
இப்படி ஒவ்வொரு நேரத்திலும், ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது, தனுசுகோடி என்ற நிலையை அடையலாம். பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம், அனைவரும் பெறலாம். எமது அருளாசிகள்.
(பக்கம் 53-57)
நம் குடும்பத்தில் எதிர்பாராத நிலைகள் வரும்பொழுது, ஒருவர் வெறுப்பு, வேதனையான செயலைச் செய்வார். அவரை நாம் உற்றுப் பார்த்தபின், உணர்வை நுகர்ந்து அறிவோம். இப்படிச் செய்கின்றானே? என்ற நிலை வந்துவிடும். அது வந்தபின், அதைச் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.
அந்த மாதிரி செய்கின்றானென்றால், உடனே நம் குரு காட்டிய முறைப்படி, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர் செய்யும் தவறான உணர்வு,
நம் உயிரில் பட்டு, உடல் முழுவதும் பரவுகின்றது.
நம் ரத்தங்களில் முழுவதும் கவரப்படுகின்றது.
ரத்தங்களில் கலந்த பின்,
நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை,
நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி,
தடைப்படுத்தி விடுகின்றது.
ரத்தத்திலுள்ள உணர்வுகளை
நல்ல அணுக்கள், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
அப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுது, கொதிப்பென்ற நிலைகள் வருகின்றது.
அந்த வெறுப்பென்ற நிலைகள் வரும்பொழுது, நமக்கு ஒருவிதமான நடுக்கம் வரும்.
ஏனென்றால், அந்த அணுக்களுக்கு சரியான ஆகாரம் இல்லையென்றால், அது பதறும். நமக்கு பதட்டம் வரும்.
அப்படி நடுக்கம் வரும்பொழுது, சிறிதேனும் அந்த அணுக்களில் சேர்ந்துவிட்டால், அந்த அணுக்களில், அந்த உணர்வுகள் இணைந்து கொள்ளும்.
அடுத்து, தவறு செய்யும் உணர்வுகளை நுகர்ந்து, அது வளர்ந்துவிடும்.
நல்ல அணுக்களின் மலங்களால் உருவானதுதான், நம் உறுப்புகள். அப்பொழுது உறுப்பின் வளர்ச்சி குறைகின்றது.
அதுவும் சேர்ந்து, அந்த அணுக்களின் தன்மையும் சேர்ந்து, ஒன்றுக்கொன்று போர் முறை செய்து, வலி எடுக்கின்றது.
நாம் தப்பு செய்யவில்லை. ஒருவருக்கொருவர் சண்டையிடும் உணர்வை நுகர்ந்தோமென்றால், இந்த நிலையாகின்றது. அதே சமயத்தில், இந்த வெறுப்பின் உணர்வு கொண்டு, வீட்டுக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வெறுப்பின் உணர்வுகள், நமது ஆன்மாவில் அதிகமாகப் பெருகியிருக்கும். வீட்டில், சின்ன குழந்தை ஒரு பாத்திரத்தை போட்டால் போதும், அல்லது குழந்தை ஏதாவது சத்தம் போட்டு பேசினால் போதும். இது எதிர் நிலை ஆகும்.
மனைவியைப் பார்த்து, பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார், என்று அந்த வெறுப்பின் உணர்வுகள், வெறுப்பான நிலைகளில் பேசச் சொல்லும். சில நேரங்களில் வீட்டில் ஏதாவது நடந்தால், உங்களை அறியாமலே கோபித்துக் கொள்வீர்கள்.
இதிலிருந்து, நாம் என்ன தெரிந்து கொள்கின்றோமென்றால்,
நாம் நுகர்ந்த உணர்வுதான், நம்மை இயக்குகின்றது.
அப்படி இயக்கும் அந்த உணர்வை,
நாம் கொடுத்த அருள் சக்தி கொண்டு,
ஆயுள் மெம்பர் அனைவரும், அந்த நிமிடமே,
புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி,
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும்
என்று, நம் இரத்தத்தில் கலக்கச் செய்யவேண்டும்.
