Pages

3. இராமாயணத்தில் உணர்த்தப்பட்ட இராவணன் யார்?

ஒரு வீட்டில், கொடூர குணம் கொண்ட ஒருவன் வாழ்ந்து இறந்த பிறகு என்னவாகின்றதென்றால், ஒவ்வொரு உடலிலும் புகுந்து நரக வேதனையை உருவாக்கின்றது.


சில குடும்பகளில் தீய குணங்கள் மிகுந்த ஒருவனைப் பார்த்து, “இவன் செத்துத் தொலைந்தால் என்ன” என்று எண்ணுவார்கள்.


ஆனால் அவன் இறந்த பிற்பாடு,
அவன் விளையவைத்த தீய உணர்வுகள்
எல்லோருடைய உடல்களிலும் பெருகத் தொடங்கி விடும்.


அரக்க உணர்வு கொண்ட ஒருவன், வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும்பொழுது, அவன் பேசிய பேச்சுக்கள், வெளியிட்ட உணர்வுகள் அனைத்தும், குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பதிந்திருக்கும்.


வெளி நபர் ஒருவர் அவரிடம் பேசியிருந்தாலும், அவரிடமும் பதிந்து, அவரும் இவரின் உணர்வை அடிக்கடி தன்னுள் வளர்த்திருக்கும் நிலையில், அரக்கக் குணம் கொண்ட மனிதன் இறந்துவிட்டால் என்னாகும்?


இதைத்தான், இராமாயணத்தில் பத்தாவது நிலையை அடையக் கூடிய இராவணன், தன் உடலில் வளர்த்துக் கொண்ட குரோத உணர்வின் அணுக்கள் அனைத்தும், மீண்டும் எப்படி அகர குணங்களை வளர்க்கின்றது? என்பதைத் தெளிவாக கூறினார்கள்.


இராவணின் மகன் இந்திரஜித், மாயமாக மறைந்திருந்து செயல்படுவான் என்று கூறினார்கள்.
அதாவது அரக்கக் குணம் கொண்ட ஒருவன்,
கொடூரமாகச் சாகிறான் என்றால், அவனுடைய உயிரான்மா
மற்றொருவருடைய உடலுக்குள் புகுந்து கொண்டு,
அவருக்குத் தெரியாமலேயே அவரை ஆட்டிப்படைக்கின்றது.


இதைத்தான், “இவனுடைய உடலுக்குள் ஆவி இறங்கிவிட்டது. பேய் ஆட்டுகின்றது” என்பது போன்று இப்பொழுது சமூகத்தில் சொல்கிறார்கள். எத்தனை ஆசைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டு, அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியே வந்ததோ, அதே ஆசை கொண்டு, மற்றொரு உடலுக்குள் புகுந்து கொண்டு, அங்கே பேயாக ஆட்டும்.


“கொல்ல வேண்டும்” என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்ட உயிரான்மா, இத்தனை வேலைகளைச் செய்யும். அவனுக்குப் பிறந்த குழந்தையும், இவன் வழியில் வளரப்படும் பொழுது இப்படித்தான் வருகின்றான். அன்றாட வாழ்க்கையில், இதனை நாம் சாதாரணமாகக் காணமுடியும்.


உதாரணமாக, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், மிகவும் நட்பாக, நன்றாகப் பழகுவார்கள். ஆனால், பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால், சிலர் மிகவும் வேதனையடைந்து, தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.


தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவியின் உயிரான்மா, யாரை மிகவும் நட்பாக நேசித்து, நட்பாகப் பழகியதோ, அந்த உடலுக்குள் வந்துவிடும். இப்படி வந்த பின், இந்த மாணவி பரீட்சை எழுதச் செல்லவேண்டும் என்றால், தன்னையறியாது பயம் கொள்ளும்.


ஏனென்றால், இந்த மாணவியின் உடலிலுள்ள உயிரான்மா போகவிடாது. தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு, இந்த உடலில் பல வித செயல்களைச் செயல்படுத்தும். இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.


மருத்துவப் படிப்பு படிப்பவருக்குக் கூட, இதுபோன்ற நிலைகள் ஏற்படுகின்றன. நண்பர்களாகப் பழகியிருப்பார்கள். ஆனால், நண்பர்களில் ஒருவர் எதிர்ப்பாராதவிதமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டாரென்றால், பற்றின் உணர்வுகள் இங்கே வந்தவுடனே, அந்த உயிரான்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடும்.


