இந்த உலகின் மிக இனிமையான மொழி, குழந்தைகளின் மழலைப் பேச்சு. அதனால்தான், ‘குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்று திருவள்ளுவர் நெகிழ்ந்து உருகினார். பொதுவாகக் குழந்தைகள் ஒரு வயதுக்கு முன்பாகவே அர்த்தமற்ற ஒலிகளை எழுப்ப ஆரம்பித்துவிடும். அதன்பிறகு ஒன்றிரண்டு சொற்களைத் தெளிவாகப் பேசும், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு மொழி இலக்கணம் பழகி, பேச்சு நன்றாக வருவதற்குச் சில வருடங்கள் பிடிக்கும். எப்படியாயினும் ஐந்து வயதுக்குள் சரளமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால், அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது கடந்தும் பேச்சு வரவில்லை. பெற்றோர் தவித்துப்போனார்கள். மகனை அழைத்துக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்றார்கள். திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில், முதன்முறையாக அந்தச் சிறுவன் வாய் திறந்து பேச முயன்றான், அடுத்த நிமிடம், கடகடவென்று கவிதை பாட ஆரம்பித்துவிட்டான்! அதுவரை ‘குமர குருபரன்’ என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அந்த நொடியிலிருந்து ‘குமர குருபர ஸ்வாமிகள்’ ஆனார். அவரது ஏராளமான கவிதைகள், இன்றைக்கும் அன்னைத் தமிழை அலங்கரிக்கின்றன. சகலகலாவல்லி மாலை, சிதம்பர மும்மணிக் கோவை, நீதிநெறி விளக்கம் போன்ற எண்ணற்ற நூல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
ஒருமுறை, குமர குருபரர் மதுரைக்கு வந்திருந்தார். அங்கே மீனாட்சி அம்மனைத் தரிசித்தார். அப்படியே கவிதைகளைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இவை தொகுக்கப்பட்டு ‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ என்று மாறின. ‘பிள்ளைத் தமிழ்’ என்றால், ஒரு கடவுளையோ அல்லது மனிதரையோ குழந்தையாகக் கற்பனை செய்துகொண்டு பாடும், அன்பு இலக்கியம். பெரியாழ்வார் தொடங்கிப் பல பக்திக் கவிஞர்கள் இதில் கை தேர்ந்தவர்கள். மதுரையை ஆளும் மீனாட்சியைச் சிறு பிள்ளையாகக் கற்பனை செய்து குமர குருபரர் பாடிய இந்த நூலின் கவி அழகும் பக்திச் சுவையும் கேட்ட அனைவரையும் மயக்கியது. இதனை நூலாக அரங்கேற்றவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். குமர குருபரரும் சம்மதித்தார்.
இதையடுத்து, மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்று விழாவுக்கு ஏற்பாடாயிற்று. குமர குருபரர் ஒவ்வொரு பாடலாகப் பாட ஆரம்பித்தார். அவர் ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடியபோது, அந்த மண்டபத்தில் திடீரென்று ஒரு சிறுமி தோன்றினாள். அங்கிருந்த மதுரை மன்னரின் மடியில் சென்று அமர்ந்து கவிதையை உன்னிப்பாகக் கேட்டாள். குமர குருபரர் பாடி முடித்தவுடன், அந்தச் சிறுமி எழுந்து நின்றாள். தன் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி அவருக்கு அணிவித்தாள். அடுத்த நிமிடம், அவளைக் காணவில்லை. எல்லாரும் வியப்பில் திகைத்தார்கள். குமர குருபரர் மட்டும் நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். இந்தப் பிள்ளைத் தமிழைக் கேட்பதற்காக மீனாட்சி அம்மையே சிறுமியாக வந்திருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பாடல்:
தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே,
நறை பழுத்த துறைத் தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே,
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்
தொழும்பர் உள்ளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே,
இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே, எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே, மது கரம் வாய்
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடியே, வருகவே
மலயத் துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!
மீனாட்சி அன்னையே, எங்களைப் போன்ற கவிஞர்கள் சிந்தித்து உருவாக்கும் பழைய பக்திப் பாடல்கள் எல்லாவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பாகவும் அவற்றை வாசிப்பதால் கிடைக்கும் பயனாகவும் நீதான் இருக்கிறாய், தேன் நிரம்பித் ததும்புகின்ற இனிய தமிழின் சுவையாகத் திகழ்கிறாய்! பெரும்பாலான மக்களின் இதயங்களில் அகந்தை குடிகொண்டிருக்கிறது. அந்தக் கிழங்கை முதலில் தோண்டி எடுக்கவேண்டும், அப்படி எடுத்தால், அங்கே ஒரு வெற்றிடம் தோன்றுமல்லவா? அங்கே அன்பை எண்ணெயாக ஊற்றி உன்னை விளக்காக ஏற்றிவைக்கவேண்டும். இமயமலைச் சிகரத்தில் விளையாடுகின்ற, இளைய பெண் யானையைப் போன்றவளே, கடலை ஆடையாக உடுத்திய, இந்தப் பூமியைத் தாண்டி நிற்கும் ஒருவன், சிவபெருமான்.
