Pages

பிரிந்தோரை சேர்த்திடும் சக்திலிங்கம்


தேவர்களையும் மக்களையும் கதிகலங்கடித்து கொண்டிருந்த மகிஷாசுரனை வதம் செய்தாகிவிட்டது. அவன் பாவியே ஆனாலும் அவனை கொன்றதும் பாவமாகிவிட்டது, சக்திக்கு.

அப்போது,இறைவன் அசரீரியாக அருளுரைத்தார். “சக்தியே, தொண்டை நாட்டிலே காஞ்சி மாநகரில் அன்னபூரணியாகத் தோன்றி அன்னதானம் செய்வாயாக. பிறகு காமாட்சியாக என்னை நோக்கி தவம் செய்க. கார்த்திகை மாதத்தில் ஜோதிப் பிழம்பாய் மாறி, நீ என்னைச் சேர்வாய். நிறைவாக, பங்குனி உத்திர நட்சத்திர தினத்தில் என்னை மணம் புரிந்து என்னுடன் மீண்டும் ஐக்கியமாவாய்” எனத் தெரிவித்தார்.

ஐயனின் ஆணையை அப்படியே ஏற்றுக்கொண்ட சக்தி, காஞ்சிபுரத்தில் வந்து இறங்கினாள். அவ்விடத்தில் அன்னபூரணியாகி, வலக்கையிலே கரண்டியும் இடக்கை யில் அன்னப் பாத்திரமும் ஏந்தி அன்னதானம் செய்தாள். தொடர்ந்து, அந்த காஞ்சி மாநகரிலே மாமரத்தடியில் மணலால் லிங்கம் அமைத்து வணங்கினாள். அருகில் பர்ணசாலை அமைத்து ஈசனை நோக்கி தவம் செய்தாள்.
அன்னையின் தளிர்க் கரங்களால் அழகுற வடிக்கப் பெற்றது மணல் லிங்கம் ஒன்று. சக்திக்கு சோதனை தர சித்தம் கொண்டார் சிவபெருமான்.

அந்த லிங்கத்தின் அழகில் பொறாமை கொண்ட கம்பா நதி, பெருக்கெடுத்து ஓடிவந்தது. லிங்கத்தைக் காக்க கரங்களால் அணை கட்டினாள் சக்தி. பொங்கி வந்த நதி, அடங்கிப்போய் கையணைக்கு வெளியிலேயே நின்று, தயங்கி லிங்கத்தை மரியாதையுடன் வலம் வந்து பாய்ந்தோடியது. அன்னபூரணியாய் அன்னம் பாலித்து, காமாட்சியாய் தவம் புரிந்த சக்தி, கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை ஜோதியில் இறைவனோடு ஐக்கியமாகி, இறைவனுடனேயே காஞ்சிபுரம் வந்து, பங்குனி உத்திரத்தன்று இறைவனைக் கைப்பிடித்து சிவ-சக்தி சொரூபமானாள்.

மகிஷனை வதம் செய்தபிறகு, காஞ்சி புரத்தில் முதன் முதல் பாதம் பதித்த தலம், ‘ஆதிபீடம்Õ என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உருவாகியிருக்கும் கோயில், ஆதிபீட பரமேஸ்வரி ஆலயம் எனவும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் எனவும் வழங்கப்படுகிறது. அவள் தவம் செய்த இடம் காமாட்சி அம்மன் ஆலயம் எனவும், மணல் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம், ஏகாம்பரநாதர் ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆதிசக்தி குடிகொண்ட இத்திருத்தலம் அமைதியாக, ஆரவாரமின்றி,வந்து வணங்கும் மக்களுக்கு அருளை வாரி வழங்குகிறது.

இந்த ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பரமேஸ்வரி, மேல் வலக்கரத்தில் பாசமும், இடக்கரத்தில் அங்குசமும், வலது கீழ்க்கரம் அபயஹஸ்தத்துடனும், இடது கீழ்க்கரத்தில் அன்ன பாத்திரத்தை வைத்துக் கொண்டும் இருக்கிறாள். பத்மாசனத்தில், பத்ர பீடத்தின் மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் சரஸ்வதி, லட்சுமி அருகில் நிற்க, உற்சவராக, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

மண்டபத்தில், இருகரங்களுடன் அன்னபூரணியாக நின்ற கோலத்திலும், பிராகாரத்தில் மேற்குப்புற பார்வையாக பன்னிரு கரங்களுடன், காலால் மகிஷனை மிதித்துக் கொண்டு, மகிஷன் கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும் தோற்றமளிக்கிறாள். வடக்குப் புறத்திலே ஆதி காளிகாம்பாளாக, விரிந்த சடையும் அங்குசம், பாசம் ஏந்திய மேல் வலது கரங்களுடனும், கீழ்க்கரங்களில் அபயம், கபாலத்துடன், வலது காதில் சவக்குண்டலத்துடனும், இடது காதில் பத்ர குண்டலத்துடனும், பத்மாசனத்தில் கமல பீடத்தில் வீற்றிருக்கிறாள்.

முன்புறம் அமைந்துள்ள சக்திலிங்கம் மிகச் சிறப்பானது. சக்தியும் சிவனும் ஒன்றாக இணைந்த அபூர்வ காட்சி. பொதுவாக, லிங்க அமைப்பு, பீடம், ஆவுடையார் என இருபகுதிகளை கொண்டதாக இருக்கும். ஆனால், ஆவுடையாரில் உருவங்கள் இருப்பது அரிது. இந்தத் திருக்கோயிலில், மூலஸ்தானத்தில் பரமேஸ்வரியாய் வந்து தங்கிய சக்தி, அன்னம் பாலிக்கும் அன்னபூரணியாகி, இறைவனை அடைந்ததை விளக்கும் கருத்தாக, இந்த சக்திலிங்க ரூபம் அமைந்துள்ளது.

ராகுகால நேரங்களிலும், பிரதோஷ காலத்திலும் இந்த சக்திலிங்கத்தை வழிபட்டு அன்னதானம் செய்தால், பிரிந்தவர் கூடுவர். திருமணம் கைகூடும். நலம் விளையும் என்பது வழிபடும் பக்தர்களின் அனுபவம்.