இவைகளெல்லாம் எதனால் வருகின்றது என்பதனை, ஞானிகள் இராமாயாண காவியம் மூலம், நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
உயிரின் இயக்கங்களையும்,
உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தையும்,
உணர்வுக்கொப்ப நமது உடல் உருவானது என்பதையும்,
மனித சரீர வாழ்க்கைக்குப்பின், நமது நிலை என்ன என்பதையும்,
ஞானிகள் இராமாயணக் காவியத்தில்
தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

4. இந்த உடலுக்காக கௌரவத்தைப் பார்க்க வேண்டியதில்லை
உதாரணமாக நாம், நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது, அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில், நம்மை “வாங்க” என்று அழைக்காது விட்டுவிட்டால் போதும்.


நமது மனதில், “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார், வீடு தேடி வந்திருக்கிறேன். கொஞ்சமாவது மதிக்கிறானா?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. “நம்மை மதிக்கவில்லையே” என்று எண்ணும் பொழுது, வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.


“வாங்க” என்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ, அந்த மனிதருடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை, நாம் அறிய முடியாதபடி, நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.


நண்பராக இருந்து, அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.


உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் இருந்தாலும், அத்தகைய தீமைகளை நீக்கிடும், அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.


நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன், இந்த உடலைவிட்டு போய்விட்டது என்றால், இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.
நாம் எத்தனை கௌரவம்,
எத்தனை துணி,
எத்தனை அலங்காரம்,
எத்தனை சுகமான நிலை,
எத்தனை பஞ்சு மெத்தை போட்டு வைத்ததிருந்தாலும்,
இந்த ஈசன் போய்விட்டால், குப்பையில் போய் எரித்துவிடுவார்கள்.


நாம் இங்கு பார்க்கும் கௌரவம் எல்லாம்,
இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ?
ஆனால், இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்,
மண்ணைக் கொட்டும் போதும்
பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
“ஏண்டா இப்படிச் செய்கின்றாய்? என்று கேட்கின்றோமோ?” ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால், நாற்றம் அடிக்கும். தூக்கிச் சென்று விடுகிறோம்.


இப்படி இருக்கப்படும் பொழுது, இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போழுதே, நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து, அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி, அந்த மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.


இந்தக் கௌரவப் பிரச்சனை, நமக்குள் நிறையவே உண்டு.


ஏனென்றால், நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப்பண்ணினாலும் சரி? உடனே போர்முறைதான். நான் சொன்னேன், கேட்கவில்லை. உடனே போர்முறை.


இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை. உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி விட்டால், அதே உணர்வு, என்ன சொன்னாலும் அங்கே கேட்கமாட்டார்கள்.


இந்த உணர்வினுடைய வேலை, எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். ஆக, எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ, அது வேலை செய்து கொண்டே இருக்கும்.


இதை மாற்றுவதற்காகத்தான், உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து, வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ, அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.


இன்று, நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு, உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடி அலைகின்றோம். அதே சமயம், தேடிச் சேர்த்த செல்வம் நாம் இறந்தபின் நம்முடன் வருமா? வருவதில்லை. நமது உடல் கூட வருவதில்லை.


ஆனால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி,
அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா?
அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா?
என்ற அச்சமும், வேதனையும் கொள்கின்றோம்.


ஆனால், தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம். “அவனை எப்படிக் காக்கப் போகிறேன்?” என்று அவனை நினைத்து, வேதனையின் உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால், நமது உடலில் விஷ அணுக்கள் பரவி, நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்றுவிடுகின்றது. கடும் நோயினை, நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.


நோயானபின் உடல் நலிந்து, மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து, விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில், உடலைவிட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.


எந்த மகன்மீது பற்றுவைத்தோமோ, அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது. குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும், பத்துபேரில், யார் மீது அதிகப் பாச உணர்வை செலுத்தினோமோ, இதன் உயிரான்மா இதன் தொடர்கொண்டு, தான் பற்று கொண்ட உடலுக்குள் செல்கின்றது.


இது போன்றே, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள், “நான் அவனுக்கு உதவி செய்தேன். ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை, உதவி வேண்டும்போது மட்டும் என்னை அணுகினான், அவனுக்கு வசதி சேர்ந்தபின், என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை” என்று வேதனைப்படுகின்றோம்.


வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால், வேதனையின் உணர்வுகள் வளர்ந்து, எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ, அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி, இந்த உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின், எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ, உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.


அங்கே சென்று, தன்னுள் வளர்த்த வேதனையை, அவரிடத்திலும் உருவாக்கி, வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில், தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வந்தபின், உயிரான்மா பாம்பாகவோ, தேளாகவோ தான், அடுத்த உடலை உருவாக்கும்.