Pages

கோலமாமகரிஷி - 2 (பக்கம் 35 -38)



(பக்கம் 35-38)
உதாரணமாக, சவுண்டால் மரம் இருக்கிறதென்றால், இதற்கு வெப்பம் அதிகம்.
வெப்பம் அதிகமாக இருப்பதனால்,
தன்னுடைய ஈர்ப்பு சக்தி வரப்படும் பொழுது,
பூமியின் ஈர்ப்புக்குள் வேகமாக ஓடும்.


பாறையானாலும் உடைத்துத் தள்ளிவிட்டுச் செல்லும். மழையில்லை என்றாலும் சட்டை செய்யாது. இந்த மரம் தன் உணர்வின் நிலையில், பாறைக்குள் இருக்கக்கூடிய நீரை எடுக்க, தேடிச் செல்கின்றது.


வேப்ப மரமும் அப்படித்தான். தன் உணர்வின் சத்தை வேகமாகச் செலுத்தும். வேப்ப இலையைச் சாப்பிட்டால், நம் உடல் உடனே சூடாகும். இந்த சவுண்டால் மர இலையைச் சாப்பிட்டாலும் உடல் சூடாகும்.


அந்தச் சூட்டின் தன்மை அதற்கு வேண்டும். அதே சமயம், அதற்குத் தகுந்த காந்தம் இருக்கின்றது. காந்தத்திற்குத் தக்கவாறுதான், தன் ஈர்ப்பின் சக்தி வருகின்றது. எத்தகைய வறட்சியாக இருந்தாலும் தாங்கிக் கொண்டிருக்கும்.


அதே மாதிரி விஷ ‘முள்” இருக்கிறது. அது காற்றிலிருந்து விஷத்தைக் கவர்ந்து கொள்ளும். விஷத்தைக் கவர்ந்து கொண்டாலும், அதற்குள் இருக்கக்கூடிய, காந்தத்தின் துடிப்பின் வேகம் அதிகமானாலும், அதுவும் பாறைக்குள் ஈர்க்கும். அது எந்த வறட்சியானாலும் ஈர்த்துக் கொள்ளும்.


ஆனால், அது காற்றிலிருக்கக் கூடிய விஷத்தையும், ஈர்த்துக் கொள்ளும்.சவுண்டால் மரம், அதற்குள் இருக்கக் கூடிய வெப்பமும், வெப்பத்திலிருக்கும் காந்தமும் கலந்திருப்பதனால், காற்றிலே நல்ல மணம் இருக்கிறது. நம் உடலிலே சத்தாக வேண்டும்.


உடல் சூடாகிறது என்றால், இந்த சவுண்டால் இலையில் இரசம் வைத்துச் சாப்பிட்டால், ஜலதோஷம் விட்டுவிடும்.


அதே சமயத்தில் மாட்டிற்குத் தீவனமாகப் போட்டால், பால் நன்றாகச் சுரக்கும். இதையே தாய்மார்கள் ரசம் வைத்து, கீரை போலவும் சாப்பிட்டால், குழந்தைகளுக்குப் பால் ஜாஸ்தி கிடைக்கும். விஷம் இப்படியும் இருக்கிறது.


ஒரு தாவர இலைச் சத்துக்குள் அது, அது கலந்து கொண்ட வெப்பமும், விஷத்தின் அளவுதான், எல்லாமே உணர்வுதான். இன்று விஞ்ஞானி இதைத்தான் கண்டுபிடிக்கின்றான். இந்த உடலுக்குள் என்ன செய்கிறது?


ஆக, இவன் இயற்கையில் வருவதை விடுத்து, விஷம் வேண்டுமென்றால், பாம்பைத் தேடிப் பிடிக்கின்றான். இந்த விஷத்தை மருந்தில் கலக்கிறான்.


அன்று வைத்தியர்கள், இந்த விஷச் செடி இங்கே இருக்கிறது. மனித உணர்வுக்குள் இன்னதென்று, இந்தச் சத்தை எடுப்பான். குரு மருந்தாக வைத்துக் கொள்வான்.


