நான்கு பிரதான திசைகளில், மூன்று திசைகளை உடைய மனைகளைப் பற்றி இதுவரை தெரிந்து கொண்டோம். இப்போது நான்காவதான தெற்கு மனைகளை பற்றி அறிந்துகொள்வோம். பலரும் தெற்கு திசை என்றாலேயே கூடவே பயத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். தெற்கு திசை நோக்கிய மனை, வீடு என்றாலேயே ஒரு தயக்கம் அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. சில ஜோதிடர்களும் பில்டர்கள் சிலரும்கூட பொதுவாக இந்த பயத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்கள் என்றே தெரிய வருகிறது.
தெற்கு என்பது எமன் திசை என்றும் அதனால் அந்த திசையைத் தேர்ந்தெடுக்கும்போது மரண பயம், ஆயுள்குறைவு என்று வேண்டாத பயங்களும் நமக்குள் குடி கொண்டுவிடுகின்றன. இந்த திசை மனை அல்லது வீட்டால் ஏதேனும் சொத்து வில்லங்கமோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையோ உருவாகும் என்று, விவரத்தை சரியாகத் தெரிந்து கொள்ளாமலேயே, வதந்திகளைப் பரப்பிவிடுகிறோம். இந்த தேவையில்லாத பயத்தாலேயே அந்த மனைகளில் புழங்க பொதுவாக மக்கள் தயங்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், தெற்கு மனைகள் செழிப்பை தரக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனையை தேர்ந்தெடுக்கும்போது சரியான வழிகாட்டுதலோடு, சரியாகப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், தெற்கு மனை என்பது அதைப் பயன்படுத்துபவர்களுக்கு சுறுசுறுப்பையும் வேகமான வளர்ச்சியையும் அளிக்கக்கூடியதாகவே இருக்கின்றன. சில விஷயங்களை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும். தெற்கு மனையை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
1.தெற்கு திசையில் சாலையைக் கொண்டிருப்பதும் சாலைக்கு வடக்கே அமையக்கூடியதும் தெற்குமனை எனப்படும்.
2.பொதுவாகவே சாலை மட்டத்தைவிட உயரமாக, மேடாக வீட்டைக் கட்டுவதுதான் இயல்பு. இப்படி செய்யும்போது சாலை தாழ்வாகவும் வீடு மேடாகவும் அமையும்போது, தாழ்வான பகுதி தெற்கு திசையைச் சார்ந்ததாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இதில் அதிக கவனம் செலுத்தி மனையில் கட்டட நிர்மாணம் செய்ய வேண்டும்.
3.தெற்கு மனையில் கிழக்குப் பகுதியில் காலியிடம் விட்டு கட்டும் வகையில் மனையை தேர்ந்தெடுப்பது உசிதமானது.
4.தெற்கு மனையில், வடக்கு பகுதியில் போக்குவரத்து அதிகம் இருக்குமானால் இது மிகவும் சிறப்பான அம்சமாகும். இப்படிப்பட்ட தெற்கு மனையைத் தேர்ந்தெடுக்கலாம்.
5.தெற்கு மனை முட்டு சந்தாக (ஞிமீணீபீ ணிஸீபீ) இல்லாமல் இருக்க வேண்டும்.
6.தெற்கு மனையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும்படியாக இருக்குமானால் இந்த அமைப்பு நல்லது. மாறாக, நேர் எதிரே மேற்கு நோக்கி மட்டுமே செல்லும் பாதை அமையுமானால் இத்தகைய மனையைத் தவிர்த்துவிடலாம்.
7.தெற்கில் ஓடை, ஏரி, கிணறு போன்ற தாழ்வான அமைப்புகள் இல்லாத மனையாக தேர்ந்தெடுப்பது நல்லது.
8.தெற்கு தெருதாக்கம் (தெருக்குத்து) உள்ள மனைகளையும் தவிர்த்துவிடுங்கள்.
