Pages

கொல்லூர் உபதேசம் - 1



சாமி புத்தகம் – கொல்லூர் உபதேசம்
(பக்கம் 8-11)
நமது வாழ்க்கையில், நாம் தவறு செய்யாமலேயே, பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது,
உணரத்தான் பயன்படுத்த வேண்டும்.
உணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.
அதாவது, தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது. அதை நீக்கிடல் வேண்டும்.
தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி,
நன்மையின் பயன் எதுவோ அதை,
ஆக்கப்பூர்வமான நிலைக்கு, மாற்றிடல் வேண்டும்.


இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். நாம் காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால், காரத்தின் ஏக உணர்வுகள், நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம், அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படும்போது, சுவை மிக்கதாக மாற்றுகின்றது.


இதே போன்றுதான், மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும், பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று, அவர்கள் படும் வேதனையைப் பார்த்து, சொல்லால் கேட்டுணர்ந்தால், உணர்ந்த அச்சக்தியை, நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.


உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அடுத்த கணம் அதனுடைய தீயவினையாகச் செயல்படும் நிலையை, மாற்றிடல் வேண்டும்.


நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து, தீமையிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ, இதைப்போல நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின், அடுத்தகணம், நம்முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து, நமக்குள் அடுத்து, தீமையை விளைவிக்கும் நிலையை, தீமையை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.


அதை எவ்வாறு சமப்படுத்த வேண்டுமென்று, அன்று கோலமாமகரிஷி, தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றலை, அவரும் வெளிப்படுத்தியுள்ளார்.


அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி, மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள்சக்தி, கோலமாமகரிஷி அவர் வளர்த்த இச்சக்தி, நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து, நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நமக்குள் இணைப்போம்.


அவ்வாறு, நமக்குள் இணைத்து, அந்தத் தத்துவ மகரிஷி, உலகவியல்களை எவ்வாறு கண்டுணர்ந்தார்? அவருக்குள் எப்படி விளைய வைத்தார்? அதைப்போன்று, அந்தக் கோலமாமகரிஷி, அவருக்குள் விளைந்த, அருள்ஞான வித்தை உங்களில் பதிவு செய்து, உண்மையான மெய் உலகில், நாம் அவர்கள் சஞ்சரித்த அவ்விடங்களில் நாமும் சென்றடைய இது உபயோகமாக இருக்கும்.


ஆகவே, இங்கே கொல்லூரில் வந்து நாம் தியானிக்கிறோம். ஏனென்றால், அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டுணர்ந்தான். ஆனால், கோலமாமகரிஷியோ
“அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெறவேண்டும்”,
“அவர் எண்ண வலுவால், தனக்குள் நுகர்ந்தறிய வேண்டும்”,
“இன்னொரு சரீரம் வேண்டியதில்லை”,
என்ற வலுவான எண்ணத்தை அவர் கொண்டு,
“என்றும் அந்த சப்தரிஷிகளுடன் நாம் இணைந்திடல் வேண்டும்”, என்று தன் எல்லையை வகுத்து, அவர் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவர் விண்ணுலகம் சென்றார், மிகக் குறுகிய காலங்களில்தான்.


இவையெல்லாம், 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி. ஆகவே சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள், அவர் எங்கெங்கு தவமிருந்தாரோ, அந்த அலைகளின் தன்மை இங்கே படர்கிறது.


அதை நாம் பருகுவோமென்று பிரார்த்தித்து, உயிரான ஈசனை வேண்டி, நாம் அனைவரும் தியானிப்போம்.
(பக்கம்18-26)
நாம் மனிதனாக இருக்கிறோம். கூட்டாக இருக்கிறோம். கூட்டாக இருக்கும்போது, எதைப் பெறுகின்றோம்? கொல்லூருக்கு நாம் எதற்கு வந்தோம்? அந்த மெய் ஒளியை எப்படிப் பெற வேண்டுமென்று எண்ணுகிறோம்?