இந்த விஷச் செடியின் சத்துக்கு, எந்த மருந்தாக இருந்தாலும், வேகமாக செயல்பட, இந்த விஷ மருந்தை லேசாகக் கலக்க வேண்டும். அது கலந்தவுடன், இந்த விஷம் வேகமாக இழுத்துச் சென்று, எல்லா இடத்திலும் பொருந்தச் செய்கின்றது. விஷம் குருவாகின்றது.


ஆகவே, சூரியனுக்கு குரு யார்? ஆதிசேஷன் என்ற விஷம்தான். இங்கே மேரு என்ற மலையை மத்தாக வைத்துக் கடைந்தான் என்று வியாசக பகவான் சொன்னார். எதன் மேல் நாராயணன் பள்ளி கொண்டிருக்கின்றான்? விஷத்தின் மேல்.


“மேரு” என்ற மலையை மத்தாக வைத்தான் என்பது, அடுக்கடுக்காகச் சேர்ந்த பெரிய மலைதான் நம் பூமி. “வாசுகி”, தான் சுவாசித்த இந்த உணர்வு விஷம். சுழலச் செய்வதற்குச் சேர்த்துக் கொண்ட விஷம், இதில் துடிப்பாகி, வளரச் செய்கின்றது.


வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, “பாற்கடலைக்” கடைந்தான். அதாவது விண்ணிலே இருக்கக்கூடிய ஒளி அலைகளிலே இது கடைகின்றது. சுற்றிச் சுற்றிக் கடைந்து, தனக்குள் எடுத்துக் கொண்ட வெண்ணைய்தான் நாம் எல்லோரும்.


எடுத்துக் கொண்ட செடி, கொடி, கல், மண் எல்லாம் விளைந்து,
பாலுக்குள் கடையும் பொழுது வெண்ணெய் வருவதைப் போல,
அதே மாதிரிதான், எல்லா நிலைகளிலும்,
புழுவிலிருந்து வடித்து வடித்து, மனிதனாகி,
இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி,
விண்ணிற்குப் போகக்கூடிய சக்தி.
(பக்கம் 56-58)
மனிதனுக்குள் இந்த சலிப்பு என்பது உப்புச் சத்தாகிவிடும். அடிக்கடி சலிப்படைகின்றவரிடம் சென்று சரக்கு வாங்கிப் பாருங்கள். பால் வாங்கி வந்தால் கூட, கெட்டுவிடும். நீங்கள் சலிப்பான நிலைகளில் வேலை செய்தாலும் கூட, நிச்சயம் அங்கே உப்புச் சத்து கூடிவிடும்.


இந்த உணர்வு, கூடக் கொஞ்ச காலம் ஏங்கியிருந்தால் போய்விடும். நாம் என்னமோ நினைக்கிறோம். இந்த உணர்வின் இயக்கம் என்ன செய்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


அதைப்போலத்தான் இன்று இந்த தியானமிருக்கும் நீங்கள் யாருக்காவது கஷ்டம் வந்துவிட்டால், “ஐயோ இப்படிப் பண்ணுகிறார்களே” என்று எண்ணுவீர்கள்.


நம் பிள்ளை, படித்து நன்றாக இருக்கவேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே, இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.


வீட்டுக்காரர் வந்தவுடன், “பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்து, கெடுத்து விட்டீர்களே” என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள்.
போனபின் தியானம். என்ன தியானம்?
“என்ன அவன் பண்ணுகிறான்”,
“அவன் இப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறான்”
“இவன் அப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறான்”
“படிக்க மாட்டேன் என்கிறான்”
“இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்”
என்று மனதிலே எண்ணித் தியானம்.
அந்த நேரத்தில், அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ” என்று, அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும்.


இந்த ஜெபம் என்ன செய்யும். அந்தச் சாபம் வந்தவுடன், கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல், மேல்வலி, உடல்வலி என்று எல்லாமே சகிக்க முடியாது. இந்த தியானம் செய்கிறோம். ஏனென்றால், அவனை நினைத்து வேதனையை எடுத்தவுடன் கை, கால் குடைச்சல் வரும். இந்த தியானம் செய்கிறோம்.


