Pages

ஆதிசக்தி தியானம்


I. ஆதிசக்தி தியானம்
1. அகண்ட அண்டத்தின் உணர்வுகளைப் பெற, ஞானகுரு நமக்குக் கொடுக்கும் ஆற்றல்
ஞானிகளால் உருவாக்கப்பட்ட அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் தன்மையை நாம் அறிவதற்கு, சூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்து, இன்று சூரியன் எப்படி வளர்ந்தது என்ற நிலையை, சூனிய மண்டலத்தில், ஆதியிலே எப்படி உருவானது என்று இப்பொழுது நாம் தியானிப்போம்.


இப்பொழுது, அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரப்படும் பொழுது, இது அறியும் ஆற்றல் வரும். அறியவில்லையென்றால், சோர்வடைந்து விடாதீர்கள். அறிய முயற்சி எடுங்கள்.


யாம் ஒவ்வொரு சமயமும், “தெரியவில்லை, தெரியவில்லை” என்று குருநாதரிடம் சொல்வோம்.


தெரியவில்லை தெரியவில்லை என்று யாம் சொல்லும் போது, “தெரிய வேண்டும், தெரிய வேண்டும் என்று, நீ எண்ணி எடுக்க வேண்டும்” என்று நமது குருநாதர் சொல்வார்.


“தெரியவில்லை தெரியவில்லை என்று நீ சொல்லுகின்றாய், ஆனால் தெரிய வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று குருநாதர் கேட்பார்.


யாம், குருநாதரிடம் “தெரிய வேண்டும் என்றுதான் சாமி விரும்புகிறேன்” என்று சொன்னோம்.


“அப்படி என்றால், தெரியவேண்டும் என்று சொல்லிவிட்டு ஜெபத்தை எடு” என்பார் குருநாதர்.


இப்பொழுது நாம் சமையல் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது ருசியாக வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்?


ஒரு தோசையை சீராகச் சமைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அந்தத் தோசையில் ஒரு பக்கம், அடி சுட்டுவிட்டால், என்ன செய்கிறோம்? அதற்குத்தக்க எந்தப் பக்கம் நெருப்பு அதிகமாகின்றதோ, அந்தப் பக்கம் தணிக்கின்றோம். ஆக, சட்டியின் சூட்டைத் தணித்து, மறுபடி மாவை ஊற்றினால் ருசியாகவும் சீராகவும் வருகின்றது. சட்டியில் ஒட்டுவதில்லை.


இதே மாதிரிதான், நமக்குள் இப்பொழுது வரும் பலவிதமான எண்ணங்கள் இருந்தாலும், அகண்ட அண்டத்தின் உணர்வு உங்களுக்குள் பதிவானாலும், சில நேரங்களில் சந்தர்ப்பத்தில் எண்ணினால், யாம் சொன்ன உணர்வை, இந்நேரம் உங்களுக்குள் யாம் பதிவு செய்வதன் துணை கொண்டு, நீங்கள் எண்ணி எடுக்க முடியும்.


ஆக, பலவிதமான உணர்வு, நம் ஆன்மாவில் சேர்க்கப்படும் பொழுது, இந்த உணர்வு கலந்தபின், இந்த உடலின் இயக்கம் அதிகமானபின், பிற மண்டலங்களிலிருந்து வருவதை இது தடுக்கும்.


தடுத்தாலும், எப்படியும் பெறவேண்டுமென்ற உள்உணர்வைச் செலுத்தி, அதைப் பெறவேண்டுமென்ற ஏக்கத்தில் இருந்தால், நிச்சயம் பெறமுடியும்.


ஏனென்றால், குருநாதர் எமக்குப் பதிவு செய்த முறைப்படி, உங்களுக்கும் பதிவு செய்கின்றேன். நீங்கள் இதைச் சீக்கிரம் உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டால், அந்த உண்மையின் இயக்கம் அகண்ட அண்டம் எப்படியானதோ? அதிலே சூரியக் குடும்பம், பிரபஞ்சம் எப்படி உருவானதோ? இதைப் போல பல சூரியக் குடும்பங்கள் உருவானதோ, இதைப் போல, உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக, இது உதவும். அவையனைத்தையும் நாம் அனைவரும் பெற, இப்பொழுது தியானிப்போம்.


ஓம் ஈஸ்வரா குருதேவா…


இப்பொழுது எப்படி, வியாழன் கோள் குருவாக இருந்து, பிரபஞ்சத்திற்குப் பல மாற்றங்களைக் கொடுக்கின்றதோ, உடலான இந்தப் பிரபஞ்சத்திற்கு நம் உயிரே குருவாக இருக்கின்றது.


நாம் எண்ணுவது “ஓ” என்று உயிரால் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் இயக்கமாக அணுக்களாக மாற்றுகின்றது. ஆகவே, நம் உயிரை வேண்டுவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…. ஓம் ஈஸ்வரா குருதேவா…