Pages

சுகப் பிரசவம் அருளும் வெள்ளைக்கல் நந்தி


 


கொள்ளிடம் நதியின் தென் கரையில் அமைந்துள்ள சாத்தங்குடி தலத்திற்கு ஒரு பெருமை உண்டு. அது என்ன?

இத்தலத்தின் அனைத்து திசைகளிலும் மிகப் பிரபலமான ஆலயங்கள் அமைந்துள்ளதுதான். திருப்புன்கூர், திருவாளப்புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், இலுப்பைப்பட்டு என்று பல தலங்களுக்கு மத்தியில் சாத்தங்குடி அமைந்துள்ளது. இறைவன், விஸ்வநாத சுவாமி எனும் திருப்பெயரோடு திகழ்கிறார். முகப்பில் உள்ள மொட்டைக் கோபுரத்தை தாண்டினால் விசாலமான பிராகாரத்தில் நந்தியும் பலிபீடமும் இருக்க அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். அதற்கடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம், தொடர்ந்து கருவறையில் விசுவநாதசுவாமி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இறைவன் சந்நதிக்கு வடபுறம் இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அழகே அழகு. அத்துடன் அம்மன் திருமணக் கோலத்தில் இங்கு காட்சி தருவது தனி சிறப்பம்சமாகும். நாற்கரத்தாளான இந்த அன்னை ஒரு கரத்தில் ருத்திராட்ச மாலையுடனும் மற்றொரு கரத்தில் தாமரை மலருடனும் மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகள் தரித்தும் அருள்கிறாள்.

பிராகாரத்தின், மேற்கில் பிள்ளையார், முருகன்&வள்ளி&தெய்வானை சந்நதிகளும் வடக்கில் சண்டீஸ்வரர் சந்நதியும் உள்ளன. கிழக்கில் சூரியன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இறைவன் மற்றும் இறைவி ஆலயங்களுக்கு நடுவே கைலாசநாதர் சந்நதி உள்ளது. இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது.

இறைவன் சந்நதிக்கு முன் உள்ள நந்திதேவர் முழுமையான வெள்ளைக் கல்லில் செதுக்கப்பட்ட அற்புத உருவ அமைப்புடன் விளங்குகிறார். இந்த வித்தியாச அமைப்புடைய நந்திதேவரை பிரதோஷ காலத்தில் வழிபட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்றும், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.

சாத்தங்குடி எனும் இத்தலம் திருப்பனந்தாள்- சீர்காழி பேருந்து தடத்திலுள்ள மணல்மேடு என்கிற ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.