Pages

திருவடி மகிமை


 

சமீபத்தில் ஒரு சீன தேசத்து திரைப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அத்திரைப்படத்தின் கதைப்படி கதாநாயகன் ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு சீன தேசம் முழுக்க சுற்றி வருகிறான். சில இடங்களில் அவன் ட்ரக்குகளிலும் பய ணிக்க வேண்டி வருகிறது. அந்த திரைப்படம் மூலமாக சீனாவின் பல ஊர்களை-அந்த ஊர்களின் தெருக்களை, அதில் நடமாடும் மனிதர்களை என்னால் பார்க்க முடிந்தது. அப் படிப் பார்க்கும்போது ஒரு ஆச்சரியமான விஷயத்தையும் உணர முடிந்தது. நான் பார்த்த சீன மக்களில் ஒருவர்கூட குண்டானவராய் தொண்ணூறு கிலோ, நூறு கிலோ என்று இல்லை. அவ்வளவு பேருக்கும் ஒற்றை நாடி தேகம். பெரும்பாலும் தெருக்களில் நடக்கின்றனர். இல்லாவிட்டால் சைக்கிளில் செல்கின்றனர்.

அங்கே டூவீலர் கலாசாரம் சுத்தமாக இல்லை. அபூர்வமாக சில நகரங்களில் டூவீலர் மோட்டார் வாகனங்கள் கண்ணில் பட்டன. அப்படியே நம் ஊரைப் பற்றி சிந்திக்கவும் எல்லாமே மாறிப் போனது. நாம் வசிக்கும் தெருவிலுள்ள ஒரு மளிகைக்கடைக்குகூட நம் இளசுகளாகட்டும், பெருசுகளாகட்டும் நடந்து செல்வதில்லை. நடப்பது என்பது நம் வரை யில் வீட்டிற்குள் மட்டுமே. வீட்டை விட்டு வெளியே இறங்கிவிட்டால் சக்கரங்களே நம் கால்கள்! அது டூவீலராக இருக்கலாம், கார், பஸ், ரயில் என் கிற வாகனங்களாக இருக்கலாம். பெட்ரோல் விலை இன்னும் இன்னும் இன்னும் உயர்ந்து நூறு ரூபாயைக்கூட கடக்கட்டுமே! வாகனம் வைத்திருப்பவர் ஒருவர்கூட அதனால் அதை பயன்படுத்துவதை துளியும் குறைத்துக்கொள்ளப் போவதில்லை.

இந்த வாகன அடிக்ஷன் ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடியில் ஆரம்பித்து, அசுத்தமான காற்று, உஷ்ண மயமான சூழல், புழுக்கம் என்று எத்தனை தொல்லைகள்! வானம் ஓட்டையாகி ‘எல்னினோ’ எனப்படும் பருவக்கோளாறு ஏற்படும் அளவுக்கு இந்த வாகன கலாசாரம் சென்று விட்டது. இது குறித்த விழிப்புள்ளவர்கள் இப்போது நடக்கத் தொடங்கி விட்டார்கள். ஆம், நம்மை காப்பாற்றிக்கொள்ள இன்று நம் வசம் உள்ள செலவில்லாத ஒரே வழி, நடப்பதுதான். எந்த டாக்டரிடம் எந்த நோய்க்காகப் போனாலும் அவர் கூறும் முதல் ஆலோசனை, தயவு செய்து தினசரி அரைமணி நேரமாவது நடந்து செல்லுங்கள் என்பதுதான். இந்தியாவின் பிரதான நோயாக ஒரு காலத்தில் வறுமை இருந்தது. இன்று உடல்பருமன்தான் பிரதான கோளாறு. அதை குறைக்க சிலர் நிஜமாலுமே தினசரி உருண்டு புரளுகிறார்கள். அசுரப்போர் நிகழ்த்தி ஐந்து கிலோவை குறைத்துவிட்டு அதை ஒரு பெரும் மகிழ்வாகவும் கருதுகிறார்கள்.

