7. உயிர் வழி தியானம்
அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் வசிஸ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்க்கையில் இருளை வென்று, ஒளி என்ற உடலைப் பெற்று, இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் சூரியனால் கவரப்பட்டு, நமது பூமியில் அலைகளாகப் படர்கின்றது. அந்த ஆற்றல் மிக்க சக்திகளை, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிக் கொண்டுள்ள அணுக்களுக்கு, வீரியமாகச் சேர்க்கவும், அதைப் பெறவும், இப்பொழுது நாம் தியானிப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா.. என்று மூன்று முறை ஒரே குரலில் ஒலியை எழுப்பி, உயிரான ஈசனை எண்ணி, புருவ மத்தி வழியாகச் சுவாசிக்க வேண்டும்.
அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கண்ணில் செலுத்தி, கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தோடு இணைத்து, அதிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்ற உணர்வுடன் ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, நம் கண்களில் உள்ள கருமணிகள் அதைக் கவரும், அதன்வழி, நம் உடல் உறுப்புக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டி, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி, நம் பூமியில் பரவியிருப்பதைக் கவரும் திறன் பெறுகின்றோம். .
இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை, புருவ மத்தியில் இந்த உடலை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனும், நுகர்ந்ததை உருவாக்கிக் கொண்டுள்ள ஈசனிடம் செலுத்தி, உயிர்வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று உணர்வினைச் செலுத்தி, உயிருடன் இணைக்கச் செய்யுங்கள்.
அவ்வாறு தியானிக்கும் பொழுது, நம் உடலிலுள்ள தீய அணுக்களுக்கு, நம் உயிர்வழி உணர்வுகள் செல்லாது தடைப்படுத்துகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உங்கள் நினைவினை உயிரான ஈசனிடம் செலுத்தி, உயிர் வழி கவர்ந்து வலுப்பெறச் செய்யுங்கள், ஒரு நிமிடம்.
இப்பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாது நிறுத்திவிட்டு, நம் உடலில் தீமை என்ற உணர்வுகளை உருவாக்கும் உணர்வினை, நம் உடலின் ஈர்ப்பை விட்டுக் சுழற்றிச் செல்ல, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, இரத்தத்திலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவினைச் செலுத்தி, நம் இரத்த நாளங்களில் உள்ள, ஜீவான்மா ஜீவ அணுக்களிடம் உணர்வினைச் செலுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.
உங்கள் இரத்தத்திலுள்ள உணர்வுகள் அந்த வீரிய சக்தியைப் பெறும் பொழுது, உங்கள் இரத்தத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களை இயக்குவதை உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, ஏங்கி தியானியுங்கள்.

8.கண் வழியாக உடல் உறுப்புக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை இணைக்கும் நிலை
விஞ்ஞான அறிவு கொண்டு, ஊசி மூலம் மருந்தை இரத்தத்தில் கலக்கச் செய்து, எப்படி வளர்க்கின்றனரோ, அதைப் போன்று, அருள் உணர்வினை நம் கண்ணின் நினைவு கொண்டு, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு, வீரிய உணர்வைச் செலுத்தி, திடமாக அந்த இருளை அகற்றிடும், ஓர் ஒளியின் உணர்வாக நாம் வளர்ப்பதே, இப்படித் தியானிக்கும் முறை.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், நம் உடலிலுள்ள, எல்லா உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்களுக்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்து, அதை வளர்த்துக் கொண்டு வருவதே, இந்த தியானத்தின் நோக்கம்.
இப்பொழுது, உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறும் தகுதியை ஏற்படுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு, உங்கள் உடலிலுள்ள அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள, தீய அணுக்களை அப்புறப்படுத்த இது உதவுகின்றது.
துணியைச் சோப்புப் போட்டு நுரைத்து, அழுக்கை வெளியேற்றுவது போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் பெருக்கி, உடலின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள, தீய அணுக்களை வெளியேற்றுவதுதான் இது.
இப்படி வெளியேற்றியபின், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து, சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் சிறுகுடல் பெருங்குடலில் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு, அந்த வீரிய சக்தியை ஊட்டும் போது, நாம் உண்ணும் ஆகாரத்தை, நல்ல இரத்தமாகவும் சீராகவும் மாற்றுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கணையத்தில் செலுத்துங்கள்.
இவ்வாறு தியானிக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஆவியாக வருவதை, அமிலமாகவும், பல சத்துகளாகவும் பிரித்து, நல்ல இரத்தமாக மாற்றும், திறனுள்ள கணையங்களாக மாறும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்ந்து, கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப் பெறச் செய்யுங்கள்.
நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய, நல்ல அணுக்களைச் சீராக வைக்கவும், பரிசுத்தமான இரத்தமாக உருவாக்கவும் இது துணை புரியும்.
எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப்பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு வலுப் பெறச் செய்யும் பொழுது, நுரையீரலில் உள்ள குறைகளை நீக்கி, வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கும் திறன் அது பெறுகின்றது.
நுரையீரலை உருவாக்கிய அணுக்கள், அந்த வீரிய சக்தியைக் கவர்ந்து, நமக்குள் ஆரோக்கிய உணர்வுகளைப் பரப்ப, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்தி, அந்த அணுக்களை வலிமையாக்குங்கள்.
இவ்வாறு நாம் தியானிப்பதால், நம் நுரையீரலில் உள்ள குறைபாடுகள் அகலவும், வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கவும், சந்தர்ப்பம் உருவாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் செலுத்தி, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அந்த வீரிய சக்தியைப் பெறச் செய்ய தியானியுங்கள்.
இவ்வாறு, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.
எப்படி, குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி, செடி, கொடி, மரங்கள் நல்ல சக்திகளாக மாற்றிக் கொள்கின்றதோ, அதைப் போல, நமக்குள் முந்தைய தீமைகள் இருப்பினும், இதைப் போன்று வீரியமடையச் செய்யும் பொழுது, இந்த அசுத்தமான விஷத் தன்மைகளை, ஒளியின் சுடராக மாற்றிவிடும். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் அணுக்கள், இவ்வாறு மாறும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற, அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு வலுப்பெறச் செய்யும் பொழுது, இதனுடன் சென்று, வீரிய இரத்தங்களாக மாறி, உடல் முழுதுக்கும் பரப்பி, அசுத்த உணர்வுகளைத் தனித்து, அருள் உணர்வுகளைப் பெருக்கி, இருளை அகற்றும் அந்த உணர்வின் இயக்கங்களாக மாறி, மன உறுதி கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஞானமும், தெளிந்த மனமும் கொண்டு, தெளிவான வாழ்க்கை வாழ, இது உதவும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்ணிலுள்ள கருமணிகள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.
நமது வாழ்க்கையில், காலையில் இருந்து இரவு வரையிலும், வேதனை, வெறுப்பு, சலிப்பு, சங்கடம், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்தும் கருமணிகளில் பட்டுத்தான், உடலுக்குள் செல்கின்றது.
ஆனால் அதே சமயம், இந்தக் கருமணியில் விஷத்தின் தன்மை பட்டால், வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு. ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், அது நடைபெறாது.
வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு, நாம் சிந்திக்கும் ஆற்றலைப்பெருக்க வேண்டுமென்றால், அது தடைப்படும். வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு அடுத்து, எதைச் செய்ய வேண்டுமென்றாலும், சிந்தனையற்ற செயல்களையே செயல்படுத்தும்.
ஆகவே, இதைப் போன்ற நிலைகளில் நமது கருமணிகளைத் தூய்மைப்படுத்த, வேதனைப்பட்டோரைப் பார்த்தால், அடுத்த கணமே, “ஈஸ்வரா” என்று கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று ஏங்கி தியானித்து, கருமணிகளைத் தூய்மைப்படுத்த, இந்த உபாயத்தைக் கடைப்பிடியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள். இப்பொழுது உங்கள் கருமணிகளில், துருவ நட்சத்திரத்தின் ஒளியலைகள் படர்ந்து, தூய்மைப்படுத்துவதை உங்களால் உணர முடியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு தியானிக்கும் பொழுது, நரம்பு மண்டலத்திலுள்ள விஷத்தன்மைகளைக் குறைத்து, கைகால் குடைச்சல் என்ற நிலையோ, மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நிலையோ, சரவாங்கி நோய் என்ற நிலையோ, அதைச் சிறுகச் சிறுக மாற்றி, இத்தகைய நோய்கள் வராது தடுக்க, இது உதவும்.
விஷத்தன்மையுள்ள பாம்பு, தன் விஷத்தினைப் பாய்ச்சி மற்றொரு உணவினை எடுத்துத் தனக்குள் நாகரத்தினமாக மாற்றியதோ, இதைப் போன்று நமது நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக, துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்யும் பொழுது, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் தெளிவான நிலைகள் பெற்று, தெளிவான செயல்களைச் செய்து, நமக்குச் சாதகமாகச் செயல்பட முடிகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, எல்லா உறுப்புகளிலும் உள்ள உணர்வுகள் அனைத்தும், ஒளியின் சுடராகும் நிலை பெறுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
நம் நெஞ்சிலுள்ள அணுக்கள் அந்த வீரிய சக்தி பெற்றால், நம் அருகில், தீமை என்ற உணர்வுகள் வராது, தடுக்கும் திறன் பெறுகின்றது.
இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் எலும்புகள் பெறவேண்டுமென்று, உணர்வினைப் பதிவாக்கப்படும் பொழுது, நெஞ்சுக்கு முன் ஒரு குருத்தெலும்பு இருக்கும். அதன் வழி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் காற்றில் கலந்திருப்பதை, உங்கள் ஆன்மாவிற்குக் கொண்டு வருகின்றது.
வேதனைப்படுத்துவோரின் உணர்வு பதிவானால், குருத்தெலும்பு, வேதனைப்படுத்துவோரின் உணர்வினைக் கவர்ந்து, நமது ஆன்மாவிற்குக் கொண்டு வரும். அப்பொழுது, படபடப்பு என்ற நிலைகள் உருவாகி, அதன் உணர்வுகள் சுவாசித்தபின், அதே இயக்கமாக மாறும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள அணுக்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்தால் அது வலிமை பெறும் பொழுது, நாம் அருள் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.
தீமை என்ற உணர்வுகளோ, விஷத்தன்மை கொண்ட உணர்வுகளோ, நம் அருகில் வராது தடைப்படுத்தி, நம் உடலுக்குள் உள்ள, சர்வ ரோகங்களையும், சர்வ பிணிகளையும், நீக்கும் திறன் பெறுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து, தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து, தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
ஏனென்றால், இந்த அணுக்கள் வீரியத் தன்மை பெறப்படும்பொழுது, நம் அருகில் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வராதபடி, இதுவும் வலிமை சேர்க்கப்படும் பொழுது, நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறும்.
நல்ல உணர்வினை நாம் வளர்த்துக் கொள்ளவும், நமக்குள் அருள் உணர்வினைப் பெருக்கிக் கொள்ளவும், இருளை அகற்றி என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வினை நாம் பெற, இத்தகைய நல்ல அணுக்களை வளர்த்துப் பழக வேண்டும்.
9.அணுக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரம்
இவ்வாறு, நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் தியானித்து நாம் வளர்த்துக் கொண்டபின், அதற்கு நல்ல உரம் கொடுக்க வேண்டும்.
அந்த உரம்தான், நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறனும், கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்தில் அனைவரும், நாங்கள் பார்ப்போர் அனைவரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்று எண்ணி, அந்த உணர்வினைக் கவர வேண்டும்.
நமது ஆன்மாவிற்கு, இந்த அணுக்களுக்கு இத்தகைய வீரிய உணர்வை ஊட்டும் பொழுது, அந்த அணுக்கள் நல்ல நிலைகளில் வளர்கின்றது. இதைப் போன்று, தெய்வீக அருளும், தெய்வீகச் சக்தியும், தெய்வீக அன்பும், தெய்வீகப் பண்பும், நாங்கள் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்திலும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், இந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.
பிறருடைய பகைமையை நீக்க, காலையில் நாம் இந்த உணர்வினை வளர்த்துப் பழக வேண்டும். பிறருடைய குறையைப் பார்த்தால், நமது மனம் மங்கிவிடும். அது மங்காதிருக்க தங்கம் எப்படி மங்குவதில்லையோ, தங்கத்தைப் போன்ற மனம் மங்காத நிலை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி, அந்த உணர்வினை ஏங்கிப் பெறவேண்டும்.
இதைப் போன்று, எங்கள் குடும்பத்தில் அனைவரும் அந்த நிலை பெற வேண்டுமென்றும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.
அடுத்து, வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, இதைப் போன்று, நம் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இருளை நீக்கி, அவருக்கு ஒரு, நல்ல தெளிந்து வாழும் அருள் உணர்வை, நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
வைரத்தைப் போல, எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும், எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும், எங்கள் குடும்பத்திலும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று, எண்ணும் பொழுது, அவரையும் தெளியச் செய்யும். நம்மிடத்தில், இருள் சூழாத நிலைகள் வளரும். இதைப் போன்று, மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும், நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் அந்த நிலை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில், அந்த நிலை படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதைத் தலையாயக் கடமையாக, நாம் கொண்டு வருதல் வேண்டும். நாம் இந்தச் சக்தியை உரமேற்றி, அந்த வீரிய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் தொழிலின் நிமித்தம் வெளியே செல்லப்படும் பொழுது, பிறிதொரு உணர்வின் தன்மை, நம்மைத் தாக்காது. நம் சிந்தனையை ஜீவிக்க வைக்க, இது உதவும்.