மெய்வழி எப்படி என்ற நிலையை, அறிய முற்படுகிறோம். அப்பொழுது இங்கேயும் தேடி வருகிறோம். நாம் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும், மெய்யுணர்வைப் பெறவேண்டுமென்ற நிலைக்குத்தான், இங்கே தேடி வருகிறோம்.


இதைப்போலத்தான் கோலமாமகரிஷி அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளை, துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின் ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப் பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.


நாமும் இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை, நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு உணர்வையும் கொடுக்கிறோம்.


துருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.


விண்ணின் ஆற்றலைப் பார்க்க முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம். அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம் சென்றோமென்றால் நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக வைக்கிறோம்.


யாம், குறைந்தது ஆறு வருடங்கள் இங்கே இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின் இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.


ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள் இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப் பெற முடியும்.


நாம் இங்கிருந்து சொல்கிறோம் என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும் போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.


நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச் சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.


மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.


அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.


இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.


ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.


ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.


ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.


இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.


தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.


(பக்கம் No 27-32)
இந்த மூகாம்பிகையில் வந்து, நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும். மூன்று சக்தியின் நிலைகள் – வெப்பம், காந்தம், விஷம். நமக்குள் ஈர்க்கப்பட வேண்டியது எது? நம்முடைய மனதில், ஞானம் பெற வேண்டியது எது? என்கிற நிலையை அறிவற்குத்தான், எமது குருநாதர் இங்கே அழைத்துவந்தார்.


இங்கே வந்து அமர்ந்து தியானிக்கும்போதுதான், அதற்கான விளக்கங்கள் கிடைப்பதற்கும், மனிதனின் உணர்வுக்குள் என்ன செய்கிறது? அது எதற்காக வேண்டி, கோலமாமகரிஷி செயல்பட்டார் என்ற நிலையும், தெரிய வந்தது.


அவரின் செயலாக்கத்தில், மனிதனுக்குள் சேர்ந்த உணர்வுகளை ஆட்சி புரிவதற்காக, பலகாலம் தனக்குள் பதிந்துகொண்ட நிலைகளை, இது பிளக்க, ”துருவத்தின் நிலைகளை” அதிகமாக எடுத்துத் தவமிருந்தார், கோலமாமகரிஷி.


துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பருகும்போதுதான், தான் வளர்ந்து வர வர, இவர் வயதும் முதிர்ந்து விடுகிறது. அதிலிருந்து இவர் ஆன்மா வெளிவந்தபின், அவர் அதற்குத் தகுந்த உடலாக, அன்றைக்கு “ஆதிசங்கரர்” உடலைத் தேர்ந்தெடுத்தார்.


மற்றவர்கள் உடலின் இச்சை கொண்டு, ஆதிசங்கரரை கங்கையிலே மூழ்கடிக்கும் போது, இந்த உடலின் பற்று இல்லாதபடி, எதைப் பற்றியதோ, ஆதிசங்கரர் உடலுக்குள் சென்ற கோலமாமகரிஷியின் உயிரான்மா, விண்வெளி செல்கிறது. ஆதிசங்கரரின் உடலிலிருந்துதான் விண் சென்றது.


ஆகவேதான், எமது குருநாதர் எம்மைக் காசிக்குப் போகச் சொன்னார். அந்த காசியிலே இருக்கப்படும்போது, அன்று, ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து அவருக்கு வயிற்றுவலி வரவைத்து, ஒரு விநாயகர் கோவிலில் “அர்ச்சனை, அபிஷேகம், யாகங்கள் செய்ய வேண்டும் என்றும், வேள்விகள் செய்தால்தான், உன்னுடைய வயிற்றுவலி நீங்கும்” என்றும், அதிலிருந்து “நீ யாகத்தைச் செய்யவில்லையென்றால் தப்பமுடியாது” என்று துவைதவாதிகள், ஆதிசங்கரரை மிரட்டிய நிலைகளை எமக்குக் காண்பித்தார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


ஏனென்றால், ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பற்றிப் பேசுகிறார். சூட்சும நிலைகள் எப்படி இயக்குகிறது? எந்த மணத்தை நுகர்கின்றாயோ, அது ஞானம். அது சூட்சமத்தில் உனக்குள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையையும், வசிஷ்டாத்வைதத்தையும் அங்கே எடுத்துரைக்கிறார்.


