
அன்றைய நாளிதழினை புரட்டிக் கொண்டிருந்தேன். திருப்பதி உண்டியல் அன்றைக்கு முதல் நாள் இரண்டரை கோடியை கடந்து நிரம்பி வழிந்த செய்தி என் கண்ணில்பட்டு என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. அதே நாளிதழில் வெவ்வேறு பகுதிகளில், பதிமூன்று கிலோ தங்கம் களவுபோனதிலிருந்து பல கோடி ரூபாய் ஊழல் வரை எவ்வளவோ செய்திகள்! அதெல்லாம் எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை. ஏனென்றால் களவும் ஊழலும் இல்லாத ஒரு நாளை நான் பிறந்தது முதலே பார்த்ததில்லை. ஆனால், வரிசையில் நின்று ஒரு உண்டியலை மக்கள் கூட்டம் தினம் தினம் நிரப்பி வருவதும், அதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதும் திருப்பதியில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக நிகழ்ந்து வரும் ஒரு அதிசயம். நானே பலமுறை வரிசையில் நின்று அந்த உண்டியலில் காணிக்கை செலுத்தியிருக்கிறேன். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்ததெல்லாமும் நினைவுக்கு வந்தது.
கொடுப்பதற்காக ஒரு கூட்டம் - அதுவும் வள்ளல் தன்மையோடு கொட்டிக் குவிக்கிறது. பல வருடங்களாக, நாள் தவறாமல் இந்த அதிசயம் நடக்கிறது. அதிலும் எப்படி எல்லாம் ஏமாற்றலாம், எதில் எல்லாம் சுரண்டலாம் என்கிற மனிதர்களும் வாழ்ந்துவரும் ஒரு நாட்டில்தான் இந்த அள்ளி வழங்கும்
அதிசயமும் நடந்து வருகிறது. இதை கவனிக்கும் ஒரு உலகப் பொதுவான மனிதர் நம் நாட்டை ஏழை நாடு என்று நிச்சயம் சொல்ல மாட்டார். அதுமட்டுமல்ல கடவுளுக்கே காசு தரும் மக்களை நான் இங்கேதான் பார்க்கிறேன் என்றால் அதை மறுக்கவும் நம்மால் முடியாது. ‘‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’’ என்கிறது, இஸ்லாம்.
‘‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’’ என்கிறது, கிறிஸ்தவம். ஆக கடவுளிடம் கேட்பதில் தவறே கிடையாது. அப்படிக் கேட்பது பிச்சையல்ல, நமது உரிமை என்றே சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையே வேண்டுதல் என்றும் பிரார்த்தனை என்றும் நேர்த்தி என்றும் பலவிதமாய் நாமும் கூறுகிறோம். இப்படி கேட்கக் கடமைப்பட்ட கடவுளுக்கு அவர்க் கேட்காமலே நாம் கோடிகளை கொட்டித் தருகின்ற அந்த பின்புலத்தை எண்ணிப் பார்த்தேன். என்னுள் ஆச்சரியம் மட்டுமில்லை. ஆயிரமாயிரம் கேள்விகளும் எழுகின்றன. ஏன் இந்த ஆர்வத்தை குறைந்தபட்சம் நம் தெருவில் ஒரு குப்பைத் தொட்டி வாங்கிப் போடக்கூட நாம் காட்டுவதில்லை?
ஏன் இந்த ஆர்வம் ஊருக்கு பொதுவான ஒரு நூலகம், ஒரு பாலம், திருமண மண்டபம் என்கிற தேவைகளுக்குக் காட்டப்படுவதில்லை? இதேசமயம், சில இடங்களில் சிலர் ஒற்றுமையாக நூலகம், பாலம், திருமண மண்டபம் கட்டி செய்துவரும் சேவைகளும் நினைவுக்கு வரவே செய்தன. ஆனால் பரந்த இந்த மண்ணில் கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அங்கும் இங்குமாய் சிலர் தானே இப்படி நடந்து கொள்கின்றனர்? ஏன் எல்லா இடங்களிலும் இது நடப்பதில்லை? அது ஒரு கடைத்தெரு. அந்தத் தெருவில் நகைக் கடைகளும் துணிக்கடைகளும்தான் அதிகம். வியாபாரமும் தினசரி லட்சக்கணக்கில்தான். ஆனால் அந்தத் தெருவே பள்ளம் மேட்டோடு குப்பை கூளத்தோடு சகிக்க முடியாதபடி இருக்கிறது.
