Pages

அருள் பொருள் இன்பம்


 

இன்றைக்கு தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு விட்டது என்றால் அது பொய் - விண்ணைத் துளைத்து அதற்கும் மேல் சென்றுவிட்டது என்பதே மெய்!
எந்தப் பொருளையும் நாம் அதற்குண்டான அளவுகளில் மிகச் சரியாக வாங்குவதேயில்லை. காய்கறிகளை வாங்கும்போது காய்கறிகள் உள்ள தட்டு கீழே தொங்க எடைக்கல் தட்டு மேலே ஏற வாங்கினாலே திருப்தி. இது போதாதென்று கொசுறும் கொஞ்சம் வேண்டும். (நமது இந்த மனோபாவம் தெரிந்து, காய்கறி விற்போர் சிலரும் எடைக்கற்களில் தங்கள் கைவரிசையை காட்டி, ஏமாற்றுகிறார்கள்.) இப்படி இங்கெல்லாம் சாதுர்யம் காட்டும் தாய்க்குலத்தவர்கள் நகைக் கடைகளில் இந்த மில்லி கிராம் சமாச்சாரங்களில் சிக்கிச் சிதைவதுதான் விந்தையிலும் விந்தை.

ஒரு மில்லி கிராம் தங்கமே இன்று ஒரு கிலோ சர்க்கரை விலைக்கு வந்துவிட்டது, கொடுமை. இரண்டுபேர் ஒரு நகை செய்த வகையில் 750 மில்லி கிராம் தங்கத்தை மிச்சம் செய்து அதை பகிர்ந்து கொள்வதில் சண்டை வந்து, கொலையில் போய் முடிந்தது என்று செய்தித்தாளில் பார்த்தபோது பகீர் என்றது. அதாவது ஏழரை கிராமுக்காக கொலை! தங்கம் கருக்காது என்பது மட்டுமே அதன் தனிச் சிறப்பு. ஆனாலும் ஒட்டு மொத்த உலகத்தையே தன் பிடிக்குள் வைத்திருக்கிறது. ஒரு அசட்டு மோகத்தோடு இதை வாங்கி வாங்கி எல்லோரும் லாக்கர்களில் வைத்து அழகு பார்க்கிறோம். எப்போதாவதுதான், அதுவும் சிலமணி நேரங்கள் மட் டும்தான் அணிகிறோம்.

இதையே பணமாக வைத்திருந்தால் அது கறுப்பு பணம், தேசிய குற்றம்; தங்கமாக நகையாக்கி வைத்துக் கொண்டால் குற்றம் இல்லை! இப்படி லாக்கர்களில் பூட்டி வைத்திருக்கும் தங்கத்தை எடுத்துப் பயன்படுத்தினாலே, நம் நாட்டின் வறுமையை மட்டுமின்றி, உலகத்தின் ஒட்டு மொத்த வறு மையையே போக்கி விடலாம் என்கின்றனர். அது சற்றே மஞ்சள் நிறமான ஒரு உலோகம் என்பதை கடந்து அதன் காரட் பற்றி எல்லாம் பெரிதாக அதை விற்பவர்களுக்கே தெரியாது. 22 காரட், 24 காரட், 916 கேடியம் என்றால் என்ன? நம் வசம் உள்ள தங்கத்தில் இதெல்லாம் எந்த அளவில் உள்ளது என்று எதுவும் தெரியாது. இம்மட்டில் கடவுளைகூட நாம் நூறு சதம் நம்புவதில்லை. ஆனால் கடைக்காரர்களை நம்பியே வாங்குகிறோம்.

நல்ல அரிசி என்று கடைக்காரர் சொல்லி விற்பது, சமைக்கும்போது தெரிந்து விடுகிறது. நல்ல துணி என்று சொல்லக்கேட்டு வாங்குவது பயன்படுத்தப்படும்போது தெரிந்து விடுகிறது. ஆனால் நல்ல தங்கத்துக்கு அது கருக்காது என்பதை கடந்து நாம் உணர என்ன இருக்கிறது? இந்த தங்கத்துக்கும், அருளுக்கும் எப்போதுமே நெருங்கிய சம்பந்தம் உண்டு. அதனால்தான் தீபாவளி, அட்சயத் திருதியை போன்ற விசேஷ நாட்களில் பொன்னன் எனப்படும் குருவின் அம்சமாக கருதப்படும் தங்கத்தை ஒரு குந்துமணியாவது வாங்கிவிட துடிக்கிறோம். இந்த அருட்தொடர்பை தங்கம் விற்பவர்களும் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொழிக்கிறார்கள். தங்க ஆசை, மனித வாழ்வில் மட்டுமல்ல, இரண்டு மகான்களின் வாழ்விலும் கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறது.
முதலாமவர் இந்து சாம்ராஜ்யம் கண்ட வித்யாரண்யர்!

