Pages

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்


நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று, அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி, நீக்கி, இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது. சூதாடுவது, தீமை என்று தெரிகின்றது. ஆனால், சூதாட போகின்றோம். சூதாட்ட விளையாட்டில் தோற்க தோற்க, விளையாட்டில் இழந்த பணத்தை பிடித்துவிடலாம் என்று, திரும்ப திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்துவிடுகின்றோம். 

இதற்கு உதாரணமும் ஒன்று, குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாக காண்பித்தார். ஒரு பால் வியாபாரி, அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம், குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், அந்த பால் வியாபாரி எம்மிடம் வந்து, “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும்” என்று யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம். அதற்கு பால் வியாபாரி, “நான் சீட்டு விளையாடியதில், என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை, இந்த சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன். இதுவும் போய்விட்டதென்றால், பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே, குருதேவரிடம் சொல்லி, நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கி கொடுங்கள்” என்று கூறினார். மறுநாள், குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து, “அண்ணே, குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குருநாதர் எம்மை கேட்டுவிட்டு, “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு” எம்மை பார்த்து, “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு” என்று கூறினார் குருநாதர். யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின். அவர் சீட்டு விளையாட சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி, ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி எமக்கு புது வேஷ்டி, புது சட்டை, பெட்ஷீட் வாங்கி வந்தார். குருநாதர் வெறும் கோவணத்துணி தான் கட்டியிருந்தார். எனவே அவருக்கு படுத்து கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால், அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி. குருநாதர், அதை வாங்கி தார்தாராக கிழித்தெறிந்தார்.




சீட்டு விளையாட்டில், ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும், பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால், தான் பெரிய பங்களாவே, காரே வாங்கி விடலாம்” என்று திட்டமிட்டார்.




பால் வியாபாரி, அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்கு துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருடைய நண்பர்களுக்கெல்லாம், “நீ காபி சாப்பிடு, நீ காபி சாப்பிடு” என்று கூறி அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.




பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு, “பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதை கொடுத்த பின், இவன் ஆசை எங்கே போகின்றது பார். ஏதோ ஜெயித்து கொடுத்தால், இனிமேல் சீட்டு விளையாட போக மாட்டேன் என்று தானே கூறினான். இழந்த பணத்தை சம்பாதித்தான், ஜெயித்த பணத்தை அனாவசியமாக செலவழிக்கின்றான், உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி வருவான் பார்?” என்று கூறினார். மறு நாள், பால் வியாபாரி சீட்டு விளையாடி, தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது.




மறுநாள் பால் வியாபாரி எங்களிடம் வந்து, “என்ன சாமி இப்படி ஆகிவிட்டது” என்று கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின், அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது. இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது, “போதும்” எனும் மனம் வருவதில்லை.நம்முடைய தொழிலை முன்னேற்றி, பொருளை சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை. இப்படி சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.




குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? அதிலிருந்து நீ எப்படி தப்புவது என்று அங்கு சொன்னார்.




ஒருவர் கடலில் ஒரு தீவை குறி வைத்து, படகை துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் எதிர் அலைகளை சமாளித்து படகை செலுத்துகின்றார். இதில் "தீவு என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்" என்று நாம் கருதிக் கொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை, நாம் துடுப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று, நமது நல் ஞானப் பயணத்தை, நடத்தி வரவேண்டும்.




நாம் உடல் மீது பற்று வைத்தால், மீண்டும் பிறவியை அடைவோம்.

நாம் உயிர் மீது பற்று வைத்தால், பிறவி இல்லா நிலையை அடைவோம்.







உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் ஜூன் 2002 (04.12.2011)




நீங்கள், இராமாயணத்தைப் படித்து பாருங்கள். இதற்கு முன்பு இராமாயணத்தைப் படித்திருப்பீர்கள். ஆனால், யாம் உபதேசித்த அருள் உணர்வின் துணை கொண்டு, இராமாயணத்தைப் படித்தீர்களென்றால், அதில் எவ்வளவு மூலப் பொருள் பொதிந்து உள்ளது, என்பதை நீங்கள் அறியமுடியும்.


இராவணனிடமிருந்து, சீதாவை இராமன் மீட்டு வந்தாலும், மக்கள் சீதாவின் கற்பை பற்றி என்ன சொல்வார்களோ என்ற நிலை வரும் பொழுது, சீதாவை அக்னிபிரவேசம் செய்ய செய்து, அதன் பிறகு அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றான்.


ஆனால், சீதாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற சிறிது காலத்திலேயே, சீதா கருவுறும் பொழுது, மக்கள் எல்லோரும் சந்தேகப்படுகின்றனர். ஏனென்றால், சீதா அரக்கனிடத்தில் இருந்ததினால், அரக்க உணர்வின் கருவே அங்கே விளையும் என்று எல்லோரும் சந்தேகப்படுகின்றனர். ஆகவே, இராமன் லட்சுமணனைக் கூப்பிட்டார். ஏனென்றால், லட்சுமணன் விஷத்தின் இயக்கம். அதன் உணர்வின் துணை கொண்டு, சீதாவிடம் எதுவும் சொல்லாதபடி கர்ப்பிணி பெண்ணான சீதாவை அழைத்துப் போய், காட்டில் விடும்படி இராமன் சொல்கின்றார்.


இராமன்தான் கடவுள், எல்லாவற்றையும் காப்பாற்றுவார். எல்லோரையும் காப்பவர். இராமன் தான் எல்லோருக்கும் இறைவன், என்று சொல்கின்றோம். ஆனால், ஒரு கர்ப்பிணி பெண்ணை, தன்னந்தனியாக காட்டில் விட சொல்கின்றார். கர்ப்பிணி என்று கூட பாராமல், ஒரு அரக்கன் தான் கொடுமைகளை செய்வான். ஆனால், அரக்கனைக் காட்டிலும் கொடுமைகளை செய்யும் நிலையே இங்கு உள்ளது. கருவுற்றிருக்கும் தாயை, காட்டு விலங்குகளுக்கு மத்தியில் விட்டு சென்றால், அரக்கனைக் காட்டிலும், பெரிய அரக்கனாகி விடலாமல்லவா? சற்று சிந்தித்து பாருங்கள்.


இதை எதற்காக நமக்கு காண்பிக்கின்றார்கள்? காட்டிற்குள் சீதா அனாதையாக தவிக்கின்றது. அப்போது சீதாவை ஒரு பெண் வான்மீகியின் ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றாள். வான்மீகி சீதாவை பார்த்தார். உண்மையின் உணர்வை அறிந்தார். அப்பொழுது வான்மீகி. கர்ப்பிணி பெண்ணின் செவிகளில் வான இயல் தத்துவத்தை ஓதினார். வான்மீகி ஓதிய உணர்வின் தன்மை, சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது.


இது போன்று, வான்மீகி உணர்வின் எண்ண இயக்கங்களையும், உலக நிலைகள் எப்படி உருவாகின்றது என்பதையும் தெளிவாக்கினார். தெளிவான உணர்வுகள் சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது. ஞானத்தின் உணர்வு கொண்டு, “லவா, குசா” என்ற இரு குழந்தைகள் சீதாவிற்கு பிறந்தன.


ஆனால். சீதாவை விட்டு பிரிந்திருக்கும் இராமனோ, தான் தனித்து வாழ முடியாது எத்தனையோ வேதனைப்படுகின்றார். ஆகவே, மக்களும், அரச சபையில் உள்ளவர்களும், எத்தனையோ வேதனைப்படுகின்றனர். ஆகவே, இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்காக, அன்று தசரத சக்கரவர்த்தி அசுவமேத யாகத்தை நடத்தியது போன்று, மீண்டும் ஒரு அசுவமேத யாகத்தை நடத்தி, நமது நாட்டை புனிதப்படுத்த வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வந்தார். அப்படி புனிதப்படுத்துவதற்காக, யாக சாலையை தயார் செய்தனர். யாகம் தொடங்குவதற்கான நாள் வரும் பொழுது, இதைப் பற்றி வான்மீகி அறிந்து கொண்டார்.


