Pages

21. “முருகு” மாற்றி அமைக்கும் சக்தி

மனிதனானபின், அன்பால், பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம். வெளியில் நடக்கும், பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும், இதற்கும் போர் நடக்கின்றது.


இதைத்தான் சாஸ்திரங்களில், பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ, விஷ்ணு தனுசை எடுத்து, பரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.


வராகனுக்குப்பின் (பன்றி), பரசுராமன், மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு, எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும் என்ற ஆசை வருகின்றது. ஆனால், நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.


நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ, அதன் வழிதான் செல்லுகின்றோம். மனிதனானவன், ஒரு குழம்பு வைக்கவேண்டுமென்றால், மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்து, சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.


இதைப்போல, வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும், அதை மாற்றி அமைக்கும் சக்தி, நமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை, உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான், இவ்வாறு உபதேசிப்பது.


இதன் மூலம், உங்களை நீங்கள் அறிகின்றீர்கள். இந்த உயிரின் இயக்கமும், மனிதனான நிலையும், உங்களால் அறிய முடிகின்றது. கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்ய சொல்வதும் நாமல்ல.


நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால், அந்த பொருளின் மணம் தான், நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல, நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது.


நமது எண்ணம் கொண்டு, வேதனைப்படுவோரை எண்ணினால், கோபப்படுவோரை எண்ணினால், அது “வாலி”. நமது நல்ல குணங்களை அது அடக்கி, நமக்குள் வலிமையானதாக மாறி, நம்மை, அதன் வழிகளில் இயக்குகின்றது.


இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால், நமது ஆறாவது அறிவு கொண்டு, “தீமைகளை வென்று, ஒளியின் உடல் பெற்ற, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்று, இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.


இது வலுவானபின், “நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், கனியைப் போன்ற இனிமையான சொல்லும், செயலும், பெறவேண்டும், தெய்வீக குணத்தைப் பெறவேண்டும், தெய்வீக அன்பைப் பெறவேண்டும், தெய்வீக அருளைப் பெறவேண்டும், தங்கத்தைப் போல, மனம் மங்காத நிலை பெறவேண்டும், மலரைப் போல மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரமாக, நாராயணன், வாசற்படியில், மடிமீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.


சூரியனான நாராயணன், 27 நட்சத்திரங்களும் வெளிப்படுத்தும் பால்வெளி மண்டலங்களிலிருந்து, தான் கவர்வதை, தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம்.


ஆனால் மனிதனோ, வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது, வேதனையைப் படரவைக்கின்றது. நமது அந்த சந்தர்ப்பம், உடல்களில் உள்ள உணர்வுகளை, பலவீனமடையச் செய்கின்றது.


பலகோடி உடல்களில் தீமையை நீக்கிய, "துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை”, ஏற்படுத்த வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.


பின் புருவ மத்திக்கு, கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக, கண் வழி கவர்ந்து, இதை இணைக்கின்றோம். இது வலிமையானபின், உணர்வின் பிராணயாமம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இதுதான் “முருகு”, மாற்றி அமைக்கும் சக்தி.


ஆகவே, தீமைகளை நீக்கிய அருள் உணர்வை, உயிரிலே இணைத்தபின், தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது, உடலைச் சுற்றியே நிற்கும்.


அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும். ஒரு நிமிடம் வலுவானபின், அந்த சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போது, உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள், நம்மைவிட்டு அகலும்.


எப்படித் துணியில் அழுக்குப்பட்டால், சோப்பைப் போட்டு, நுரையை ஏற்றி, அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ, அதைப் போல, துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி, அதை வலுவாக்கி, தீமைகளை, நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு, அகன்று செல்ல செய்கின்றோம்.


அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால், துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று, உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால், அவரும் நலம் பெறுவார்.


ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுவைக்கொப்ப எண்ணங்கள், சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம், அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன், சுக்கிரீவனின் மந்திரி.


சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்), நமக்குள் வலுப் பெற்று, மற்றவர் பெறவேண்டும் என்று சொல்லும்போது, அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று, மற்றவர்களையும் பெறச் செய்யும்.




22. தீமைகளை நீக்குவதற்கு, “ஞானகுரு நமக்கு இடும் கட்டளை”
நான் ஏதோ சொல்கின்றேன் என்றும், நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும், எண்ண வேண்டாம். குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, விண்ணுலக ஆற்றல் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் இருப்பதனால் தான்,
‘’அந்த (உணர்வின்) புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி, உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி’’,
‘’அந்த உணர்வின் தன்மையை, உனக்குள் வளர்த்துக்கொள்’’,
‘’இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு’’.
‘’அது, தீமைகள் இருக்கும் மனிதனுக்கு, தீமைகளை நீக்க உதவட்டும்’’
என்று என் குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.


அவர் இட்ட கட்டளைப்படிதான், இதைச் செய்கின்றேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ, பொருள் தேவைக்கோ அல்ல. எனக்கு, பொருள் ஒன்றும் தேவையில்லை, புகழும் தேவையில்லை.


நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு, மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக, மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.


இந்த உடல் சதமற்றது, நிலையாக இருப்பது உயிர். என்னை சாமி என்று பல பேர் கூப்பிட்டாலும், உயிர் சென்றுவிட்டால், என்னவென்று அழைப்பார்கள்?


சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்? என்றுதான் கேட்பார்கள். எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள். எல்லோருடைய நிலையும், உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.


இப்பொழுது, உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து, நடந்து பாருங்கள், அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள், ஆக, இந்த உடலின் தன்மை தூசியாகும்.


