சொற்பொழிவு சுவை
ராமர் வானர சேனைகளுடன் சீதையைக் கண்டுபிடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டார். வானரத் தலைவனான சுக்ரீவனுக்கு அந்த ஒப்பந்தம் பெரிதும் மகிழ்ச்சியைத் தந்தது. அனுமனின் வார்த்தைகள் முடிந்தபின் ராமருக்கு வானர சேனைகளால் விருந்தளிக்கப்பட்டது. அதில் சுக்ரீவன் ராமருக்கு பல உபசாரங்கள் செய்தான். பக்கத்திலிருந்த லட்சுமணனை கவனிக்கவில்லை. இதைக் கண்ட அனுமன் அருகிலிருந்த சந்தன மரத்திலிருந்து ஒரு கட்டையை வெட்டி பலகை செய்து போட்டு லட்சுமணனை அமரச் செய்து உபசாரங்கள் செய்தான். அதைக் கண்டதும்தான் சுக்ரீவனுக்குத் தன் தவறு புலப்பட்டது.
பகவானைவிட பாகவத உபசாரம்தான் ஸ்ரேஷ்டமானது. பாகவத அபசாரம் மன்னிக்க முடியாத குற்றமாகும் என்பதைப் புரிந்துகொண்டான். ஆனாலும் அனுமன் தன் சார்பில் அந்த உபசரிப்பை மேற்கொண்டதால், லட்சுமணன் சமாதானமாகிவிடுவான் என்றே சுக்ரீவன் கருதினான். ஆனால், அவன் அப்போதிக்கு ராமரின் திருமுகத்தை கவனிக்காததால் அதில் ஒரு ரேகையாக இழைந்த கோபத்தை அவனால் உணர முடியவில்லை. அந்தக் கோபம் அடுத்த நாள் வாலி-சுக்ரீவ மோதலில் ராமனிடமிருந்து வெளிப்பட்டது. தன் தம்பி லட்சுமணனை சுக்ரீவன் சரியாக உபசரிக்காமல் அவமானப்படுத்தியதால், தம்பியின் மனம் எவ்வளவு வருந்தியிருக்கும் என்று யூகித்திருந்த ராமன், அவ்வாறே சுக்ரீவனையும் வருந்தவிட்டார்.
ஆமாம், வாலியால் பலமாகத் தாக்கப்பட்டு அவனைப் பரிதாபமாகக் கதற வைத்தார். பின்னர் தம்பி லட்சுமணன் கையாலேயே காட்டுப் பூக்களால் ஆன மலர் மாலையை அடையாளம் தெரிவதற்காக சுக்ரீவனை அணியச் செய்து, பிறகு வாலியை வதம் செய்தார். வாலியை மறைந்திருந்து அம்பு எய்ததின் காரணங்களைப் பல அழகான பாங்குடன் விவரிக்கிறான் கம்பன். ராமனின் பலஹீனம் என்னவென்றால், வாலி சரணாகதி என்று கைதொழுதுவிட்டானானால், ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தபடி சுக்ரீவனை ரட்சிக்க முடியாது. இரண்டாவதாக, வாலி, மிருக உணர்வுகளைக் கொண்டிருந்தான். அவனை மனித குணமுள்ளவனாக மாற்ற வேண்டும்.
மனித சுபாவத்துக்கு அவனைக் கொண்டு வந்து, அவனிடம் தன் தெய்வீகத் தன்மையைக் காட்டி, அவனை மோட்சமடையச் செய்ய வேண்டும். அதனால்தான் மிருக இனமாகிய அவனை வேட்டையாடினார். மனிதனாகிவிட்டதால்தான், தன்னை ஏன் அவன் மறைந்திருந்து கொன்றான் என ராமனைப் பார்த்து வாலி மிகுந்த கோபத்துடன் கேட்கிறான். பல்வேறு மனித சுபாவ வாக்குவாதங்களுக்குப் பிறகு, இறுதியாக ராமன் பகவான் என்பதைப் புரிந்துகொண்டு மனம் சமாதானமடைகிறான். ‘‘ராமா’’ என்கிறான். அப்போது ராமன் வாலியின் எதிரே வந்து தன் உடைவாளை அங்கதனிடம் கொடுத்துத் தன் மகனாக ஏற்கவும் வாலி மோட்சமடைகிறான்.



