தமிழ்நாட்டில் எல்லா விஷயமும் அரசியல் ஆகிவிட்டது. தமிழர்களின்
உயிராகட்டும், உடமைகளாகட்டும், கல்வியாகட்டும் அல்லது கட்டிடங்கள் ஆகட்டும்
எல்லா விஷயங்களும் தற்பொழுது காழ்ப்புணர்ச்சி அரசியல் (அதாங்க ஈகோ
பாலிடிக்ஸ்) ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள்
தீர்க்கப்படாமல் இருக்கும் பொழுது, இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு
வரப்போகும் தைத்திருநாளுக்கு (கடந்த அரசு தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிய
தினம்) இப்ப என்னங்க அவசரம்? உங்களில் ஒருவனாக இருந்து அரசியல் ஆய்வு
செய்யும் பொழுது கிடைத்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வரும் 4 மாதங்களில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் ! ஏராளம் !!
அடுத்து வரும் மாதங்கள் மழைக் காலங்கள். வானியல் அறிஞர்களின் ஆய்வுப்படி
5-10% சதவீதம் குறைவாகவே இந்த வருடம் பருவ மழை இருக்கும் என்று
கூறுகிறார்கள். இதில் வேறு இலவச அரிசித்திட்டம் அறிவித்தாகிவிட்டது!
விவசாயமே கேள்விக் குறியாகி வரும் நிலையில், அரிசியை எங்கே இருந்து
பெறப்போகிறோம். புதிய அரசு வேறு தன்னிச்சையாக, மத்திய அரசை கலந்து
ஆலோசிக்காமல் பல்வேறு இலவச திட்டங்களை தான் தோன்றித்தனமாக அறிவிக்கிறது.
அறிவித்த பின் அதற்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது என்று தெரியாமல்,
புரியாமல் திரு திருவென்று முழிக்கிறது.
மத்திய மாநில அரசுகளின்
உறவை ஒரு நல்ல குடும்பத்தின் கணவன் - மனைவி உறவோடு ஒப்பிடலாம். அவர்களின்
மக்களை, பொது மக்களோடு ஒப்பிடலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி பரஸ்பரம்
புரிதலோடு இருந்தால் தான், வீட்டில் உள்ள குழந்தைகள் நிம்மதியாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். கணவனுக்கு தெரியாமல், அவனிடம் கலந்து
ஆலோசிக்காமல் மனைவி ஒரு பொருளை வாங்கினால், பற்றாக்குறை தானே ஏற்படும்.
பிறகு, கணவனிடம் பணத்திற்கு சண்டை போட்டால் குடும்ப நிலைமை என்னவாகும்? அதே
நிலை தான் இன்றைக்கு ஜெயா அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி ஏற்ற ஒரு மாத
காலத்தில் டெல்லிக்கு சென்று தாங்கள் திட்டமிட்ட, கோரிக்கை வைத்த ,
தேவையான பணத்தை மத்திய திட்டக் கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியாவை சந்தித்து,
போதுமான பணத்தைப் பெற்றுக்கொண்டு, வெளியே மகிழ்ச்சியுடன், ஊடகங்களுக்கு
பேட்டி கொடுத்து, தமிழ் நாட்டுக்கு வந்தபின் 3 மாதத்தில் மீண்டும் மத்திய
அரசை சட்டசபையில் காய்ச்சி எடுத்தால், என்னவென்று சொல்லுவது. டெல்லி
கொடுத்த 1 வருடத்திற்கான பல்லாயிரம் கோடி பணம் 3 மாதத்திலேயே காலியா? ஆஹா
என்ன திட்டமிடல்? அது சரி என்னத்த சொல்ல! உயர்நீதிமன்ற விசாரணை நடந்து
கொண்டிருக்கும்போதே பழைய பாடத்திட்ட புத்தகங்களை கோடிக்கணக்கான ரூபாய்
செலவிட்டு அடித்தவர் தானே. ஆனால் இப்பொழுது அதனை உச்ச நீதிமன்ற
தீர்ப்புப்படி கொடுக்க இயலாது. “வடை போச்சே” என்று புலம்ப வேண்டியதாகி
விட்டது. இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள்
கிடைக்கவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தை தான் பழைய பாடத்திட்ட
புத்தகங்கள் அடிக்க பயன்படுத்தி விட்டோம். இப்பொழுது பணம் பற்றாகுறை வேறு !