இப்பொழுது, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில், வெயில் காலங்கள் வரப்படும் பொழுது, எலக்ட்ரானின் அழுத்தத்தை வைத்தபின், வெயில் அதிகமானால், அதற்குத்தக்க குளிர்ந்த காற்றை உருவாக்குவதும், அதே சமயம் குளிர் அதிகமானால், இதை மாற்றி சூட்டை உருவாக்குவதும் இந்த உணர்வுகளுக்கொப்ப எந்திரங்களை இயக்குகின்றனர்.
இதைப் போன்றுதான், நம் உடலில் கடுமையான நிலைகள் தாக்கப்பட்டால், அது தாக்காது, நமது உணர்வுகளைச் சமப்படுத்தி, நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்று, தெளிவான வாழ்க்கை வாழ இது உதவும்.
பின், இதனுடைய தொடர்புகள் கொண்டு வரப்படும் பொழுது, உயிரைப் போலவே உணர்வின் அணுக்கள் அனைத்தையும், உள் முகமாக ஒளியின் சுடராக, அதனுடைய உணர்வின் தன்மை பெறும் பொழுது, இது வேகாநிலை என்ற நிலைகளில், எதுவுமே இதை அழித்திடாது, வருவதனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டேயிருக்கும்.
இந்த உடலில் இவ்வாறு மாற்றி அமைத்து, உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும், அந்தச் சக்தியை ஏற்றினால்தான், இந்த உடலைவிட்டுச் செல்லும் அணுக்கள் அதனைக் கவர்ந்து, என்றும் ஒளியின் சுடராக, எத்தகைய விஷத்தன்மைகள் இருந்தாலும், அது மாற்றிக் கொண்டே இருக்கும்.
இதைப் போன்று காலை துருவ தியானம் செய்து விட்டு, பிறருடைய கஷ்டங்களையும், நஷ்டங்களையும், வேதனைகளையும் கேட்டறிந்தால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று, ஆத்மசுத்தி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்து, உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி, இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைவதே, மனிதனின் கடைசி நிலை.
உயிரணு வான் வீதியில் தோன்றி, இந்த பூமிக்குள் விஜயமாகி, பூமியில் விளைந்த சத்தினை நுகர்ந்து எண்ணங்களும், எண்ணத்தால் கண்களும், கண்களானபின் கூர்மையும், அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியில், பல தீமைகளை நீக்கி, அந்த நீக்கும் வலிமை பெற்றபின் அதற்குத்தக்க வராகன், பன்றியை உருவாக்கி, நமது உடலுக்குள் நஞ்சை மலமாக மாற்றி, நஞ்சென்றால் நீக்கும் அருள் உணர்வைப் பெருக்கி, சமப்படுத்தும் எண்ணங்கள் வந்து, பல உணர்வுகளைக் கண்டாலும், அதை எப்படி நாம் சமப்படுத்த வேண்டும் என்ற உணர்வு பெற்று, தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் புகாது, அதைத் தடைப்படுத்துகின்றது.
உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியானால், ‘கல்கி’. கல்கியில் உருவாகி எல்லாவற்றையும் கல்கியாக்கி, பெறும் உணர்வுகளை, ஒளியாக மாற்றுவதே கல்கி. அதுதான் விஜயதசமி.
10. ஏகாதசி விரதம்
அடுத்தது, ஏகாதசி விரதம். பிறருடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி, நாம் எல்லோரும் ஏகாந்தமாக இருக்கும் அந்த நிலை வரும்பொழுது, பத்தாவது நிலை.
காலையில், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும் பொழுது, எப்பொழுதுமே பகைமையை மறந்து, அருள் உணர்வை உணவாக உட்கொள்ளும் பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது, விரதம் இருக்கின்றோம். இதுதான் ஏகாதசி விரதம்.
இப்பொழுது நாம் என்ன செய்கின்றோமென்றால், தீமையை நமக்குள் வளர்த்துக் கொண்டு, நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் விரதம் இருக்கின்றோம். எல்லாம் தலைகீழ் பாடமாக, மாறி விட்டது.
ஆகவே, காலையில் ஒவ்வொரு நாளும், இந்த ஏகாதசி விரதம் தேவை. அதற்குப்பின் வருவதை ஆத்ம சுத்தி செய்து, நமக்குள் இருள்சூழாத நிலையில் இந்த வாழ்க்கையை முழுமையாக்கி, இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைய, இங்கே உங்களுக்கு அருளைப் பெருக்கச் செய்யவும், வழியறிந்து செயல்படும் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், அருள் வழியில் வாழும், அருள் ஞானம் பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே, இதை உபதேசிப்பது.
