அட்சாம்சம் (Latitude),
அடுத்தது அட்சாம்சம். எப்படி
கிரீன்விச்சிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனையாவது பாகையில் ஒரு
நகரம் உள்ளது என்று ரேகாம்சம் (Longitude) என்ற ஆயத் தொலைவை வைத்து
சொல்லுகிறோமோ, அவ்வாறே அட்சாம்சம் (Latitude), என்ற ஆயத்தொலைவையும்
பயன்படுத்தினோம் என்றால் மிகச் சரியாக அந்த நகரத்தின் இருப்பிடம்
தெரிந்துவிடும். அட்சாம்சத்தை பூமத்திய ரேகையை ஆதாரமாக வைத்து சொல்ல
வேண்டும். அந்த நகரமானது பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கில் உள்ளது
என்று கூற வேண்டும். சென்னையின் அட்சாம்சம் 13 பாகை 4 கலை (வடக்கு).
இவ்வாறு,
ஒரு நகரத்தின் இருப்பிடத்தை அட்சாம்சம் மற்றும் ரேகாம்சம் ஆகிய 2 ஐயும்
கொண்டு துல்லியமாக அறிய முடியும். எதனால் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள்
ஜோதிட கணிதத்திற்கு தேவைப்படுகிறது என்றால்,
(1) இந்திய ஜோதிடவியலை
உலகில் உள்ள பல நாடுகளில் பிறந்தவர்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனில் இந்த
விஷயங்கள் ஒரு ஜோதிடருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
(2)
பெரும்பாலும் பஞ்சாங்கத்தில், சூரிய உதயம் அந்த பஞ்சாங்கம் வெளியிடப்படும்
நகரத்தைப் பொறுத்தே கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வாசன்
பஞ்சாங்கத்தில் சூரிய உதயம் சென்னையைப் பொறுத்தும், ஆற்காடு பஞ்சாங்கத்தில்
வேலூரைப் பொறுத்தும், பாம்பு பஞ்சாங்கத்தில் திருநெல்வேலியைப் பொறுத்தும்
கொடுக்கப்பட்டிருக்கும். சூரிய உதயத்தை வைத்தே இந்திய ஜோதிடத்தில் லக்னம்
மற்றும் பல விஷயங்கள் கணிக்கப்படுவதால், சூரிய உதயம் மிக அவசியமாகும்.
அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருந்தால் உலகில் உள்ள எந்த இடத்துக்கும்
எளிதாக சூரிய உதயம் பஞ்சாங்கத்தின் உதவியின்றி கணக்கிடலாம்.
(3) உள்ளூர் மணி (சுதேச மணி) (LMT - Local Mean Time) கணக்கிட இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.
(4)
நட்சத்திர ஹோராமணி(Sidereal Time), பாவஸ்புட கணிதம் போன்ற நுணுக்கமான
கணக்கீடுகளுக்கும் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.
அதென்ன ஐயா உள்ளூர் மணி?
அடுத்தப் பதிவில் விவரமாகப் பார்க்கலாமா?
வெளியூர்
பயணங்கள் காரணமாக தொடர்ச்சியாக பதிவுகள் இட இயலவில்லை. சிலர் மட்டுமே
எனக்கு மின் அஞ்சல் அனுப்பி அடுத்த பதிவைப் பற்றி கேட்டிருந்தார்கள். அந்த
அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி ! பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி !
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்