பால்காரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை புடவைக் காரனுக்கு கொடுத்து விட்டு,
பணம் பற்றாக்குறை என்று சொல்லி குடும்பத்தினரை கடுங்காப்பி (பால் இல்லாத
டிக்காஷன் காபி) குடிக்க வைக்கும் ஒரு நல்ல குடும்பத்தலைவியின் நிலைதான்
இன்று தங்கத் தலைவியின் நிலை. பால் இல்லா காபி குடிக்கும் நிலையில் தான்
இன்று தமிழக மாணவர்களின் நிலை.
போர்க்கால அடிப்படையில் நீர்ப்
பிடிப்பு பகுதிகளை, பொறியாளர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு குளம், ஏரி
போன்றவைகளை சுத்தம் செய்து, தூர் வாரி, மழைத் தண்ணீரை வீணடிக்காமல்
சேகரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியிலிருந்து வாங்கி வந்த
பல்லாயிரம் கோடி ரூபாயை உருப்படியாக பயன்படுத்தினாலே போதும்,
தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி விடலாம். எல்லாம் அரசியல் !
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அது போல
ஆகிவிட்டது, தமிழ்நாட்டில் உள்ள திருடர்களின் நிலை. திருடர்களுக்கு இது
கொண்டாட்டமான காலம். போலிஸூக்கு இது திண்டாட்டமான காலம். முன்னாள்
ஆட்சியாளர்களை பழிவாங்க மொத்த தமிழ்நாட்டு போலீசும் அவர்கள் மேல் வழக்குப்
போட திருப்பி விடப்பட்டதால், பொது மக்களுக்கு பேராபத்து, தூக்கம்
தொலைந்தது. 10 வருடங்களுக்கு முன்பு இருந்த போலீஸ் எண்ணிக்கை தான் இன்றும்
இருக்கிறது. சட்டசபையில் ”நான் ஆட்சி ஏற்றதும், தமிழ்நாட்டில் இருந்த
அனைத்து ரவுடிகளும், திருடர்களும் ஆந்திரா சென்று விட்டார்கள்” என்று
சொல்லி முடிக்குமுன் அவருடைய கட்சி சட்ட மன்ற உறுப்பினர் பழ. கருப்பையா
வீட்டிலேயே திருட்டு, கொள்ளை நடந்து உள்ளது. மத்திய உள்துறை மந்திரி ப.
சிதம்பரம் வீட்டிலேயும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சாமான்ய ஜனங்களைப்
பற்றி சொல்லவே வேண்டாம். நல்லா உப்பு, புளி, காரம் சாப்பிடும்
ஆந்திராக்காரர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் போல இருக்கிறார்கள். சட்ட
சபையில் ஆந்திரா திருடர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மாநிலம் என்று ஜெ
குறைத்து சொல்லியும் இன்றுவரை அதற்கு பதிலே இல்லை. என்ன செய்ய அவர்கள்
சினிமா மாயையில் இருந்து இன்னும் விடுபடாமல், கதாநாயகனின் நடனத்தில் வரும்
”ஸ்டெப்லு” வைப் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த
ஆட்சியாளர்கள் தும்மிய, இருமிய போதெல்லாம் குற்றம் கண்டு பிடித்து, கண்
சிவக்க உணர்ச்சி பொங்க, சவுண்ட் விட்டு பேசிய அண்ணன் விஜயகாந்து இப்பொழுது
விஜயகோந்து ஆகிவிட்டார். வாயை திறப்பதே இல்லை. பல புதிய அமைச்சர்களின்
செயல் பாடுகளை 1 ஆண்டுக்கு பார்ப்பாராம். என்னவோ இந்த ஆட்சியில்
அமைச்சர்கள் சொல்லிதான் எல்லாம் நடப்பது போல சொல்கிறார். பதவி ஏற்ற 2 ஆவது
நாளே சமச்சீர் கல்வித்திட்ட தடை சட்டத்தை சட்ட சபையில் கொண்டு வந்தார்.