பெரும் தவசியான இவர் மகாலட்சுமி குறித்து உருக்கமாய் தவம் செய்தார். ஒரே நோக்கம், தரித்திரம் என்பதே இல்லாத அளவுக்கும் கேட்டவர்க்கெ ல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும்படி செல்வம் வேண்டும் என்பது. ஆனால் மகாலட்சுமி அவர் கனவில் தோன்றி, ‘உன் ஆசையை அடக்கிக் கொள். அடுத்த ஜென்மத்தில் உன் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன்,’ என்றாள். வித்யாரண்யற்கு பெரும் ஏமாற்றம். எப்படியாவது இந்த பிறப்பிலேயே குபேர நிதியை அடைந்துவிட வேண்டுமே என்று யோசித்தபோது ஒரு குறுக்கு வழி புலனாகியது. ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் துறவறம் மேற்கொண்டால் அது அவன் வரையில் அடுத்த பிறப்பாகும். இதை சாஸ்திரங்களும் ஆமோதிக்கின்றன. வித்யாரண்யரும் உடனே, துறவறம் பூண்டார். இந்த நிலையில், அவர் கேட்ட குபேர நிதியை மகாலட்சுமியும் கொட்டிக் குவித்தாள். மலைபோல செல்வம். அவ்வளவும் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள்....!

வித்யாரண்யர், தான் இந்த பிறப்பிலேயே சாதித்து விட்டதாக கருதி மகிழ்ந்தார். மகாலட்சுமியிடம், ‘‘அம்மா உன்னை நான் வழிக்கு எப்படி கொண்டு வந்துவிட்டேன் பார்த்தாயா?’’ என்று கேட்டு சிரித்தார். அவரைவிட பெரிதாக சிரித்த மகாலட்சுமி, ‘‘வித்யாரண்யா, நீயோ இப்போது துறவி. அதாவது முற்றும் துறந்தவன். ஒரு துறவியின் கர்மப்படி இதை நீ தீண்டக்கூட கூடாதே!’’ என்று கேட்டாள். அப்போதுதான் வித்யாரண்யருக்கே தன் ஆசைக்கு அளவில்லாமல் போனதும் தெரிகிறது. அவ்வளவு நிதியையும் ஹரி ஹரர், புக்கர்கள் வசம் தந்து விஜயநகர சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக் காட்டினார். அதாவது சுயபுகழுக்காகப் பெற்ற செல்வம் பொதுநலத்துக்காக என்று மாறிப் போகிறது.

சாத்தஸ்வயம் பிரகாசர் என்று போற்றப்பட்ட வேதாந்த தேசிகனின் விஷயமும் இதுபோன்றதுதான். வேதாந்த தேசிகனின் தவமும் பக்தியும் அவர் நினைத்த மாத்திரத்தில் இறைவனோடு பேசக்கூடிய அளவிற்கு உன்னதமானதாக இருந்தது. அப்படி சிறப்பு பெற்ற வேதாந்த தேசிகனை எப்படியா வது மட்டம் தட்டி நாலு பேர் முன்னால் தலை குனிய வைத்துவிட வேண்டும் என்று ஒருவர் விரும்பினார்; ஒரு திட்டம் தீட்டினார். தேசிகன் காலத்தில், ஒரு ஆணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் அவன்தான் பெண் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டும்! ஒருவன் கையில் காசே இல்லாததால் திருமணமே செய்துகொள்ள முடியாமல் சிரமத்தில் இருந்தான். வயதும் முற்றிக்கொண்டே போனது. தேசிகனை மட்டம் தட்ட எண்ணியவர் இந்த முத்தல் மனிதனைப் பிடித்து தேசிகனை நோக்கி ஏறிவிட்டார். ‘‘எனக்கு நல்ல விதமாக திருமணம் ஆகியே தீரவேண்டும்;

அதற்கு நிதி வேண்டும். நீங்கள் சுத்தஸ்வயம் பிரகாசர், சர்வதந்த்ர ஸ்வதந்திரர் என்பது உண்மையானால், நினைத்தபோது கடவுளோடு பேசமுடிந்த வர் என்றால், எனக்கு மகாலட்சுமியிடம் சொல்லி நிதி வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் சமாச்சாரம் எல்லாமே பொய் என்றாகிவிடும்’’ என்று தேசிகனிடம் சொன்னார் அந்த மனிதர். ‘‘சரி, அப்படியே வைத்துக்கொள்,’’ என்று உடனேயே அதற்கு தேசிகன் பதில் கூறவும், மட்டம் தட்ட எண்ணியவருக்கு ஒரே குஷி. ஆனால் அவருக்கு பயன்பட்டவரிடம் ஒரு பெரும் மாற்றம். ‘‘சுவாமி, உங்களால் என் பொழுது எப்படியும் விடிந்துவிடும் என்று நம்பியே என்னை அவர் தூண்டிவிட்ட போது சம்மதித்தேன். ஆனால் இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே’’ என்று அவர் உண்மையாக வருந்திக் கலங்கவும், தேசிகன் மனதும் உடனே இளகி விட்டது.

அடுத்த நொடியே மகாலட்சுமியை எண்ணி உருக்கமாய் பாடினார். லட்சுமி தேவியும் நிதியை கொட்டிக் குவிக்க, அவன் திருமணமும் இனிதே நடந்தே றியது. அப்படியே பாடியதே ‘ஸ்ரீஸ்துதி’ என்னும் ஸ்தோத்திரமாகும்! அதனால் விளைந்த அருள், பொருளைக் குவித்திட, இன்பமும் ஏற்படுகிறது. ஆனால் அது ஒருவருக்காக என்றில்லாமல், தனக்காகவும் இல்லாமல், பொதுவாக ஊருக்காக என்று மாறியதுதான் ஆச்சரியம்.