அந்தத் தெருவை பராமரிக்கும் கடமை கார்பரேஷனுக்குத்தான் என்றாலும், கார்பரேஷனால் செம்மையாக அதை செயல்படுத்த முடியாத நிலையில் அந்தத் தெருவில் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்கிறவர்கள் ஒன்றுகூடி சிலரை வேலைக்கு அமர்த்தி அந்தத் தெருவில் குப்பை கூளம் சேராதபடியும் மேடுபள்ளம் இல்லாதபடியும் பார்த்துக் கொண்டால் அது எத்தனை பெரிய முன்னுதாரணம்? வர்த்தகம் புரிய வந்து போகிறவர்களுக்கும் அது ஈர்ப்பை உண்டாக்குமல்லவா? மேல்நாடுகளுக்கு போய்வரும் வாய்ப்பு நமக்கு இல்லாவிட்டாலும் அந்த நாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை தினந்தோறும் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்; வியக்கிறோம்.
ஆனால், உலகமே வியக்குமளவுக்கு வரிசையில் நின்று அள்ளித்தரும் வள்ளல்களாக திகழும் நம் மறுபக்கம் மட்டும் ஏன் இத்தனை சுயநலமாய், எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று இருக்கிறது? நம்நாட்டில் எந்தப் பூங்காவிலாவது பூக்கள் பூத்துக் குலுங்குவதைக் காட்ட முடியுமா? எவ்வளவோ மணிக்கூண்டுகள் உள்ளன, அதில் எத்தனை மணிக்கூண்டுகள் நேரத்தை காட்டியபடி ஓடிக் கொண்டிருக்கின்றன? ஆயிரக்கணக்கில் பெரும் நினைவுகளோடு பலரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எவ்வளவு சிலைகள் பறவைகளின் எச்சமின்றி தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன? எத்தனைப் பேருந்து, ரயில் நிலையங்களில் குடி தண்ணீர் தொட்டிகள் செயல்பாட்டில் உள்ளன? வீதிக்கு வீதி உள்ள பொதுக்குழாய்களில் எத்தனை குழாய்களில் அதன் பித்தளை வாய்ப்பாகம் களவு போகாமல் இருக்கிறது?
போஸ்டர் ஒட்டப்படாத பொதுச்சுவர், ஆக்ரமிக்கப்படாத கடைவீதி, எடை குறைபாடில்லாத ரேஷன்கடை, சாக்கடையாகாத ஆறு, ஆடுமாடுகள் சுற்றாத தெருக்கள், ஃபுட் போர்டில் பயணிகள் தொங்காத டவுன்பஸ், அள்ளப்பட்ட குப்பைத்தொட்டி என்று ஒன்றை நம்மால் உருப்படியாக காட்ட முடியுமா?
எனது இந்த கேள்விகளையும் ஆதங்கத்தையும் நண்பர் ஒருவரிடம் வைத்தேன். அவர் சிரித்தார். ‘‘உங்களப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு நண்பரே! ஜாக்கிரதை... இப்படி எல்லாம் நீங்க கேள்வி கேட்டாலோ இல்லை சிந்தித்தாலோ மனஅழுத்தம் அதிகரித்து, உங்கள் உடல் நலம்தான் கெடும். அதுமட்டுமல்ல. உங்களை ஒரு தீவிரவாதி போல பார்க்க ஆரம்பித்து, அகராதி பிடிச்ச ஆள் என்று ஒரு பெயரையும் வைத்து விடுவார்கள். திருப்பதியில் இந்தப் பெருமாளுக்கு யாரும் சும்மா கொடுத்து விடுவதில்லை. ஒவ்வொரு காணிக்கைக்கு பின்னாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐந்து போட்டால் ஐம்பது கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான் அந்த உண்டியல் பொங்கி வழியவும் காரணம்’’ என்றார்.