யாகம் நாளை தொடங்குகின்றதென்றால், இன்றே லவ குசாவை, வான்மீகி அங்கே அனுப்பி வைத்தார். லவ குசா இருவரும் அங்கே சென்று இராம நாம காவியங்களை பாடுகின்றனர். அவர்கள் பாடும் பொழுது, மற்றவர்களுக்கு லவ குசா யார் என்று தெரியவில்லை. ஆனால், இராமனுக்கு புரிந்தது.


சீதாவிற்கும் எனக்கும் உண்டான தொடர்புகள், எங்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த இரகசியங்களை இந்த குழந்தைகள் எப்படி பாடுகின்றன? இவர்கள் யார்? என்பதனை தெரிந்து கொள்வதறகாக, அவர்களை அணுகி இராமன்.கேட்கின்றார். அதன் பிறகு லவ, குசா இருவரும், இராமனை, வான்மீகியின் ஆசிரமத்திற்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, அங்கே இராமன் தமது மனைவி சீதாவை பார்க்கின்றார். சீதாவை பார்த்த பின், லவ, குசாவை தமது மகன்கள் தான் என்று அறிந்தார்.


அதன் பின் இராமன், “இனி கடந்த காலங்களை மறந்துவிடுவோம், இனி ஒன்று சேர்ந்து வாழ்வோம்” என்று சீதாவை அழைக்கின்றார். அப்போது பூமா தேவி. ஏனென்றால், எல்லா உணர்வும் இப்பூமியில் விளைந்து, தாவர இனங்களாக உருவாகி, தாவர இனங்களின் சுவைக்கொப்ப தான் எண்ணங்கள் உருவானது. ஆகவே, இப்படி என்ணங்கள் உருவானாலும், உயிரணு, எத்தனையோ கோடி உடல்களை பெற்றபின் தான், இந்த மனித உடலை உருவாக்கியது. ஆகவே, உடலின் சுவையின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது, என்பதைத்தான் அங்கே காண்பிக்கின்றனர்.


ஆகவே, பூமாதேவி, சீதாவை பார்த்து, ‘பட்டது போதும், நீ பட்ட கஷ்டம்” என்று அழைத்ததால், அந்த தசைகள் அனைத்தும் பூமியில் கலந்து, மண்ணுடன் மண்ணாக மாறிவிடுகின்றது. ஏனெனில், தாவர இனங்கள் மண்ணிலே விளைந்தது. தாவர இனத்தின் உணர்வை எடுத்து வளர்ந்த உடலின் சத்து, மண்ணுடன் மண்ணாகப் போகின்றது.


மண்ணுடன் மண்ணாகப் போகும் இந்த உடலுக்காக வேண்டி, நாம் என்ன செய்கின்றோம்? எத்தனையோ பிரயத்தனங்கள் எடுக்கின்றோம். கோபம், வெறுப்பு, வேதனை, அடித்தல், கொல்லுதல் போன்ற உணர்வுகளை நம்மில் வளர்க்கின்றோம்.


ஒருவர் நம்மை திட்டிவிட்டால், “என்னை எப்படி பேசி விட்டார்களே, என்னை இப்படி கேவலப்படுத்தி விட்டார்களே” என்ற உணர்வின் தன்மையை எடுக்கும் பொழுது, நாம் மண்ணுடன் மண்ணாகப் போகும், இந்த உடலுக்குத்தான் முக்கியம் கொடுக்கின்றோமே தவிர, உடலில் உணர்வுகளை ஒன்றாக்கி, இனி பிறவியில்லா நிலையை அடையும் உணர்வுகளை, நாம் நம்முள் இழந்திருக்கின்றோம் என்ற நிலையை இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.