கல்வி அமைச்சரின் பரிந்துரைப் படிதான் இந்த சட்டத்தை கொண்டு வந்தாரா? கல்வி
அமைச்சர், கல்வியாளர்கள், படித்த மேதைகளிடம் ஆலோசித்து 1 வருடம் கழித்து
சமச்சீர் கல்வி தேவை இல்லை என்று முடிவு செய்து அதன் பின் சட்டசபையில்
சட்டம் நிறைவேற்றி இருக்கலாமே.
அண்ணன் விஜயகோந்து அவர்களே! 1
வருடம் அதிகப் பிரசங்கித்தனமாக பேச மாட்டேன் என்று நீங்கள் காண்டிராக்டில்
கையெழுத்துப் போட்டிருப்பதாக மக்கள் பேசி வருகிறார்கள் என்பதை அறிவீர்களா?
அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சேர்த்து காண்ட்ராக்ட் போட்டு
விட்டதால் 1 வருடத்திற்கு வாயை திறக்க மாட்டாராம், தமிழ் நாட்டு மக்களை
முட்டாள்கள் என்று நினைத்து 1 வருடத்திற்கு வாயை திறக்க மாட்டேன்
என்றுபேசுகிறார். மீறி அவர் பேசினால் காண்ட்ராக்ட் கேன்சல் ஆகிவிடும்.
இன்னும் நாலரை ஆண்டுகளுக்கு விஜயகோந்தின் தயவு ஜெக்கு தேவையில்லை, அதனை
அறிந்து தான் ஊமைச் சாமியாகிவிட்டார். தற்பொழுது அதில் கொஞ்சம்
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கெஞ்சியதால், 6 மாதங்கள்
தள்ளுபடியாகிவிட்டது. இபொழுது 6 மாதம் வரை வாயை திறக்க மாட்டேன் என்று
சொல்லி வருகிறார். அவருடைய பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற நிலையில் தான்
உள்ளது.
மேற்கூறியது போன்ற இன்னும் பல விஷயங்களில் இருந்து
தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப வேண்டி, சமச்சீர் வெற்றி கொண்டாட்டங்களில்
இருந்து திசை திருப்ப வேண்டி, ஜெ அரசு தமிழ்ப் புத்தாண்டை கையில்
எடுத்துள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனி தமிழ்ப் புத்தாணடைப் பற்றிய
சர்ச்சைக்கு வருவோம். ”மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது
சரியல்ல”- சட்டசபையில் ஜெ. மிகச் சரியான பேச்சு. பாராட்டுக்கள்.
மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அதாவது பூமி தன் நீள் வட்டப்பாதையில்
சூரியனுக்கு மிக அருகில் அந்த சமயத்தில் செல்வதால், சூரியனின் தாக்கம்
பூமிக்கு அதிகம் ஏற்படும் காலமாகும். அக்காலகட்டத்தையே பொது மக்கள்
சித்திரை கத்திரி வெயில் என்றும், அக்னி நட்சத்திரம் என்றும்
கூறுகிறார்கள். சூரியனை வைத்தே நம் சூரியக் குடும்பம் இயங்குவதாலும்,
சூரியனின் அருகாமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த காலகட்டத்தை சித்திரை
மாதம் என்றும் வருடத்தின் முதல் மாதம் என்றும் வானியல் வல்லுனர்கள் வகுத்து
கொடுத்தனர். அதனை வானியல் சாஸ்திரப்படி காலம் காலமாக தமிழக மக்கள்
பயன்படுத்தி வருகின்றனர்.