இரத்தத்தில் கலந்தபின்,
அவர்கள் இருவருமே, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
தெளிந்த மனம் பெறவேண்டும்,
ஒன்றுபட்டு வாழும் சக்தி பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.
அந்த உணர்வின் உணர்ச்சிகளை, நம் இரத்தத்தில் சேர்க்கும் பொழுது, அவன் சண்டை போட்ட உணர்வை, தணிக்கின்றது.
அவன் ஒன்று சேர்ந்து வாழவேண்டும், என்ற உணர்வு கலக்கின்றது.
உணர்வின் தன்மையை, உயிர் உருவாக்குகின்றது.
உணர்வின் தன்மை கருவாகின்றது. நம் இரத்தத்தில் சுழல ஆரம்பிக்கின்றது
இது, நம் அணுக்களுடன் சேரும் பொழுது, நமக்கு ஒத்த நிலையாக மாறுகின்றது.
இந்த மாதிரி, எல்லாவற்றையும் மாற்றிப் பழக வேண்டும். நாம் சாமி கும்பிட்டேன், தியானமிருந்தேன், இப்படி ஆகிவிட்டது என்று சொல்லக் கூடாது. சில பேர் தியானமிருந்து, பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுவிட்டு, சுத்தப்படுத்தாமல் இருந்தால் என்ன செய்வது?
சட்டையில் அழுக்குப்பட்டால், துவைத்துக் கொள்கின்றோம். ஒரு நாற்றமான பொருள் சட்டையில் பட்டால், உடனடியாக துவைத்துக் கொள்கின்றோம். அது போன்று, வெறுப்பென்ற நிலைகளை, உடனே சுத்தப்படுத்தியாக வேண்டும்.
எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும், பிறருடைய தவறை, நாம் பார்த்துவிட்டால், அந்த உணர்வுகள் நம்மிடம் வந்த பின் தான், தவறு செய்கின்றான் என்று அறிகின்றோம். அந்த உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மை அறியாமலேயே, இப்படி செய்கின்றான் என்று சொல்ல வைக்கின்றது.
நாம் நுகர்ந்த உணர்வுகள், இப்படிப் பேச வைக்கின்றது. இதை நாம் தடைப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில், “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி, நம் உடலுக்குள் போகாமல் தடைப்படுத்த வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று எண்ணி, கண்ணின் நினைவை, உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
பின், அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். நல்ல ஒழுக்கமுள்ளவனாக வரவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளும், சக்தி பெறவேண்டுமென்று எண்ண வேண்டும். இந்த உணர்வு,
நம் உடலுக்குள் இரத்தத்திலுள்ள,
அவன் உணர்வை, தணிக்கின்றது.
ஆக, தியானமென்றால், நாம் கடும் தவமிருந்து,
எல்லா சக்தியும் பெறுவதல்ல.
ஒவ்வொரு நிமிடமும், நாம்
அந்த அருள்சக்தி பெறவேண்டும்.
நல்ல குணங்கள் வரவேண்டும், என்று தியானித்து,
உணர்வை, உருமாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
(பக்கம் 79-84)
வீட்டில், கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு, அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகிவிட்டால், வீட்டில் மனைவி என்ன செய்யவேண்டும்?
மனைவி, இந்த மாதிரி நேரங்களில், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் இரத்தத்தில் கலந்து, என் உடல் முழுவதும் படர்ந்து, ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டுமென்று எண்ண வேண்டும்.
பின், துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, என் கணவர் பெறவேண்டும். அவர் உடல் முழுவதும் படரவேண்டும், அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும், நல்ல எண்ணங்கள் வரவேண்டும், என்று இதைச் சமைத்து, கணவரிடம், நல்லது நடக்கும் என்று சொல்லிப் பாருங்கள்.
அவரால், இதை எண்ண முடியவில்லை. அதனால், மனைவி இதைச் செய்யவேண்டும். இதுதான், “எமனிடமிருந்து, சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்” என்பது.
இரண்டு உயிரும் ஒன்றானால், இரு மனமும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றாகின்றது. உணர்வு ஒன்றியபின், கணவரைப் பாதுகாக்கும் உணர்வை, மனைவி செய்யவேண்டும்.
சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும்பொழுது, அது நோயாக மாறி, மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்றவேண்டும். எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழவேண்டும்.
அப்படியென்றால், கணவனும் மனைவியும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக், கவரவேண்டும். நளாயினி போன்று, என்கின்றபோது, கணவருக்கு ஒரு சங்கடம் வரும்பொழுது, அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக, அவர் உயர்ந்த ஞானம் பெறவேண்டும், என்ற உணர்வை, மனைவி எடுக்க வேண்டும்.
சாவித்திரி போன்று இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்ற வேண்டும். கணவர் அருள் உணர்வு பெறவேண்டுமென்றும், அவருக்கு, நல்ல எண்னம் வரவேண்டுமென்றும், அவர் பார்ப்பது எல்லாம், நலமும் வளமும் பெறவேண்டும் என்றும், அவர் சொல்லைக் கேட்போரெல்லாம், இனிமை பெறவேண்டுமென்றும், பெண்கள் எண்ண வேண்டும்.
அப்பொழுது, அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.
கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள், இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் உடல் முழுவதும் படர்ந்து, உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி, உடலுக்குள் சேர்த்தவுடன், கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருளால், அவர் சொல்வதெல்லாம் நலம் பெறவேண்டும், அவர் பிறர் போற்றும் நிலைகள் பெறவேண்டும், என்று மனைவி எண்ண வேண்டும். அந்த பழக்கத்திற்கு வரவேண்டும்.
தியானம் என்பது, இதுதான் தியானம்.
உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
அந்த அருள் சக்தி பெறுவதும்,
அதை இயக்குவதும்தான், தியானம்.
நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின், சிக்கலலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான், நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், என்ற நிலைகளில், விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
மெய்ஞானிகள் காட்டியது, பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது, நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது. ஆகையால், அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடி தடுக்க வேண்டுமென்றால், அந்த அருள் உணர்வை, நாம் அடிக்கடி சேர்த்து, இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,
நாம் பெறவேண்டுமென்று, செருகேற்றிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது, நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.
நமது தியான வழி அன்பர்கள், நமக்குள் தீமை வராது,
தடுத்துப் பழகுவதுதான் தியானம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை,
நமக்குள், எல்லா அணுக்களுக்குள்ளும்
சேர்த்துவிட வேண்டும்.
நாம் புழுவிலிருந்து வரப்படும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து, வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை, உங்களிடம் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணி, காற்றில் கலந்துள்ள, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது, நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச், சேருகின்றோம்.
அந்த ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில், யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால், உடனே, துருவ நட்சத்திரத்தை எண்ணி, மாற்ற வேண்டும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும், உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அதை எப்படிச் செய்ய வேண்டுமென்ற சிந்தனை வரும்.
கணவனும் மனைவியும், இந்த தியானத்தை எடுத்து, கணவருக்கு, உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில், நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய, உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
அவர் மனம், வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள், சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை, அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும், அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம், நன்றாக இருக்க வேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள்.
மனைவி இப்படி எண்ணினால், வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை. இந்த உணர்வுடன், கணவர் எங்கு சென்றாலும், எல்லாக் காரியத்திலும், வெற்றி பெறலாம்.
நாம், இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்.
அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்.
அப்பொழுது, வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.
மற்றவரிடத்தில், இதைச் சொல்லும் பொழுது,
இந்த உணர்வு, அங்கே விளைய வேண்டும்.
அவர்கள் குடும்பமும், நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் உடலில், விளையும் மூச்சு நல் உணர்வாக படரவேண்டும்.
நம் தெருவிற்குள், நல்ல உணர்வலைகள் பரவவேண்டும். அப்பொழுது, ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். நாம் ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும், துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழகவேண்டும்.
நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார். அவர் வழியில், அவர் காட்டிய நெறிப்படி, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் எடுக்க வேண்டும்.
அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர். அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட, இருள் நீங்கும். அதன் அருளைப் பெற. இருளை அகற்றும் சக்தி பெறலாம். இதையெல்லாம் நாம் பெற்றுப் பழகவேண்டும். இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.