ஆக, இந்த உடலுக்குள் நின்றுதான், மெய்ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான், உயிருடன் ஒன்றச் செய்யமுடியும். உடலை மதிக்கவேண்டும், ஆனால், உடல்மீது பற்று வைக்கக்கூடாது.


உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, “என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே, இரு உன்னைப் பார்க்கின்றேன்” என்று சொன்னால் போதும், உடலுக்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது. அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று, இந்த சரீரத்தைக் காக்கும் திறன் இழந்துவிடுகின்றீர்கள்.


இதிலிருந்து விடுபட, அந்த மெய்ஞானிகளின் அருளைப் பெற தியானித்து, அந்தத் தீய வினைகளை நீக்கி, மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.


நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன், தியானிக்கின்றேன், வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.


உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர். அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர், ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர், உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர், என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.




23. அன்றாட வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது அருள் உணர்வுகளைச் சேர்த்து, தீமைகளை நீக்குதல்
நீங்கள் ஏதேனும் வேலையாக, வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள், அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால், அது சமயம், அகஸ்திய மாமகரிஷிகளையும், அவர் துருவ மகரிஷியான நிலையையும், துருவ நட்சத்திரமான நிலையையும், இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.


“அதனின் உணர்வுகளை நாங்கள் பெறவேண்டும்’ என்று எண்ணியபின், உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.


இந்த முறையில், உங்களில் நீங்கள் பதிவு செய்யும் ஞானவித்துக்கள், உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று, நீங்கள் உங்களில் எண்ணிப் பதிவு செய்ததைப் பெறக்கூடிய தகுதியான நிலைகளை, அந்த உணர்வின் அணுக்களை, உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குகின்றது. முதலில் கரு முட்டையாகின்றது. பின், அதனின் உணர்வின் தன்மையை எண்ண, எண்ண, அவைகள் அணுக்களாக வளர்ச்சியடைகின்றது.


உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து, அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை, வெப்பத்தின் துடிப்பு கொண்டு, கருவின் துணை கொண்டு, குஞ்சாக விளைகின்றது.


குஞ்சாக வெளிவந்தபின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக, உட்கொள்ளத் தொடங்குகின்றது.


இதைப் போன்று, யாம் இப்பொழுது உங்களுக்குள், உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும், உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது. அதனின் உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில் அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.


நீங்கள், இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது.


கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும், தன் குஞ்சின் நினைவு கொண்டு, தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து, அடைகாக்கின்றது.


அதைப் போன்று, நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும், மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து பழகிக் கொண்டால், நீங்கள் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவு படுத்தி, அந்தச் சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று, மகரிஷிகளின் அருள் சக்தியும், விளைகின்றது.


கோழி, தான் இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள் அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால், இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது, நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி, காற்றில் கலந்துள்ள, அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கண்கள் வழியும், காதுகள் வழியும், உடல் வழியும், நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் நமக்குள் சுவாசித்து, நமது உடலுக்குள் பரவச் செய்து, அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.


நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி பெற்று, பின், நம்முடைய நினைவாற்றல், மாமகரிஷி அகஸ்தியன் சென்ற பாதையில் செல்லும்.


நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு, வெறுப்புகளை நுகர்கின்றோமோ, அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு, நாம் ஒன்றுமே செய்யவேண்டாம்.


ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி, அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.


நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள், நமது இரத்த நாளங்களில் கருவாக உருப் பெற்றுவிடுகின்றது. இப்படி பதிவாகி, பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால், அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம். அப்படி நுகரும் சக்தி பெற்றபின், அந்த உணர்வுகளை, நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.


அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும்பொழுது, அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு, வீரியம் ஊட்டுகின்றது.


வேதனைப்படுவோருடைய நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால், முதலில் சில காலம் தெரியாது. இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நமக்குள் முதலில் நுகர்ந்து, அடைகாப்பது போன்று, அந்த அணுக்கருக்கள் வளர்ந்துவிட்டால். குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது, தாய் கோழி கூற்று பரப்பி, தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று நமது உயிர், உணர்வின் ஒலி அலைகளை எழுப்பி, நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.


பின், அந்த உணர்வின் தன்மை கொண்டு, கண்களுக்கும், செவிகளுக்கும், மூக்கிற்கும், உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன்வழி சுவாசிக்கச் செய்து, அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து, நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு, ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.


இப்பொழுது, நாம் அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமக்குள் பெறவேண்டும், என்ற உணர்வினை, நமது இரத்த நாளங்களில் அணுக்கருவாக உருவாக்கி, காலையில், நாம் தொழிலுக்கு செல்லும் பொழுதோ, தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ, இந்த உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால், அதை அடைகாத்தது போன்றதாகின்றது.


அவ்வாறு அடைகாத்து, அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது, நம்மையறியாமலே நமக்குள் அந்த எண்ணங்கள் வரும்.


இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துவிட்டால். நாம் எண்ணுவதற்கு முன்பே, அந்த உணர்வைக் கூட்டி, நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.


மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ண, எண்ண, அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து, (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.


ஏனென்றால், நாம் நுகரும் உணர்வுகளெல்லாம், நம்முள் குஞ்சுகள் ஆனாலும், அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் பொழுது, இவைகளெல்லாம் கருக்களாகின்றன. பின், நினைவாக்கப்படும் பொழுது, அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.


இப்படி நமது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு குணத்திலும், ஒவ்வொரு உணர்விலும், அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, இணைத்துக் கொண்டே வரவேண்டும்.


அந்த மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட, அந்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை, அவர்கள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த அரும் பெரும் சக்திகளை, நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் இதை உபதேசிப்பது, அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு, எமது அருளாசிகள்.