“வசிஷ்டாத்வைதம்” என்பது, தான் கவர்ந்து கொண்ட சத்து, தனக்குள் மறைந்து எவ்வாறு இயங்குகிறது என்ற நிலை தான்.


இவர் அத்வைதத்தை எடுத்தாலும், நீ கவர்ந்து கொண்ட “வசிஷ்டாத்வைதம்”, உனக்குள் எப்படி இயங்குகிறது? என்று உணர்த்தினார்.


அவ்வாறு சொல்லப்படும்போதுதான், அன்று அரச காலங்களில் துவைதத்தை வைத்து வணங்கியவர்கள், சிலையை வைத்து வணங்கி, யாக வேள்விகளைச் செய்யக் கூடியவர்கள் அனைவரும் சேர்ந்து, இவர் யாகம் வளர்த்து, மற்ற வேள்விகளைச் செய்தால்தான், உண்மையான பக்தி என்று அவர்கள் சொல்கிறார்கள்.


ஆதிசங்கரர், இம்முறையைச் செய்வது தவறு என்று வாதிட்டார். உண்மையான நெருப்பு உயிர் என்று உபதேசித்தார். ஆக இது வசிஷ்டாத்வைதம். தனக்குள் நெருப்பின ஈர்ப்பான அந்தக் காந்தத்தால் கவரக்கூடிய நிலையையும், கவர்ந்து கொண்ட நிலையையும் என்றார்.

நாம் எதை எண்ணுகின்றோமோ,
அதனின் உணர்வு நமக்குள் கவரப்படும்போது, தன்னுள்,
தனக்குத் தெரியாமலே அதன் இயக்கங்கள் இருக்கும்
வசிஷ்டாத்வைதம் என்ற நிலையை அவர் உணர்த்துகின்றார்.


இவ்வாறு அந்த நிலையை உணர்த்தினாலும், “இது உண்மையல்ல” இந்த சிலையிலிருந்துதான் நீ எல்லா நிலைகளும் பெறுகின்றாய். இந்தச் சக்தியை, இந்த தெய்வத்தின் நிலைகளிலிருந்துதான் நீ பெற முடிகின்றது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.
.
ஆதிசங்கரர், “இதுவல்ல உண்மை, உயிர் நெருப்பு”
புறத்தீயிட்டு வேகவைப்பது
இவை உன்னுடைய இச்சைக்கு இருக்கும். இந்த இச்சையை எண்ணினால், “உனக்குள் எரிக்கும் சக்திதான் வரும்”.


“தீமைகளினுடைய நிலைகளைத்தான் உனக்குள் வளர்க்க முடியும்”,
“இந்த நல்ல ஜீவனுள்ள அணுக்களை இழக்கின்றாய், அழிக்கின்றாய்”
“நல்ல வாசனையான பொருட்களைப் போட்டு, நீ அழிக்கின்றாய்”.


ஆக, உயிரான நிலைகளில், உன்னுள் தீமையான உணர்வுகளைப் போட்டு உனக்குள் பொசுக்கு என்று விவாதிக்கிறார், அன்று ஆதிசங்கரர்.


“உயிர்களைப் பலியிடப்படுவது யாகம்” அதிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தி எடுப்பது தனக்குச் சாதகம் என்ற நிலைகளில், அந்த இடத்தில் வாக்குவாதம், பட்டிமன்றம் நிறைய நடக்கிறது.


காசிக்குச் சென்று கங்கைக்கரையில், விநாயகர் கோவிலில் அமர்ந்து யாம் தியானிக்கும்போது, இவருள் இருந்து என்ன செய்கிறது என்பதை உணர முடிந்தது.


இவர்களுக்குள் வாதிக்கும்போது, ஆதிசங்கரரை “நாஸ்தீகன்” என்ற நிலைகளில் பட்டம் கட்டினார்கள். இதனுடைய உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்டபின் தான், யாம் அங்கு சென்றோம்..