எல்லா ஊர்களிலுமே அதிகாலை நேரம், நடக்கும் நேரமாகி விட்டது. குறிப்பாக சர்க்கரை நோயில் இந்தியா முன்னால் நிற்கிறது. நூற்றுக்கு நாற்பது பேர் உத்தரவாதமாய் சர்க்கரை வியாதிக்காரர்கள். இருபது சதத்துக்கு மேல் தங்களுக்கு சர்க்கரை இருப்பதே தெரியாதவர்கள். நாற்பது சதவீதம்தான் சர்க்கரைத் தாக்கம் இல்லாதவர்கள் - ஆனால் எப்போது வேண்டுமானாலும் தாக்கத்துக்கு ஆளாகக் கூடியவர்கள். சர்க்கரை வந்துவிட்டால் நடந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் உடம்பானது நோய்களின் கூடாரமாகி விடும். கால்களை சுகத்துக்கு ஆளாக்கும்போது உடம்பின் மற்ற எல்லா பாகங் களுமே விழுந்துவிடுகின்றன.

எவ்வளவு நடந்தாலும் தேயாத பாதங்கள்தான் முதல் அதிசயம். இந்த கால்கள்தான் மனிதனை மரம், செடி, கொடிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. தாவரங்களுக்கு தாம் நின்ற இடமே உலகம். அதுவாங்கி வந்த வரம் அப்படி. அது தனக்கான உணவை தாவென ஆகாயத்தைப் பார்த்து கிடக்கிறது. (தாவென கேட்கும் வரம் பெற்றவை என்பதால் தாவரம் எனப்படுகிறதோ!) விலங்குகளை கால்நடைகள் என்கிறோம். அவற்றிற்கு நடப்பதை தவிர வேறு வழியில்லை. நடந்து திரிந்தாலே அதன் பசிக்கு இரை கிடைக்கும். ஆனால் இலக்கில்லாத நடை, திக்கு திசை பார்க்காத நடை. இந்த கால்களுக்கு மனிதனிடம் மட்டுமே பெரும் மதிப்பு. இதைக் கொண்டே இவன் உலகைச் சுற்றி வந்தான். நாடு நகரங்களையும் உருவாக்கினான். இது இருப்பதாலேயே இவனால் ஏற முடிகிறது. இறங்கவும் முடிகிறது.

இதற்கு ஒரு ஆபத்து போலியோ வடிவில் வந்தபோது எதற்கும் காட்டாத எதிர்ப்பை இந்த போலியோ மீது காட்டி இன்று உலகில் முற்றாக அந்த போலியோ பூதத்தை அடக்கி ஒரு ஜாடிக்குள் அடைத்துவிட்டோம். காரணம், கால்கள் போனால் எல்லாமே போய்விடுகிறது. நமக்கு நாமே பாரமாவ தோடு பிறர்க்கும் நிரந்தர பாரமாகி விடுகிறோம். உடல் உறுப்புகளில் கண்களை பிரதானமாக கூறுவார்கள். உண்மையில் கண்ணில்லாமல்கூட ஒருவ ரால் எப்படியாவது வாழ்ந்துவிட முடிகிறது. இந்த கால்களில்லாமல் போகும்போதுதான் பெரும் சுமை ஏற்பட்டு விடுகிறது.

கால்கள் ஆரோக்யமாக இருந்துவிட்டால் உடம்பு உள்ளம் என்று எல்லாமே ஆரோக்யமாக இருந்துவிடும் என்பதை நம் பிஞ்சுப் பிராயத்திலேயே உணர்த்தத்தான் காலில் விழுந்து வணங்கச் சொல்கிறார்கள். பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யச் சொல்கின்றனர். வருத்தம், சண்டை என்று வ ரும்போது கையால் அடித்துக்கொள்வதுகூட பெரிதாக ஆவதில்லை; காலால் உதைக்கும்போது அது பெரும் கேவலம். கல்நெஞ்சக்காரன்கூட அவன் காலில் விழுந்து ஒருவர் கதறும்போது மனமாற்றம் கொள்கிறான். உச்சபட்சமாக ஒரு இறைநெறியே கால்களாகிய திருவ டியே பெரிது என்கிறது. வைணவம் எனும் அந்த நெறி சரணாகதிதான், மனிதன் கடைத்தேற ஒரே வழி என்கிறது. அப்படிப்பட்ட சரணாகதிக்கு அது சுட்டிக் காட்டுவது அந்த திருமாலின் திருவடிகளைத்தான்.