9.தெற்கில் மனை, குன்று அல்லது உயர்ந்த கட்டடம் என்று இருப்பதாகிய அமைப்பு கொண்ட மனைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. தெற்கு மனைகள் அக்கினி ரூபமானவை. இதனால், இந்த மனையில் வாழ்வோரின் வியாபார அபிவிருத்தி, அவர்கள் மேற்கொள்ளக்கூடிய கடல் கடந்த தொழில்கள், பெண்களின் முன்னேற்றம், போரில் வெற்றி, பகைவர்கள் குறித்த நிலை போன்றவற்றை அறிய முடியும்.
சென்னை ரிப்பன் கட்டடம் - மாநகராட்சி கட்டடம் தெற்கு நோக்கி உள்ளது. எனினும் வடக்கு-கிழக்கில் அதிக போக்குவரத்தை கொண்டதாக இருக்கிறது. எனவே, சிறப்பான நகர நிர்வாகம் கொண்ட உலகப் புகழ் வாய்ந்த பழமையான அமைப்பாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது. குபேர மூலை, கன்னிமூலை என்று சொல்லப்படும் தென்மேற்கு மூலையை சிறந்ததாகச் சொல்வார்கள். காரணம், தென்மேற்கில் (தெற்கு+மேற்கு திசைகள் கூடுமிடம்) பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கே அமர்ந்தால், பணிபுரிந்தால், வியாபாரம் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற வாஸ்து சாஸ்திர அடிப்படையிலான அனுபவங்கள் உள்ளபோது தெற்கு, பலம் வாய்ந்தது என்றுதானே சொல்ல வேண்டும்?
ஆனால், ஏன் சிலர் தெற்கைப் புறக்கணிக்கிறார்கள், வெறுக்கிறார்கள்? இது எதனால்? தெற்கு என்பது எமனுக்குரிய திசை. அதாவது அந்த திசையிலிருந்தபடி எமன் எப்போதும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று ஒரு அமானுஷ்ய பயம். இந்த பயம் காரணமாகவே புறக்கணிப்பும் கூடவே வந்துவிடுகிறது. தெற்கில் தலைவாசல் அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, வடக்கு, கிழக்கு திசைகளில் அதிகப் போக்குவரத்து இல்லையென்றால், இந்த திசை கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு வளர்ச்சி, வெற்றி, சுகம் எல்லாமே கொஞ்சம் குறைவாகத்தான் காணப்படும். இதைப் புரிந்துகொள்ளாமல், கண்களை மூடிக்கொண்டு தெற்கு மனை என்றாலே பிரச்னைதான் என்று ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளக் கூடாது.
தாஜ்மஹால் உலக பிரசித்தி பெற்ற நினைவுச் சின்னம். இது தெற்கு நோக்கியே உள்ளது. வடக்கே யமுனை நதி ஓடுகிறது. எனவே, தெற்கு என்றவுடனேயே, பளிச்சென்று அதைத் தவிர்த்துவிடாமல், முன்யோசனையுடன் கட்டட அமைப்புகளை மேற்கொண்டால், அந்த மனை மிகச் சிறந்ததாகவே விளங்கும். தாஜ்மஹால் உலகப் புகழ் பெற இவையே காரணங்களாகும். ஸ்ரீரங்கம், வைணவத் தலங்களிலேயே மிகப் பெரியதாகவும், மிகவும் போற்றுதலுக்குரியதாகவும் வணங்கப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. இது தெற்கு வாசலைத்தான் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் ஏனைய வாசல்கள் அவ்வளவு பிரபல்யம் இல்லாமல் இருக்க, இந்த தெற்கு வாசல் மட்டும் பிரசித்தி பெற்றுவிட்டது.
எனவே, திசைகளை பார்க்காமல் எந்த திசை மனைகளாக இருப்பினும் முன்யோசனையுடன் கட்டடத்தை வடிவமைப்பு செய்தால், எதிலும் வெற்றி, சுகம், இன்பம், புகழ் பெறலாம். அடுத்ததாக, ஒரு மனைக்கு கூடுதல் பலம் (போனஸாக) கிடைக்கக்கூடிய அமைப்புகளையும், மனையின் மதிப்பை குறைக்கும் அம்சங்களையும் காணலாம்.