இந்தக்
குர்ஆனில் பலவிதமான உவமைகளின் மூலம் மக்களுக்கு (உண்மைகளை)
விவரித்துள்ளோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பிலேயே
விடாப்பிடியாய் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நீர்
பூமியைப் பிளந்து எங்களுக்காக ஒரு நீரூற்றை ஓடச் செய்யாதவரை அல்லது
பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதன் நடுவே
ஆறுகளை நீர் ஓடச் செய்யாதவரை நாங்கள் உமது பேச்சை நம்ப மாட்டோம். அல்லது
நீர் வாதிடுவதுபோல் வானத்தை துண்டு துண்டாக்கி எங்கள் மீது போடாதவரை அல்லது
அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரடியாக எங்கள் முன் கொண்டு வராத வரை உம்மை
நாங்கள் நம்ப மாட்டோம். அல்லது தங்க மாளிகை ஒன்று உமக்காக உருவாகாத வரை
அல்லது வானத்தில் நீர் ஏறிச் செல்லாதவரை - நீர் வானத்தில் ஏறினாலும்கூட
நாங்கள் படிப்பதற்கு ஒரு நூலை எங்கள் மீது இறக்கித் தராத வரை உம்மை நம்ப
மாட்டோம்.’’ - (நபியே! இவர்களிடம்) கூறுவீராக: ‘‘தூய்மையானவனாக
இருக்கிறான், என்னைப் பரிபாலிப்பவன்! நான் தூதுச் செய்தியைக் கொண்டு
வருகின்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லையே!’’மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம்
அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, ‘‘அல்லாஹ் ஒரு
மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?’’ என்று அவர்கள் கேட்டதுதான்.
அவர்களிடம் கூறும்: ‘‘பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து
கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு
வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!’’ (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்:
‘‘எனக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன்
தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக்
கொண்டும் இருக்கின்றான்.’’
-திருக் குர்ஆன்
-திருக் குர்ஆன்