அவ்வாறு பட்டிமன்றம் நடக்கும்போது “இது உண்மையில்லை”, இது உன்னையும் “நாஸ்தீகனாக்கும்” எந்த மனிதன் உணர்வைக் கொண்டு நீ எடுத்தாயோ, அது உன் சொல்லைக் கேட்போரையும், நாஸ்தீகனாக்கும் என்ற நிலைகளில், ஆதிசங்கரரை நாஸ்தீகன் என்று பட்டம் சூட்டினார்கள்.


“புறத்தீயிட்டு, எந்த நிலைகளில் நீ வேக வைக்கின்றாயோ”,
இங்கே பொருட்கள் கருகுகின்றது. நறுமணம் அழிகின்றது.
இதனுடன் நெருப்பில் இடப்படும்போது,
அதனின் உணர்வு அங்கே கருக்கப்படுகின்றது.
ரோஜாப்பூ போட்டாலும், கருகத்தானே செய்கிறது.
எந்த நறுமணத்தைப் போட்டாலும் கருகுகின்றது.


ஆனால், உயிரான நெருப்பில், நாம் அந்த நறுமணங்களைப் போடும்போது, இது அலைகளாகப் படருகின்றது. இது வசிஷ்டாத்வைதம். அந்த நறுமணத்தின் தன்மையை நீ கவரப்படும் பொழுது, இந்த உணர்வுகள் உனக்குள் நறுமணமடைகின்றது.


இதை உணர்த்துவதற்கு, கண்ணால் கவரப்படும் உணர்வுகளுக்கு காட்சியாக வைத்ததுதான். ஆனால், எண்ணத்தால் எவ்வாறு எடுப்பது? என்ற அளவில் பட்டிமன்றம் நடக்கின்றது. அந்த அளவுக்கு வாக்குவாதம் நடக்கிறது. அங்கே தியானத்தில் அமரும்போதுதான், குருநாதர் எமக்கு உணர்த்திக் காட்டினார்.




(பக்கம் No 38-41)
கோலமாமகரிஷி அவர் அரசாட்சி புரிந்த காலத்திலும், கடும் தவமிருக்கும் பொழுது, அவர் உடலிலிருந்த வெறுப்புணர்வுகள், உயர்ந்த உணர்வுகளை எடுக்கவிடாது, அவருடைய ஜீவான்மாவில் பதிவு செய்த நிலைகள், ஆன்மாவாக முன் நிற்கிறது. தனக்குள் ஜீவான்மாவில் கவர்வது அனைத்தும், ஆன்மாவில் நிற்கின்றது. சுவாசித்த உணர்வோ, தன்னைத் தான் வளர்த்துக் கொள்வதற்கு, வேலை செய்கின்றது.


ஒவ்வொரு குணமும், தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது, தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும். ஒரு நஞ்சான உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நமக்குள் நல்ல குணங்களை அழிக்கும்.


இந்தப் பேருண்மையை அறிந்துகொள்வதற்குத்தான் இங்கே கோலமாமகரிஷி, எதை எதை எடுத்தார், வெறுத்தார், அறிந்தார், ஞானத்தால் உணர்ந்தார் என்ற நிலையை அறிவதற்குத்தான், யாம் இங்கே கொல்லூரில் அவ்வளவு காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம்.


தண்ணீர் கிடையாது, உணவு கிடையாது, ஒன்றும் கிடையாது. எம்மை இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டார் குருநாதர். இங்கே பல நாட்கள் தங்கிவிட்டு, பின்புதான் வெளியே வந்தோம். யாருக்கும் தெரியாது.


இவ்வாறு அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமென்றால், “எமது வார்த்தையைக் கேட்பது பெரிதல்ல. எம்மைப் பின்பற்றுவதும் பெரிதல்ல”. ஆனால்,
நாம் முந்தைய நிலைகளில்
பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு.
அதை நாம் அடக்க வேண்டும்.


நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது, அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால், தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது, பிரேக் போட்டவுடன், சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால், கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.


