
ஸ்ரீராமானுஜர் திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தை ஏற்றார். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். அவருடைய முயற்சியால் வைணவம் தழைத்தது. அதனால் அவருடைய புகழ் எங்கும் பரவியது. பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் ஸ்ரீராமானுஜரின் சீடர்களாகி, தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.
அவ்வகையில் சுமதி என்ற பெண்ணும் உடையவரின் (ஸ்ரீராமானுஜரின்) கைங்கர்யத்தில் ஈடுபட்டாள். அவள் கொங்கு நாட்டிலிருந்து வந்தவள் என்பதால், அவளை ஸ்ரீராமானுஜர், ‘கொங்குப் பிராட்டி’ என்று அழைத்தார். அனைத்தையும் மறந்து, ஆச்சார்ய சேவையில் ஈடுபட்டிருந்த கொங்குப்பிராட்டிக்கு, சொந்த ஊரிலிருந்து அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத குடும்பச் சூழலால் அவள் ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. கொங்குப்பிராட்டிக்கு, திருவரங்கத்தையும் ஸ்ரீராமானுஜரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் இல்லை. எனினும், செல்ல வேண்டிய சூழ்நிலை.
கொங்குப்பிராட்டி தன் குருநாதரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றாள். பரதன் ராம பாதுகையை வைத்து வழிபட்டதுபோல், கொங்குப் பிராட்டி உடையவரின் பாதுகைகளை தன்னுடைய ஊரில் வைத்து வழிபட்டு வந்தாள். ஆசானின் திருவடிகளைப் பெற்று அவற்றைத் தன் ஆசானாகவே கருதி, வணங்கி, தன் தொண்டுச் சிறப்பை வெளிக்காட்டினாள். அத்தகைய பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறாள், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. ‘‘அடிவாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே?’’ -என்கிறாள். ‘அடி வாங்கியது’ என்பது இங்கு, திருவடியைப் (பாதுகையை) பெற்ற செயலைக் குறிக்கிறது.
மாலுக்கு உகந்த மண்மலர்
திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்து வந்தார். அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளி. குருவபுரத்தைச் சேர்ந்த நம்பி என்ற வகையில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர். குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார். அதனை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார். வேங்கடவன் திருவடியில் மண்மலர் அன்றாடம் தவறாமல் சென்று சேர்ந்துவிடும்.
அவரைப் போலவே தொண்டைமான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார். தொண்டைமான் பொன்மலரை சமர்ப்பித்ததில் ஆணவமும் அதிகார பக்தியும் நிறைந்திருந்தன. ஒரு கட்டத்தில், பெருமாள், குருவநம்பி மனப்பூர்வமான பக்தியுடன் எளிமையாக சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உகப்பானது என்று தொண்டை மானிடம் கூறிவிட்டார்! அதன் பின்னர் தொண்டைமான் தனது செருக்கை இறைவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டார்.
‘‘மண்பூவை இட்டேனோ
குருவநம்பியைப் போலே!’’
-என்று ஏங்குகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை. சாபம் தீர்த்து மோட்சம் தந்த ஆதிமூலன்
ஸ்ரீமத்பாகவதத்தில் இடம் பெற்றுள்ள கஜேந்திர மோட்சம் என்ற வரலாறு, ராமாயணம் முதலான பல நூல்களிலும் பரவலாகப் பேசப்படும் சிறப்புப் பெற்றது. மகாகவி பாரதியாரும், ‘கரியினுக்கு அருள் புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!’ என்று பாடிப் போற்றுகிறார். இந்திரத்துய்மன் என்ற புராணகால பாண்டி வேந்தன் அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார்.
இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். அதே காட்டில் இருந்த பொய்கையில் தேவலர் என்ற முனிவர் நீராடிக் கொண்டிருந்தார். ஒரு கந்தர்வன் முனிவரின் காலைப் பிடித்து இழுத்து, முனிவருக்குத் துன்பம் கொடுத்தான். முனிவர் கந்தர்வனை முதலையாகப் பிறக்கும்படி சபித்தார். கந்தர்வன் சாபவிமோசனம் வேண்டினான்.
ஒரு திருமாலடியார் காலைக் கவ்வும்பொழுது, சாபம் நீங்கும் என்று தேவல முனிவர் விமோசனம் கூறினார். அதன்படி கஜேந்திரன் என்ற திருமால் பக்தி மிகுந்த யானையின் காலை முதலை கவ்வி இழுத்தது. தன்னை விடுவித்துக் கொள்ள யானை போராடியது. இறுதியில் பெருமாளே காக்க வல்லவர் என்று தெளிவு பெற்று, பெருமாளை, ‘‘ஆதிமூலமே!’’ என்று கூவியழைத்தது. கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்கரத்தால் கொன்றார். முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். நெடுநாள் வாழ்ந்திருந்த யானை இறுதியில் மோட்சம் எய்தியது.
‘‘மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே?’’ -கஜேந்திரன் என்ற யானையைப் போல் தான், பெருமாளை ‘‘ஆதிமூலமே!’’ என்று அழைத்து அருள் பெறவில்லையே என ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.