
ஆதி சிதம்பரம் என்று ஆன்றோர்களால் வழங்கப்படும் புண்ணியத் தலம், திருவெண்காடு. ஈண்டும் சிதம்பர ரகசியம் உண்டு. சிதம்பரத்தை போன்றே, நடராஜர் அருகில் மகாவிஷ்ணு கோயில் கொண்டுள்ள புண்ணிய பூமி. புதபகவான் உருக்கொண்டு அமர்ந்த ஸ்வேதரண்ய தலம். அதாவது கடல் நுரையைப் போன்ற வெண்மையான புனித வனம் என்பது இத்தலத்தின் பெயர். இந்திர பகவான், ஐராவதம் என்ற வெண்மை நிறம் கொண்ட யானை, அருணன், சந்திரன் ஆகியோர் போற்றி கொண்டாடி தொழுதேத்திய திருத்தலம் இது. இங்கு நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டாலும் அன்றி தர்ப்பணம் செய்தாலும் அது காசியின், திரிவேணி சங்கமத்தில், ராமேஸ்வரத்தில், திருவாஞ்சியத்தில் கயாவில், தில தர்ப்பண புரியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலனோ அதனைக் காட்டிலும் மேம்பட்ட பலன் சேரும் என்கிறார் அகஸ்தியர்.
ஈண்டு குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு, ஸ்வேதாரண்ய ஈசன் என்றும் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பாள் எனவும் பெயர். இத்தலத்தின் பெருமையை தனது நூலில் அகத்தியர்,
‘திருவெங்காட தேவருக்குற்ற குடிலாங்
கண்டோம்
ஆதிசிதம்பரமென மொழிவோங்
கேளீர்.
ஈண்டு உண்டு பல ரகசியமே. கேளாச்
செவி கேட்டு
மதனோடு சித்தரெல்லாம் தொழுது
களிக்குமிதையிப்
புண்ணியனே. கண்டோம்
தாண்டவமதனை
சிவனாடவே ஆனந்த ஸந்தியஞ் சம்
ஹாரத்ரிபுரந்த
ஆர்த்தவமொடு புயங்க வலிதமென்றே
பரவசமிதனினுமுண்டோ’
-என்றார். அதாவது சிவபெருமான்
நடனமிடுவதில் மிகச் சிறந்தவர். அதனை மேலோர் தாண்டவம் என்றே போற்றுவர். அவை ஏழு வகையானவை. அவ்வேழுவகை தாண்டவத்தையும் ஆடி சித்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியத் தலமிது. அவை முறையே 1. ஆனந்தத் தாண்டவம், 2. சந்தியத் தாண்டவம், 3. சம்ஹாரத் தாண்டவம், 4. திரிபுரந்தர தாண்டவம், 5. ஊர்த்தவத் தாண்டவம், 6. புஜங்கத் தாண்டவம், 7. லலிதாத் தாண்டவம் என்பதாம்.
முன்னொரு சமயம் மறத்துவா அசுரன் என்ற அரக்கன் மக்களை இம்சை செய்து வந்தான். பல பெண்டிர்களையும் குழந்தைகளையும் கொன்று உணவாகக் கொண்டான். அவன் சிவபக்தனும்கூட. கையில் சிவசூலத்தை ஏந்தி ஒருமுறை சிவபெருமானின் வாகனமான நந்தீசனையே காயப்படுத்தி சிவகோபத்திற்கு ஆளாகி சிவனின் நெற்றி கண்ணால் அவன் எரிக்கப்பட்ட இடம் இது. இன்றும் இங்குள்ள நந்தி தேவரின் பின்புறம், அரக்கனால் உண்டான காயவடு காணப்படுகிறது. மேலும் மார்க்கண்டயேனுக்கு ஆயுளை நீட்டியது போன்று ஸ்வேத கேது என்ற பக்தருக்கு ஆயுள் நீட்டிப்பு தந்தார்
ஸ்வேதாரண்யர்.
தில தர்ப்பணபுரியில் நரமுக கணபதி என போற்றப்படும் வீரபத்திர சுவாமி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும், இந்த திருவெண்காட்டில் எழுந்தருளி இருக்கும் அகோர மூர்த்தியை தரிசிக்கிறார் என்கிறார் அகத்தியர்:
‘முக்தி நாதன் முன்னிற்கும் வீரபத்ர
னுமே பானுவார
ராப் போது (இரவு பொழுது) பூஜிக்க
கண்டோமே.’