இது உங்களுக்குள் விளைந்தபின், உங்களைச் சார்ந்தோருக்கும் இதனைப் பெறச் செய்யுங்கள். வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று, உங்கள் சொல் அவருக்குத் தெளிவான நிலை பெறும்படிச் செய்யுங்கள். அவர் தெளிவான நிலை பெறவேண்டுமென்று, எண்ணும்பொழுது, நம் மனம் முதலில் தெளிவாகின்றது.
11 கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்
நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து, இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம், என்றால் அது சாதாரண மனிதனுக்கு அத்தகைய வலு இல்லை, மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.
ஆக, இன்று நாம் தனி மனிதனாக அமைந்தாலும், நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து, அதன் துணை கொண்டு, வலுவான எண்ணத்தின் உணர்வு கொண்டு, வலுவான பின்தான், நாம் ஒவ்வொரு நிமிடத்திலும், நாம் எண்ணும் எண்ணங்கள், மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும், என்று எண்ணினால், அந்த நிமிடமே கவரும் தன்மை வருகின்றது.
ஆகவே, ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்து, அடுத்து நாம் பெறுவோம் என்ற நிலைகள் இல்லாதவாறு, அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள், இந்த கூட்டுத் தியானங்கள் செய்து, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், ஒரு தரம் கூட்டு தியானத்தில் இருந்தோம், அடுத்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவோம் என்று, நாம் இதன் துணை கொண்டு, விலகிச் செல்லாது, நாம் ஒவ்வொரு வாரத்திலும், ஆங்காங்கு இதே தியானவழி அன்பர்கள் பத்து பேரானாலும், இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து, பழகிக் கொள்ளுங்கள்.
அதே சமயத்தில், மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று, இங்கே தபோவனம் வருபவர்கள், இங்கே கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம். இங்கே வர இயலாதவர்கள், தன் அருகிலே பத்து, நூறு பேர் இருந்தாலும், (குறைந்த பட்சம் நூறு பேராவது) அங்கே பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து, இதே போல் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும்.
அவ்வாறு கூட்டுத் தியானமிருந்து, உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அந்த உடலை விட்டுப்பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, உங்கள் வலுக்கொண்ட எண்ணத்தை அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,
அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தினால்தான் உங்கள், எண்ணம் துரித நிலைகள் கொண்டு, விண்ணை அடைந்து, விண் சென்ற, அந்த மகரிஷிகளின் உணர்வலைகள், பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து, நமக்குள் அந்த உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு நமது வாழ்க்கையில், இந்த மனித வாழ்க்கையில், ஏற்படும் தீமைகளை அகற்றி, அகற்ற, “அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து, நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது. அதே சமயம், நம் எண்ணம் விண்ணைக் கூர்மையாக எண்ணிச் செல்கின்றது. அதே சமயம், நமது உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி, உரமாக வலுப் பெறுகின்றது.
இவ்வாறு, நாம் இருக்கும் இந்தச் சிறிது காலத்திலேயே, இந்த உடலுக்குள், நாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியை வலுப் பெற்றதாக ஆக்கிக் கொண்டால், இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா சென்றால், எந்த மகரிஷியின் எண்ணங்களை, நாம் அடிக்கடி எடுத்தோமோ, அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஒளி நட்சத்திர, சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்து, இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து, அந்த ஒளியுடன் ஒளியாக, நாம் என்றும் நிலைத்து நின்று, பத்தாவது நிலையான, கல்கியின் நிலையை அடைகின்றோம்.
12. ஞானகுருவின் அருளாசி
நமது குரு காட்டிய அருள் வழியில், நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று, இந்த வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும், கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற்று, தெய்வீகப் பண்பும், தெய்வீக அன்பும், தெய்வீக சக்தியும் பெறும் அருள்ஞானம் பெற்று, தங்கத்தைப் போன்று மனம் மங்காத நிலையும், வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும், செயலில் ஜொலிப்பும், வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற்று, மலரைப் போன்ற மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து, இப்பிறவியில், ஏகாந்த நிலை என்ற நல் வாழ்க்கை வாழ்ந்து, என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வுடன், உலக இருளை நீக்கிடும் அருள்ஒளி என்ற உணர்வு கொண்டு, பிறவியில்லா நிலை அடைந்திடவும், குரு அருள் துணை கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, அருள்வழி வாழ்ந்திடவும், எமது அருளும், மாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும், உங்கள் அனைவருக்கும், உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.