Pages

2ம் தேதி ராகு பெயர்ச்சி திருநாகேஸ்வரம் கோயிலில் 7 ராசிகளுக்கு பரிகாரம்


 

திருவிடைமருதூர்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வரும் 2ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் இருதேவியருடன் அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் டிசம்பர் 2ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. விருச்சிக ராசியில் இருந்து காலை 10.53க்கு ராகு பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இதையொட்டி கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, தயிர், சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

ராகு பெயர்ச்சியையொட்டி வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் கால யாகபூஜை துவங்குகிறது. டிசம்பர் 1ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாகபூஜை நடக்கிறது. 2ம் தேதி 4ம் கால யாகபூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 10.53க்கு ராகு பெயர்ச்சியை முன் னிட்டு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

ராகு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் போன்றவை தோஷ பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். இதையொட்டி ராகு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை நேற்று துவங்கியது. இது 29ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட லட்சார்ச்சனை டிசம்பர் 3ல் துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த 2 கட்ட லட்சார்ச்சனையிலும் ராகு பகவானுக்கு 5,000 சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.