சூரியனை வைத்து ஆண்டை கணக்கிடும் முறையை
சூர்யமானம் என்றும், சந்திரனை வைத்து கணக்கிடும் முறையை சந்திரமானம்
என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை
வரும் பல இந்துப் பண்டிகைகள் சந்திரனின் நிலையை (நட்சத்திரம், திதி) வைத்தே
கொண்டாடப்படுகிறது. இன்றும் இந்து மதகுருமார்கள் தங்கள் பிறந்த நாளை
நட்சத்திரத்தை வைத்தே ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இந்த ஜெயந்திகள் வருடா
வருடம் ஒரே நாளில் வருவதில்லை. அப்படியென்றால் அவர்கள் சூரியனை வைத்து
ஆண்டு கணக்கீடுகள் செய்வதில்லை, இது ஜெவுக்கும் தெரியும். அன்பர்களுக்கு
நான் கூறுவதில் ஐயப்பாடு இருந்தால், ஆழ்வார்கள், நாயன்மார்கள்,
இப்பொழுதுள்ள சங்கராச்சாரியார்கள், ஜீயர்களின் பிறந்த நாள் (ஜெயந்தி)
கொண்டாட்டத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி என்றால் பொது
மக்களுக்கு ஒரு ஆண்டுக்கணக்கு, மத குருமார்களுக்கு ஒரு ஆண்டுக்கணக்கா?
அவர்களின் ஜெயந்திகளை, திருவிழாக்களை சூரியனின் ஆண்டுக் கணக்கில் கொண்டாட
வேண்டும் என்று ஜெ இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்துவாரா? ஜெயந்திகளாவது
அவர்களுடைய பர்சனல் விழாக்கள் என்று வைத்துக் கொண்டாலும், திருவிழாக்கள்
பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதனை மாற்ற இயலுமா? இது நடைமுறையில்
சாத்தியப்படுமா?
வானியல் சாஸ்திரத்தில் சூரியனை வைத்து, 1
ஆண்டுக்கான பருவ நிலையை 2 அயனங்களாக பிரித்துள்ளனர். அதாவது சூரியன் வடக்கு
அயனத்தில் பயணிக்கும் காலம் ( நார்த் டெக்லினேஷன்) உத்திராயணம் என்றும்,
தெற்கு அயனத்தில் பயனிக்கும் காலம் ( சௌத் டெக்லினேஷன்) தக்ஷிணாயனம்
என்றும் சொல்லப்படுகிறது. அதாவது உத்திராயணக் காலம் மழை, குளிர் எல்லாம்
முடிந்து சோம்பல் முறித்து உழைக்கத் தயாராகும் வெப்பக்காலமாகும்.
தக்ஷிணாயனக்காலம் உழைத்துக் கிட்டிய உணவு, பொருட்களை வைத்து மழைக்காலம்
அதனைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் கஷ்டப்படாமல், இயற்கையால் பாதிப்பு
ஏற்படாமல், தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வாழும் காலமாகும். இந்த இயற்கை
பருவ மாற்றத்தை, மனிதன் பயன் படுத்துகிறானோ இல்லையோ, சிற்றறிவு உள்ள
எறும்புகளும், பறவைகளும் இன்ன பிற உயிரினங்களும் இயற்கையோடு ஒன்றி
வாழ்கின்றன. மழைக்காலத்திற்கு தேவையானவற்றை சேமித்து வைத்துக்கொள்கின்றன.
ஏனெனில் அவற்றிற்கெல்லாம் இந்த பாழாய்ப்போன அரசியல் தெரியாது.
சூரியன் மகர ராசிக்கு செல்லும் காலமே உத்திராயண காலத்தின் தொடக்கம் ஆகும்.
