Pages

அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை






சாமி புத்தகம் – அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை
(பக்கம் 5-9)

“ஓம் ஈஸ்வரா குருதேவா"

என்று சொல்லும் பொழுதெல்லாம், நமது உயிரை ஈசனாகவும் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்துகுணங்களுக்கும், உடலுக்கும், நமது உயிரே குருவாக இருக்கின்றது, என்று மதிக்க வேண்டும். நமது உயிரே நம்மை ஆளுகின்றது.




நாம் எண்ணியது, பார்த்தது, கேட்டது, நுகர்ந்தது அனைத்தையும்

நமது உயிர், “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி,

“ம்” என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

நமது வாழ்க்கையில், காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது, கேட்டது, இவை அனைத்தையும்சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது, நமது உயிர். சிவமென்றால், நமது உடலாக்கிக் கொண்டே உள்ளது.




நமது உயிருக்கு “ஆதிமூலம்” என்று ஒரு பெயருண்டு. அந்த உயிர்ஒரு தாவர இனச் சத்தை நுகர்ந்து, நுகர்ந்த உணர்வுகளை உடலாக்கி, முதன்முதலில் புழுவாகின்றது. புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், உயிர்எதெனதன் உணர்வை உணவாக எடுத்துக் கொண்டதோ, அதை, தன் உணவிற்காகத் தேடிச்செல்கின்றது.




உதாரணமாக, தவளைகள் பல பூச்சிகளையும், புழுக்களையும் உணவாகஉட்கொள்ளுகின்றது. அந்தப் பூச்சிகளின் உடல்கள், தவளைக்கு உடலாகின்றது. தவளைகளின் உடலில், சிக்குண்ட பூச்சிகள் அனைத்தும்,அந்தஉணர்வின் சத்துகள் உடலானாலும், அந்தப் பூச்சிகளின் உயிர்கள் அனைத்தும் தவளையை எண்ணி, அந்த உணர்வை நுகரப்படும் பொழுது, வேதனையுடன் “தன்னை விழுங்கிவிட்டதே” என்ற வேதனையான உணர்ச்சிகள் கொண்டு, அந்த உயிர் வெளிவரப்படும் பொழுது, தவளையின் ஈர்ப்பிற்குள் வந்துவிடுகின்றது.




தவளையின் ஈர்ப்பிற்குள் வந்தபின், தவளை வளர்த்த உணர்வின் சத்தை, இந்தப்பூச்சியின் உயிரணு நுகர்ந்து, அதன் கருவாக உருவாகின்றது. அதன் முட்டையாக மாறிவிடுகின்றது. முட்டையாக மாறியபின், இதே தவளைதான், அடைகாக்கின்றது.முட்டைகள் பொறித்து வெளிவரும் பொழுது, பூச்சிகளாக இருந்தது அனைத்துமே, தவளைகளாக ரூபம் பெறுகின்றது.




இதே மாதிரி, பாம்பு தன் உணவிற்காக, தவளையின் மீது, தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்குகின்றது.அதன் விஷங்கள், தவளையின் உடல்முழுவதும் படர்கின்றது. அந்த விஷத்தின் தாக்குதலால், அந்தத் தவளை பாம்பை எண்ணுகின்றது. தவளையின் உடல், விஷத்தின் தன்மையால்கரைந்து, பாம்பிற்கு இரையாக மாறினாலும், பாம்பின் விஷத்தின் தன்மை,தவளையை உருவாக்கிய அணுக்களில் படர்ந்து, பாம்பின் ரூபமாக மாற்றத் தொடங்கிவிடுகின்றது.




உதாரணமாக, இன்று நாம் குளவியைப் பார்க்கின்றோம். தன் உமிழ்நீரால், மண்ணைப் பிசைந்து எடுத்து, கூடு கட்டுகின்றது. புழுவை எடுத்து, அதைத் தன் விஷத்தால் தாக்கி, கூட்டிற்குள் செலுத்திவிடுகின்றது. குளவியின் விஷங்கள், புழுவின் உடல் முழுவதும் பரவுகின்றது.




அவ்வாறு பரவியபின், கொட்டிய குளவியின் நினைவு, புழுவின் உடலுக்குள் உருவாகின்றது.

புழுவின் உடலுக்குள், குளவியின் நினைவுகள் வந்து,

இந்த உணர்விற்கொப்பத் துடிப்பின் நினைவுகள்,

உணர்வுகளை மாற்றி,

அந்தப் புழு குளவியாக மாறுகின்றது.