மொத்தத்தில் ஒரு நம்பிக்கையை அந்தத் திருமலை ஏதோ ஒரு வகையில் தினசரி அளித்துக்கொண்டே இருக்கிறது என்பது இறுதியாகப் புரிந்தது. அந்த நம்பிக்கை, ஒரு கதையையும் ஞாபக மூட்டியது. கைலாயத்திலிருந்து பார்வதியும் பரமேஸ்வரனும் பூலோகத்தைப் பார்க்கிறார்கள். எங்கும் கூக்குரல். குறிப்பாக ஆலயங்களில் சொல்லி மாளாத பிரார்த்தனைகள். ரகசியமாக கண்ணீர் விட்டு கதறுகிறார்கள் பலகோடி பேர். அதேசமயம் கங்கை ஆறும் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வதி பரமனிடம் கேட்கிறாள்: ‘‘ப்ரபோ... பாவம் போக்கும் கங்கை பாய்ந்தும் மண்ணில் ஏன் எங்கு பார்த்தாலும் அழுகுரல்...? ஏன் எல்லோரும் குறையுடனேயே இருக்கிறார்கள். கங்காதேவிக்கு சக்தி போய்விட்டதா?’’ என்று கேட்கிறாள்.
மர்மமாகப் புன்னகைக்கும் பரமன், ‘‘பூலோகத்திற்கே உன்னை அழைத்துச் சென்று புரிய வைத்தால்தான் உனக்குப் புரியும்’’ என்று இருவருமாக பூலோகத்துக்கு வருகின்றனர். கங்கை நதிக்கரைக்குச் சற்றுத் தொலைவில் பரமன் ஒரு தள்ளாத கிழமாகப் படுத்துக் கிடக்க, அருகில் கிழட்டு பார்வதி கங்கை நீராட செல்பவர்களிடம் தன் கணவரை சுமந்து வந்து கங்கை கரையில் விடும்படியும் அப்படி உதவுபவர்க்கு 1000 பொன் தருவதாகவும் கூற பலர் முன் வருகின்றனர். ஆனால், அப்படி வருபவர்களிடம் ‘‘கொஞ்சம் பொறுங்கள். இவரை யார் சுமந்தாலும் இவரது பாவங்கள் சுமப்பவரைச் சேர்ந்துவிடும். அதற்கே இந்த ஆயிரம் பொன்’’ என்கிறாள்.
உடனேயே எல்லோரும் பின் வாங்குகின்றனர். அன்று முழுக்க ஒருவர்கூட பார்வதிக்கு உதவ முன்வரவில்லை. பாவம் குறித்த அச்சம் மட்டுமல்ல. அவ்வளவு சுயநலம் - பயம்! இருட்டப் போகும் சமயம் ஒருவன் முன் வருகிறான். பார்வதி அவனிடமும் அவ்வாறே கூற, அவன் சிரிக்கிறான். ‘‘என்னப்பா சிரிக்கிறாய்... உனக்கு அச்சமாக இல்லையா?’’ என பார்வதி கேட்கிறாள். ‘‘அச்சமா... எனக்கா? அதுதான் நான் கங்கையில் மூழ்கி எழுந்தால், புதிதாக சுமக்கும் பாவத்தோடு என் எல்லாப் பாவங்களும் நீங்கிவிடுமே. பிறகென்ன பயம்...?’’ என திருப்பிக் கேட்கிறான்.
பரமன் பார்வதியை அர்த்தபுஷ்டியோடு பார்க்கிறார். ‘‘கங்கையில் ஆயிரம்பேர் நீராடலாம். ஆனால் உள்ளார்ந்த நம்பிக்கை இவனிடம் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற நம்பிக்கை உள்ளவனுக்கு கங்கைகூட தேவையில்லை; இல்லாதவர்க்கு கங்கை இருந்தும் எந்தப் பயனுமில்லை’’ என்கிறார். திருப்பதி உண்டியலிலும் பணத்தைக் கொட்டும் எத்தனை பேரிடம் இதுபோன்ற அசைக்க முடியாத தெளிவான நம்பிக்கை இருக்கிறது? இவ்வளவு அள்ளித்தருவோர் மலையை விட்டு இறங்கியவுடன் ஏன் கிள்ளிதரக்கூட யோசிக்கிறார்கள்? பொருளால் செழிக்கும் அந்த வேங்கடவனே தன் அருளால் இதைப் புரியவைக்க வேண்டுகிறேன்!