அதாவது தை மாதம் முதல் நாள். இதைத் தான் ஆந்திராவில், கர்நாடகாவில் இன்னும்
பல மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், கேராளவில் மகர ஜோதி திருவிழா
என்றும் பல கோவில்களில் கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல தமிழ் நாட்டிலும்
மார்கழி மாதத்தை அந்த ஆண்டின் கடைசி மாதமாகக் கருதி, இந்த ஆண்டு
முழுமைக்கும் நலன் தந்த கடவுளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பக்தி மாதமாக
மாற்றி விட்டு எல்லா கோவில்களிலும் நன்றாக கல்லா கட்டுகிறோம். அதைப் போல
சூரியன் கடக ராசிக்கு எண்ட்ரி கொடுப்பதை தக்ஷிணாயண காலத்தின்
தொடக்கமாகும்.
மேலும் பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்கு தெரியும், மகர
சங்கராந்திக்கான பலன் கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். ஜோதிட ரீதியாகவும்,
மகரத்திற்கு (தை) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டின்
பூகோள அமைப்பின் படி வட கிழக்கு பருவ மழையை வைத்தே விவசாயம் நடைபெறுவதால்
அவன் தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்கும் நாளாக,
இயற்கையாக அமைந்து விட்டது. தை மாதம் அறுவடை முடிந்து நாலு காசு பார்த்து,
நல்ல காரியங்களைத் தொடங்குவர். பல புலவர்களும் தை மாதத்தை ஒரு அழகிய
பெண்ணாக முன்னிலை படுத்தி (தைப்பாவாய்) பாடியுள்ளனர்.
மேலும்
மஹாபாரத்தை ஊன்றிப் படித்தால் (கையை ஊன்றி அல்ல!), அதில் பிதாமகர்
பீஷ்மரின் உயிர் அவர் விருப்பப்பட்டால் தான் பிரியும். அவர் உத்தராயண
புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி
மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.
இப்படி உத்திராயணத்திற்கு(தைக்கு) பல சிறப்பு அம்சங்கள் உள்ளதால், தை 1 ஆம்
நாளை தமிழ் வருட முதல் நாளாக மு.க. அறிவித்து இருக்கலாம் என்று
தோன்றுகிறது. அவர் அதை சட்டமாக இயற்றியது தவறு. மக்கள் விருப்பபடி கொண்டாடி
மகிழட்டும்.
இனி கேரளாவை எடுத்துக்கொண்டால், பூகோள அமைப்பின் படி
தென் மேற்கு பருவ மழையை வைத்தே விவசாயம் நடைபெறுவதால், சிம்ம சூரியனுக்கு
(தக்ஷிணாயனம்) நன்றி தெரிவித்து வணங்கும் நாளாக, ஓணம் பண்டிகை இயற்கையாக
அமைந்து விட்டது. மு.க.வும் கேரளத்தில் உழவர் தினம் என்பதால், மத
அடிப்படையான பண்டிகை அல்ல என்பதாலும் தமிழ்நாட்டிற்கு அரசு விடுமுறை
அறிவித்தார். பிறகு கேரளாவும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, பொங்கலுக்கு அங்கு
விடுமுறை அறிவித்தது.
மு.க. தமிழ்ப் புத்தாண்டை மாற்றியது, ஒரு
வெட்டி வேலை என்று பாமரர்கள் நினைக்கலாம். அப்படி என்றால், ஜெ செய்வதும்
ஒரு வெட்டி வேலைதான். மு.க. மாற்றினார் என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சி
காரணமாக, இருக்கிற மக்கள் பிரச்சினைகளை விட்டு விட்டு இதற்கு சட்ட சபையில்
நேரத்தை ஒதுக்கி யாரையோ திருப்தி படுத்துவதற்காக, எல்லோரின் கவனத்தையும்
திசை திருப்புவதற்காகவே இந்த சட்ட திருத்தம். இதனால் மக்களுக்கு ஒரு பயனும்
இல்லை. மக்கள் தங்களுடைய நம்பிக்கைகு ஏற்ப, பண வசதிக்கேற்ப வழிபாடுகள்,
கொண்டாட்டங்களை கொண்டாடிக்கொள்வார்கள். இதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க
வேண்டாம் என்பதே எமது தாழ்மையான கருத்தாகும்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்