இதே மாதிரிதான், தவளையின் உடலை உருவாக்கிய அணுக்களில், விஷத்தின் நிலைகள் பாய்ச்சப்படும் பொழுது, பாம்பின் விஷம் தவளையின் அணுக்களில் பட்டபின், அது அனைத்திலும், பாம்பின் உணர்ச்சிகளை ஊட்டும் கருத்தன்மை, உருவாகிவிடுகின்றது.




தவளையின் உயிர் வெளிவந்தபின், எது தாக்கியதோ அதன் உடலுக்குள், தவளையின் உயிர் போய்விடுகின்றது. அவ்வாறு போனபின், அந்த விஷத்தின் தன்மை கொண்டு, பாம்பின் உணர்வைக் கருவாக்கி, ஒரு முட்டையாக உருவாகின்றது. அந்த முட்டையிட்டபின், எந்த பாம்பு விழுங்கியதோ, அந்த பாம்பின் குட்டியாக வெளிவருகின்றது. பாம்பு, தன் உடலில் உள்ள விஷத்தைப் பாய்ச்சியது. ஆனால், தவளையின் உடலில் விஷத்தின் தன்மை மாறும் பொழுது, தவளை பாம்பாக மாறுகின்றது.




ஆனால், பாம்பை கருடன் தூக்கிச் சென்று, உயிரோடு, சிறிது சிறிதாகக் கொத்தி சாப்பிடுகின்றது. அப்பொழுது கருடனிடமிருந்து தப்பிக்க, பாம்பு பல மாயாஜாலங்களைச் செய்யும். அது தன் வாலைக் கொண்டு இருக்கி, என்ன செய்தாலும், உயிர் போகின்ற வரையிலும், பாம்பைக் கருடன் பிய்த்துத் திங்கும்.




பாம்பின் கண்கள், கருடனை உற்றுப் பார்த்தவுடன், அந்த கருடனின் ரூபமும், கருடனின் விஷத்தின் தன்மையும், பாம்பின் உடலுக்குள், அத்தனை அணுக்களிலும் சேருகின்றது.




அந்தப் பாம்பின் உயிரான்மா எதை உற்றுப் பார்த்ததோ, அந்த கருடனின் ஈர்ப்பிற்குள் சென்று, கருடனின் உணர்வை நுகர்ந்து, கருடனின் முட்டையாக மாறுகின்றது. அதன் முட்டையாக மாறும் பொழுது, அதன் வழிகொண்டு கருடனாக ரூபம் பெறுகின்றது.


மான் புல்லை மேய்கின்றது. புலி அதைக் கண் கொண்டு பார்த்தவுடனே, அந்த மானைச் சாப்பிட எண்ணுகின்றது. புலியிடமிருந்து தப்ப, மானின் கண்கள் உதவுகின்றது. இருந்தாலும், புலி விடாமல் துரத்தி வருகின்றது. அதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று, மான் ஓடுகின்றது.




மானின் உடலுக்குள், புலியின் உணர்வுகள் அந்த உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் பெருகுகின்றது. மான் புலிக்கு இரையானாலும், அல்லது இயற்கையாக மடிந்தாலும், மானின் உடலைவிட்டுப் பிரிந்த உயிரான்மா, புலியின் உடலுக்குள் சென்று, புலியின் உணர்வை நுகர்ந்து, கருவாகி, புலிக் குட்டியாகப் பிறக்கின்றது.




இப்படித்தான், பலகோடி சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து, யானையாக உருவாக்குகின்றது, உயிர்.

யானை, உடல் வலு பெற்றது.

யானையானபின், ஞானங்கள் அதற்குள் தோன்றி,

எண்ண வலு பெற வேண்டும் என்ற உணர்வுகள்

யானையின் உடலுக்குள் தோன்றி,

உடல் சிறுத்து, பன்றியாக,

நல் உணர்வுகளை, பன்றியின் உடலில் நுகர்ந்து,

பின், மனிதனாக உருவாக்குகின்றது உயிர்.




முன் ஜென்மங்களில், நாம் மிருக நிலைகளில் இருந்தோம் என்பதைக் காட்ட, யானையின் தலையை, மனித உடலில் பொருத்திக் காட்டி, உயிர், தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, இந்த மனித உடலைத் தந்தது, என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள, கோவில்களில் விநாயகரை, சிலையாக வைத்துக் காட்டினார்கள்.




விநாயகரை ஆதிமுதல்வன், சிவனின் பிள்ளை, முழுமுதற் கடவுள் என்று சொல்லுவார்கள். மனிதனான பின், எதையும் உருவாக்கி, இருளை நீக்கி, ஒளி என்ற உருவை, உருவாக்குபவன் மனிதன். அதுதான் முழுமுதற் கடவுள். நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தபின், நாம் எதைச் சேர்க்க வேண்டும்? என்பதற்குத்தான், விநாயகரை வைத்திருக்கின்றார்கள்.