நாம் என்ன செய்ய வேண்டும்.? இரவில் படுக்கும்போது, “ஆத்மசுத்தி” செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். என் ஜீவாத்மா பெற வேண்டும். என்று எண்ணவேண்டும்.


நீங்கள் ஒரு நாளில் பத்து நிமிடம் தியானமிருக்கும்போது, நாம் கொடுத்த இந்த சக்திக்காக வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.


அந்த சக்தியை எடுக்கும்போது, அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும். அவ்வாறு பிரித்துக் கொடுப்பதற்காக வேண்டி உங்களுக்கு செய்து கொடுக்கிறோம்.
சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகிவிட்டது. நன்றாகிவிட்டது என்று சொல்வோம். அடுத்து, இரண்டவது தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள்.
மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்?
யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது?


ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரம் கூட, செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும், “சாமி” தான் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.


ஒன்றும் பலன் இல்லை என்றால், “என்னத்தை சாமி செய்துவிட்டார்” என்று சொல்கின்றார்கள்.


உடனே ஜோசியக்காரனிடம் சென்று, நல்ல நேரம் வருகிறதா? கெட்டநேரம் வருகிறதா? என்று யாகத்தைச் செய்துவிட்டால், இந்த இயந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா! என்றிருப்பார்கள்.


“உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றால், செயல்படுத்த மாட்டார்கள்.


ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிமிடத்திலும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக, “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்கள் கைமேல் கொடுப்பது.


(பக்கம் 60-62)
ஒரு அணுவின் தன்மை, ஒரு குணத்திற்குள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றது. ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், எத்தனையோ தந்திரங்களைச் செய்கின்றது.


ஆனால், அந்தக் குருவி தனக்குள் தந்திரத்தை எடுத்து, அந்த உணர்வின் தன்மையை தனக்குள் நுகர்ந்து, தனக்குள் சேர்த்து, தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய உணர்வின் தன்மையை, எடுத்துக் கொள்கின்றது.


இந்த உணர்வாலே, எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையும்,
அதற்குள் வளர்ச்சியாகி, உயிராத்மாவில் சேர்கின்றது.
இப்படி, தேன்கூடு போல அது வளர்ச்சியாகி,
உயிராத்மாவுடன் சேர்த்தபின்,
எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப,
தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வு வருகிறது.
தீயதை நீக்கி, நல்லதை எடுக்கிறது.


இதே மாதிரிதான், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல், நமக்குள் வருகின்றது. உதாரணமாக, ஒரு புழுவை, ஒரு குளவி கொட்டுகின்றது. அந்தப் புழுவின் உடலில், குளவியின் விஷம் படுகின்றது. அதே சமயம், குளவியாக மாறுகின்றது.


குளவியாக மாறியபின், அதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். குளவியின் விஷம் அதற்குள் இருக்கின்றது. அதன் நிலைகள் கொண்டு, இதுவே தன் இனத்தைப் பெருக்குவதற்கு, அடுத்த புழுவைக் கொண்டு வைக்கின்றது.


இதற்கு யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. ஏனென்றால், அந்த உணர்வுக்குள் இருக்கக்கூடிய இயக்கம் அப்படிப் பட்டது.


புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், ஒவ்வொரு உணர்வின் தன்மையில் மாற்றங்களாகி,
அறியக் கூடிய சக்தியும்,
தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய உணர்வும்,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உருவாகி,
அதற்குண்டான உடலை வளர்த்து,
எல்லாக் கழிவையும் கழிவாக்கக் கூடிய ஆற்றல், (நமக்கு) மனிதனுக்கு வருகின்றது.


நாம் சாப்பிட்ட ஆகாரத்தில், நஞ்சின் தன்மை இருந்தாலும் அதைக் கழித்துவிட்டு, நல்ல உடலாக நமக்குள் சேர்த்து, அந்த ஆற்றல் மிக்க மணமாக வருவதுதான் ஆறாவது அறிவு.