இதற்கெல்லாம் காரணம்,
நமது உணர்வுகளில் வேகம் எதுவோ,
அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
அதனின் வேகச் செயலாக, வேலை செய்யும்.
இதன் விளைவை நமக்குள் எப்படி ஊட்டும்?
என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான், இதைச் சொல்கிறோம்.


இதேமாதிரிதான், நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது, முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது,
“என்னத்தை எடுத்தோம், இப்படி வருகிறதே”
“நாம் ஜெயிக்கவில்லை,
நம்மால் முடியவில்லை போலும்”
என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.


யாம் நீங்கள் பெறவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை, மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.
ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள்,
குறுக்கே குறுக்கே வருகிறது.
“நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ”
என்று எண்ணத் தூண்டும்.


இப்படி, முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள், நமக்குள் உண்டு. அதை நாம் நிறுத்த வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள், அந்த மெய்ஞானிகளின் உணர்வைக் கவரும், திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.


இதுதான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன். இந்த ஆறாவது அறிவால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும். அப்படி அதை ஞானமாக்க வேண்டும்.


இதை நமக்குள் படைக்கும் பொழுதுதான், அந்த உணர்வின் இயக்கம் நமக்குள் வரும், என்ற உண்மையை இங்கிருந்து யாம் உணர்ந்தோம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.


இதைத்தான், உங்களுக்கு அடிக்கடி யாம் பதிவு செய்கிறோம். நம்மையறியாது சேர்ந்த தீமைகளை, நாம் எப்படி நீக்கிப் பழகவேண்டும் என்று உபதேசிக்கிறோம். எமது அருளாசிகள்.
பக்கம் No 42-44)
ஆதிசங்கரர், தன் தாய் காக்கப்பட வேண்டுமென்ற வேதனையுடன் இருக்கும் பொழுது, சோற்றுக்கில்லாமல் தவித்து, பக்தி மார்க்கம் கொண்ட அந்த இளம் பிஞ்சு உள்ளம் கொண்டு ஏங்குகிறார். அவர் எதைப் பெறவேண்டுமென்று, தாயைக் காக்க வேண்டுமென்று எண்ணுகிறாரோ, தன் உடலுக்குள் “உயிர் தாயாகின்றது”. அது தன்னைக் காக்க ஆரம்பிக்கின்றது.


ஆக, தனக்குள் எடுக்கும் உயிரின் ஈர்ப்பு “நெருப்பு”. அது கவர்ந்த காந்தம் - லட்சுமி, கவர்ந்து கொண்ட ஞானம் - தாய். தன்னைக் காக்க வேண்டுமென்ற ஞானம்.


எந்த உடலில் எந்த நிலையில், இருந்தாலும் இந்த உயிர் எதை எண்ணுகிறதோ, அந்த உடலைக் காக்கும் நிலைகளில், அது தாயாக வருகின்றது.


அதைத் தன் சேயாக இணைத்துக் கொள்வதும், தாயாக நின்று காத்துக் கொள்வதும், என்கிற நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான், உபதேசிக்கும் இந்த விளக்கமெல்லாம் முன்பு சொல்லவில்லை, கற்றுணர்ந்த உணர்வுகள் இது,


இந்த உணர்வின் இயக்கங்கள் என்ன என்கிற வகையில், உங்களுக்கு இந்த உயிரின் இயக்கமும், அது தாய் என்ற நிலையும், அது எப்படிச் செயல்படுகின்றதென்ற நிலையை, நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது, என்ற நிலையில் உபதேசிக்கிறோம்.


குருவின் வேலை என்ன என்று கேட்டீர்களானால், அந்தக் காலத்தை ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன், இருப்பார்கள். அந்த உணர்வுக்குத் தக்கவாறு, பதிவு செய்கிறோம். அதற்குத்தான் இந்த நிலைகளில் உபதேசிக்கிறோம்.


யாம் உங்களிடம் சாதாரண நிலைகளில்தான் இருக்கிறோம். காரணம், உங்களுடன் ஒன்றியிருந்தால்தான் நீங்கள் இதைக் கேட்பீர்கள்.