ஆக திலதர்ப்பணபுரியில் மனித முகத்துடன் வீற்றிருப்பவர் கணபதி அன்று, அவர் வீரபத்திர சாமி என்றே பேசுகிறது நாடி.
இங்குள்ள புதன் பகவான் மகா வரப்பிரசாதி. ஆயுளை ஆரோக்யங்கொண்டு நீட்டி தருகிறார். கலைகளில், அறிவு ஆற்றலில் மேம்படுத்துகிறார். பச்சை வஸ்திரத்தை, பச்சை வளையல்களை சாத்தி, பச்சை பயறு சமைத்து தொழுதால் மிகுந்த செழிப்பை குடும்பத்தில் சேர்ப்பார். நல்ல தொழில் அமைய, புத தோஷம் அகல, கீர்த்தி மிக பெற, மூச்சு சம்பந்தமான பீடை விலக இந்த புதபகவானை புதன்கிழமைகளில் வழிபட்டால் பெறலாம் நன்மையே. இங்குள்ள மூன்று தலவிருட்சங்களுள் வில்வ மரமும், கொன்றை மரமும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில், மூன்று முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. அவை அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று இன்றும் விளங்குகின்றன. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகையில் அவரது கண்களில் இருந்து விழுந்த மூன்று சொட்டு கண்ணீர் தாம் இவை என்கிறது நாடி.
‘ஆனந்தமாய்த் தாண்டவமது
புரிகையிலே வழிந்த துளி நீர்
விழிவிட, பொய்கையாய் பாவமது
போக்க, தேவருஞ் சித்தரும்
ஆனந்தமாய் நீராடிப் போந்தனரே’
-ஈஸ்வரனுக்கு இத்தலத்தில் பஞ்ச முகங்கள்: தத்புருடம்; அகோரம், வாமதேவம்; சடயோஜதம் என்பன. ஈசனம் என்பது ஆகாயத்தைப் பார்ப்பது. அண்டவெளி போன்ற புனிதம் கொண்டது. இங்குள்ள பத்ரகாளி அம்மன் திருஷ்டியை போக்க வல்லவர். மனிதப் பிறவியில் அறுபத்து நான்கு விதமான திருஷ்டி பீடை உண்டு. இவை அனைத்தும் அடுத்தவர் கண்களால் மட்டுமே ஏற்படும் தோஷம் ஆகும். இவற்றை போக்க ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத அமாவாசையன்று, இங்குள்ள பத்ரகாளி அம்மனுக்கு சிவப்பு புடவை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, எலுமிச்சை பழ மாலை சாற்றி ஆராதித்தால் திருஷ்டி தோஷம் முழுமையாய் தீரும் என்கிறது நாடி. ‘கற்கட மதியொழியும்போது செம்மை வத்திரஞ் சாத்தி கனியாரஞ் சூடி, நெய்சோதி யேற்றி யாராதிப்போர் நேத்திரானப் பீடை யகலுங் கண்டீரிது சத்தியமே’இங்கு அஷ்ட லட்சுமிகள் குடி கொண்டுள்ளனர். பட்டினத்தார், திருமூலர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் தொழுத பெருங்கோயில். பிறவாமை; பிறந்த காலத்து வறுமை இல்லாமை; பிணி இல்லாமை போன்றவற்றை அருளும் புண்ணியத்தலம். பூர்வ ஜன்ம சாபத்தை போக்கும். மூதாதையர் தம் ஏக்கம் தணிவிக்கும். குலதேவதையை தொழாது விடுத்த தோஷத்தை போக்கும் ஆற்றல் மிக்க ஈசன் இவர். இவர் தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சத்தைப் போன்றவர் என்கிறது அகஸ்தியர் பாடல்.
‘அருள் தரும் - ஆனந்தமதனை
யள்ளித் தரும் - பிறந்த காலத்து
நன்மைதனை நாடி யளிக்கும்.
முன்னை பிறவி வினை கறுக்குமே
பிண்டமிடா பீடை போக்கும்
குலவிறை கொடுமை குறைக்கு
மிவ் வீசன் திருவெண்காடு
கண்டோமே’
ஆன்மிக ஈடுபாடு உடைய ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய உன்னத கோயில் இது. நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது, இத்திருத்தலம்.