இந்த ஆறாவது அறிவால், நாம் சுவாசித்து, உயிரிலே பட்டவுடன் எதை எண்ணுகின்றோம்? கருணைக் கிழங்கில் விஷம் இருக்கின்றது. அதை அறிந்து, அந்த விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிடுகின்றோம்.


இந்த ஆறாவது அறிவின் பெயர்தான், “சரவணபவா”,


“குகா”, அதாவது எதையுமே சரணடமடையச் செய்யக்கூடிய சக்தியாக, உடலான இந்தக் குகைக்குள் நின்று,


“கந்தா”, சிறுகச் சிறுக வருவதைத் தனக்குள் அணைத்து,


எத்தனையோ குணங்கள் கொண்டு, எத்தனையோ வகையான உணர்வுகளை, நாம் நமக்குள் எடுத்தாலும், “கடம்பா” இதை எல்லாம் உருவாக்கி,


“கார்த்திகேயா”, ஆக, எத்தகைய தீய நிலைகள் வந்தாலும், இந்த உடலில் எப்படி, விஷத்தை மலமாக மாற்றி, உடலை நல்லதாக மாற்றி, அறிந்து செயல்படும் ஆற்றல்மிக்க சக்தியான, இந்த ஆறாவது அறிவின் தன்மை, தனக்குள் உண்டு என்ற, தன் நிலையைப் பாடச் செய்தார்கள். இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


இதைத்தான் ஆதிசங்கரர்,
“ஐகிரி நந்தினி, நந்தித மேதினி,
விஷ்வ விநோதினி” என்று,
நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும், ஒவ்வொரு உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளும், நமக்குள் எப்படி வேலை செய்கின்றது? என்று, அந்தத் தத்துவத்தை அன்று காட்டினார்.


(பக்கம் 63-65)
ஆறாவது அறிவின் தன்மையைக் கொண்ட நாம், அதுதான் வள்ளி, தெய்வானை, அதாவது, முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்று இரண்டு மனைவி என்று சொல்வார்கள். இந்த ஆறாவது அறிவை சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா. பின் முருகா என்கிறோம்.


கருணைக் கிழங்கை வேக வைத்து, அதனுடைய விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிடும் பொழுது, எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ, அதைப் போலத்தான்
“சக்திவேல்”, நமது கூர்மையான எண்ணம்,
“ஞானவேல்”, கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கியநிலை.


அதே சமயம், “வேலும் மயிலும்” என்றால், கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிட்டவுடன், அந்த ஞானத்தால் சாப்பிட்டவுடன், உடலில் மகிழ்ச்சியாகின்றது. மயில் எப்பொழுதுமே, தோகை விரித்து ஆனந்தமாக ஆடுகின்றது.


மயிலின் காலடியிலே என்ன இருக்கின்றது? பாம்பு, இப்பொழுது, நாம் கருணைக் கிழங்கை வேகவைக்கும் பொழுது, விஷமெல்லாம் நீங்கினால், மிஞ்சுவது கொஞ்சம் விஷம்தான்.


வேகவைத்த, அந்தக் கருணைக் கிழங்கை நாம் சாப்பிடும் பொழுது, நம் உடலிலிருக்கக்கூடிய மூல வியாதிகள், கை கால் குத்தல், மூட்டுவலி, போன்றவைகள் எல்லாம், மிஞ்சிய விஷத்தன்மையால் நீங்கிவிடும்.


இந்த விஷத்தை நீக்கக் கூடிய நிலைகள், அதனுடைய சக்திகள் நமக்குள் அடங்கி, நமக்குள் வரும் துன்பத்தை நீக்கக் கூடிய நிலைகளாக நமக்குள் வரும்.