அவன் தன்னுடைய உள்ளத்தில் உன்னைத்தான் ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறான், அதுவும் சாதாரண ஓவியம் அல்ல, அழகு ஒழுகும் உயிர் ஓவியம்! வண்டுகள் மொய்க்கும் கூந்தல் காட்டை ஏந்திய இளம் வஞ்சிக் கொடியே, பாண்டியன் பெற்ற பெருவாழ்வே, நீ வருவாயாக! இப்படித் தமிழ் மணக்கும் ஒரு பாடலை எழுதி முன்னே வைத்தபின், அம்பிகை நேரில் வந்தாள் என்றால் அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!? மாமல்லபுரம் சென்றிருக்கிறீர்களா?
அற்புதமான சிற்பங்களுக்காகவும் பழங்காலக் கோயில்களுக்காகவும் புகழ் பெற்ற நகரம். இன்றைக்கு ஒரு சுகவாசஸ்தலமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், மாமல்லபுரம் ஒரு பிரபலமான துறைமுகம்.
நாள்முழுவதும் கப்பல்கள் வந்து போய்க்கொண்டிருக்கும், விலை மதிக்கமுடியாத பலவகைப் பொருள்கள் ஏற்றப்படும், இறக்கப்படும், விற்கப்படும், எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. அப்பேர்ப்பட்ட மல்லைத் துறைமுகத்துக்கு, ஓர் ஆழ்வார் வந்து நின்றார். அங்கும் இங்கும் விரைகிற கப்பல்களைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தார். கரையில் நிற்கும் வியாபாரிகள், கப்பல் ஊழியர்கள், பொருள்களை விலை பேசி வாங்கிச் செல்ல வந்தவர்களின் முகங்களையெல்லாம் மிகவும் ஆர்வத்துடன் நோட்டமிட்டார். சிறிது நேரம் கழித்து, அவர் வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தார். சற்றுத் தொலைவிலிருந்த பெருமாள் கோயிலை நெருங்கினார். உள்ளே நுழைந்தார்.
அங்கேயும் ஓரளவு கூட்டம்தான். ஆனால், துறைமுகத்தில் இருந்த கூட்டத்துடன் இதை ஒப்பிடவேமுடியாது. அவர் தனக்குள் சிரித்துக்கொண்டார். ‘கப்பல்கள் உலகத்தைச் சுற்றுகின்றன, அதன்மூலம் பணம் குவிகிறது, அந்தப் பணத்தை எல்லாரும் சுற்றுகிறார்கள்’ என்று நினைத்தார்.
‘மனமே, நீ இந்தச் சுழலில் விழுந்துவிடாதே’ என தன்னைத் தானே எச்சரித்துக்கொண்ட அந்தப் பெரியவர், திருமங்கையாழ்வார். ‘அந்தச் செல்வக் குவியலைச் சுற்றுவதைவிட, இந்த மல்லை நாயகனாகிய திருமாலின் கோயிலைச் சுற்றி வருகிறவர்களே மேல், அவர்களை நீ சுற்றி வா, அந்தப் பெரியவர்களைப் பின்பற்றி வாழப் பழகு!’ என்று மேலும் தன் மனதுக்கு அறிவுறுத்துகிறார்.
புலன் கொள் நிதிக் குவையோடு
புழைக்கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும்
சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,
கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தல சயனம்
வலம் கொள் மனத்தார் அவரை
வலம் கொள் என் மட நெஞ்சே
என்னுடைய மட நெஞ்சமே, இந்த மல்லைத் துறைமுகத்தில் வரும் கடல்களில் ஏகப்பட்ட பணம் குவிந்து கிடக்கிறது, அதைப் பார்த்தாலே ஒருவருடைய உடலின் ஐந்து புலன்களும் அதன்மீது கவரப்பட்டுவிடுவது நிச்சயம். இதே கப்பல்களில் துதிக்கையைக் கொண்ட பெரிய யானைகளும் பயணம் செய்கின்றன, இன்னொரு பக்கம் நல்ல, விலை மதிப்பற்ற கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை பாரத்தையும் சுமந்து கொண்டிருப்பதால், அந்தக் கப்பல்கள் தண்ணீருக்குள் தாழ்ந்து மூழ்கித் தடுமாறிச் செல்கின்றன. அப்பேர்ப்பட்ட கப்பல்கள் இயங்குகின்ற இந்த மல்லைத் துறைமுகத்தைவிட, அதே ஊரில் வீற்றிருக்கும் திருமாலுடைய கோயிலைப் பெரிதாகக் கருதுகிறவர்கள், அந்த ஆலயத்தை வலம் வந்து இறைவனைத் தங்கள் மனத்தில் நிரப்பிக்கொண்டிருக்கிற பக்தர்கள் பலர் உண்டு.
அதுபோன்ற பக்தர்களை நீ நேரில் கண்டால், அவர்களைச் சுற்றி வலம் வா. இந்த அன்பர்களைத் தொழுவதும் ஆலயம் தொழுவதும் ஒன்றேதான்! இந்தப் பாடலில் இருமுறை வரும் ‘குவை’ என்பதன் பொருள், ‘குவியல்’. இப்போது அதிகம் வழக்கத்தில் இல்லாத அழகுத் தமிழ்ச் சொல் இது. ஆனால் ஒருகாலத்தில் அநேகமாக எல்லாப் பிரசார மேடைகளிலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள், ‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’ என்பது மிகப் பிரபலமான வாசகம்!