நீங்கள் இராமாயணத்தை படித்து பாருங்கள். இதன் உண்மைகள் தெரிய வரும். பூமி வெடித்து சீதா மண்ணுக்குள் சென்றபின், இந்த உடலிலே விளைவித்த உணர்வுகள், உயிரான விஷ்ணுவிடம் சென்றடைகின்றது..


அப்போதுதான் விஷ்ணு கேட்கின்றார், “நீ உலகை அறிய விரும்பினாயே, புவியில் எத்தனை தொல்லைகள் வருகின்றது? உலக மக்களின் வாழ்க்கையில், எண்ணத்தால் எத்தனை துயரங்கள் இருக்கின்றது” என்று கூறியதாக காண்பித்து, இதிலிருந்து, உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லை என்ற நிலையில் சொர்க்கமடைகின்றது.


"உயிரான விஷ்ணு" என்ற உணர்வை எடுத்து, அதன் உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால், நாம் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைகின்றோம், என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றது.





உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 03.12.2011
ஜூன் 2002


நாம் நமது வாழ்க்கையில் தொழிலின் நிமித்தமாக வேதனைப்படுகின்றோம, சஞ்சலப்படுகின்றோம், கோபப்படுகின்றோம். இதன் நிலைகள் இருக்கும் பொழுது, அடுத்து நாம் ஒரு சந்தோசமான செயலை செய்ய முடிகின்றதா?


இதை தான், சீதாவை சிறை பிடித்தான் இராவணன், என்று காவியத்தில் காண்பிக்கப்படுகின்றது. சந்தோசத்தை உருவாக்கும் நிலையை சிறைபிடித்து, அதை செயலற்றதாக நமது உடலில் மாற்றுகின்றான். நமது பையன் மேல் பாசமாக, அன்பாக இருப்போம். அவன் நாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால், “அவனை உதைத்தால் தான் சரியாக வரும்” என்று எண்ணி, நமக்குள் சந்தோசத்தை அடக்கி, நல்ல குணத்தை சிறைபிடித்து விடுகின்றோம்.


இது போன்ற நிகழ்ச்சிகள், ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. நாம், நமது குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும், சில நேரங்களில் அசுர உணர்வுகள் நமக்குள் வந்த பின், நம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களை செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இதை தான், சீதாவை சிறை பிடித்தான் இராவணன் என்று கூறுவது.
இந்த சீதாவை மீட்பதற்காக (சந்தோசத்தை மீட்பதற்காக),
இராமனுடைய எண்ணங்கள், அது தான் வானரப்படைகள்
என்ற நிலைகளில் பரவி செயல்படுகின்றன.
வானரப்படைகளை தலைமை தாங்கி நடத்துபவர்,
சுக்ரீவன், அதுதான் துருவ நட்சத்திரம்
.
இராமன் சுக்ரீவனின் துணை கொண்டு, வானரப்படைகளை வைத்து சீதாவை, இராவணனிடம் இருந்து மீட்டான். அதாவது,
துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை, நாம் நுகர்ந்து,
நமது உடலுக்குள் தீமை என்ற உணர்வினை நீக்கி,
நம்முள் அரக்க சக்தியை,
எப்படி நாம் மாற்ற வேண்டும்.
நமக்குள் சந்தோசத்தை எப்படி கொண்டுவர வேண்டும்,
என்பதை இராமாயணத்தில் காண்பிக்கின்றனர்.



உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் ஜூன் 2002 (02.12.2011)





நமது மனித வாழ்க்கை காலம் என்பது, மிகவும் குறுகியது. நாம் மனிதராக பிறந்து வளர்ச்சி ஆக, ஆக, நமது வாழ்க்கை காலமும் குறுகிக் கொண்டே வருகின்றது. ஆகவே, குறுகிய காலமே வாழும் நாம், நமது வாழ்க்கையில் எதைப் பெறவேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.