யாம் கொஞ்சம் ஜபர்தஸ்து பண்ணிக் கொண்டிருந்தால், பக்கத்தில் வரப் பயம் வரும். சொல்வதன் உண்மை நிலைகளை, இதுவே தடைப்படுத்திவிடும். உங்களை அறியவிடாமல் செய்யும்.
எம்மை உயர்த்திக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைத் தாழ்த்திக் கொண்டேதான் இருப்பீர்கள்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா?
ஆகையினாலேதான், உங்களை அணுகி வருகிறோம்.


எமது குருநாதர் பித்தனைப் போல இருந்தார். இப்படி இருக்கிறாரே, என்ன சொல்லப் போகிறார்? என்று யாம் அவரை அறிய ஆரம்பிக்கின்றோம்.


இதைப் போலத்தான், எம்மை அணுகி வரப்படும்போது, அந்தப் பற்றே வரும். எமது மேலே பற்று வரவில்லை என்று சொன்னால், இதை எடுக்க முடியாது. உண்மையான பற்று அங்கே வரவேண்டும்.


எனவே, உண்மையான பற்றை உங்களிடம் ஏற்படுத்தச் செய்கிறோம். ஆக, என்னைப் போற்ற வேண்டுமென்றால், ஜபர்தஸ்துதான் வரும்.


உண்மையான இயக்கம், எதன் வழியில் எதைப் பெற்றது? என்ற நிலையை, நாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால், நாளை “இந்தச் சாமி இப்படி இருந்தார்”, “அந்தச் சாமி இப்படி இருந்தார்” என்று எத்தனையோ பேர் சொல்வார்கள்.


இது எந்தெந்த வழிகள்? என்ற ஞானம் உங்களுக்கு வரும். ஆக, இந்த ஞானம் வரத்தொடங்கி விட்டாலே, மெய்ஞானம் உங்களுக்குள் தன்னாலே வளரும்.


நம்மில் வளர்ப்பவர்கள் எல்லோரும் எந்தக் காவியத்தைப் படைத்தாலும், அதைப் பிளந்து, அதில் உண்மையை உணரும் தன்மையே வரும். இது வர வேண்டும். இல்லையென்றால், அந்த மெய்ஞானம் நமக்குள் வராது.


ஆக, ஒருவனுடைய நிலைகளில் தீமை விளைகிறதென்றால், அது “மெய்” அந்தத் தீமையின் உணர்வுகளை நுகர்ந்ததனால், தீமையின் செயலாக இயக்குகின்றது. ஆனால், தீமை அகன்றால், அவனுக்குள் எதை இணைக்கின்றோமோ, அந்தத் தீமையை அகற்றியபின், எதை இணைக்கின்றோமோ, அது இயக்குகின்றது. இது மெய். இந்த மெய்யை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை. பிறருடைய செயல்கள் இயக்குகின்றது.


தபோவனத்தில் நாம் இருக்கிறோமென்றால், மெய்யைக் காண வேண்டுமென்று ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஆர்வத்தில் இருக்கும் போது, ஒருவன் சிறு தவறு செய்தால், இங்கே நமது எண்ணத்தை விட்டு விடுகிறோம்.


நீக்க வேண்டுமென்று முதலில் நம்மில் பிரயத்தனம் எடுத்தால், நீக்கும் உபாயம் நமக்குள் கிடைக்கும்.


நீக்கும் உபாயம் நமக்குள் கிடைத்தவுடன், “அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள்”, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இதை ஓங்கி வளர்த்துக் கொண்டு, அவனுக்காக வேண்டி எண்ணி, நமக்குள் வரும் பிறிதொருவரின் உணர்வினைத் தணிக்க வேண்டும்.


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று இதை நமக்குள் திணித்துவிட்டால், அவன் செய்த தவறு, நமக்குள் வளராது.


இல்லையென்றால், “இத்தனை பேர் சொல்கிறார்களே, கேட்க மாட்டேன் என்கிறானே”, என்ற இந்த உணர்வுகள் இங்கே வளரும். ஆக நமக்குள் அந்த எண்ணம் வளராது. நமது எண்ணம் அவன் நல்லதைப் பெற வேண்டுமென்ற நிலைக்கு, நாம் வர வேண்டும்.