20. தீமைகள் வராது தடுக்க, ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்
மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது, நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.
நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும், காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும்.
இதனால், நமது பூமியில், பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது. நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது. நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது, நமது உடலில் உள்ள, ஜீவான்மாவும் சுத்தமாகின்றது. நமது உயிரான்மா, அது ஒளியின் தன்மை பெறுகின்றது.
நாம் மெய்ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்றபொழுது, அது, நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்து, கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி, ஒருவர் மீது ஒருவர் விழுந்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, நமக்கு வெறுப்புத்தான் வரும். ஆகவே, இது மனிதருக்குகந்த நிலையல்ல, அசுர உணர்வுதான் வரும்.
அதே போன்று, கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெறவேண்டும் என்றுதான் எண்ணுவார்களே தவிர, அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.
மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும்பொழுது, நமது மனம் கொண்டு, நாம் இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும்.
அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால், நாம் இருந்த இடத்திலிருந்து, உடனடியாகப் பெறுகின்றோம். இந்த உண்மையை, அறிந்து கொள்தல் வேண்டும்.
ஆகவே, நமது மனம் பண்பட்டால்தான், நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான், நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும். ஆகவே, இதையெல்லாம் நாம் சிந்தித்தல் வேண்டும்.
இவைகளை எல்லாம் யாம் பெறவேண்டும் என்றுதான், எமது குருநாதர் மலை, காடு, என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.
அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில், ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்த பச்சிலையைக் கையில் கொடுத்து, “அதில் உன் உணர்வின் மணத்தை ஓது, அதனின் உணர்வின் எண்ணத்தால் எண்ணி, அங்கே போட்டு விட்டு வா” என்றார் குருநாதர்.
குருநாதர் சொன்ன முறைப்படி, உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்தபின், அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை, அந்தப் புலி நுகர்ந்த பின், அப்படியே அசையாமல் நிற்கின்றது. அதே சமயத்தில், மலைக் காட்டுக்குள் “மறதிப் பூடு” என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.
இந்த மறதிப் பூட்டினை, இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டுவிட்டு வந்துவிட்டாலோ, அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும், அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள், வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும், அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.
இந்நிலையை, நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும். நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள், நாட்டில் நிறைய உண்டு. குருநாதர், இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால், விஷப் பூச்சிகள் மட்டுமல்ல, புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.
ஏனென்றால், மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின், விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால், அவைகள், தங்களுடைய வலுவையும் இழந்துவிடுகின்றன.
இப்படி குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து, இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி, எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார். இவைகளைக் காணும் பொழுது, எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும், அவர்களை ஒரு கை பார்ப்போம், என்ற எண்ணம்தான் வருகின்றது.
ஆனால், தீமைகள் நமக்குள் வராது தடுக்கும், பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.
அப்பொழுது குருநாதர், “தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு, நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தவிர, பிறரை வீழ்த்துவது எளிது. வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது. வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வுகள், உள் நின்று என்ன செய்யும்? அதே தவறைத்தான் செய்ய வைக்கும்”.
ஆகவே, “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது. ஒருவர் தீமை செய்கிறார் என்றால், அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்
"நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்?" என்று குருநாதர் கேட்டார்.
“ஓம் நமச்சிவாய” என்று, அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது. அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால், “சிவாய நம ஓம்” என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து, அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.
ஆகவே, ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால், அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால், அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள், உனக்குள் வராது, என்று எனக்கு உபதேசித்தார்.
இதன் வழி கொண்டு, உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நாம் தவம் இருப்போம். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும், என்று பிரார்த்திப்போம். இந்த உடலுக்குப்பின், “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம்” நாம் அனைவரும் பெறுவோம்.