இதை தான் “இராமேஸ்வரம்” என்ற நிலையை ஞானிகள் காண்பித்தார்கள். இராமேஸ்வரம் எனும் நிலையை காண்பிக்கும் பொழுது,

“நேரமாகிவிட்டது”

அதாவது மனித வாழ்க்கை குறுகியது என்றும்,

இந்த மனித வாழ்க்கை காலத்தில்

நாம் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

நமது மனதை, ஒன்றாகக் குவித்தல் வேண்டும்

என்று உணர்த்தினர் ஞானிகள். எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் எனும் இந்த மனித உடலில், ஒளியின் உடல் பெற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைச் சேர்த்து, நம்முள் அறியாது சேர்ந்த இருளை நீக்கி, பொருளறிந்து செயல்படும் திறனை பெறவேண்டும்.




நாம் நமது ஊரில், அதிகாலையில் விநாயகரை வணங்கும் பொழுது, நட்சத்திரங்களின் நிலையைப் பார்க்க முடியாதவாறு, மரங்கள் மறைத்துக் கொள்கின்றன. ஆனால், நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை பெறுவதற்காகவும், நட்சத்திரங்களின் இயக்கங்களை காண்பதற்காகவும், கடலோரப் பகுதியில் ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, இராமேஸ்வரம் என பெயரிட்டு, எண்ணத்தால் உருவாக்கப்பட்ட மனித உடலில்,

எண்ணத்தால் ஒலி – ஒளியின் உடலாக பெற்ற நிலையை உணர்த்தி,

சாதாரண மனிதர்களான நாமும், நமக்குள் ஒளியின் உணர்வை பெற்று, நமக்குள் அறியாது சேர்ந்த இருள் என்ற நிலையை நீக்கி அருள் சக்தி பெறும் ஸ்தலமாக, அந்த இடத்தை மாற்றினார்கள் ஞானிகள்.




அங்கே கோயில்களை அமைத்து, நாம் குறுகிய காலமே வாழ்கின்றோம் என்ற நிலையில், நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெறும்படி செய்தனர் ஞானிகள். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெற்று, இந்த மனித உடலுக்கு பின், பிறவியில்லா நிலை எனும் நிலையை அடையும் தருணத்தைத்தான், நமது ஆலயங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது.




ஆனால், நாம் கோவில்களுக்கு காசை கொடுத்துவிட்டு, “நான் உனக்கு காணிக்கை செலுத்துகிறேன், அர்ச்சனை செய்கின்றேன், ஆனால், எனது குடும்பம் கஷ்டத்தில் இருக்கின்றதே” என்று கும்பிடுவார்கள்.




இப்படியெல்லாம் காசு பணம் செலுத்தியவர்கள், எத்தனை பேர் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள்?

பேருண்மைகளை உணர்த்திய வியாசர், இன்று இங்கே இருக்கின்றாரா?

வான்மீகி மகரிஷி, இன்று இங்கே இருக்கின்றாரா?




வியாசரும், வான்மீகியும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, துருவ நட்சத்திரத்தின் இணைப்பில், ஒளியின் வட்டமாக இருக்கின்றனர். அகஸ்தியருக்குப் பின் தான், வான்மீகி வந்தார். வான்மீகி, வானின் உணர்வை தான் அறிந்து, அந்த உணர்வின் தன்மையை தம்முள் பெற்று, தாம் கண்டுணர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, அவர் இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில், ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்.




