
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ளது மணக்கால் கிராமம். இங்கு நங்கையாரம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 முதல் 1000 வருடங்களுக்கு முந்தைய இந்த கோவில் கவுமாரி (சப்த மார்கள்) கோவிலாகவும் கருதப்படுகிறது.
இக்கோவிலின் தலவிருட்சம் 'நருவளி' மரமாகும். பொதுவாக சப்தமார்கள் கோவில் வடக்கு திசையை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்த கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரைவீரன் சன்னதி உள்ளது. அதையடுத்துள்ள மகா மண்டபத்தில் வலதுபுறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது. அர்த்த மண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் துவார பாலகிகள் அமர்ந்துள்ளனர். கருவறையில் சப்தமார்கள் அழகுற அமர்ந்துள்ளார்கள்.
தல வரலாறு:- செட்டியப்பர் என்பவர் ஒரு கேரள மந்திரவாதி ஆவார். அவர் மந்திரவாதியாக இருந்தாலும் யாருக்கும் எதிராக தனது மந்திரத்தை இவர் பயன்படுத்தியது கிடையாது. மஞ்சள் வியாபாரம் செய்வதையே தனது முக்கிய தொழிலாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.
ஒரு சமயம் வியாபார விஷயமாக செட்டியப்பர் மணக்கால் கிராமத்திற்கு வந்தார். அப்போது வழியில் ஒரு கோவில் இருப்பதை கண்டார். அதன் எதிரே இருந்த திருக்குளத்தில் 7 கன்னியர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர்.
பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ருத்ரணி, கவுமாரி, சாமுண்டி ஆகிய அவர்கள் சப்தமார்கள் ஆவர். குளத்தின் கரை அருகே சென்ற செட்டியப்பர் அவர்கள் குளிப்பதை பார்த்தார். தெய்வீக அழகு நிரம்பிய அவர்களிடம் மஞ்சள் வேண்டுமா? என்று கேட்டார்.
குளத்து நீரில் விளையாடியபடியே நீராடிக்கொண்டிருந்த சப்த கன்னியர்கள் மஞ்சள் வேண்டாம் என்றனர். ஆனால் செட்டியப்பருக்கு இவ்வளவு பேசியும் மஞ்சள் வியாபாரம் ஆகவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதைவிட தேவகன்னியர் போல் தோற்றமளிக்கும் அவர்களிடம் தனது வியாபாரம் நடக்கவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது.
அந்த பெண்களை மிரட்டியாவது கொஞ்சம் மஞ்சள் வாங்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு செட்டியப்பர் வந்தார். எனவே கரையில் அவர்கள் களைந்து வைத்திருந்த ஆடை, ஆபரணங்களை எடுத்துக் கொண்டார்.
இதனை முருகனின் சக்தியான கவுமாரி பார்த்து விட்டாள். உடனே செட்டியப்பரை அருகில் அழைத்தாள். அவரிடம் எனக்கு மஞ்சள் வேண்டும் என்றாள். இதைக்கேட்டு மனம் மகிழ்ந்த செட்டியப்பர் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். அதற்கு இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போ என்று கூறிய கவுமாரி, தனது தலையில் இருந்த ஒரு பூவை எடுத்து செட்டியப்பரை நோக்கி வீசினாள்.
மிகவும் அலட்சியமாக அந்த பூவை எடுத்த செட்டியப்பர் தராசின் ஒரு தட்டில் வைத்தார். மறு தட்டில் மஞ்சளை போட்டார். பூ இருந்த தட்டு கீழே இறங்கியது. மேலும், மேலும் மஞ்சளை வைத்துக்கொண்டே இருந்தார். ஆனாலும் பூ தட்டு தொடர்ந்து கீழே இறங்கிய நிலையிலேயே இருந்தது.
வியப்படைந்த செட்டியப்பர் தான் கொண்டு வந்த மொத்த மஞ்சள் மூட்டையையும் தராசில் வைத்தார். அப்படியும் பூ தட்டு மேலே வரவில்லை. ஆத்திரம் அடைந்த செட்டியப்பர் மந்திரவாதியான என்னிடமே மாயாஜாலமா? என யோசிக்க தொடங்கினார்.
அப்போது தான் ஓர் உண்மை அவருக்கு புரிய தொடங்கியது. அந்த பெண்கள் சாதாரணமானவர்கள் அல்ல, தெய்வ பெண்கள் என்பதை உணர்ந்தார். உடனே சப்தமார்களின் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அத்துடன் அங்கேயே ஒரு கோவிலை அமைத்து சப்தமார்களை வழிபட்டார்.
இங்குள்ள சப்தமார்களை வழிபட்டு தல விருட்சமான நருவளி மரத்தை சுற்றி வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் மாங்கல்ய பலனும் கிடைக்கும்.
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இங்கு மாசி மாதம் அமாவாசை தினத்தை தொடர்ந்து கரகத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
நவராத்திரி 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 10-ம் நாள் நடைபெறும் தயிர்ப் பாவாடை என்னும் வழிபாடு வித்தியாசமானது. இக்கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.