அதனால்தான் பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் என்பவர் திருமால் அடி யார்களின் திருவடிகளை தினந்தோறும் கழுவி - பின் அந்த நீரை பருகுவதை தனக்கான மோட்ச கதியாகக் கொண்டிருந்தார். திருமங்கை ஆழ்வாரோ திருப்பணிக்காக திருடுவது கூட பாவமில்லை என்று கருதியவர். அப்படி அவர் பொருள் வேட்டை நிகழ்த்தும்போது அந்த திருமாலே ஒரு மணமகன் கோலம் கொண்டு வருகிறான். அந்த மணமகனிடம் உள்ள நகைகள் அவ்வளவையும் எடுத்துக்கொண்ட திருமங்கை மன்னனாகிய ஆழ்வார், திருமாலின் காலில் உள்ள மெட்டி மீதம் இருப்பதை உணர்ந்து அதை கழற்ற முனைய அது வரமறுக்கிறது. துளியும் தயக்கமின்றி தன் வாயாலே அதை கவ்வி எடுக்க விழைகி றார். திருமாலும் ‘கலியனோ இவன்’ என்று வியக்கிறார்.

ராமானுஜர் வாழ்விலும் கால்களுக்கு பெரும் இடம் இருக்கிறது. மந்திரோபதேசம் பெறுவதற்காக திருவரங்கத்தில் இருந்தும் காஞ்சியில் இருந்தும் அவர் சிவகங்கைப் பக்கமுள்ள திருக்கோட்டியூர் எனும் தலத்திற்கு பதினெட்டு முறை வருகிறார். ஒவ்வொரு முறையும் நீண்ட அந்த நெடுந்தூரம் அவர் நடந்தேதான் வரவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் குருவாகிய கோட்டியூர் நம்பியும் ‘‘யார் அது?’’ என்று கேட்பார். இவர், ‘‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’’ என்பார். கோட்டியூர் நம்பியும் ‘‘அடுத்தமுறை பார்க்கலாம்’’ என்று கூறிவிடுவார். பதினெட்டாவது முறை விடாது படை எடுத்ததுபோல வந்த ராமானுஜர், இம்முறை ‘‘யார் அது?’’ என்று குருவானர் கேட்க, ‘‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’’ என்று பணிவாக அடிபணிந்தவனாக கூறிட, ‘‘உள்ளே வா,’’ என்று கூறி அவருக்கு மந்திரோபதேசமும் செய்கிறார் நம்பி.

நான் எனும்போது அகந்தை மிகுகிறது. அடிபணியும் போதோ அது விலகி விடுகிறது. அகந்தையை, திருவடியாகிய கால்களே விலக்குகின்றன. மனதுக்குள் அகந்தையை விலக்கும் கால்கள்தான் உடம்பிலும் கொழுப்பைக் குறைத்து உடலை ஆரோக்யமாக வைக்க உதவுகிறது. அந்த திருவடிகள் முக்திக்கு வழிகாட்டுகின்றன; நம் சொந்த திருவடிகளோ சக்திக்கு வழிகாட்டுகின்றது. இதை முடக்கிக்கொண்டு சக்கரங்களை நம்பி சக்கரமாய் ஓடுவதால் என்ன பயன்?
சீனர்களுக்கு தெரிந்த இந்த உண்மை நமக்கும் தெரிந்தாலே நாம் ஊனர்களாவது ஒழியும்!