ஆதிசேஷன்,
வாசுகி, பத்மன், மகாபத்மன், தக்ஷகன், கார்க்கோடகன், திருதராஷ்டிரன்,
சங்கன், சங்கபாலன் போன்ற பிரசித்தி பெற்ற நாகங்களைப் பெற்றவர்கள்
கச்யபர்-கத்ரு தம்பதியினர். வாசுகி திருப்பாற்கடலைக் கடைய நாணானவர்.
ஆதிசேஷன் திருமாலின் படுக்கையாகி பூமியைத் தாங்குபவர். பத்மன்
சூர்யாந்தர்யாமி எனும் மந்திர வித்தையை தர்மாரண்யன் எனும் அந்தணருக்கு
உபதேசித்தவர். மகாபத்மன் வடதிசையின் காவலன். ஈசனின் மோதிரமே கார்க்கோடகன்.
தக்ஷகன் பரீட்சித்து மகாராஜாவைக் கடித்து வைகுண்டம் அனுப்பியவன். சங்கபாலன்
ஈசனின் சிரத்தை அலங்கரிப்பவன். நான்முகனின் கழன்று விழுந்த கேசமே
நாகங்களாயின என்கிறது விஷ்ணு புராணம். நாகங்களின் பிறந்த தினமான இன்று,
ஆலயங்களில் நாக வடிவங்களை வணங்க, ராகு-கேது தோஷம் விலகி விஷ அபாயமும்
ஏற்படாதிருக்கும். திருமணத் தடைகள் விலகி புத்திர பாக்கியம் கிட்டும். ஜனமே
ஜயன் செய்த சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்கள் மீண்ட தினமும் இதுவே.



