தன்
திருமேனியில் பூசிய மஞ்சள் பொடியிலிருந்து ஒரு மைந்தனை படைத்தாள் பார்வதி
தேவி. தான் நீராடி முடிக்கும்வரை தன் அந்தப்புரத்தைக் காவல் காக்குமாறு
மைந்தனுக்கு ஆணையிட்டாள். அதன்படி காவல் காத்த குமாரன் தேவியை நாடி வந்த
ஈசனுடனேயே போர் புரிந்தான். கோபம் கொண்ட ஈசன் அந்த மைந்தனின் தலையை வெட்டி
எறிந்தார். விவரம் அறிந்த பார்வதி தேவி, பதறியபடி நடந்ததைக் கூற
அப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் தலையை எடுத்து அந்த குமாரனின்
உடலில் பொருத்தி விநாயகர் என்று பெயரிட்டார். விக்னங்களை நீங்கும் கடவுளாக
அன்று முதல் அவர் வணங்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று வித விதமான
வடிவங்களில் இவரை வழிபடுவது உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழக்கம். அவருக்கு
நிவேதனமாக, அவல், பொரி, கடலை, அப்பம், சுண்டல், கொழுக்கட்டை, வடை என்று பல
ஆகாரங்களைப் படைப்பார்கள். களிமண்ணால் செய்தாலும் மஞ்சளால் செய்தாலும்
சாணியில் பிடித்து வைத்தாலும் விநாயகர் அருள்வார். அறுகம்புல்லால்
அர்ச்சித்தால் அருள்மழை பொழிவார்.