அதுதான் சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, இந்த ஆறாவது அறிவின் தன்மை. இதையெல்லாம் நாம் சமைத்து உட்கொள்ளும் நிலைகள். ஆக, முருகன் யார்? ஆறாவது அறிவு. மயிலின் காலடியில் பாம்பு, விஷம், அதற்குக் கதை எழுதியிருப்பார்கள்.


அசுரருடன் முருகன் போர் செய்தான். போர் செய்யப்படும் பொழுது, அசுரன் இறக்கப்படும் பொழுது, “முருகா, நான் உன் காலடியிலே இருக்கின்றேன், எனக்கு வரம் கொடு” என்றான்.


ஆக, நம் வாழ்க்கையில் எந்த நிலை இருந்தாலும், ரோட்டிலே போனாலும், ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அந்த ஆத்திரமான உணர்வுகள் நம்மைத் தூண்டும். அப்பொழுது, அது நமக்குள் போராகின்றது. ஆனால், போருக்குப் போகும் பொழுது, மனிதன் இந்த உணர்வைத் தடுத்து, அதை அழிக்க வேண்டும்.


ஆக, உணர்வை மாற்றக் கூடிய சக்தி வரப்படும் பொழுதுதான், அதை அசுரனை வென்றான் என்று சொல்கின்றோம்.


கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கும் பொழுது,
அந்த அசுரச் சக்தியை நீக்குகின்றோம்.
அப்பொழுது, நாம் கருணைக் கிழங்கைச் சாப்பிட்டவுடன்,
அது நம் காலடியில் இருக்கின்றது.


எனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை, ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கின்றது. ஆகையினாலேதான், அதை இங்கே காட்டுகின்றார்கள்.


அவர்கள் துன்பப்படும் வேதனையைத் துரித நிலைகளில் இழுத்துவிடும். ஆக, அங்கிருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை அதிகமாகக் கூட்டி, “எல்லோருக்கும் நன்மை செய்தேனே, எனக்கு இந்த நிலை வந்துவிட்டதே” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.


இதைப் போல நம்மையறியாமல் வந்து சேரும் இயற்கையின் தன்மையில், இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதுதான் “மெய்ஞானம்”.
(பக்கம் 67-71)
நாம் எல்லோரும் பாசத்தால் கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் தவறு செய்யாமலேயே, மூதாதையர்கள் காட்டிய நிலைகள் கொண்டு, பக்திமார்க்க நிலைகளில், அவர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கினார்களோ, அந்த தெய்வத்தின் நிலைகள் கொண்டு, இவர்கள் விட்ட சாபத்தினால், மற்றவர்கள் அதை வணங்கப்படும் பொழுது, அதே உணர்வுகளை, மற்ற மனிதரின் உடலில் பதிவு செய்து கொள்ளுகின்றோம்.


ஆகையினால், அந்த வம்சாவழிகளின் நிலைகள் கொண்டு, அந்த தெய்வத்தை வணங்கி, அதே முறைகள் கொண்டு சாபமிட்டாலும், அதே தெய்வத்தின் வழியின் நிலைகள், அந்த வம்சாவழியினர் செயல்படும் பொழுது, அதுவே வந்து சேர்ந்து விடுகின்றது. ஆக, அந்தக் கொடி வழிகளில் வருகின்றது.


அந்தக் கொடி வழியின் நிலைகள் இங்கே வந்து, இன்று நாம் எவ்வளவு அன்பையும், பாசத்தையும் செலவு செய்தாலும், நமக்குள் இந்த மூதாதையர்கள் இட்ட சாப அலைகளின் நிலைகள் வந்துவிட்டால், நம்மை அறியாமலேயே பல தீயவினைகள் வந்துவிடுகின்றது.


இன்று குடும்பத்திற்குள் சென்றாலும்,
நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம்.
இந்த நேரம் (சாபத்தின் நிலை) வந்தவுடன்,
நம்மையறியாமலேயே, வேதனைப்படச் செய்யும் நிலைகள்தான்
திருப்பித் திருப்பி வந்து கொண்டே இருக்கும்.