இதைப் போன்று, வியாசரும் வானின் ஆற்றலை பெற்று, மேரு என்ற மலையை மத்தாக வைத்து, வாசுகி என்ற பாம்பை கயிறாக வைத்து, பாற்கடலை கடைந்தனர். அப்பொழுது எது, எது விளைந்ததோ, அதாவது தாவர இனங்கள் விளைகின்றது, அதை விழுங்கிய உணர்வுக்கொப்ப உணர்ச்சியும், எண்ணமும், உடலும், உயிரினங்கள் எப்படிப் பெற்றன? என்பதை வியாசர் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்படி பேருண்மைகளை உணர்த்திய வியாசர், உடலுடன் இருக்கின்றாரா?

இருக்கின்றார்.

ஒளியின் உடலாக இருக்கின்றார்.

புற உடல் இல்லை.

ஒளியின் உடலாக, சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றார்.

ஆகவே, உடலுடன் சொர்க்கம் செல்லவே முடியாது.




இதை உணர்த்துவதற்கு இராமாயணத்தில்,

“ஒருவன், தான் உடலுடன் சொர்க்கம் செல்வதற்காக,

பல யாகங்களை செய்கின்றான்.

தான் உடலுடன் சொர்க்கம் செல்ல முடியும், என்று எண்ணுகின்றான்”.




ஆனால், உடலுடன் சொர்க்கம் செல்ல முடியாது,

உடலில், சொர்க்க உணர்வை வளர்க்க முடியும்.

என்பதை இராமாயண காவியத்தில், தெளிவாக ஞானிகள் உணர்த்தியுள்ளனர்.




அதே சமயத்தில், விசுவாமித்திரர், ஆத்திரமும், ஆணவமும் கொண்டு எதையும் பெறவேண்டும் என்ற ஆத்திர உணர்வு கொண்டவர். அவராலும், அந்த நிலையைச் செய்ய முடியவில்லை. பல யாகங்களை செய்து வீரிய உணர்வை பெற்றாலும், நாம் உடலுடன் சொர்க்கம் போகவேண்டுமென்றால், முடியாது.




ஆக, நாம், நமது உடலில் வாழும் காலத்தில்

“உயிருடன் ஒன்றிய உணர்வை,

ஒளியின் உணர்வாக ஒன்று சேர்க்கும் பொழுது தான்”

சொர்க்கமடைகின்றோம்.

எதன் நல் உணர்வுகளை நம்முள் சேர்க்கின்றோமோ, அதுவே நம்மை சொர்க்கலோகத்திற்கு அழைத்து செல்லும் என்பதை தான், இராமாயணத்தில் தெளிவாக காண்பிக்கப்படுகின்றது.




இவ்வாறு உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்ற, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, இந்த உடல் வாழ்க்கையில், தம்முள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சேர்க்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.






உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் ஏப்ரல் 2002 (01.12.2011)





நாம் ஒரு மனிதனிடத்தில், “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு, மீண்டு, இந்த வழியில் செல்” என்று கூறினால், உடனே அவரிடத்தில் எதிர் நிலையாகின்றது. தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது, அவர் தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார். சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார். நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.




ஏனென்றால், மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ, அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது. ஆனால், அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன?




குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால், நமது குழந்தையிடமும் விளையாட்டு குணம், அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான், கல்வியில் ஞாபகம் இருக்காது. ஞானம் வராது என்று, நாம் அவனை திட்டினால், அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது. நாம் கோபமாக பேசினால், அவன் நம்மை எதிர்த்து பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று, அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது, நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி, அவனின் வெறுப்பை தணிப்பதற்கு மாறாக, நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து, அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.




ஆனால், நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, நமது உயிர் நம்மை இயக்குகின்றது. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, உயிர் நம்மை இயக்கினாலும்,

நமது ஆறாவது அறிவால்,

நமது உயிரான்மாவை,

நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.

நாம் இதைக் காட்டிலும், வலுவான உணர்வுகளை நுகர்ந்தோமென்றால், நமது உயிர் அவ்வுணர்வின் வழி, நம்மை வழி நடத்தும்.




தீமைகளை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால்,

நமது உயிர், நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி,

நமது அங்கங்களை செயல்படுத்தும்.

தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள்,

நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.




இதை போன்று, தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து, அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால், நமது சொல்லில் நயமும், நமது சொல்லை கேட்பவரிடத்தில் இனிமையும், நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.




விஞ்ஞானிகள், தம் உணர்வின் தன்மைக்கேற்ப இயங்கும் “ரோபாட்” (robot) என்ற இயந்திரத்தின் தன்மையைக் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, பிரான்சு நாட்டில் நோயாளி இருக்கிறார் என்றால், அவரைக் குணப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு எடுத்து செல்ல முடியாது. ஆனால், அந்த நோயாளிக்கு ஆபரேசன் செய்தாக வேண்டும். ஆபரேசன் செய்ய வேண்டிய டாக்டரோ அமெரிக்காவில் இருக்கின்றார்.




இதனால், விஞ்ஞானிகள் என்ன செய்கின்றார்கள்? நோயாளியின் அருகில் ஒரு ரோபாட்டை வைத்து, அமெரிக்க டாக்டரின் கட்டளைகளை, சாட்டிலைட் (satellite, செயற்கை கோள்) மூலம் அனுப்பி, ரோபாட்டை இயக்கி, நோயாளிக்கு ஆபரேசன் செய்கின்றனர்.




நோயாளியின் உடல் உறுப்புகளிலுள்ள, நுண்ணிய அலைகளை ரோபாட் கவர்ந்து, தெளிவான நிலையில் செயல்படுகின்றது. மனிதர் கண் கொண்டு பார்த்து கூட, அவ்வளவு சீராக செயல்படுத்த முடியாது. ஆனால், ரோபாட் இயந்திரம் தெளிவான நிலையில் இயங்குகின்றது.




எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலை கொண்டு, ரோபாட்டை இயக்குகின்றனர். ஆபரேசன் செய்யப்பட வேண்டிய, நோயாளியின் உடல் உறுப்புக்கு கீழ், நரம்பு மண்டலமோ, தசை மண்டலமோ இருக்கிறதென்றால், அதற்கு தக்கவாறு கத்தியை பாய்ச்சி, குறிப்பிட்ட உறுப்புக்கு கீழ் கத்தி போகாதவாறு செயல்பட்டு, பிழை இல்லாத நிலையில், ரோபாட் ஆபரேசனை செய்கின்றது. ஆனால், ரோபாட்டை விஞ்ஞானிகள் அமெரிக்காவில் இருந்து இயக்குகின்றனர்.




இதைப் போன்று தான், நமது குழந்தைகள் நமது உணர்வின் தன்மை கொண்டுதான் வளர்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். நாம் அந்த குழந்தைகளுக்கு, நல் சக்தி ஊட்ட முடியும். அவர்களிடத்தில் உள்ள தவறுகளை நீக்க முடியும்.




அதாவது, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்.. ஈஸ்வரா.. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி, நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் வீரிய உணர்வை செலுத்திப் பழகுதல் வேண்டும்.




இப்படி செலுத்திய பின், நமது குழந்தையை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் குழந்தை பெறவேண்டும், அவன் ஞான சக்தியும், ஞாபக சக்தியும் பெறவேண்டும். அவன் சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத் தரும் உணர்வுகளையும் பெறவேண்டும்” என்று எண்ணி நாம் இதன் வழி செயல்பட்டால், அவனை பிழைகளில் இருந்து, தவறுகளில் இருந்து விடுவிக்க முடியும். அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் ஊட்ட முடியும்.




எப்படி அமெரிக்காவிலிருந்து, பிரான்சிலுள்ள ரோபாட்டை இயக்குகின்றனரோ, இதை போன்று, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியின் துணை கொண்டு, நாம் குழந்தைகளை முறைப்படுத்தி, திருத்தி வாழச் செய்ய முடியும். இதை உங்களுடைய அனுபவத்தில் உணர முடியும். எமது அருளாசிகள்.