Pages

தவிப்போரைத் தேற்றும் தான்தோன்றீஸ்வரர்


தென்னாட்டு சிவத்தலங்களில் காவிரிக்கரையின் நூற்றுத் தொண்ணூறு சிவத்தலங்களில் நாற்பத்தி ஆறாவது தலமாக விளங்குகிறது ஆக்கூர். இறைவன், தான்தோன்றியப்பர். வடமொழியில் சுயம்புநாதர் என்பர். இறைவி, வாள் நெடுங்கண்ணியம்மை. வடமொழியில் கட்க நேத்திரி.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழும், முற்கால சோழ மன்னருமான கோச்செங்கட் சோழநாயனார் கட்டிய திருக்கோயில் இது. இவர் எழுபது மாடக்கோயில்கள் கட்டினார் என்று தெரிய வருகிறது. மாடம் என்னும் பெயர் கொண்ட திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்; மற்றொன்று ஆக்கூர் தான்தோன்றீசர் மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தை உடையவை, மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஆக்கூரில் மக்கள் தம் ஊருக்கு திருக்கோயில் கட்ட எண்ணி அரசனிடம் முறையிட்டிருத்தல் வேண்டும்.

கோச்செங்கட் சோழனும் (ஊர்க் காரியங்களை கவனிக்கும் அமைப்பு இருந்தது கல்வெட்டு செய்தியால் அறியப்படுகிறது) அதற்கு இசைய, இடம் தேர்வு செய்து, சீர் செய்தார்கள். அப்போது மிகப்பெரிய ஒலி எழுந்தது. அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது ஆதிரையானின் அருள்மேனி ஒளிமிகக்கொண்டு பிரகாசிக்கக் கண்டார்கள். அந்த இடமே ஆலயம் அமைத்திட மிகச்சரியானது என்று தீர்மானித்தார்கள். இறைவன் தானாக கிடைக்கப் பெற்றமையால் தான்தோன்றீசன் என்றும், தான்தோன்றி அப்பர் என்றும் மகிழ்ந்து பெயரிட்டு வழிபட்டனர். அகழும்போது கிடைக்கப் பெற்றமையால் லிங்கத்தின் பாணம் பிளந்து சிதைந்து விட்டிருக்கிறது. ஆனால், இது அகழ்ந்ததால் ஏற்பட்டதல்ல, பாலகன் மார்க் கண்டேயனை எமனிடமிருந்து காப்பதற்காக இறைவன் லிங்கம் வெடிக்க வெளிப்பட்டதுதான் காரணம் என்றும் சொல்வார்கள்.

திருஞான சம்பந்தர், ‘தொன்மையால் தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில்’ என்று இக்கோயிலை சிறப்பித்துக் கூறுகிறார். கோச்செங்கட் சோழன் காலம் நான்காம் நூற்றாண்டின் இறுதி என்பதால் இத்திருக்கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனலாம்.

உற்சவ மூர்த்தி, ஆயிரத்தில் ஒருவர் என்றழைக்கப்படுகிறார். கையில் தண்டு ஊன்றி, நின்ற நிலையில் காட்சியளிக் கிறார். ஆனால், இந்தத் தலத்து இறைவனை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் பலவாறு போற்றி வழிபட்டாலும், ஆயிரத்தொருவர் பற்றிய குறிப்பு ஒன்றுகூட இடம் பெறவில்லை. எனவே சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலி நாயனாருக்கு காட்சியளித்த இறைவனின் திரு உருவே இந்த ஆயிரத்தொருவராக இருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

‘நல்லமுது நாளும் அடியார்க்கு நல்கினார்’ என்று சிறப்புலி என்ற சிவ பக்தரைப் பற்றி சுந்தரர் கூறுகிறார். ஆயிரம் அந்தணர்களுக்கு அமுது படைத்தார் சிறப்புலி. அடியாரை பலவகையிலும் சோதனை செய்யும் பொன்னார்மேனியன் சிறப்புலியையும் சோதிக்க எண்ணி, ஆயிரம் பேரில் ஒருவரை குறையச் செய்து, சிறப்புலியை தவிக்கவிட்டு, இறுதியாக, தான்தோன்றியப்பர் தானே ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுது உண்டு சிறப்புலியின் வேண்டுதலை நிறைவு செய்து அருள் புரிந்தார். எனவேதான் ஆயிரத்தொருவர் சந்நதிக்கு நேர் எதிரே சிறப்புலி நாயனாரின் சந்நதி அமைந்துள்ளது. இறை தான் அமுது உண்ண வந்த நிலையை குறிக்கும் வகையில், கையில் தண்டு ஊன்றியபடி நிற்கின்றார். இந்த ஆயிரத்தொருவருக்கு அம்பிகை இல்லை.

வாள் நெடுங்கண்ணியம்மை தான்தோன்றீஸ்வரர் சுவாமிக்கு வலதுபுறத்தில் இருப்பது திருமணக்கோல காட்சியாகும். திருமணத் தடை ஏற்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பிகையை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும். இதற்கான யாகங்களை அம்பிகைக்கு உகந்த பஞ்சமி, அஷ்டமி, நவமி, பௌர்ணமி, பிரதோஷ தினங்களிலும், சம்பந்தப்பட்ட நபருடைய ஜென்ம நட்சத்திரத்தன்றும் செய்வது சிறப்பானதாகும். இக்கோயிலில் சுயம்வரா பார்வதி யாகம், சந்தான பரமேஸ்வரர் யாகம் செய்து பலன் பெற்றோர் பலர் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது ஆக்கூர். மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் (தரங்கம்பாடி வழி) பிரதான சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.