ஆக, அவ்வாறு வேதனயான உணர்வுகளை வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சி என்ற எல்லைக்குச் செல்லும் பொழுது, “டமார்” என்று சிதறுண்டு போகும். இப்படி ஏராளமான குடும்பங்கள் உண்டு.


அப்படி மகிழ்ச்சியின் எல்லையினுடைய நிலைகள் வரப்படும் பொழுது, சிதறுண்டு போகும் நிலையும், இந்தப் பாசத்தினால் எடுத்துக் கொண்ட நிலைகளில், எல்லோருக்கும் நன்மை செய்தாலும், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளாலே, கை கால் குடைச்சல் வரும். “ஐயோ, நான் எல்லோருக்கும் நல்லதுதானே செய்தேன், என் கை கால் எல்லாம் குடையுதே, என் உடலெல்லாம் வலிக்கின்றதே, ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டிருக்கிறான்” என்பார்கள்.


ஆக, இதைப் போல நாம் நம் உணர்வுக்குள், நல்லதைச் செய்தாலும், “நல்லதைக் காக்கும் ஆற்றல்” நம்மிடம் இல்லை. அந்த நல்லதைச் செய்வதற்கு, நமக்குள், அந்த நல்லதின் நிலைகள் நிலைத்திருக்க வேண்டும்.


ஆனால், நாம் பாசத்திலே, பிறருக்கு நுகர்ந்துதான் (அவருடைய உணர்வுகளை) நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அது நமக்கும் நல்லவைகளாக இருக்க வேண்டும்.


ஆகையினாலேதான், அன்று மெய்ஞானிகள் எடுத்ததைப் போல, நாம் எந்தத் துன்பத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலும், அந்த நல்லதைக் காப்பதற்கு, யாம் சொல்லும் இந்த தியான முறைப்படி, துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை உங்களுக்குள் எடுத்துக் கூட்டிக் கொண்டு, “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.


நாம் தவறு செய்யாமலேயே, பிறர் செயும் தவறை கண்ணுற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அதாவது, நீங்கள் ஒரு பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், உங்கள் வீட்டில் நீங்களும் சண்டை போட்டுவிடுவீர்கள்.


அப்படி, பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்தபின், உங்கள் உடலில், கை கால் குடைச்சல் வரும், தலைவலி வரும். உங்களை அறியாமல் இனம் புரியாத நிலைகள் வரும்.


ஏனென்றால், கூர்மையான உணர்வின் தன்மைகள் நம்மை அறியாமலேயே, நமக்குள் வந்து, நமக்குள் பல தீய நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும்.


இதைப் போன்ற நிலைகள் எல்லாம், நாம் பாசத்தின் நிலைகள் கொண்டு, மக்களிடம் ஒன்றி வாழும் பொழுது வரக்கூடிய உணர்வுகள்.


இதிலிருந்து மீண்டு வருவதற்கு, அன்று மகரிஷிகள் கொடுத்த, அந்த மெய்ஞானத்தின் சக்தியை நாம் பெறுவதற்கு, யாம் சொல்லும் இந்த தியானத்தைச் செய்ய வேண்டும்.


அவ்வாறு தியானத்ததின் நிலைகள் கொண்டு, நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, “ஓம் ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணி, வாழ்க்கையில் அடிக்கடி, இந்த ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்தால், அந்த ஆத்ம சுத்தியின் துணை கொண்டு, உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் துடைக்க முடியும். எமது அருளாசிகள்.


(பக்கம் 73-78)
நான் நல்லதை எண்ணும்பொழுது, குறையினுடைய உணர்வுகளை நாம் சுவாசித்து விடுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றவுடன், பல நோய்களாக மாறிவிடுகின்றது.


நாம் எதைத் தவறென்று சொல்லுகின்றேனோ, அந்தத் தவறான செயலைச் செய்யும் நிலைக்கே நான் வந்துவிடுகின்றேன்.
எதையெல்லாம் தவறென்று சொல்லுகின்றேனோ,
எதையெல்லாம் தவறென்று சுட்டிக் காட்டுகின்றேனோ,
நான் சுட்டிக் காட்டக் காட்ட,
இந்த உணர்வின் சக்தி எனக்குள் கூடி,
அதே தவறைச் செய்யும் நிலைக்கே
என்னை இட்டுச் செல்கின்றது.


சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற நிலை வந்து விடுவதாலே, இதை நாம் மாற்றுவதற்குத்தான், அன்று நமது குருநாதர், இந்த உணர்வின் செயல்கள் எப்படிச் செயல்படுகின்றது? என்ற பேருண்மையைக் காட்டினார்.


கோலமாமகரிஷியின் தத்துவம், ஆதிசங்கரர் மூலம் இன்று வரை வந்தாலும், அந்தத் தத்துவத்தை மறைத்துவிட்டார்கள். 3500 ஆண்டுக்குள் மறைந்துவிட்டது.


இன்று, சங்கராச்சாரியார் இருந்தார் என்று சொல்லுகின்றார்கள். அவர் பிறந்த நாளை எடுத்துக் கொண்டார்கள். அவர் மறைந்த நாளை, இன்னும் யாரும் கணக்கிடவில்லை. மறைந்த சரீரம் எங்கிருக்கிறதென்றும் சொல்லவில்லை. மறைந்த தேதியுமில்லை. மறைந்த இடமுமில்லை. வயது மட்டும் 35 வரையிலும் இருந்தார்.


அந்த மகானுடைய அருள் சக்திகள், இந்தக் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது. அந்த உணர்வின் சக்தியை, உங்களுக்குப் பெறச் செய்வதற்குத்தான், இந்த உபதேசம்.


கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும், விண்வெளி சென்றுவிட்டது. அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.;


குடும்பத்திற்குள் கணவன் மனைவிக்குள் சண்டை வந்தாலும், அடுத்த நிமிடமே, மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர்/மனைவி ஜீவாத்மா பெற வேண்டும். அவர் பேச்சும், மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும் என்று, நீங்கள் அடிக்கடி, இந்த “ஆத்ம சுத்தி” செய்து கொண்டு, இந்த உணர்வுகளைச் செலுத்துங்கள்.


சில குடும்பங்களில், மூதாதையர்கள் நான்கு வம்சத்திற்குமுன், ஒருவருக்கொருவர் பல நிலைகளைச் செய்திருப்பார்கள். குடும்பம் எப்படிப் பிரிந்ததோ, உன் குடும்ப வம்சமே அதைப் போல ஆகும் என்று சொல்வார்கள்.


அவ்வாறு சொல்லியிருந்தால், அந்த வம்சாவழியினுடைய நிலைகளில், இந்த உணர்வுகள் சென்று விட்டால், இன்று, ஒன்றும் அறியாதவனிடத்திலும், இன்னல்பட்டுக் கொண்டு இருப்பார்கள்.


இன்று விஞ்ஞான உலகத்தின் நிலைகளில், ஒவ்வொருவரும் சாபமிடும் நிலைகளும், சாபமிட்டே இறக்கும் நிலைகளும், வெறித் தன்மையான உணர்வுகளைத்தான் தமக்குள் வளர்த்து, இறப்போர் அதிகம். இந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் பட்டபின், எத்தனையோ இன்னல்கள் நமக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.


இதிலிருந்தெல்லாம், நாம் தப்பித்து வாழவேண்டுமென்றால், ஆத்ம சுத்தி என்ற நிலைகளை, நாம் எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும். இந்த மனித உடல் கிடைப்பது, மிகமிக அபூர்வம். ஆகையினால், இந்த உடலுக்குள்ளேயே சொர்க்க பூமியை நாம் காணவேண்டும்.


“முருகா!, அழகா!” என்கிற பொழுது, நம் உடலுக்குள், மகிழ்ச்சியான எண்ணங்களைத்தான், நாம் தோற்றுவிக்க வேண்டும். அதுதான் முருகனின் ஆறாவது அறிவின் தன்மைகள்.


(பக்கம் 81-86)