Pages

சனி தோஷம் நீக்கும் கருவூரார்


கருவூரில் பிறந்தவர் கருவூர்ச் சித்தர், இளம் பருவத்திலேயே ஞான நூல்களைக் கற்றார். ஒரு சமயம் போகர் திருவாடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். கருவூரா உன் குலதெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று கூறி வழிபாட்டு நெறிகளைக் கருவூராருக்கு உபதேசித்தார்.

போகர் உபதேசப்படி கருவூரார் உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்குப்பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் சித்தராக உயர்ந்தார். சித்தராய் காட்சியளித்த கருவூரார், நாற்றிசைகளிலும் சென்று ஆங்காங்குள்ள சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார்.

சித்தரின் ரசவாத வித்தையின் மூலம் உருவான அந்த சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போல் இருக்கும். மற்றொரு முறை பார்த்தால் தங்கம் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உண்டு பண்ணி வைத்தார்.

போக சித்தர் தமிழ்நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமாளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாகத் திகழ்ந்தனர். அரச செல்வாக்கும் ஊரார் செல்வாக்கும் கருவூராருக்கு இருப்பதைக் கண்ட அவர் அந்தணர்கள் இவர் மேல் பொறாமை கொண்டனர். இவரை எப்படியாவது வம்பில் மாட்டி விட எண்ணம் கொண்டனர்.

மதுவும் மாமிசமும் கருவூராரின் வீட்டில் மறைத்து வைத்து விட்டு அரசனிடம் சென்று கருவூரார் அநாசார முள்ளவைகளாக தொடர்ந்து செய்வதால் தங்களது ஆசாரம் கெட்டு வருவதாக கூறினர். அரசன் அவர்கள் சொன்னதை நம்பவில்லை ஆயினும் விசாரணை நடத்துவது தன் கடமை என்று தீர்மானித்து, தானே நேரில் வந்து சோதனை இடுவதாகக் கூறி கருவூரார் வீட்டிற்கு வந்தான்.

கருவூராரின் வீடு கடுமையான சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கு பூஜைக்கு உண்டான பொருட்களும், யாகத்திற்குத் தேவையான பொருட்களும் தான் இருந்தன. மன்னன் தன் செயலுக்கு மன்னிப்புக் கோரினான். அரசே என்னிடம் மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். என் வீட்டை சோதனை செய்ய சொன்னவர்களின் வீடுகளையும் சோதனை செய்யுங்கள் என்றார் கருவூரார்.

கருவூராரின் மீது வீண் பழி சுமத்தியவர்களின் வீடுகளில் மட்டும் மதுவும் மாமிசமும் இருந்தது. அவர்கள் மீது அரசன் கடும் கோபம் கொண்டான். ஒரு நாள் கருவூரார் குளிப்பதற்காக நதியை நோக்கிப் போய் கொண்டிருந்தார். அவமானமடைந்த வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர்.

அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கருவூரார் இனிமேல் நமக்கு இந்த உலகம் வேண்டாம் என்று தீர்மானித்து அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போலக் கருவூரார் திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார். ஆனால் கோவில் என்று கூட பாராமல் கொலைப்பாதகத்தை செய்ய கருவூராரைத் துரத்தினர்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார் ஆனிலையப்பா பசுபதீஸ்வரா என்று கூறி அழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்த கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார். கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறை உணர்ந்தனர்.

தங்கள் தவறுக்குப் பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் கருவூராருக்கு ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தை அமைத்து வழிபட்டனர். கருவூராரின் சிலை தஞ்சைப் பெரிய கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. (சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலை செய்து கொடுத்த போகர் அத்துடன் கோவில் அமைய வேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும்.

நடராஜரை எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்து விட்டு கருவூரார் அங்கிருந்து மறைந்தார்) கருவூரார் திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரர் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார்.

திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது. (தஞ்சையில் கோவில் கும்பாபிஷேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்) கருவூரார் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர்.

இவரை முறைப்படி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் நீங்கி நன்மை கிடைக் கும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும். வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் நீங்கும். போக்குவரத்துத்துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சினைகள் லாரி, பஸ், ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.

இரும்பு, விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். படிப்பில் உள்ள மந்தநிலை மாறும். எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும். எலும்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அகலும். வேலையாட்கள் முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். பிரம்மஹத்தி தோஷம் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும். இவரை வழிபட சிறந்த கிழமை சனிக்கிழமை. இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேஷம்.