Pages

பித்ரு தோஷம்


பித்ரு தோஷம்

ராகு, கேதுக்கள் தான் பித்ரு தோஷத்தை உண்டாக்குகின்றன. உங்களது பிறந்த ஜாதகத்தில் 1, 5, 7, 9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!. இதுவே பித்ரு தோஷம் ஆகும்.
   
பித்ரு தோஷம் உள்ளவர்கள்  அதற்கான  தோஷம் பரிகாரம் செய்த பின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும். பித்ரு தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.
 
நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன்-மனைவி பிரச்சினைகளை உருவாக்கும். குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும். மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ் வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்கள் மகாளய பட்சமாகும்.
 
இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணத்தை நேரடியாக நமது பித்ருக்கள்  ஏற்றுக்கொள்வார்கள். முழுவதும் செய்ய முடியாதவர்கள் அமாவாசையன்று செய்தால் கூட போதும். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
 
மிகக்கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.
 
சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது.
 
அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதர் தோஷங்கள் நிவர்த்தியாகும். ராமேஸ்வரத்தில் மட்டும் எல்லா நாட்களிலும் பிதர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.
 
வேலூர் மாவட்டத்தில் திருமாதலம் பாக்கத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுயம்பு திருமாலீஸ்வரர் கோவில் இருக்கிறது. திருமால் இங்கு ஈசனை நோக்கி தவம் புரிந்து மனோபவம் பெற்றதால் மகாலட்சுமி வாசம் செய்யும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
 
பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரை பறிப்பவருக்கும் பிரம்மஹத்திதோஷம், பித்ருதோஷம் உண்டாகும். இத்தகைய தோஷம் கொண்டவர்கள்  திருமாதலம்பாக்கம் சென்று திருமாலீஸ்வரரை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம் என்கிறது தல புராணம். பரசுராமர் இங்கு வந்து தன் பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என கூறப்படுகிறது.
 
இறந்த முன்னோர்களுக்கான கடமையை முறையாக செய்யாமல் பாவத்திற்கு உள்ளானவர்கள் இப்பெருமானை வணங்கினால் பாவம் நீங்கும். இத்தலம் கிரக தோஷம், தோஷம், நோய் தோஷம், விவாக தடைதோஷம், மங்கல்ய தோஷம்., ஷஷ்டாங்க தோஷம், சர்ப்ப தோஷம் போன்றவற்றையும்  உடனடியாக போக்கும்.
 
செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இச்சன்னதியில் சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்காக லட்சுமி நாராயண பெருமாளே  தானே முன்னின்று சிரார்த்தம் செய்விப்பதாக ஐதீகம்.
 
இங்கு சுவாமிக்கு  வெண் பொங்கல், தயிர் சாதம், எள் கலந்த பிரண்டை துவையல் நிவேதனம் செய்யப்படுகிறது. தினமும் நடைபெறும் இந்த பித்ரு பூசையில் அவரவர் பித்ருக்கள் திதியில் கலந்து கொள்வது அல்லது அமாவாசை ஏகாதசி போன்ற திதிகளில் கலந்து கொள்வதால், கயை சென்று சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.
 
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் சூரிய பகவானால் ஏற்பட்ட உத்யோக தோஷம், களத்ர தோஷம், புத்ர தோஷம், விவாக தோஷம் ஆகியன நீங்குகின்றன.
 
தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உளூர் என்னும் பேருந்து நிலையத்தில் இறங்கி, கிழக்கே 2 கி.மீ. சென்றால் திருப்பருதி நியமம்  தலத்தை அடையலாம். மேலும்  சூரியன் பலம் குறைந்த  ஜாதகர்களும், சூரிய பலம் பெற்ற ஜாதகர்களும் இத்தலத்திற்கு வந்து இறைவனை பூசிப்பதால் பித்ரு தோஷம் நீங்கி எல்லா வளமும் பெறுகின்றனர்.
 
இத்தலம் சிறந்த பித்ரு பரிகார ஸ்தலமாக உள்ளது. பித்ரு தோஷம் நீங்க   சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்). அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.
 
சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, 5 ரூபாய்க்கு அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு, தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.